பாதுகாப்பு அம்சங்களில் 'கறார்' காட்டும் மத்திய அரசு!
கார்களில் முன் பக்க இரண்டு இருக்கைகள் மற்றும் பின் பக்க ஜன்னலோர இருக்கைகளில் மட்டுமே 3-பாய்ன்ட் சீட்பெல்ட் கொடுக்கப்பட்டு வந்தது. கார்களின் பின்னால் இருக்கும் நடு இருக்கையில் இருப்பவருக்கு லேப் சீட்பெல்ட்டையே பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி வந்தன. ஆனால், இனி நடுவில் இருப்பவருக்கும் 3-பாய்ன்ட் சீட்பெல்ட் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு பல்வேறு பாதுகாப்பு விதிகளை ஆட்டோமொபைல் துறையில் அமல்படுத்தி வருகிறது நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை. காரின் முன்னால் இருக்கும் இரண்டு இருக்கைகளுக்கும் ஏர்பேக்குகளைக் கொடுப்பதைக் கடந்த ஆண்டு அறிவித்தது மத்திய அரசு. அதற்காக சில மாதங்கள் கால அவகாசமும் கொடுக்கப்பட்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த ஜனவரியில் இருந்து இந்தியாவில் விற்கப்படும் கார்கள் அனைத்திலும் முன்பக்கம் இரண்டு ஏர்பேக்குகள் இருக்க வேண்டியது அவசியம். இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 8 சீட்கள் கொண்ட கார்களில் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளைக் கட்டாயமாகக் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்.
இப்படித் தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களை விரிவுபடுத்துவதன் ஒரு பகுதியாகவே இந்த 3-பாய்ன்ட் சீட்பெல்ட் விதிமுறையையும் கொண்டுவந்திருக்கிறது. இந்த விதிமுறை எப்போது இருந்து அமலுக்கு வரும் என்பது போன்ற தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இதைத் தொடர்ந்து மற்ற பாதுகாப்பு அம்சங்களான ESC (Electronic Stability Control), AEB (Auto Emergency Braking), Blind Spot Monitor, Lane Departure Warning மற்றும் Driver Drowsiness Alert System போன்ற இன்னும் பல பாதுகாப்பு அம்சங்களை ஒவ்வொன்றாகக் கட்டாயப்படுத்தும் விதிமுறைகளை அமல்படுத்தும் நோக்கத்தில் இருக்கிறது நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம்.
மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கள்!

ஜூலையில் தாங்கள் அறிமுகப்படுத்தவிருக்கும் மூன்று புதிய எலெக்ட்ரிக் கார்களின் டீஸரை வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா. 'C' வடிவ ஹெட்லைட்கள் மற்றும் டெய்ல் லைட்களுடன் மூன்றுமே எலெக்ட்ரிக் கார்களுக்கு உரிய இலக்கணங்களுடன் இருக்கின்றன. ஒரு காம்பேக்ட் எஸ்யூவி, ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் ஒரு எஸ்யூவி கூபே என இந்த மூன்றுமே சாட்சாத் எலெக்ட்ரிக்தான் என்கிறது மஹிந்திரா. காரணம், இது மூன்றும் மஹிந்திராவின் புதிய 'Born Electric' ப்ளாட்ஃபார்மிலேயே தயாரிக்கப்படவிருக்கின்றன. இந்த மூன்று எஸ்யூவிக்களையும் பிரதாப் போஸ் தலைமையிலான, UK-வை தலைமையிடமாகக் கொண்ட Mahindra Advance Design Europe பிரிவே டிசைன் செய்திருக்கிறது.
இதில் எலெக்ட்ரிக் கூபேவாக இருப்பது, XUV900. மிட் சைஸ் எஸ்யூவியாகத் தெரிவது, XUV700 கார். அப்படியென்றால், அந்த காம்பேக்ட் எஸ்யூவி என்பது நாம் ஆட்டோ எக்ஸ்போவில் பார்த்த eXUV300 கார்தானே என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. இது முற்றிலும் புதுசு என்கிறது மஹிந்திரா. இந்த மூன்று மாடல்களையும் இந்த ஆண்டு ஜூலைக்குள் எதிர்பார்க்கலாமா மஹிந்திரா?
திரும்பவும் ஹோண்டா CB150R பைக்...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தங்களுடைய 150சிசி பைக்கான CB150R-ன் விற்பனையை நிறுத்தியது ஹோண்டா. அதன் பிறகு இந்தியாவில் ஹோண்டாவின் 150 சிசி பைக்குகள் எதுவுமே விற்பனையில் இல்லை. ஆனால், இந்தோனேஷியா போன்ற சில வெளிநாட்டுச் சந்தைகளில் CB150R பைக்கை விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. தற்போது இந்தியாவிலும் CB150R பைக்கை ஹோண்டா வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் தங்களுடைய புதிய 150சிசி பைக்கை விற்பனை செய்வதற்காகப் பதிவு செய்திருக்கிறது ஹோண்டா.

