Published:Updated:

மோட்டார் கிளினிக்!

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

கேள்வி பதில்

மோட்டார் கிளினிக்!

கேள்வி பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

அலுவலகம் போய் வர ஒரு 125 சிசி கம்யூட்டர் பைக் வாங்க இருக்கிறேன். ஹோண்டாவில் ஷைன் பைக் தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால், அதிலேயே இரண்டு ஷைன்கள் உள்ளன. CB ஷைன், ஷைன் SP125. இரண்டுமே பிடித்துள்ளது. எனக்குத் தெளிவான ஐடியா கொடுங்கள்.

– குகனேஷ், திருப்பத்தூர்.

மோட்டார் கிளினிக்!

இது பொதுவான குழப்பம்தான். இரண்டு ஷைன்களிலும் இருப்பதுமே ஒரே 124 சிசி இன்ஜின்; அதே 10.8bhp பவர்தான். அதனால் பெர்ஃபாமன்ஸிலும் மைலேஜிலும் பெரிய மாற்றம் இருக்காது. பழைய CB ஷைனில் 4 கியர்கள்தான்; இப்போது அதையும் SP125 மாதிரியே 5 கியர்களாக்கி விட்டார்கள். சில சின்னச் சின்ன வித்தியாசங்கள் இரண்டுக்கும்; ஆனால் முக்கியமானவை. இதில் SP125 ஷைன்தான் கொஞ்சம் அப்டேட்டட் ஆன பைக்.

உதாரணத்துக்கு, CB–ல் 10.5 லிட்டர் டேங்க்; SP125–ல் 11 லிட்டர். SP பைக்கின் டேங்க்கில் ஸ்கூப்பெல்லாம் கொடுத்து கொஞ்சம் ஸ்போர்ட்டியாக்கி இருப்பார்கள். இதனால் ஏரோ டைனமிக்ஸ் நன்றாக இருக்கும். அனலாக் மீட்டர் கொண்ட CB–யை ஒப்பிடும்போது, SP125 ஷைனில் டிஜிட்டல் மீட்டர் கொடுத்திருப்பார்கள். ட்ரிப் மீட்டர், கடிகாரம் போன்ற வசதிகள் SP125 ஷைனில்தான் உண்டு. இதில் எல்இடி ஹெட்லைட் மற்றும் ACG ஸ்டார்ட்டர் மோட்டார் போன்றவையும் உண்டு. சில டிசைன் வேலைப்பாடுகளால் ஷைனைவிட SP125 ஷைனின் எடை 3 கிலோ எடை அதிகம் (117 கிலோ). மற்றபடி இரண்டிலுமே சஸ்பென்ஷன் செட்அப்; காம்பி பிரேக்கிங் சிஸ்டம் என அதே! CB ஷைனின் ஆன்ரோடு விலை 92,000 ரூபாய் வந்தால்; SP125 ஷைனின் விலை சுமார் 96,500 வரும். ஆனால், சில ஆயிரங்களைப் பார்க்காமல் SP125 ஷைன் பைக்கையே புக் செய்வது நல்லது. ஸ்போர்ட்டியாகவும், கொஞ்சம் அப்டேட்டட் ஆகவும் அலுவலகம் போய் வரலாம்.

எனக்கு இன்னும் BS-6 மற்றும் BS-4–க்கும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. இரண்டையும் தெளிவாக ஒருமுறை சொல்லுங்கள்! அதேபோல் எரிபொருளிலும் இந்தத் தரம் உண்டா? BS-4 கார்களில் BS-6 எரிபொருள் பயன்படுத்தினால் என்னாகும்? BS-6 வாகனங்களில் மைலேஜ் அதிகமாகத் தருமாமே! அது உண்மையா?

– தேவன் கிருபா, மதுரை.

மோட்டார் கிளினிக்!
மோட்டார் கிளினிக்!

ஐரோப்பிய மாசு விதிமுறைகளைக் கொண்டே இதுநாள் வரை நம் நாட்டிலும் Bharat Stage மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே, யூரோ–6 மற்றும் BS-6 விதிமுறைகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்காது.

