Published:Updated:

மோட்டார் கிளினிக்

 கேள்வி-பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி-பதில்

கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

Published:Updated:
 கேள்வி-பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி-பதில்
ஸ்பாய்லர்
ஸ்பாய்லர்
ஸ்பாய்லர்
ஸ்பாய்லர்

கார்களுக்குப் பின்னால் ஸ்பாய்லர் என்றொரு விஷயம் உண்டே… அது எதற்கு? இது எல்லா கார்களுக்கும் உண்டா? சிலர் வெளிமார்க்கெட்டில் வாங்கி இதைப் பொருத்துவதைப் பார்த்திருக்கிறேன். கார்களின் பின்னால் டிக்கி மேல் பொருத்தப்படும் இந்த ஆக்சஸரீக்கும் காருக்கும் என்ன தொடர்பு… ஏதும் பலன் உண்டா? இதில் சட்டப்படி தவறேதும் உண்டா?

- சதீஷ்வரன், திருவான்மியூர்.

ஸ்பாய்லர்கள் வெறும் அழகுக்காக என்று மட்டுமே பலர் நினைக்கின்றனர். ஆனால் ஸ்பாய்லர் சத்தமே இல்லாமல் காருக்குப் பல நல்ல விஷயத்தைச் செய்கிறது.

ஸ்போர்ட்ஸ் கார்களில் நீங்கள் நிச்சயம் ஸ்பாய்லர்களைப் பார்த்திருக்கலாம். ஸ்பாய்லர்கள் இல்லாமல் ஸ்போர்ட்ஸ் கார்கள் இருக்காது. ஃபார்முலா 1 கார்களில் ஸ்பாய்லர்தான் துருத்திக் கொண்டு நிற்கும். இதிலிருந்தே புரிந்திருக்கும். ஆம், ஸ்பாய்லர் காரின் வேகத்துக்கு… டைனமிக்ஸுக்கு… நிலைத்தன்மைக்கு மிகவும் உதவி புரியும் ஒரு விஷயம்.

கார் வேகமாகப் போகும்போது, எதிர்த்திசையில் ஒரு கார் காற்றைக் கிழித்துக் கொண்டு போகும். இதை Drag என்று சொல்வர். அதாவது, இழுவை என்று சொல்லலாம். இந்த இழுவையைக் குறைக்கும் வேலையை ஸ்பாய்லர், கண்ணுக்குத் தெரியாமல் அட்டகாசமாய்ச் செய்கிறது. மின்னல் வேகத்தில் கார்கள் போகும்போது, காரின் நிலைத்தன்மை குலையாமல் பாதுகாக்கிறது இது. இதில் கார்களின் ஹேண்ட்லிங் மற்றும் ட்ராக்ஷன் பக்காவாகக் கிடைக்கும் என்பது உண்மை. அதாவது, Drag–யைக் குறைத்து Traction–ஐக் கூட்டுவதுதான் ஸ்பாய்லரின் வேலை. இதனால் இன்ஜின் சிரமப்பட்டு வேலை செய்யத் தேவை இருக்காது.

ஸ்பாய்லர்கள், 1960–லேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஆரம்பத்தில் கார்களின் முன் பக்கத்தில் பொருத்தப்படக் கூடிய ஸ்பாய்லர்கள்தான் பிரபலமாக இருந்தன. வேகமாக வீசும் காற்றை அப்படியே பக்கவாட்டுக்கு வெளியே தள்ளி, காரை நிலைகுலையாமல் பாதுகாக்கும் இவை.

இதில் இன்னொரு நன்மையும் மறைமுகமாகக் கிடைக்கிறது. அது, மைலேஜ்! உதாரணத்துக்கு, சைக்கிளில் வேகமாகப் போகும்போது எதிர்க்காற்று அடித்தால்… உங்களுக்கு சைக்கிள் மிதிக்கச் சிரமமாக இருக்கும்தானே! அதே கதைதான் கார்களுக்கும் ஏற்படும். வேகமாகப் போகும்போது, எதிர்க்காற்று காரின் நிலைத்தன்மையை மட்டுமல்ல; இன்ஜினையும் திணறடிக்கும். அப்போது இந்த ஸ்பாய்லர்தான் ஆபத்பாந்தவன். இன்ஜினின் திணறலைக் கட்டுப்படுத்தி, லீனியரான பெர்ஃபாமென்ஸையும் பவர் டெலிவரியையும் வழங்க இது உதவுகிறது.

நெடுஞ்சாலைகளில் பறக்க உதவுவதாலோ என்னவோ, ஸ்பாய்லர் பொருத்திய கார்கள் பார்ப்பதற்கு இறக்கைகள் கொண்ட பறவை போலவே தெரியும். இது கூடவே அழகுக்கும் துணை புரிகிறது. பார்ப்பதற்கு ஸ்போர்ட்டியாகவும் இருப்பதால், உங்கள் காரின் பெர்சனாலிட்டி நிச்சயம் மெருகேறும். நீங்கள் உங்கள் காரை ரீ–சேல் பண்ணும்போதும், கூடுதல் விலைக்கும் பேசலாம்.

இதில் இன்னொரு பாதுகாப்பு அம்சமும் உண்டு. உங்கள் காரின் ஸ்பாய்லரிலேயே இப்போது ரெஃப்ளெக்டர் கொண்ட அம்சங்களெல்லாம் வருகின்றன. அவற்றைப் பொருத்திவிட்டால், இரவு நேரங்களில் பயணிக்கும்போது, பின்னால் வரும் வாகனங்களுக்கு நீங்கள் முன்னால் போவது... அதாவது நன்றாக விஸிபிலிட்டி கிடைக்கும்.

அதேநேரம், இதில் சிக்கல் இல்லாமலும் இல்லை. வெளிமார்க்கெட்டுகளில் ஸ்பாய்லர் பொருத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது காரின் எடைக்குத் தகுந்த மாதிரி இருக்க வேண்டும். விலை குறைந்து கிடைக்கிறது என்பதற்காக எடை கூடுதலாகவோ, தரம் குறைந்த ஸ்பாய்லரையோ பொருத்தினால்… இந்த விளைவுகள் அப்படியே எதிர்ப்பதமாக உங்களுக்குத் திரும்பும். காரின் ஏரோடைனமிக்ஸ் மாறும்; நிலைத்தன்மை அடிபடும்; டாப் ஸ்பீடில் தொய்வு ஏற்படும்; அட, மைலேஜும் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Kraftfahrzeuge Trunkenpolz Mattighofen
Kraftfahrzeuge Trunkenpolz Mattighofen

எனக்கு ஒரு சந்தேகம். ஹோண்டா பைக்குகளில் யூனிகார்ன், ஷைன் ஓகே.. அதென்ன CB..? அதேபோல் அப்பாச்சியில் RTR, சுஸூகி பைக்குகளில் GS – இதுபோன்ற எழுத்துகளுக்கு என்ன அர்த்தம்?

– விக்னேஷ் குமார், மதுரை.

ஒவ்வொரு பைக் / கார் நிறுவனங்களும் இதுபோன்ற எழுத்துகளை தங்கள் வாகனங்களுடன் சேர்த்துக் கொள்வதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.

உதாரணத்துக்கு, ஹோண்டாவை எடுத்துக் கொண்டால்… அதிலுள்ள CB என்பது, Commute Bike என்பதைக் குறிக்கிறது. இது ஒரு ஜப்பானிய நிறுவனம் என்பதால், “Chokusetsu Baiku” எனும் ஜப்பானிய அர்த்தத்தில் இதை வைத்திருக்கிறது. இதையே ஹோண்டா CBR என்று கூடவே R இருந்தால், அதை ரேஸிங் பைக்குகளுக்கு நாமம் சூட்டுகிறது ஹோண்டா.

