
Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

பரத், பல ஆண்டுகள் பெட்ரோல், டீசல் இன்ஜின் துறையில் வல்லுநராக இருந்துவிட்டு, காலத்தின் போக்கிற்கு ஏற்ப மின்சார வாகனத்துறைக்கு வந்த ஒரு CTO. அவர் ஒரு பெரிய வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தின் மின்சார வாகனப் (electric vehicle – EV) பிரிவின் தொழில் நுட்பத் தலைவர். மாற்றங்களை ஏற்றுக்கொண்ட பரத்திற்கே சமீபத்தில் மின்சாரமயமாக்கலையும் தாண்டி நடக்கும் திருப்பங்கள் வியப்பாகவே இருந்தன.
பெண் ஓட்டுநர்களைப் பாதுகாக்க சோதனைகள்!
1970-களில் இருந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது எப்படி நடந்து கொள்கின்றன என்று கணிக்க சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன (Crash Tests). இந்தச் சோதனைகளில் மனித உருவில் உள்ள நகல்கள் (dummy) பயன்படுத்தப்படும். வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்கள், ஏர் பேக், சீட் பெல்ட் எப்படி வேலை செய்கின்றன என்று அறிந்து கொள்ள இவை பயன்படும். ஆனால் இந்த நகல்கள் இன்று வரை ஆண்களின் உயரம், எடை, உடல் அமைப்பை வைத்தே செய்யப்பட்டு வருகின்றன.
உண்மை நிலவரம் என்னவென்றால், உலக அளவில் ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பெண்களே! ஒரு விபத்தில் பெண்கள் பலத்த காயம் அடைய, 47% அதிக சாத்தியக்கூறு உள்ளது. சில சமயம் அளவில் சிறிய நகல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் பெண்களின் எலும்பு மற்றும் தசை அமைப்பு ஆண்களைப்போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும்.
சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் ஒரு குழு, ஒரு சராசரிப் பெண்ணின் உடலமைப்பைச் சரியாகப் பிரதிபலிக்கும் ஒரு நகலை உருவாக்கி, அதனை வைத்துச் சோதனைகள் நடத்தத் தொடங்கியது. உதாரணத்திற்கு, இந்தக் குழு பயன்படுத்தும் நகலில் முதுகுத்தண்டு முற்றிலும் வளைந்து கொடுக்கும்படி இருக்கும். இந்தச் சோதனைகளின் அடிப்படையில் வரும் கண்டுபிடிப்புகளை வைத்து, பெண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் வாகனங்கள் தயாரிக்கலாம். பரத்தும் தன் நிறுவனம் தயாரிக்கும் EV-க்களை பெண்கள், வயதானவர்கள் மற்றும் சிறுவர்களைப் பிரதிபலிக்கும் நகல்களை வைத்துச் சோதனைகள் செய்ய என்ன தேவைப்படும் என்று யோசிக்கத் தொடங்கினார்.
இயற்கைச் சீற்றங்களின்போது உதவும் EVக்கள்!
பொதுவாக, EV-க்களை நாம் மின்சாரம் குடிக்கும் கருவிகளாகப் பார்ப்பது வழக்கம். ஆனால் அவற்றால் வேறு ஒரு பயன்பாடும் இருக்கிறது. அது பலத்த மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் சமயங்களில் வீடுகளுக்கு மின்சாரம் கொடுக்க ஒரு மாற்று ஏற்பாடாகப் பயன்படுத்துவது. இந்த ஏற்பாட்டை வாகனத்திலிருந்து கிரிட்டுக்கு மின்சாரம் அளிக்கும் அமைப்பாகக் கூறலாம் (vehicle-to-grid). சமீபத்தில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஏற்பட்ட புயலின்போது சில வீடுகளில் மின்சார வாகனத்தை வைத்து மின்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஃபோர்டு போன்ற நிறுவனங்கள், தங்கள் வாகனங்களை இப்படி இருவழி மின்சாரம் பாயும் கருவிகளாக வாடிக்கையாளர்கள் முன் சித்தரிக்கத் தொடங்கியுள்ளன. ஐந்தில் ஒரு வாகனம் EV ஆக விற்பனை ஆகும் சீனாவிலும், இந்த அணுகுமுறை பிரபலமாகி வருகிறது. மின்சார வாகனங்கள், சக்கரங்களில் ஓடும் பேட்டரிகளாகப் பார்க்கப்படுகின்றன. மின்சாரம் இல்லாத இடங்களில் இவற்றை வைத்து தேவைப்படும் கருவிகளை இயக்கலாம். இந்தியாவிலும் EVக்களின் இந்தப் பயன்பாட்டுக்குக் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் பரத்திற்குச் சிறிதளவும் சந்தேகம் இல்லை. தன் மார்க்கெட்டிங் அணியுடன் பேசும்போது இதைப் பற்றிக் கூற வேண்டும் என்று பரத் குறித்துக் கொண்டார்.
லாபம் ஈட்டும் மின்சார வாகனங்கள்!
மின்சார வாகனங்கள் லாபகரமாக விற்பனை ஆகும்வரைதான் அவற்றைத் தயாரித்து விற்கும் நிறுவனங்களுக்கு அவற்றில் ஆர்வம் இருக்கும். இன்று பல நிறுவனங்கள் அவற்றை மிகவும் குறைவான லாபத்தில்தான் விற்கின்றன. ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் கணிப்பின்படி EVக்கள் இன்ஜின் மூலம் ஓடும் வாகனங்களின் அளவிற்கு லாபகரமாக (price parity), அரசாங்கங்களின் மானியங்கள் எதுவும் இல்லாமல், 2026-ல் மாறும்.
இதற்கு ஒரு முக்கியக் காரணம் - பல ஆண்டுகளாகச் சரிந்து வரும் பேட்டரிக்களின் விலை. ஆனால் IEA (International Energy Agency) நிறுவனம் இந்த நிகழ்வு மேலும் பலரும் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே நடக்கும் என்று கூறியுள்ளது. முதலீட்டாளர்களின் பார்வையில் மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களின் அதிகமான மதிப்பீட்டைப் பார்க்கும்போது, EVக்கள் விரைவாக லாபம் ஈட்டும் என்று IEA கூறுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் இதற்கு தனிப்பட்ட முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு, ஃபோர்டு நிறுவனம் 2026-ல், தான் விற்கும் புது வாகனங்களில் மூன்றில் ஒன்று மின்சார வாகனமாக இருக்கும் என்று கணித்துள்ளது. அவை லாபகரமாக இருக்க EV-க்களை பரத்தின் நிறுவனம்போல ஒரு தனிப்பிரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் முடிவுகள் வேகமாக எடுக்கப்படும். வேகமாக முன்னேறி வரும் இந்தத் துறையில் முடிவுகள் எடுக்க அதிக காலம் எடுத்துக் கொண்டால், போட்டியாளர்கள் வேகமாக முன்னே சென்று விடுவார்கள்.
பொதுவாக, தன் வாகனங்களை ஃபோர்டு ஐந்தில் இருந்து ஏழு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றி வடிவமைக்கும். ஆனால் மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை அவற்றின் அமைப்பை வடிவமைக்கும் காலத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டு, அடிக்கடி மென்பொருட்களை மேம்படுத்தலாம் என்பதே ஃபோர்டின் திட்டம். EV-க்களின் கட்டமைப்பு மேலும் மேலும் ஒன்றோடு ஒன்று மாற்றக் கூடிய மாடுலர் மற்றும் தரப்படுத்தப்பட்ட பாகங்களால் தயாரிக்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தனது வலுவான நிதி நிலைமையால் நெருக்கடியான திருப்பங்களைச் சமாளித்து அதனால் சீக்கிரமாக EV-க்கள் லாபம் அடையும் என்று கூறுகிறது. BMW நிறுவனம் தன் புது பேட்டரி வடிவமைப்பால் விரைவில் லாபம் அடையும் என்று அறிவித்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் லாபத்தையும் தாண்டி அதன் முன்னுரிமை தொழில்நுட்ப முதலீடுகளுக்கே என்கிறது.
வாடிக்கையாளர்களைப் பொறுத்த வரையில், EV-க்கள் லாபம் ஈட்டுவதில் கார்களை வாடகைக்கு விடும் Hertz ஒரு உதாரணம். பல ஆயிரம் மின்சார வாகனங்கள் Hertz ஆர்டர் செய்துள்ளது. இது வரை பயன்படுத்திய EV-க்களால் பராமரிப்புச் செலவில் கிட்டத்தட்ட 50% மிச்சம் ஆனதாக கூறியுள்ளது. அமைப்பில் எளிதாக மற்றும் ஓடும் பாகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் EV-க்களில் பராமரிப்புச் செலவு குறைவதில் ஆச்சரியம் இல்லை. சூரிய ஒளி மற்றும் காற்றின் மூலம் தயாரிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சார்ஜ் செய்யப் பயன்படுத்துவதால், EV-க்களைச் செயல்படுத்தும் செலவும் நாளுக்கு நாள் குறையும்.
வாகனம் தாண்டி வியாபாரம் நடத்த வழிகள்!
மின்சார வாகனங்களில், அவற்றை விற்பதைத் தாண்டி வியாபாரம் செய்யப் புது வழிகள் உருவாகி வருகின்றன. உதாரணத்துக்கு, சிங்கப்பூரில் EV-க்களைச் சார்ஜ் செய்ய ஓடும் வாகனங்களைப் பயன்படுத்துவது ஒரு திட்டம். இதனால் சார்ஜ் இல்லாமல் வாகனம் நடு வழியில் நின்றால் உதவ, இவற்றை அழைக்கலாம். பாதி வழியில் வண்டி சார்ஜ் இல்லாமல் நின்றுவிடுமோ என்ற கவலையும் குறையும்.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக மின்சாரத்தை மேற்பார்வையிட ஒரு தனிப் பிரிவை அறிவித்துள்ளது (GM Energy). தனது EV வாடிக்கையாளர்களின் மின்சார விநியோகத்திற்குத் தேவைப்படும் அனைத்து நிறுவனங்களையும் ஒன்றோடு ஒன்று இணைத்து EV பராமரிப்பை மலிதாக்குவதே GM-ன் குறிக்கோள்.
ஜப்பானில் ஹோண்டாவும் சோனியும் ஒரு வாகனத்தைப் பொழுதுபோக்கும் கருவியாகப் பார்த்து, ஓடும் செயல்திறன் மற்றும் பாதுகாப்பையும் தாண்டி இசை, விளையாட்டுக்கள் போன்ற அம்சங்களையும் உள்ளடக்க ஒரு கூட்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
பேட்டரி பரிமாற்றிக் கொள்ளும் வ

சதி!
EV-க்களில் மிக அதிக விலையுயர்ந்த பாகமான பேட்டரியைச் சமாளிக்க பல ஆண்டுகளாக முயற்சிக்கப்படும் ஒரு வழி அவற்றை ஒன்றோடு ஒன்று மாற்றிக்கொள்வது (battery swapping). ஆனால் இதனை ஆதரிப்பவர்கள் ஒரு பாதி, எதிர்ப்பவர்கள் ஒரு பாதி.
பேட்டரி ஸ்வாப்பிங் சரியாக வேலை செய்யாமல் போனதற்கு ஓர் உதாரணம், இஸ்ரேலில் தொடங்கிய ஒரு ஸ்டார்ட் அப் Better Place. 2007-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் திட்டம் ரோபோக்கள் மூலம் பேட்டரி மாற்றும் சேவை மையங்களில் நிமிடங்களில் பேட்டரிக்களை மாற்றிக் கொள்வது. ஒரு ரோபோ, சார்ஜ் குறைந்த பேட்டரியை நீக்கிவிட்டு ஏற்கெனவே சார்ஜ் செய்யப்பட்ட ஒரு பேட்டரியைப் பொருத்திவிடும். ஒரு பேட்டரி மாற்றும் மையத்திற்கு சராசரியாகக் கணிக்கப்பட்ட செலவு $500 ஆயிரம். ஆனால், முடிவில் இதற்கு நான்கு மடங்கு முதலீடு தேவைப்பட்டது. வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரியான பேட்டரிக்களை வடிவமைக்க ஒத்துழைக்கவில்லை.
இந்த ஏற்பாட்டில் மேலும் சில சிக்கல்கள் இருந்தன. பல பேட்டரிக்கள் சார்ஜ் செய்து, வாடிக்கையாளர்கள் வரும் வரை பயன்படாமல் முடங்கிக் கிடந்தன. ஒரு சேவை மையத்திலிருந்து தேவைப்படும் மற்றொரு மையத்திற்கு பேட்டரிக்களை அனுப்ப வேண்டி இருந்தது. பல நாடுகள் வேகமாக DC மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் இயந்திரங்களைப் பொருத்தத் தொடங்கியுள்ளனர்.
இத்தகைய சவால்களையும் மீறி பேட்டரி மாற்றிக் கொள்வதைப் பெரிய அளவில் செயல்படுத்திய நாடு சீனா. பேட்டரியை ஒரு பொருளாகப் பார்க்காமல் சேவையாகப் பார்ப்பதே இதன் அடிப்படை (battery-as-a-service). வாகனத்தின் அமைப்பிலிருந்து பேட்டரியைத் தனியாகப் பிரித்துவிட்டால், அதன் விலை மலிவாகிவிடும். பல ஆயிரம் டாலர்கள் கொடுத்து பேட்டரியை வாகனத்துடன் வாங்குவதைவிட, சில நூறு டாலர்கள் சந்தாவாக மாதத்திற்குக் கொடுத்து அதைத் தேவைப்படும்போது மாற்றிக்கொள்வது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிக்கனமான வழி.
பேட்டரியை விற்கலாமா மாற்றலாமா?
பேட்டரியை வாகனத்துடன் சேர்த்து விற்கலாமா அல்லது மாற்றிக்கொள்ளும் வசதி செய்யலாமா என்பது பரத்திற்கு ஒரு புரியாத புதிராகவே இருந்தது. பேட்டரி மாற்றும் வசதியைச் செயல்படுத்த தனி முதலீடும், விரிவான திட்டமும் வேண்டும். அதைத் தன் நிறுவனம் மட்டும் தனியாக நடைமுறைப்படுத்த முடியாது. பல பார்ட்னர்கள் தேவைப்படும். இந்த முடிவை தான் ஒருவர் மட்டும் தனியாக எடுக்க முடியாது என்று அவர் உணர்ந்தார். அடுத்த போர்டு மீட்டிங்கில் இந்தக் கேள்வியைக் கண்டிப்பாக எடுத்து வைக்க வேண்டும் என்று பரத் குறித்து வைத்துக்கொண்டார்.
மின்சார வாகனங்களில் இருக்கும் பாகங்களில் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவை அமைப்பில் மிகவும் எளிமையானவை. இதனால் வாகனத்துறையில் இருக்கும் ஒரு பயம் - வேலை வாய்ப்பு மற்றும் தொழில், வணிகம் நடத்த வாய்ப்பு குறைந்து விடுவது, குறிப்பாக பாகம் தயாரிக்கும் சப்ளையர்களிடம். பரத் மின்சார வாகனம் தயாரிக்க கோவையில் உள்ள பல சப்ளையர்களிடம் தொடர்பில் ஒருந்தார். அடுத்த வாரம் அவர் அவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது மேலே பார்த்த வாகனத்துறை மாற்றங்களையும், அவற்றால் ஏற்படும் வாய்ப்புக்களையும் கண்டிப்பாக விளக்கிக் கூறி, அவர்கள் மனதில் இருக்கும் பயத்தைப் போக்க வேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தார்.
(தொடரும்)