ஏப்ரல் 1, 2017 அன்று BS-3–க்குப் பிறகு BS-4 வந்தது. அதற்குப் பிறகு BS-5 வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், நாம் அதற்கும் மேலே BS-6 நார்ம்ஸுக்கு ரெடியாகி விட்டோம்.

BS-4 உடன் ஒப்பிடும்போது, BS-6 கார்கள் வெளியிடும் மாசு, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். முக்கியமாக – NOx எனும் நைட்ரஜன் ஆக்ஸைடு, PM எனக்கூடிய Particulte Matter - இரண்டும் வாகனங்களின் எக்ஸாஸ்ட்டில் இருந்து வரும் அளவைக் குறைப்பதுதான் BS-6 நார்ம்ஸ். உதாரணத்துக்கு, ஒரு BS-4 டீசல் காரில் வெளிவரும் NOx–ன் அளவு 80mg என்றால், BS-6–ல் 60mg ஆகவும், PM-25mg எனும் அளவு 4.5mg/Kgm ஆகவும் குறைந்திருக்கும். அதற்கேற்ற (DPF, SCR, DOC, 3 Stage Catalytic Converter, ASC, OBD) எனத் தொழில்நுட்பங்கள் உண்டு. இதனால், சைலன்ஸரில் புகை அடிப்பது, ஓட்டுதலில் பம்முதல் போன்றவை இருக்காது. சில காஸ்ட்லி கார்களில் பெட்ரோல் டேங்க்கில் புளூ கலரில் ஒரு அம்சம் இருக்கும். இதை ஆட் புளூ ஃபில்ட்டர் என்பார்கள். சில கார்களில் பானெட்டில் இந்த ஆட் புளூ ஃபில்ட்டர் இருக்கும். இதுவும் எக்ஸாஸ்ட்டில் இருந்து வெளிவரும் நச்சுக்களைக் குறைக்கும் அம்சம். இதைப் பற்றி நாம் வரும் இதழ்களில் விரிவாகப் பார்க்கலாம்.

எரிபொருளிலும் விஷயம் உண்டு. CO (கார்பன் மோனாக்ஸைடு), HC (ஹைட்ரோ கார்பன்), Nox (டைநைட்ரஜன் மோனாக்ஸைடு), PM (பர்ட்டிக்குலேட் மேட்டர்) – இந்த நான்கும்தான் விஷயமே! BS-4 எரிபொருளுடன் ஒப்பிடும்போது, BS-6 எரிபொருளில் சல்ஃபரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது (50ppm-ல் இருந்து 10ppm). இதைப் பயன்படுத்தும்போது, NOx-ன் அளவு 25% குறைந்திருக்கிறது. இந்த பர்ட்டிகுலேட் மேட்டர் என்பதைச் சாதாரணமாக எடை போடக் கூடாது. புற்றுநோய் வருவதற்கு மூலகாரணமான இதன் வெளிப்பாடும் BS-6 எரிபொருளில் கணிசமாக, அதாவது 70% குறைந்திருக்கிறது (PM 2.5 & PM 10). இதனால் பெர்ஃபாமன்ஸிலும் இன்ஜின் ரிஃபைன்மென்ட்டிலும் முன்பைவிட முன்னேற்றம் இருக்கும். ஆயிலில் விஸ்காஸிட்டி தன்மைக்குக் கால அவகாசம் கிடைக்கும். கார்களின் NVH Level (Noise, Vibration, Harshness) குறைந்து, பெர்ஃபாமன்ஸ் ஸ்மூத்தாக இருக்கும். இதனால், ஓரளவு மைலேஜும் உயரும்.

இப்போது 2022–ம் ஆண்டில் இருக்கிறோம். இதையெல்லாம் தாண்டி இப்போது CAFE (Corporate Average Fuel Efficiency) எனும் திட்டம் அமலுக்கு வரப் போகிறது. இதில் 30% அதிக மைலேஜைத் தர வேண்டிய கார்களைத் தயாரிக்கும் கட்டாயத்துக்கு ஆளாக இருக்கின்றன கார் நிறுவனங்கள்.