மேலும் சுஸூகி ஜிக்ஸரில் உள்ள SF என்பது Sports Faired என்பதைக் குறிக்கிறது. இதுவே பல்ஸரில் உள்ள N160 என்பது Naked என்பதையும், F என்பது Faired என்பதையும், NS என்பது Naked Sports, RS என்றால் Racing Sports, AS என்றால்

Adventure Sports என்பதையும் குறிக்கும். இதுவே அப்பாச்சியில் உள்ள RTR என்பது Racing Throttle Response என்பதையும், ஹீரோவில் உள்ள HF என்பது Hero Family என்பதையும் குறிக்கிறதாகச் சொல்கிறார்கள். இப்படி ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தைக் குறிக்கும் வகையில் பெயர் வைத்திருக்கிறார்கள்.

இதில் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த KTM என்பதன் விரிவாக்கம்தான் கொஞ்சம் வாய்க்குள் நுழையக் கஷ்டமாக இருக்கும். Kraftfahrzeuge Trunkenpolz Mattighofen என்பது இதன் விரிவாக்கம். Trunkenpolz என்பது, இதை நிறுவியரின் பெயர். கார் நிறுவனங்களுக்கும் இதுபோன்ற பெயர்க் காரணங்கள் பல உண்டு.

அப்பாச்சி RTR160
அப்பாச்சி RTR160

நான் ஒரு பைக் வாங்கப் போகிறேன். என் பட்ஜெட் 1.5 லட்சம். 150 – 160 சிசி போதும். வழக்கம்போல் இரண்டு சாய்ஸ்கள் இருக்கின்றன. அப்பாச்சி RTR160 மற்றும் யமஹா FZ-S. இரண்டில் எது பெஸ்ட். இரண்டுமே பிடித்திருக்கிறது. ஒரே குழப்பமாக இருக்கிறது. நல்ல தெளிவு சொல்லுங்கள்.

– அசோக்செல்வன், தேனி.

இதில் பலருக்கும் குழப்பம் ஏற்படுவது சகஜமே! யமஹாவைச் சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. இப்போதுள்ள பல இளைஞர்களின் இதயத் துடிப்பாக இருக்கிறது FZ-S. இதிலிருக்கும் ஸ்மூத்தான 149 சிசி இன்ஜின், ஜிவ்வென்று இருக்கிறது. ஆனால், இதன் பவர் குறைவு. இதன் சிங்கிள் சீட்டின் அகலமும், உயரமும் நன்றாக இருக்கும். குடும்பத்தினருடன் பயணிக்க FZ-S சிறப்பாக இருக்கிறது. இதன் ஆன்ரோடு விலை 1.47 லட்சம் வருகிறது. இந்த விலைக்கு இதில் வசதிகள் குறைவுதான். கியர் பொசிஷன் இண்டிகேட்டர், சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் போன்ற வசதிகள் இல்லை. இதன் எல்இடி – ஹாலோஜன் ஹெட்லைட் காம்பினேஷனில் இன்னும் கொஞ்சம் பவர் வேண்டும். மற்றபடி ஸ்டைலில் பக்கா. கிண்ணென்று பாடி பில்டர் போல இருக்கிறது FZ-S.

அப்பாச்சியை எடுத்துக் கொண்டால், பல விஷயங்கள் FZ-S–யை விட முன்னிலையில் இருக்கிறது. இதன் சிசி, பவர், டார்க் போன்ற எல்லோமே யமஹாவை விட ஒரு படி மேலேயே இருக்கிறது. இதன் பவர் 17.6bhp. வெறித்தனமாக இருக்கிறது. ஸ்லோ டிராஃபிக்கில் தானாக க்ரீப் ஆகும், GTT (Glide Through Technology)-யும் இருக்கிறது இதில். இதில் டாப் ஸ்பீடு 118 கிமீ வரை பறந்திருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். 14.73Nm டார்க்கும், பிக்–அப்புக்கு நன்று உதவுகிறது. இதில் கியர் பொசிஷன் இண்டிகேட்டர், எல்இடி ஹெட்லைட்கள், டிவிஎஸ் SmartXonnect புளூடூத் கனெக்டிவிட்டி என்று பல வசதிகளும் இருக்கின்றன. யமஹா – டிவிஎஸ் இரண்டிலுமே பெரிதாக வேறெந்தக் குறைகளும் இல்லை. டிவிஎஸ்ஸின் விலை 1.45 லட்சம் ஆன்ரோடு. இருந்தாலும், ஓவர்ஆலாக ஒரு வெல்பேக்கேஜ்டு பைக்காக ஜொலிக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V.

நெக்ஸான்
நெக்ஸான்

15 லட்சம் பட்ஜெட்டில் ஒரு டீசல் கார் வாங்க விருப்பம். எனக்கு இடது காலில் கொஞ்சம் பிரச்னை. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் விருப்பம். கியா செல்ட்டோஸ் என் தேர்வில் இருக்கிறது. டாடா நெக்ஸான் டீசலும் ஆப்ஷனில் வைத்துள்ளேன். இரண்டில் எந்த காரை வாங்கலாம். நச்சுனு ஒரு ஐடியா சொல்லுங்க!

- கருப்பசாமி, துறையூர்.

இதற்கு ‘நறுக் சுறுக்’ என்று ஒரே வரியில் பதிலளித்து விடலாம். உங்களுக்கு ஓட்டுதலில் ஒரு பெப்பினெஸ்ஸும் ஃபன் டு டிரைவும் வேண்டுமென்றால்… கியா செல்ட்டோஸின் டீசல் ஆட்டோமேட்டிக்தான் மிகச் சரியான சாய்ஸ். பாதுகாப்புதான் முக்கியம் என்றால், டாடா நெக்ஸானை விட்டால் ஆப்ஷனே இல்லை.

செல்ட்டோஸில் இருக்கும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக், சட் சட் என கியர் மாறுவதுடன், நமது சொல்பேச்சுக் கேட்கும் அருமையான கியர்பாக்ஸாக இருக்கிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் நல்ல மைலேஜும் தருகிறது. இது ஆவரேஜாக 17.5 கிமீ தருகிறது என்கிறார்கள். இதன் ப்ரீமியமான இன்டீரியரும், வென்டிலேட்டட் சீட், ஒயர்லெஸ் சார்ஜிங் போன்ற சொகுசான வசதிகளும் உங்களை வேற லெவலில் காட்டுகிறது. இதன் ரைடு குவாலிட்டி கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும். க்ராஷ் டெஸ்ட்டிலும் இது 3 ஸ்டார் ரேட்டிங்தான் என்பதால், பாதுகாப்பில் பல்லிளிக்கிறது செல்ட்டோஸ்.

நெக்ஸானில் இருப்பது AMT கியர்பாக்ஸ்தான். இது பைக் ஓட்டுபவர்களுக்கு ஸ்கூட்டர் ஓட்டினால் எப்படி இருக்குமோ… அப்படி ஒரு ஃபீலிங்கைத் தருகிறது. செல்ட்டோஸ் அளவுக்கு டிரைவிங்கில் ஒரு உற்சாகம் மிஸ்ஸிங். வசதிகளிலும் செல்ட்டோஸ் அளவுக்கு எதிர்பார்க்க முடியாது. ஆனால், இதன் க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங் 5 ஸ்டார். சும்மா கிண்ணென பாறை போல இருக்கும் இதன் கட்டுறுதிதான் இதன் ஸ்பெஷல். செல்ட்டோஸைவிட அதிக கி.கிளியரன்ஸ் கொண்ட நெக்ஸான், ஆஃப்ரோடு பண்ணுவதற்கும் வசதியாக இருக்கும். இதன் மைலேஜும் சுமார் 18 கிமீ தருவதாகச் சொல்கிறார்கள்.

இப்போது முதல் வரியைப் படியுங்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com