Published:Updated:

மோட்டார் கிளினிக்

 கேள்வி-பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி-பதில்

கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

Published:Updated:
 கேள்வி-பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி-பதில்
மோட்டார் கிளினிக்

நான் பழைய செவர்லே பீட் வைத்திருக்கிறேன். வரும் ஆண்டு இறுதியில் எஃப்சி எடுக்க வேண்டும். எஃப்சிக்கான கட்டணம் உயர்த்தி இருக்கிறார்களாமே! இதை FC ரின்யூவல் செய்வது சரியா… அல்லது எக்ஸ்சேஞ்சில் கொடுத்து விடலாமா? பீட் எனக்கு மிகவும் ராசியான கார். கொடுக்கவும் மனசு இல்லை.. என்ன செய்ய?

கிருஷ்ணகுமார், திருச்சி.

ஆம்! இப்போது பழைய வாகனங்களுக்கான FC ரின்யூவல் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. இதற்கு முன்பு 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கார்களை எஃப்சி செய்வதற்கு 600 – 800 ரூபாய் கட்டினால் போதும். இப்போது குறைந்தது 5,000 ரூபாய் செலவழிக்க வேண்டும். மேலும் எஃப்சி எடுக்கும் நாள் தள்ளிப் போனால், அதற்கும் அபராதம் உண்டு. ஒவ்வொரு நாளுக்கும் 50 ரூபாய் கட்டணம். இது தவிர – ஆண்டுகள் ஆக ஆக, பசுமை வரி – எக்ஸ்ட்ரா சாலை வரி – சுற்றுச்சூழல் வரி என்று நீங்கள் ஏகப்பட்ட வரிகள் கட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இந்தக் கடுமையான விலையேற்றம் எதற்காகவென்றால், அனைவரும் பழைய கார்களை ஸ்க்ராப்பில் போட்டுவிட்டு, புது BS-6 கார் வாங்க வேண்டும் என்பதே!

மேலும், நீங்கள் வைத்திருப்பது செவர்லே நிறுவனத்தின் கார். கார் நிறுவனமே மூடப்பட்டு விட்டதால் சர்வீஸ் என்று வரும்போது, இதன் உதிரிபாகங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாகவே இருக்கும் என்பதையும் கவனியுங்கள். (உங்களுக்கே இந்த அனுபவம் நிகழ்ந்ததாக ஒரு முறை மோ.வி–க்குச் சொல்லியிருக்கிறீர்கள்!) இதை எக்ஸ்சேஞ்சில் கொடுத்தால், குறைவான விலைக்குப் போகும் என்பது வாஸ்தவமே! அதேநேரத்தில், விலை குறைந்த காருக்கு இவ்வளவு தொகை கொடுத்து ரின்யூவல் செய்வதும் புத்திசாலித்தனமில்லை என்றே தோன்றுகிறது.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

அட்டானமஸ் டிரைவிங் என்றால் என்ன? அதிலேயே லெவல்கள் இருக்கின்றன என்கிறார்களே! என்னென்ன மாடல்கள் அட்டானமஸ் டிரைவிங் வசதி கொண்டிருக்கின்றன. கொஞ்சம் விளக்குங்கள்!

– சுந்தர பாண்டியன், திருச்சுழி.

இந்த அட்டானமஸ் டிரைவிங் ‘ஆட்டோ பைலட் கார்’ என்றும் சொல்கிறார்கள். அதாவது, விமானங்களில் ஆட்டோ பைலட் இருப்பதுபோல், கார்களுக்கு இந்த வசதியை ஆன் செய்துவிட்டால், டிரைவர்களுக்கு வேலைப் பளு குறையும். நாம் சிம்பிளாக இதை ADAS (Advanced Driver Assistance System) என்கிறோம். இதில் பல லெவல்கள் உண்டு. நம் ஊரில் இந்த ADAS லெவல் 1 தொழில்நுட்பத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 700, ஹூண்டாய் அல்கஸார் போன்ற கார்கள் மார்க்கெட்டில் கெத்தாகக் கிடைக்கின்றன. இதில் எம்ஜி நிறுவனம், லெவல் 2 ADAS தொழில்நுட்பத்துடன் கலக்கலாக வந்திருக்கிறது. இதில் மொத்தம் 5 லெவல்கள் உண்டு. அது என்னனு பார்க்கலாம்.

லெவல் 1: ஸ்டீயரிங் அல்லது ஆக்ஸிலரேஷன்… அல்லது பிரேக்கிங் – இந்த மூன்றில் ஏதாவது இரண்டை மட்டும் நீங்கள் கவனித்துக் கொண்டால் போதும். உதாரணத்துக்கு, ஸ்டீயரிங்கும் ஆக்ஸிலரேஷனும் மட்டும் உங்கள் கன்ட்ரோல் என்று வைத்துக் கொள்வோம்; ஆபத்துக் காலங்களில் கார் தானாக பிரேக் பிடித்து நிற்கும். இது முதல் லெவல்.

லெவல் 2: இதில் உங்கள் கார் ஒன்றுக்கும் மேற்பட்ட சில பொறுப்புகளைக் கவனித்துக் கொள்ளும். உதாரணத்துக்கு – பார்க்கிங், ஸ்டார்ட்/ஸ்டாப் டிராஃபிக்கில் காரை நேவிகேட் செய்வது, சட்டென லேன் மாறுவது இது போன்ற விஷயங்களில் உங்கள் கார் அலெர்ட்டாக இருக்கும். லெவல் 1 மற்றும் லெவல் 2 – இரண்டையும் சேர்த்துத்தான் ADAS (Advance Driver Assist System) தொழில்நுட்பம் என்கிறார்கள். இருந்தாலும், நீங்கள் காரை மானிட்டர் செய்து கொண்டே இருப்பது அவசியம். தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் பட்சத்தில், எந்த நேரத்திலும் நீங்கள் அலெர்ட்டாக இருக்க வேண்டும்.

லெவல் 3: இதை கண்டிஷனல் ஆட்டோமேஷன் என்கிறார்கள். இது கொஞ்சம் இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம். முந்தைய லெவல்கள் காரின் அசிஸ்ட்டன்ஸுக்கு அசிஸ்ட்டன்ட்டாக இருந்தால், இது கார் ஓட்டுவதையே கவனித்துக் கொள்ளும். அதுவும் ஹைவேக்களில் இது ஜாலியாகவே இருக்கும். நீண்ட சாலைகளில் எவ்வளவு நேரம்தான் ஆக்ஸிலரேட்டரை கிராஜுவலாக மிதித்து, கவனமாக ஸ்டீயரிங் பிடித்து… என்று போர் அடிக்கும் டிரைவர்களுக்கு இது வரப்பிரசாதம். சாலை மராமத்துப் பணிகள், ரோடு டைவர்ஷன் வந்தால்… டிரைவருக்கு அலெர்ட் கொடுத்துவிடும். அப்புறமென்ன… உங்கள் சோம்பேறித்தனத்துக்கு விடுதலை கொடுக்க வேண்டும்.

லெவல் 4: இதை High Automation என்கிறார்கள். முன்னது ஹைவேஸில்தான் ராஜா என்றால், இது சிட்டிக்குள்ளும் உங்கள் உதவியில்லாமல் புகுந்து புறப்படும். டிரைவர்கள் உங்கள் சொந்த வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம்; டிவி பார்க்கலாம்; குழந்தைகளுடன் பிசியாக இருக்கலாம். அட, ஒரு குட்டித் தூக்கம்கூடப் போடலாம். ரொம்பவும் இக்கட்டான நேரங்களில் உங்களை அலெர்ட் செய்யும். அப்படியும் நீங்கள் தூக்கத்தில் இருந்தால்… கார் தானாகவே பிரேக் பிடித்து நின்றுவிடும்.

லெவல் 5: இதுதான் Full Automation என்கிறார்கள். ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தின் உச்சம் இது. இதில் டிரைவர், பயணியாக தேமேவென அமர்ந்து வந்தால் போதும். அட, கார் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. லைசென்ஸ் தேவையில்லையானுலாம் கேட்கப்புடாது. ரோபோ டாக்ஸிக்கள் இந்த லெவல் 5 தொழில்நுட்பத்தில்தான் ரெடியாக இருக்கின்றனவாம். சில லெவல் 5 கார்களில் ஸ்டீயரிங் வீல், பெடல்கள் போன்ற விஷயமே இருக்காதாம்!