நீங்கள் கேட்டபடி, BS-4 காரில் BS-6 எரிபொருளைப் பயன்படுத்தும்போது…. இது பெட்ரோல் கார்களுக்குப் பெரிய பிரச்னை இருக்காது. டீசல் கார்களுக்கு இது ஸ்லோ பாய்ஸன் என்று சொல்கிறார்கள் வல்லுநர்கள். காரணம், ஆரம்பத்தில் இது ஸ்மூத்தான பெர்ஃபாமன்ஸுக்கு வழிவகுக்கும் என்றாலும், தொடர்ச்சியாக இது நிகழும்போது, ஃப்யூல் இன்ஜெக்டர்கள் மற்றும் பாகங்களின் செயல்பாடு மங்குவதைக் காணலாம் – ஆனால் உடனடியாக இல்லை. BS-3–ல் இருந்து BS-4–க்கு மாறும்போது இப்படி நடந்ததாகச் சிலர் சொல்கிறார்கள்.

என்னுடையது 6 பேர் கொண்ட குடும்பம். என் பட்ஜெட் 18 – 20 லட்சத்துக்குள். ஒரு நல்ல 6 சீட்டர் எஸ்யூவி வேண்டும். எனது முக்கியமான நோக்கம் – 3–வது வரிசை சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும். லெக்ரூமை விடுங்கள்; அந்த 3–வது வரிசைக்குப் போவதுதான் பெரிய டாஸ்க். சிரமப்படாமல் ஏற, ஒரு நல்ல காரைப் பரிந்துரையுங்கள்!

– கார்த்திக், சென்னை.

மோட்டார் கிளினிக்!
மோட்டார் கிளினிக்!

3–வது வரிசை என்பது, கார்களில் நிச்சயம் ஒரு பேருக்காகத்தான் இருக்கும். காரின் நீளம்/வீல்பேஸ் இவற்றைப் பொருத்துத்தான் இந்த 3–வது வரிசை அமையும். இருந்தாலும் இதை வரிசைப்படுத்தலாம். ட்ரைபர் ஒரு சப் 4 மீட்டர் கார். இப்போதைக்குக் குறைந்த விலை 7 சீட்டர் என்றால், ட்ரைபர்தான். உங்கள் பட்ஜெட் அதிகம் என்பதால், நிறைய ஆப்ஷன்கள் உண்டு.

பல வாடிக்கையாளர்கள் அல்கஸார், மஹிந்திரா எக்ஸ்யூவி700, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் போன்ற கார்களைச் சொன்னாலும், டாடாவின் ஹேரியர் இதில் பக்கா என்கிறார்கள். இதன் நீளம் 4,598 மிமீ. ஆனால், அல்கஸாரைவிட இதன் வீல்பேஸ் குறைவு என்பதால், இரண்டிலுமே அதே லெக்ரூம் கிடைக்கிறது. டாடாவில் நம்பகத்தன்மை அதிகம். எக்ஸ்யூவி 700 கொஞ்சம் சொகுசு ரகம். உள்ளே போய் வரவும் ஈஸியாகவே இருக்கிறது. இவை எல்லாமே உங்கள் பட்ஜெட்டைத் தாண்டுகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

இப்போது வந்திருக்கும் கியாவின் காரன்ஸ், இதை விட ஒரு புது ஆப்ஷனாகத் தெரிகிறது. இது நீளத்தில் அல்கஸாரைவிட 40 மிமீ அதிகம்; (ஹேரியரைவிடக் குறைவு). ஆனால், இப்போதைக்கு வீல்பேஸில் கியா காரன்ஸ்தான் சொல்லியடிக்கிறது. இதன் 2,780 மிமீ வீல்பேஸ், நல்ல இடவசதியை அளிக்கிறது. இதன் கி.கிளியரன்ஸும் 195 மிமீ என்பதால், மேடு பள்ளங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இதில் 3-வது வரிசைக்குப் போவதும் ரொம்ப ஈஸி. நடு வரிசை சீட்டில் பட்டனை க்ளிக் செய்தால் போதும். சட்டென நகர்ந்து வழிவிடுகிறது. லெக்ரூம் ரொம்பவும் மோசம் இல்லை; ஹெட்ரூம், ஷோல்டர் ரூம் என்று எல்லாமே பக்காவாக இருக்கிறது. தனி ஏசி வென்ட், சார்ஜர், கப் ஹோல்டர் என வசதிகளும் இருக்கின்றன. கியா காரன்ஸின் 6 சீட்டர் வேரியன்ட் நச்சென இருக்கும் உங்கள் பட்ஜெட்டுக்கு!

நான் ஹைபிரிட் மாருதி கார் ஒன்று வாங்கியிருக்கிறேன். ‘மைலேஜ் செமையா இருக்கும்’ என்று ஷோரூமில் பில்ட் அப் கொடுத்தார்கள் – ஹைபிரிட்தான் நல்லது என்று. ஹைபிரிட் என்றால் என்ன… சில நேரங்களில் இது வேலை செய்கிறதா என்றே எனக்குத் தெரியவில்லை. ஹைபிரிட்டில் என்னென்ன கவனிக்கணும்?

- செய்யது இர்ஃபான், திருப்பத்தூர்.

மோட்டார் கிளினிக்!

இதைப் பற்றி நாங்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். திரும்பவும் ஷார்ட்டாக உங்களுக்காக!

இதை மாருதியில் SHVS (Smart Hybrid Vehicle System) என்று சொல்வார்கள். ஹைபிரிட் கார்களின் இதயமே அதில் உள்ள பேட்டரிதான். இதில் பேட்டரி பேக்கேஜ் வழக்கமான கார்களைவிட பவர் அதிகமாக இருக்கும். டூயல் பேட்டரி கொடுத்திருப்பார்கள். இது சீட்டுக்கு அடியில் இருக்கும். சியாஸில்தான் முதலில் இந்த SHVS வந்தது. ஷோரூம் காரர்கள் சொல்வது உண்மைதான். SHVS கார்கள் மைலேஜில் அசத்தும். காரணம், இதில் உள்ள ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம்.

சிக்னலில் நிற்கும்போது, கியரை நியூட்லுக்குக் கொண்டுவந்துவிட்டு, க்ளட்ச்சில் இருந்து காலை எடுத்தால், கார் ஆஃப் ஆகிவிடும். மறுபடியும் க்ளட்ச் மிதிக்கும்போது ஸ்டார்ட் ஆகும். இதல் டீ–ஆக்ஸிலரேஷனின்போதும் லித்தியம் அயன் பேட்டரிக்கு சார்ஜ் ஏறும்.

ஓகே! இந்த ஸ்டார்ட்/ஸ்டாப் வேலை செய்வதில் சில சிரமங்கள் இருந்தால்.. அது வேலை செய்யவில்லை என்று அர்த்தம். முக்கியமாக 7 விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

1. பேட்டரி நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டும். கடைசி கட்டத்தில் லோ வோல்ட்டேஜில் இருக்கக் கூடாது.

2 சிக்னலில் நிற்கும்போது, பிரேக்கில் இருந்தும், க்ளட்ச்சில் இருந்தும் காலை எடுத்துவிட வேண்டும்.

3. ஹேண்ட்பிரேக் என்கேஜ்டில் இருக்க வேண்டும்.

4. கியர் நியூட்ரலில் இருக்க வேண்டும்.

5. டிரைவர் பக்கத்துக் கதவு திறந்திருக்கக் கூடாது. சிலர் கதவைத் திறந்துவிட்டு, சரியாக மூடாமல் மறுபடியும் க்ளட்ச்சை மிதிப்பார்கள். ம்ம்ம்ஹூம். திரும்பவும் சாவியைத் திருகி, க்ராங்க் செய்துதான் ஸ்டார்ட் செய்ய வேண்டும்.

6. முக்கியமாக டிரைவர் சீட் பெல்ட் போட்டிருக்க வேண்டும்.

7. மிக மிக முக்கியமாக, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோலை ஆன் செய்யவே கூடாது.

இந்த விஷயங்களால் ஏன் SHVS வேலை செய்யாது என்பதை டெக்னிக்கலாக முந்தைய மோட்டார் விகடனில் சொல்லியிருக்கிறோம். ஆன்லைனில் நீங்கள் இதை சப்ஸ்க்ரைப் செய்து படிக்கலாம்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism