கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

நிலையான பலதரப்பட்ட போக்குவரத்து என்றால் என்ன?

Mobility Engineer 2030
பிரீமியம் ஸ்டோரி
News
Mobility Engineer 2030

தொடர் # 17 : வேலை வாய்ப்பு | Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

பரத் சில வாரங்கள் முன், பெங்களூரில் SAE India (Society of Automotive Engineers) நடத்திய ஒரு மாநாட்டில் கலந்து கொண்டார். அதில் தொழில்துறை, கொள்கை வகுக்கும் வல்லுந‌ர்கள், கல்வித்துறையிலிருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டதால் பல கோணங்களில் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. அந்த மாநாட்டின் த‌லைப்பு `நிலையான பலதரப்பட்ட‌ போக்குவரத்து’ (Sustainable multi-modal mobility). பரத் ஒரு பெரிய வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தின் மின்சார வாகனப் (electric vehicle – EV) பிரிவின் CTO.

EV-க்களை ஒரு தனிப்பட்ட வாகனமாகப் பார்த்து வந்த பரத், அந்த மாநாட்டின் பின் ஒட்டுமொத்தப் போக்குவரத்தின் ஓர் அங்கமாக அவற்றைப் பார்க்கத் தொடங்கினார். போக்குவரத்தில் பலதரப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன. சாலை வழி வாகனங்கள், ரயில், விமானம் மற்றும் கப்பல். இவற்றில் நன்மைகளும் குறைபாடுகளும் இருக்கும். ஆனால் வாடிக்கையாளருக்குத் தேவைப்படும் ஒரு பொருளைத் தொழிற்சாலையிலிருந்து அவர் கேட்கும் இடத்திற்குச் சரியான நேரத்தில், அதிக செலவில்லாமல் எடுத்துச் செல்ல இந்தப் போக்குவரத்து முறைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக‌க் கூட்டாக வேலை செய்ய வேண்டும். அதுவே பலதரப்பட்ட‌ போக்குவரத்து.

நகரமயமாக்கலும் போக்குவரத்தும்!

மாநாட்டின் தொடக்க உரையில் பேசிய `ஸ்விட்ச் மொபிலிடி’ CEO திரு.மஹேஷ்பாபு, `இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி, நகரங்களில் எதிரொலிக்கும்; இதனால் அதிக இடம் தேவைப்படும்; அதிக அளவு சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளில் முதலீடு செய்யாமல் சமாளிக்க இத்தகைய நிலையான, மின்சாரமயமாக் கப்பட்ட, பலதரப்பட்ட போக்குவரத்து வசதி அவசியம்’ என்று அவர் பேசினார்.

அதன் பின் பேசிய நிதி ஆயோக்கின் மின்சார வாகனத்துறை இயக்குனர் திரு. ரந்தீர் சிங், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் போக்குவரத்தையும் பிரித்து விடவேண்டும் என்று கூறினார். பொதுவாக பொருளாதார‌ வளர்ச்சியுடன் போக்குவரத்தும் சேர்ந்தே வளரும். ஆனால் அப்படி நடந்தால் நம் கார்ப‌ன் உமிழ்வு இலக்கை அடைய முடியாது. பல கிலோமீட்டர் சாலைகளும் அதனைச் சார்ந்த மற்ற போக்குவரத்து, அடிப்படை வசதிகளும் உருவாக்க வேண்டியிருக்கும்.

ஹீரோ மோட்டோகார்ப்பின் CTO திரு.அருண் ஜொவ்ரா, இருசக்கர வாகனங்கள் பற்றிப் பேசினார். `உலக அளவில் இரண்டாவதாக இருசக்கர வாகனங்கள் விற்கப்படும் இந்தியாவில், அவை பல மக்களுக்கு வாழ்வாதாரத்தின் அடிப்படை. அவர்களின் தொழிலே அவர்களின் வாகனத்தை நம்பித்தான் இருக்கிறது. அதனால் இரு சக்கர வாகனங்களை நிலைத்தன்மையின் கண்ணோட்டத்தின் மூலம் மட்டும் பார்க்க முடியாது. அவற்றின் மின்சாரமயமாக்கல் படிப்படியாக‌த்தான் நடக்கும். எத்தனால் போன்ற மாற்று எரிபொருட்கள், ஹைட்ரஜன் fuel cell, hybrid வாகனங்கள் போன்ற தொழில்நுட்பங்களும் EVக்களுடன் சேர்ந்து முன்னேற்றம் காணும்’ என்று அவர் பேசினார்.

சிங்கப்பூரில் புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புகளில் வாகன எண்ணிக்கையைக் குறைக்க, ஒரு நூதன வழி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாகக் கொடுப்பதோடு இல்லாமல், மக்கள் நடக்க மற்றும் மிதிவண்டி, பேருந்து, ரயில் மூலம் சென்று வர‌ வசதிகள் அதிகம் கொடுக்கப்படும். இதனால் நிலப்பரப்பு, சாலைகள் குறைவாக உள்ள அந்த நாட்டில் மக்கள் தங்கள் தனிப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்தாமல், அதிகமாகப் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துவார்கள்.

பலதரப்பட்ட போக்குவரத்தின் வரலாறு

பலதரப்பட்ட போக்குவரத்து என்றால் என்ன? ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட‌ போக்குவரத்து வழிகளை, குறிப்பாக ஒரே ஒப்பந்தத்தின் (contract) கீழ் கொண்டு செல்லும்போது அது பலதரப்பட்ட போக்குவரத்து ஆகும். இது 18-ம் நூற்றாண்டில், இங்கிலாந்தில் நிலக்கரியை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டது. கரியைச் சுரங்கத்திலிருந்து தொழிற்சாலைகளுக்குப் பெட்டிகளில் எடுத்துச்செல்ல, ரயில் மற்றும் குதிரை வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தப் பெட்டிகளில் சக்கரங்கள் பொறுத்துவதன் மூலம் அவற்றை சுலபமாக ரயிலிலிருந்து குதிரை வண்டுகளுக்கு உருட்டிச் செல்ல முடிந்தது. க்ரேன் மூலம் இந்தப் பெட்டிகளைத் தூக்கி இறக்குவதைவிட அவற்றை உருட்டிச் செல்வது சுலபம்.

இந்தியாவில் பலதரப்பட்ட போக்குவரத்து!

நம் நாட்டில் 1960-களில் இந்திய ரயில் நிறுவனம், முதன் முதலில் கன்டெய்னர்கள் மூலம் சரக்குகளை அனுப்பி பலதரப்பட்ட போக்குவரத்தைத் துவங்கி வைத்தது. பாராளுமன்றத்தில் இதற்கான சட்டம் 1993-ல் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் போக்குவ‌ரத்தை நிர்வகிக்கும் பொறுப்பு முதலில் கப்பல் துறைக்குக் கொடுக்கப்பட்டது. மனித ஈடுபாடு இல்லாமல் முடிவுகள் எடுக்கவும், ஆவணங்களைக் கையாளவும் தகவ‌ல் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சமீபத்தில் மாருதி சுஸூகி நிறுவனம், வாகனங்களைத் தென்னிந்தியாவிற்கு அனுப்ப கன்டெய்னர்களைச் சாலை வழியாக மட்டும் அனுப்பாமல், நடுவில் அவற்றை நதிகள் மூலமாகவும் அனுப்பியது. இதனால் செலவும் நேரமும் குறையும்.

கோவிட் பெருந்தொற்றின்போது, ஆக்ஸிஜன் டேங்க்குகள் டிரக் மூலம் தேவைப்பட்ட ஊர்களுக்கு அனுப்பட்டன. இந்த டிரக்குகள் பல‌ விமானங்கள் மூலம் வெளிநாடுகளிலிருந்து வந்தன. விமானங்கள் வந்திறங்கியதும், இந்த ட்ரக்குகளை விமானத்திருந்து சாலைகளில் அப்படியே ஓட்டிச் செல்லலாம். இவை வந்து இறங்கியபோது எழுந்த ஒரு சவால் - அவை இடதுபுறம் ஸ்டீயரிங் கொண்டவை (left hand drive). வழக்கமான ஓட்டுநர்களால் அவற்றைச் சுலபமாக‌ ஓட்ட முடியவில்லை. அப்போது பாதுபாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்னாத் சிங், இராணுவத்திலிருந்து ஓட்டுநர்களை ஏற்பாடு செய்தார்.

ரயில், வான்வழிப் போக்குவரத்து!

ஒவ்வொரு வழியான போக்குவரத்திலும் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் இருக்கும் நன்மையைப் பயன்படுத்தி, சரக்கு கொண்டு செல்லும் பெட்டிகள் சுலபமாக ஒரு வகையான போக்குவரத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதே பலதரப்பட்ட போக்குவரத்தின் குறிக்கோள். சரக்குகளை எடுத்துச் செல்லும் பெட்டிகளை அதற்கு ஏற்றாற்போல, பரிமாற்றத்திற்கு எளிதாக‌ வடிவமைக்க வேண்டும். நீண்ட தூரம் சரக்குகள் ஏற்றிச் செல்ல ரயில் சரியான வழி. நம் நாட்டில் ட்ரக்குகளின் பயன்பாடு குறைந்து ரயில், கப்பல் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவது முக்கியம். அதுவே இந்த ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்ட தேசியத் தளவாடங்கள் கொள்கையும் (National Logistics Policy) ஒரு முக்கிய அம்சம்.

60%-க்கு மேல் சரக்குகளும், 80%-க்கு மேல் மக்களும் இந்தியாவில் சாலை வழியில் பயணிக்கும் நிலை மாறி, ரயில் மூலம் அதிகம் பயணிக்கும் நிலை உருவாக வேண்டும். ரயில் துறையில் நடக்கும் மின்சாரமயமாக்கல் பற்றி பரத் சென்ற மாநாட்டில் வேப்கோ நிறுவனம் விளக்கியது. ஹைபர் லூப், ட்ரோன் போன்ற வளர்ந்து வரும் போக்குவரத்து வழிகள் பற்றிப் பல வல்லுநர்கள் பேசினார்கள். ட்ரோன்கள் இன்று கண்ணுக்கு எட்டும் தூரம் தாண்டி அமெரிக்காவில் நகரத்திற்கு நகரம், குறிப்பிட்ட வழித்தடங்களில் (air corridor) சென்று வர சோதனைகள் நடந்து வருகின்றன.

பலதரப்பட்ட போக்குவரத்தின் கடைசி அம்சம் - மைக்ரோ மொபிலிட்டி (micro mobility). நகர்ப்புறப் போக்குவர‌த்தின் எதிர்காலம் மைக்ரோ மொபிலிட்டி என்று உலகப் பொருளாதார நிறுவனம் (WEF) கூறுகிறது. மின்சார‌ம் மூலம் ஓடும் இரு சக்கர வாகனங்கள் இதன் ஒரு முக்கிய அம்சம். மக்களோ அல்லது சரக்கோ, ரயில் நிலையத்திலிருந்து வாடிக்கையாளரின் வாசற்படிக்கு அல்லது தொழிற்சாலையிலிருந்து கிடங்குக்குக் கொண்டு செல்ல, மைக்ரோ மொபிலிடி தேவைப்படும்.

நிலையான பலதரப்பட்ட போக்குவரத்து என்றால் என்ன?
நிலையான பலதரப்பட்ட போக்குவரத்து என்றால் என்ன?

மற்ற நாடுகளில் பலதரப்பட்ட போக்குவரத்து!

ஐரோப்பிய நகரம் ஹெல்ஸின்கியில் 2015-ல் அறிமுகப்படுத்தியிருக்கும் `விம் ஆப்’ மூலம் பலதரப்பட்ட போக்குவரத்து வழிகளில் சென்று வரலாம். மாதக் கட்டணம் கட்டி ரயில், பேருந்து, டாக்ஸி மூலம் சென்று வருவதற்குப் பதில் இந்த ஆப் மூலம் கட்டணம் கட்டிப் பயணிக்கலாம். இதன் இறுதி இலக்கு, ஒவ்வொருவரும் சொந்த வாகனம் இல்லாமல் ஒரு கைபேசி ஆப் மூலம் நினைத்த இடத்திற்குச் சென்று வருவதே! ஹெல்ஸின்கியைத் தொடர்ந்து இந்த அமைப்பு மற்ற ஐரோப்பிய நகரங்களிலும் தொடர்ந்தது. போக்குவரத்தை ஒரு சேவையாக (mobility-as-a-service) அறிமுகப்படுத்துவதில் உலக அளவில் ஃபின்லேன்ட் ஒரு முன்னோடி.

ஹாங்காங்கில் செயல்படுத்தப் பட்டிருக்கும் ஒரே டிஜிட்டல் கார்ட் மூலம், ஆறு போக்குவரத்து வழிகளுக்கும் கட்டணம் செலுத்தலாம். 1999-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கார்டை கடைகளிலும் பயன்படுத்தலாம்.

இங்கிலாந்தில் 5000 கிமீ நீள நதி வழிப் போக்குவரத்து வசதி உள்ளது. இதன் குறிக்கோள் மத்திய மற்றும் பிராந்திய நிறுவனங்களுக்கான பொறுப்பைச் சரியாக வரையறுத்துவிட்டு, பலதரப்பட்ட நதி வழிப் போக்குவரத்தை ஊக்குவித்து, அதன் மூலம் நிலையான சுற்றுலா மற்றும் போக்குவரத்தை உருவாக்குவது. இதைப்போல இந்தியாவில் பிரதம மந்திரி ஜல் மார்க் யோஜனாவின் இலக்கு - 110 புது நீர்வழிப் பாதைகளை உருவாக்கி, அதன் மூலம் பலதரப்பட்ட மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை வளர்ச்சியடையச் செய்வதே!

நிலையான பலதரப்பட்ட போக்குவரத்து என்றால் என்ன?

டிஜிட்டல் மயமாகிவரும் போக்குவரத்துத் துறை!

பல வாகனத் துறை மாநாடுகளுக்குச் சென்று வந்திருந்த பரத்துக்கு, இந்த மாநாடு வித்தியாசமான ஒன்றாகவே இருந்தது. பொதுவாக இன்ஜின் மூலம் ஓடும் வாகனங்கள், அவற்றைத் தயாரிக்கும் முறைகள், எரிபொருள் பயன்பாடு பற்றி விவாதிக்கப்படும். ஆனால் இந்த மாநாட்டில் அதிகம் பேசப்பட்டது எலெக்ட்ரானிக் அமைப்புகள், மென்பொருட்கள் மூலம் வாகனங்களைத் தானாக ஓட‌ச் செய்வது, அவற்றை மின்சாரமயமாக்குவது, கண்காணிப்பது மற்றும் ட்ரோன், ரயில், விமானம் போன்ற மற்ற வழிப் போக்குவரத்து வழிமுறைகள் பற்றித்தான்.

இந்தியாவில் போக்குவரத்துக்கு ஆகும் செலவு ஜீ.டீ.பியின் 14%. இது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆகும் செலவைவிட இரண்டு மடங்கு. இந்தச் செலவைக் குறைக்க மின்சாரமயமாக்கப்பட்ட, நிலையான பலவழிப் போக்குவரத்து ஒரு முக்கியமான பங்கு வகிக்கும் என்பதில் பரத்திற்கு எந்தச் சந்தேகமும் இல்லை. தன்னால், தன் நிறுவனத்தால் இந்தப் பாதையில் எப்படிப் பங்களிக்க முடியும் என்று யோசித்துக் கொண்டே பரத், மாநாடு நடந்த ஹோட்டலிலிருந்து வெளியே வந்தார்.

EV-க்களைத் தனித்தனியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பது மட்டும் வியாபாரம் செய்யும் ஒரே வழி அல்ல. நகரங்களில் மெட்ரோ, பேருந்து போன்ற‌ சேவை நடத்தும் நிறுவனங்கள், பொருட்களை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசல் வரை கொண்டு சேர்க்கும் கூரியர் போன்ற சேவை செய்யும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும், சிறிய இரு சக்கர மின்சார வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படும். டிரக்குகள், சிறிய வேன்கள், கார்கள், மற்ற இரு சக்கர வாகனங்களுடன் சுலபமான வ‌ழியில் சேர்ந்து வேலை செய்ய EV-க்களை எப்படி வடிவமைக்க வேண்டும் என்று பரத் யோசித்தார்.

(தொடரும்)