ஆனால், இது மற்ற சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதைப் போல நேக்கட் பைக்காக இல்லாமல் மினி ஸ்போர்ட்ஸ் பைக் போன்று உருவாக்கப்படலாம் எனத் தெரிகிறது. நேக்கட் 150சிசி செக்மென்ட்டில் ஏற்கெனவே பலத்த போட்டி இருக்கிறது. அதோடு இந்தியாவில் 160 மற்றும் 180 சிசியில் ஹோண்டாவின் நேக்கட் பைக்குகள் விற்பனையில் இருக்கின்றன. எனவே, R15-க்குப் போட்டியாக மினி ஸ்போர்ட்ஸ் பைக்காக களத்தில் இந்த புதிய 150சிசி பைக்கை ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17.1 hp பவர் மற்றும் 14.4 Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 149.2 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜினை இந்த புதிய பைக்கில் ஹோண்டா பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது. எனினும், புதிய பைக் ஸ்போர்ட்ஸ் பைக்காகத்தான் இருக்குமா என்பது ஹோண்டா அறிமுகப்படுத்தும் போதுதான் தெரியும்.
மீண்டும் இந்தியாவுக்கு வருகிறதா ஃபோர்டு?
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்புதான் இந்தியாவில் இருக்கும் தங்கள் தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தியை நிறுத்தியது ஃபோர்டு இந்தியா (Ford India). இந்தியாவில் ஃபோர்டு வாகனங்களின் விற்பனை இனி இருக்குமா என்று கேள்வி இருக்கும் நிலையில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியோடு மீண்டும் இந்தியாவுக்கு ஃபோர்டு திரும்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகின்றன. இந்தியாவில் இருக்கும் தங்கள் தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசின் PLI திட்டத்தின் கீழ் அனுமதி பெற்றிருக்கிறது ஃபோர்டு. இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத் என இரண்டு இடங்களில் ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. தற்போது இந்த இரண்டு தொழிற்சாலைகளில் ஒன்றை மட்டும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துப் பயன்படுத்தும் முடிவில் இருக்கிறது ஃபோர்டு.

இந்தியாவில் இப்போதைக்கு டாடா, எம்ஜி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களின் கார்கள்தான்... அதுவும் சில மட்டுமே இந்தியச் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. `IC இன்ஜின்தான் வேலைக்கு ஆகவில்லை; இந்த நேரத்தில் எலெக்ட்ரிக்கில் கால் வைத்தால் எடுபடலாம்’ என்று சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறது ஃபோர்டு. முக்கியமாக, இங்கு தயாரிக்கப்படும் கார்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் ஃபோர்டிடம் இருக்கும் முதல் திட்டம். PLI (Production Linked Incentives) திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருப்பதால், தயாரிப்புக்குத் தேவையான பொருட்கள் பெரும்பாலானவற்றை இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்துதான் ஃபோர்டு நிறுவனம் பெறவேண்டியிருக்கும். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்றால், காரின் தயாரிப்புச் செலவும் குறைவாகவே இருக்கும். எனவே, இங்கு தயாரிக்கும் கார்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு விற்கவும் முடிவெடுக்கலாம் ஃபோர்டு. ஆனாலும் இதனை வெளிப்படையாக ஃபோர்டு இன்னும் தெரிவிக்கவில்லை. எலெக்ட்ரிக் கார்களுடன் இறக்குமதி செய்யப்பட்ட உயர்ரக கார்களையும் இந்தியாவில் விற்பனை செய்யும் திட்டத்திலும் ஃபோர்டு இருக்கலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.