எல்லாமே தானாக நடக்கும் என்றால், விபத்தே நடக்காதா என்றால்… அதிலும் சிக்கல் இருக்கிறது. 2019–ல் அமெரிக்காவில் லெவல் 2+ ஆட்டோ பைலட் கொண்ட டெஸ்லா மாடல் S கார் ஒன்று விபத்தானதில், மற்றொரு ஹோண்டா காரில் இருந்த இரண்டு பேர் பலியாயினர். இதில் சிவப்பு விளக்கு எரிந்தபோதும், அந்த டெஸ்லா கார் வேகமாகப் போனதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது, இது தொழில்நுட்பக் கோளாறு; இந்த நேரத்தில் டிரைவருக்கு அலெர்ட் கொடுத்திருக்க வேண்டும்; டிரைவராவது அதைக் கையில் எடுத்திருக்க வேண்டும். இதில் டெஸ்லா மீதுதான் முழுத்தவறு; முறையாக டெஸ்லா அரசாங்கத்திடம் அனுமதி பெறவில்லை என்றும்… இதில் டிரைவர் மீதுதான் தவறு. அவர் ஆட்டோ பைலட் சிஸ்டத்தை மிஸ்யூஸ் செய்திருக்கிறார் என்றும் வழக்கு வாக்குவாதம் போய்க் கொண்டிருக்கிறது.

இதில் லெவல்–2 வரை வந்து விட்டது. லெவல்–3 ஆட்டோ பைலட் புரொஜக்ட்டைக் கொண்டு வர மெர்சிடீஸ் பென்ஸ் அடுத்த படியில் இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் கட்டமாக அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் லெவல்–3 ஆட்டோ பைலட் கார்கள்தான் ஓடும் என்று பென்ஸ் கூறியிருக்கிறது.

மோட்டார் கிளினிக்

நான் டெலிவரி பாய். நான் 200சிசி பைக் வைத்துள்ளேன். பெட்ரோல் போட்டு நானும் பர்ஸும் மெலிந்தே விட்டோம். எனக்கு 125 சிசியே போதும் என்றிருக்கிறேன். பார்க்க லுக்காகவும் இருக்க வேண்டும்; மைலேஜும் நன்றாக இருக்க வேண்டும். 1 லட்சம் பட்ஜெட்டில் எனக்கு ஏற்ற பைக்கைப் பரிந்துரையுங்கள்!

– சக்கரவர்த்தி, கோவை.

உங்கள் பட்ஜெட்டில் பல பைக்குகள் மார்க்கெட்டில் உண்டு. இதில் நச்சென இரண்டு பைக்குகளைப் பரிந்துரைக்கிறோம். ஹோண்டா SP ஷைன் அல்லது டிவிஎஸ் ரெய்டர்.

SP ஷைனைப் பொருத்தவரை மாடர்னாக இருக்கிறது. ட்ரிப் மீட்டர், டிஸ்ட்டன்ஸ் டு எம்ப்ட்டி மீட்டர், எல்இடி ஹெட்லைட்ஸ், டிஜிட்டல் மீட்டர், 5 கியர் என்று வசதிகளும் ஓகே! இதன் மைலேஜ் 45 – 48 தருவதாக நமது மோட்டார் விகடன் வாசகர்கள். இது ஹேண்ட்லிங்கிலும் பக்காவாகவே இருக்கிறது. இதன் ஆன்ரோடு விலை – 1.04 லட்சம் வருகிறது. இதை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள்.

டிவிஎஸ் ரெய்டர்தான் இந்த ஆண்டின் சிறந்த கம்யூட்டிங் பைக்காக விருது வாங்கியிருக்கிறது. 125 சிசியாக இருந்தாலும், இதன் ஸ்டைல் இளசுகளுக்கே பிடித்திருக்கிறது. இந்த செக்மென்ட்டின் பவர் மற்றும் டார்க் அதிகம் கொண்ட பைக். டிஸ்ட்டன்ஸ் டு எம்ப்ட்டி மீட்டர் தவிர்த்து DRL, சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட்ஆஃப் என்று பல வசதிகள் ரெய்டரில் உண்டு. உயரமானவர்களுக்குக் கூட இதன் ஹேண்ட்லிங் பக்காவாக இருக்கிறது. நீங்கள் கேட்ட மைலேஜ் விஷயத்திலும் ரெய்டர் சொல்லியடிக்கிறது. இது ஆவரேஜாக 58 – 60 கிமீ வரை மைலேஜ் தருவதாகச் சொல்கிறார்கள். ரெய்டரில் ஒரே ஒரு குறை – இதில் கிக் ஸ்டார்ட் கிடையாது என்பதுதான். குளிர் காலங்களில் செல்ஃப் எடுக்கவில்லை என்றால் மட்டும் கனெக்டர்களை அன்ப்ளக் செய்து ரீ–ப்ளக் செய்வதுபோல் இருக்கும். இதுவரை ரெய்டரில் ஸ்டார்ட்டிங் ட்ரபுளை யாரும் சொல்லவில்லை. மற்றபடி உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற அற்புதமான சாய்ஸ், டிவிஎஸ் ரெய்டர் 125.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

எனக்கு மேனுவல் கார்தான் பிடிக்கும். 7 லட்சம் என் பட்ஜெட். மாருதி செலெரியோ, டாடா அல்ட்ராஸ் – இந்த இரண்டில் எது வாங்கலாம்? பெரிய குழப்பமாக இருக்கிறது. தீர்வு சொல்லுங்கள்!

– கார்த்திக் குணசீலன், தஞ்சாவூர்.

உங்கள் பட்ஜெட் சொன்னீர்கள். தேவை என்ன என்று சொல்லவில்லை. இரண்டுமே ஒவ்வொரு விஷயங்களிலும் சொல்லியடிக்கும் கார்கள்.

மாருதியை எடுத்துக் கொண்டால்… பராமரிப்பு மற்றும் மைலேஜ். இந்த இரண்டில் மாருதியை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. செலெரியோவின் ரியல் டைம் மைலேஜ் 19 கிமீ–யைத் தாண்டியே இருக்கும். இதன் சர்வீஸ் செலவுகளும் ரொம்பவே குறைவு. நீங்கள் சொல்லும் பட்ஜெட்டில்… இல்லை அதற்குள்ளாகவே செலெரியோவின் டாப் மாடலான ZXI Plus மாடலே வந்துவிடுகிறது. ஆனால், இதில் வசதிகள் என்று பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. இதன் இன்ஜின் பவரும் டார்க்கும் அல்ட்ராஸை ஒப்பிடும்போது ரொம்பவே குறைவு. அதனால், ஓட்டுதலில் பெப்பினெஸை எதிர்பார்க்க முடியாது. ஆனால், குறைவான வேகங்களில் செலெரியோ ஓட்ட அற்புதம். செலெரியோவின் பூட் ஸ்பேஸ் குறைவுதான் – 313 லிட்டர். பாதுகாப்பிலும் டாடா அளவுக்கு இதன் கட்டுமானம் இல்லை என்பதையும் கவனிக்க!

அல்ட்ராஸின் ஒரு ப்ரீமியம் ஹேட்ச்பேக். டச் ஸ்க்ரீன், ரிவர்ஸ் கேமராவில் ஆரம்பித்து எக்கச்சக்க வசதிகள் உண்டு. பிராக்டிக்கலாகவும் கலக்குகிறது அல்ட்ராஸ். இதன் பூட் ஸ்பேஸ் – 345 லிட்டர். இதிலும் 3 சிலிண்டர்தான்; ஆனால் இதன் பவரும் டார்க்கும் செலெரியோவை விட அதிகம். இதன் ஃபன் டு டிரைவும், நெடுஞ்சாலை நிலைத்தன்மையும் அற்புதமாக இருக்கும். மேலும் இதன் ரோடு பிரசன்ஸும் கட்டுமானமும் அடடா! இதன் லுக் பல குழந்தைகளுக்கே பிடிக்கிறது. இதுதான் குளோபல் என்கேப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய இந்தியாவின் ஒரே ஹேட்ச்பேக். என்ன, மைலேஜ் செலெரியோ அளவுக்கு இதை எதிர்பார்க்க முடியாது. இது 15 – 16 கிமீ தருவதாகச் சொல்கிறார்கள். இதன் XT வேரியன்ட்டைத்தான் நீங்கள் பரிசீலிக்க வேண்டும். இது 7.5 லட்சம் வரும். உங்களுக்குக் கட்டுமானமும் பாதுகாப்பும் முக்கியம் என்றால் டாடா அல்ட்ராஸ்! பராமரிப்பும் மைலேஜும் மட்டும் போதும் என்றால் செலெரியோ!

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism