வாகனத்துறையில் AI/ML, IoT, cloud போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு பின்னணியில் அதிகரிக்கும் அதே வேளையில், புதிய வாகனங்களை வடிவமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதற்குப் பல வல்லுனர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு உண்மை நவீன யுகத்தில் வாகன வடிவமைப்பிற்கு பாரம்பரிய பொறியியல் திறன்கள் மட்டும் இருந்தால் போதாது. வெற்றிகரமான வாகனங்களை வடிவமைக்க மனிதர்கள் சார்ந்த ஒரு அணுகுமுறை அவசியம். வாடிக்கையாளர்கள் எந்தெந்த வழிகளில் ஒரு வாகனத்துடன் தொடர்பு கொள்கிறார்கள் என்று ஆராய்ந்து, அதற்குத் தகுந்த வழிகளில் வாகனம் வடிவமைக்க வேண்டும். இதற்கு டிசைன் திங்கிங் (Design Thinking) ஒரு நல்ல அணுகுமுறை.
புதுப் பொருட்களை யோசித்து, வடிவமைத்து அவற்றை வெற்றிகரமாக வெளியிடுவதில் பல சவால்கள் இருக்கின்றன. அது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை பரத் நன்றாக அறிவார். அவர் ஒரு வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட மின்சார வாகனப் (electric vehicle – EV) பிரிவின் CTO. EVக்களை எப்படி வடிவமைக்கலாம் என்பதற்கு அவரிடம் இருந்த இரகசியம் டிசைன் திங்கிங். டிசைன் திங்கிங்கை தன் அணியினர் சரியான வழியில் பயன்படுத்த, அவர் அனைவருக்கும் பயிற்சி அளிக்க ஒரு திட்டம் வைத்திருந்தார்.

வெற்றிகரமான புதுப் பொருட்களின் வெளியீடு
புதிய பொருட்கள் வெளியிடும்போது அவற்றில் 80-லிருந்து 90 சதவிகிதம் வரை தோல்வியைத் தழுவும் என்று ஒரு பொதுவான கருத்து உண்டு. ஆனால் அது ஆதாரமற்றது. நுகர்வோர் பொருட்கள் கிட்டத்தட்ட 45% வெற்றி அடைவதில்லை என்கிறது மற்றொரு யதார்த்தமான ஆராய்ச்சி. இது துறைக்குத் துறை வேறுபடும். வெற்றி தோல்வியை இங்கே நாம் வணிக ரீதியாக மட்டும் பார்க்கிறோம், தொழில்நுட்ப ரீதியாக இல்லை. ஒரு பொருள் தொழில்நுட்ப ரீதியில் பிரமாதமாக இருக்கலாம். ஆனால் வியாபாரம் நடக்காமல் லாபம் பார்க்காவிட்டால், அது ஒரு வெற்றி ஆகாது.
ஒரு புதிய பொருளின் ஆயுள்காலச் செலவில் (lifecycle cost) 70% அதனை வடிவமைக்கும்போதே தீர்மானம் ஆகிவிடுகிறது. ஒரு பொருளின் ஆயுள் காலச் செலவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அதை வடிவமைக்கும் கட்டம் மிக முக்கியம். அந்தப்பொருளின் வாழ்நாளில் எடுக்கப்படும் பல முடிவுகள் இந்த வடிவமைக்கும் கட்டத்திலேயே தெரிந்தோ தெரியாமலோ நிர்ணயம் செய்யப்பட்டு விடும். புதிய பொருட்கள் வடிவமைப்பதில் ஒரு பிரபல வழிமுறை டிசைன் திங்கிங்.
வெற்றிகரமான பொருட்களின் வெளியீட்டில் பொதுவாகக் காணப்படும் சில பண்புகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை நன்கு அறிந்து அவற்றை பொருட்களின் அம்சங்களாகக் கொண்டு வருவது, குழுவினரின் திறமை மற்றும் கூட்டு முயற்சி மற்றும் திட்டமிடுதல்.
வாடிக்கையாளர்களின் தேவையை நன்கு அறிந்து வெற்றிநடை போட்டதற்கு ஓர் உதாரணம், ஹென்ரி ஃபோர்டு 1908-ல் அறிமுகப்படுத்திய Model T வாகனம். மக்களையும் பொருட்களையும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதில் குதிரை வண்டிகளைவிடத் திறமையானதாக இருந்தது Model T. சாதாரண மக்களும் வாங்கக்கூடிய விலையில் இருந்தது. சிறு சிறு முன்னேற்றங்கள் செய்து 1920 வரை மிக அதிக விற்பனை ஆகும் வாகனமாக இருந்தது.
அதேசமயம், ஒரு புதிய பொருளின் தோல்விக்குக் காரணம் வாடிக்கையாளர்களின் தேவையைச் சரியாகக் கணிக்காதது, அவர்களை தவறாக வகைப்படுத்துவது, மற்றும் வெற்றி அடைந்தால் வேகமாகத் தயாரிக்க முடியாமல் போவது. டிசைன் திங்கிங் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் கண்ணோட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதன்படி புதுப் பொருட்களை வடிவமைக்கலாம்.
ஜெனரல் மோட்டார்ஸ் (GM) நிறுவனம் தங்களைத் தனிப்படுத்திக் காட்ட ஒரு யுக்தியைக் கையாண்டது. வாகனங்கள் போக்குவரத்திற்கு மட்டும் பயன்படாமல் சமூக அந்தஸ்திற்கும் பயன்படுவதை உணர்ந்த அந்நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களை ஐந்து வகையாக வகைப்படுத்தியது. ஒவ்வொரு வகையான வாடிக்கையாளருக்கும் குறிப்பட்ட விலையில் அவருக்குக் கட்டுப்படி ஆகும் ஒரு வாகன மாடலை அறிமுகப் படுத்தியது GM. இது வாடிக்கையாளர்களின் தேவையை (voice of customer) அறிந்து பொருட்கள் தயாரிப்பதில் ஒரு நல்ல உதாரணம்.
டிசைன் திங்கிங்கின் நிலைகள்!
டிசைன் திங்கிங்கின் மூன்று முக்கிய அம்சங்கள், தொழில்நுட்ப சாத்தியக்கூறு (technical feasibility), வணிக ரீதியாக லாபம் ஈட்டக்கூடிய நம்பகத்தன்மை (financial viability), மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பம் (customer desirability). ஒரு பொருளில் இந்த மூன்று அம்சங்களும் இருக்கும்போது, அவை வெற்றி அடைய வாய்ப்புகள் அதிகம்.
டிசைன் திங்கிங் பயன்பாட்டில் உள்ள நிலைகள் ஐந்து. வாகனத்துறையில் குறிப்பாக அவை:
வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்து கொள்ளுதல் (empathize)
வாகனத்தையும் அதன் அம்சங்களையும் வரையறுத்தல் (define)
யோசித்தல் (ideate)
முன்மாதிரிகள் செய்தல் (prototype)
செய்ததைச் சரிபார்த்தல் (validate)
இந்த ஐந்து நிலைகளில் மீண்டும் மீன்டும் சுழற்சியாக (iterative), பொறுமையாகச் செய்யும்போது நல்ல வடிவமைப்புக்கள் உருவாகும். டிசைன் திங்கிங்கின் முதல் கட்டம், வாடிக்கையாளர்களின் தேவையைப் புரிந்து கொள்வது. அதைச் சரியாகச் செய்ய பொறியாளர்கள், இந்தப் பின்வரும் வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
வாகனத்தைப் பயன்படுத்தும் வாடிக்கை யாளரை உருவகப்படுத்திக் கொள்வது (persona) முதல் படி. ஒரு குடும்பத் தலைவர் ஓட்டும் ஒரு வாகனத்தை வடிவமைப்பதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவரின் தேவைகளை அறிந்து அதன்படி வாகனத்தை வடிவமைக்க வேண்டும். அவர் தினமும் அலுவலகம் சென்றுவரப் பயன்படுத்துகிறாரா அல்லது நீண்ட தூரம் ஓட்டுவாரா, அவர் இப்போது என்ன வாகனம் ஓட்டுகிறார், அதில் என்ன சவால்கள் இருக்கின்றன, புது வாகனத்தில் அவர் என்ன எதிர்பார்க்கிறார், எதை வைத்து வாங்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வார் போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். அதன் பின்னரே வடிவமைக்கும் வேலையைத் தொடங்க வேண்டும்.
ஃபோர்டின் மனிதர்களை மையமாக வைத்து வடிவமைக்கும் ஆய்வகம் (human-centered design lab) டிசைன் திங்கிங்கிற்கு ஓர் உதாரணம். இந்த ஆய்வகம் தனியாக வேலை செய்யாமல் மார்க்கெட்டிங், பொறியியல், மென்பொருள், தகவல் துறை போன்ற மற்ற துறைகளுடனும் சேர்ந்தே வேலை செய்யும். இந்த அணியினர் ஆராய்ச்சி செய்யக் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கம் `வாடிக்கையாளரின் வாழ்வில் ஒரு நாள்’. மேலே பார்த்த குடும்பத் தலைவரை எடுத்துக் கொண்டால், அவர் ஒரு நாளில், வாரத்தில், அல்லது மாதத்தில் வாகனம் ஓட்டும்போது செய்யும் வழக்கமான நடத்தைகள் என்ன என்ன என்று கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர் செய்யும் நடவடிக்கைகளை வைத்தே வாகனத்தை வடிவமைக்க வேண்டும்.
ஃபோர்டின் F150 ட்ரக் இந்தச் செயல்முறை மூலம் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வாகனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஃபோர்டு நிறுவனம் பல ஆயிரக்கணக்கான மணி நேரங்கள் செலவிட்டு ட்ரக் ஓட்டுபவர்கள் என்ன பழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று கவனித்துக் குறித்து வைத்துக்கொண்டது. நேர்காணலில் நேரடியாகக் கேள்விகள் கேட்கும்போது வெளிவராத பல அரிதான, ஆனால் முக்கியமான விவரங்கள் இந்தச் செயல்பாட்டின் மூலம் கிடைத்தன.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் ஃபோர்டு அறிந்து கொண்ட விஷயங்கள் பல. ட்ரக் ஓட்டும் உரிமையாளர்கள் பலரும் ஓட்டுநரின் கேபினில் இரவில் தூங்கி விடுவார்கள். கேபினை ஓர் அலுவலகமாகப் பயன்படுத்துகிறார்கள். அதனால் தூங்க வசதியாக இருக்கைகள் வடிவமைக்கப் பட்டன. கணினிகள், கைபேசிகளை சார்ஜ் செய்ய மின்சார சார்ஜிங் பாயின்ட்கள் கொடுக்கப்பட்டன.
பரத் இந்த `வாடிக்கையாளரின் வாழ்வில் ஒரு நாள்’ யோசனையை முதலில் தன் அணியில் அறிமுகப்படுத்த முடிவெடுத்தார். இந்த ஓர் ஆய்வைச் செய்யாமல் எந்த ஒரு புதிய வாகனத்தையும் வடிவமைக்கக் கூடாது என்று கண்டிப்பாகச் செயல்முறைப் படுத்தினார்.

ஒரு வாடிக்கையாளரை உருவகப்படுத்தி, அவர் வாகனத்தைப் பயன்படுத்தும் வழிகளைக் கவனிக்கும்போது, தவிர்க்கப்பட வேண்டிய ஒரு பழக்கம் cognitive bias. வாடிக்கையாளரிடம் நேரடியாகக் கேட்காமல் நம் அனுபவத்தை, கருத்தை மட்டும் வைத்து ஒரு தவறான முடிவு எடுப்பதே இந்த bias. டாடாவின் நானோ இதற்கு ஒரு உதாரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தார்கள்.
நடுத்தர வர்க்கமும் வாங்க முடியும்படி ஒரு லட்ச ரூபாயில் ஒரு வாகனம் என்ற உன்னதமான இலக்குடன் தயாரிக்கப்பட்டது நானோ. ஆனால் அந்த வாகனம் வெளியிடப்பட்டபோது விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. தொழில்நுட்ப ரீதியாக ஒரு லட்ச ரூபாய் இலக்கை அடைந்து நல்லபடியாக ஓடும் ஒரு வாகனமாக வெளிவந்தாலும், வர்த்தக ரீதியாக நானோ வெற்றி பெறவில்லை. அதன் தயாரிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்திய நுகர்வோர், வாகனத்தை ஒரு சமூக அந்தஸ்துப் பொருளாகப் பார்ப்பது இந்தத் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
வாடிக்கையாளர்களின் தேவையைப் புரிந்துகொள்வதுடன், அவர்களுடன் ஈடுபட வேண்டும். ஒரு பொருளை அவர்கள் பார்வையில் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று கூர்ந்து கவனிக்க வேண்டும். இவற்றைச் செய்த பின் அந்தப் பொருளின் அம்சங்களை வரையறுக்கலாம்.
வாகன அம்சங்களை வரையறுத்தல்
ஒரு பொருளை வரையறுக்கும் இந்த இரண்டாவது கட்டத்தில், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு, மற்றும் சவால்களுக்குத் தொழில்நுட்பம் மூலம் என்ன தீர்வு காணலாம் என்று யோசிக்கத் தொடங்கலாம். நாம் வடிவமைக்கவிருக்கும் பொருளை ஒரு அமைப்பாகப் (system) பார்க்க வேண்டும். வாகனம் என்பது ஓர் அமைப்பு. அதன் உள் சிறு சிறு அமைப்புகள் இருக்கும். இவை தனியாக இயங்காமல் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு இயங்கும். இந்தத் தொடர்புகள் ஒவ்வொன்றையும் அம்புக்குறிகள் மூலம் ஒரு வரைபடமாகக் காண்பிக்கலாம். இவ்வாறு செய்வதால், அந்த அமைப்பில் பலவீனமான பகுதி எது என்று சுலபமாகக் கண்டுபிடிக்கலாம்.
யோசித்தல்
ஒரு பொருளின் செயல்பாட்டை வரையறுத்த பின், அதனை எப்படி உருவாக்குவது என்று யோசிக்கலாம். இந்த நிலையில்தான் யோசனைகள் பல தேவைப்படும். டிசைன் திங்கிங்கின் ஒரு தனித்துவமான பண்பு பொறியாளார்களைப் படைப்புத்திறனுடன் யோசிக்க வைப்பதே! தகவல்களை மட்டும் வைத்து லாஜிக்கலாக யோசிக்காமல், அதனையும் தாண்டி புதுமையான யோசனைகளை படைப்புத் திறனுடன் கொண்டுவரலாம்.

புதிய பொருளை எப்படிச் செய்யலாம் என்று யோசனை செய்யும் கட்டத்தில், முடிவுசெய்தபின் அதன் மாதிரியை முதலில் தயாரிக்கலாம். அதற்கு இன்று 3D ப்ரின்டிங் போன்ற தொழில்நுட்பங்கள் கைக்கு எட்டும் விலையில் இருக்கின்றன. ஒரு மாதிரியைத் தயாரிப்பதன் மூலம் ஏதாவது தவறுகள் இருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து சரிசெய்துவிடலாம். இந்த முன் மாதிரியை வாடிக்கையாளர்களிடமும் காண்பித்து அவர்களின் கருத்தைக் கேட்டுக்கொள்ளலாம்.
இந்த ஐந்து நிலைகள் கொண்ட சுழற்சியை பல முறை செய்வதால் புதிதாக உருவாகும் பொருளின் வடிவமைப்பு மேன்மேலும் மேம்படும். தவறுகளை அறிந்து சரிசெய்து கொள்ள பல வாய்ப்புகள் கிடைக்கும்.
வெற்றிகரமான டிசைன் திங்கிங்
டிசைன் திங்கிங்கை வெற்றிகரமாகப் பயன்படுத்திய நிறுவனங்கள் பல. ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ் முதன் முதலில் கணினிக்கு மவுஸ் உருவாக்கியபோது, அதனைப் பயன்படுத்தப்போகும் வாடிக்கையாளரின் மன நிலையை வைத்து அதை வடிவமைத்ததே அதன் வெற்றிக்கு ரகசியம்!
வாகனத்துறையில் அதுவும் பரத்தின் EV துறையில் டிசைன் திங்கிங் சரியாகப் பயன்படுத்தப்பட்டதற்குக் கூறப்படும் உதாரணம் டெஸ்லா. மின்சார வாகனத்தை டெஸ்லா உருவாக்கவில்லை. ஆனால் பாரம்பரியமான பல ஆண்டுகள் அனுபவம் உள்ள நிறுவனங்கள் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் தன்னைத் தனிப்படுத்திக் காட்டியது டெஸ்லா. வாடிக்கையாளர்களின் மனநிலையைச் சரியாகப் புரிந்து கொண்டு அதிக தூரம் ஓடும், அதிக வேகத்தில் ஓடும், தானாக ஓடும் அம்சங்கள் கொண்ட மாடல்களை உருவாக்கியதே டெஸ்லா வெற்றியின் ரகசியம்!
டெஸ்லாவைப்போல தன் நிறுவனமும் டிசைன் திங்கிங் மூலம் வெற்றிகரமான மின்சார வாகனங்களை வடிவமைத்து, தயாரித்து, விற்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தார் பரத். தன் அணியினருக்கு இந்த அடிப்படைக் கருத்துக்கள் பற்றி பல வகுப்புகள் எடுக்க ஒரு திட்டத்தை HR மேலாளரின் உதவியுடன் இறுதிசெய்தார்.