ஹலோ இன்ஜீனியரிங் ஸ்டூடன்ட்ஸ்… ஆர்ட் டிசைனர்ஸ்… கார் டிசைன் நீங்களும் கத்துக்கலாம்!

நவம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை நடக்கும் இந்தப் பயிலரங்கம், மாணவர்களுக்கு மட்டுமல்ல; டிசைனிங் துறையில், கிரியேட்டிவிட்டியில் ஆர்வமுள்ள, வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் யாவருக்குமானது.
‛ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், பெற்றோர்களைப் பார்த்து இப்படிக் கேட்பார். ‛‛உங்க குழந்தைங்களோட ஸ்கூல் நோட், ஹோம்ஒர்க் நோட்டெல்லாம் திறந்து பார்த்திருக்கீங்க… என்னைக்காவது ஒரு நாள் அவங்க ரஃப் நோட்டைத் திறந்து பார்த்திருக்கீங்களா?’’
நிஜம்தான்; குழந்தைகளின் ரஃப் நோட்தான் அவர்களின் மனதைச் சொல்லும். அவர்கள் ஆர்வம் அனைத்தும் அவர்களின் ரஃப் நோட்டில்தான் கிறுக்கல்களாகக் கொட்டிக் கிடக்கும். அது, அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பது எத்தனை பெற்றோர்களுக்குத் தெரியும்?

‛‛அப்படித்தான் சார் நான் ஒரு நாள் என் பையனோட ரஃப் நோட்டைத் திறந்து பார்த்தேன். நோட் முழுக்க ஒரே கார், பைக்ஸ் படமா வரைஞ்சிருந்தான்.’’ என்றார் ஒரு தந்தை. ஆம்! அந்தச் சிறுவன் இப்போது கார் B.Des எனும் கார் டிசைன் கோர்ஸ் படித்து, கார் மாடல்களை, ஸ்கேல் மாடல்களாகச் செய்து கொண்டிருக்கிறார்.
அதற்கு வழிவகுத்துக் கொடுத்தது, மோட்டார் விகடனின் கார் டிசைன் வொர்க்ஷாப். அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு நிபுணர் சத்தியசீலனின் AYA அகாடமி தலைமையில் நடக்கும் இந்த வொர்க்ஷாப்பில் இப்போது ஏகப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, கார் டிசைன் படிப்பில், பெரிய நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருக்கிறார்கள்.
‛‛உலகில் சாப்பிடும் இட்லியில் இருந்து கூப்பிடும் போன் வரை எல்லாவற்றுக்குமே ஓர் அடிப்படை விஷயம் என்ன தெரியுமா? டிசைன். செவ்வகமாக இருந்தால்தான் டிவி; ஓவல் வடிவில் இருந்தால்தான் முட்டை என நாம் தயாரிக்கும் பொருட்களைத் தாண்டி, இயற்கையான விஷயங்களும் டிசைன் கோட்பாட்டின் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது. அதற்குப் பெயர்தான் – கோல்டன் புரொப்போஷன். ரூல் ஆஃப் தேர்டு எனும் இந்த விதியின்படிதான் பல விஷயங்கள் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. அட இவ்வளவு ஏன், ஐஸ்வர்யா ராய் உலக அழகியானதற்குக் காரணமே இந்த கோல்டன் ப்ரப்போஷன் விதிமுறைகளின்படி அவர் முகஅமைப்பு அமைந்திருப்பதுதான்.’’ என்கிறார் ஆட்டோமொபைல் டிசைனிங் லெஜண்ட் சத்தியசீலன்.

கார்களுக்கு அந்த விதி எப்படி இருக்க வேண்டும்?
ஒரு காரை நீங்கள் சின்ன வயசில் வரைந்திருக்கலாம். ஆனால், எப்படி வேண்டுமானாலும் வரையலாம் என்பதைத் தாண்டி, இப்படித்தான் வரைய வேண்டும் என்று சில விதிகள் இருக்கின்றன. நாம் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் எல்லாவற்றிலும் கோல்டன் புரொப்போஷன்படிதான் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அவர் இந்த வொர்க்ஷாப்பில் விவரிக்க இருக்கிறார். இப்படி ஐஸ்வர்யா ராயின் முக அமைப்பு, கடலில் ஏற்படும் ஸ்பைரல் ஸ்டைல் சுழல், செடிகளின் அமைப்பு எல்லாமே தங்க விகிதத்தின்படிதான் அமைந்திருக்கிறதாம். கார்களின் சக்கரங்களுக்குக்கூட இவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும். அதன்படிதான் எல்லா கார்களும் டிசைன் செய்யப்படுகின்றன.
மேலும் கார்களில் ஏரோடைனமிக் டிசைன் என்றால் என்ன; ஒரு காரின் டிசைனுக்கு Agility ஆன விலங்குகள் இன்ஸ்பிரேஷனாக இருப்பது, பாடி லைன், ஷோல்டர் லைன் என்று காரின் கலைச் சொற்கள் வரை இந்த வொர்க்ஷாப்பில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு கார் பேப்பரில் வரைய ஆரம்பிப்பதில் இருந்து க்ளே மாடலிங், ஸ்கேல் மாடல், காரை உருவாக்கும் மென்பொருள்கள், கான்செப்ட், புரொடக்ஷன் வரை ஒரு காருக்கு எப்படி உயிர் கொடுத்து சாலையில் ஓட வைப்பது என்பது வரை சொல்ல இருப்பதுதான் இந்த வொர்க்ஷாப். ஒரு காரை எந்த மெட்டீரியல் கொண்டு டிசைன் செய்ய வேண்டும், எதில் டிசைன் செய்ய வேண்டும்... போன்ற விஷயங்களை ஆழமாக விளக்கவிருக்கிறது இந்தப் பயிலரங்கம்.

அதைத் தாண்டி இந்த வொர்க்ஷாப்பின் முக்கிய நோக்கம் – கார் டிசைனுக்கான படிப்பு என்ன… எங்கே படிக்கலாம்… என்ன கோர்ஸ் எடுக்கலாம்.. வெளிநாடுகளில் படிக்க என்ன செய்ய வேண்டும்… பெரிய கார் கம்பெனிகளில் இன்டர்ன்ஷிப் கிடைக்க என்ன செய்ய வேண்டும்… என்பது வரை மாணவர்களுக்கு A to Z வரை சொல்ல இருப்பதுதான்.
ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இதில் மாணவர்கள் மட்டுமல்ல; பிசினஸ் புள்ளிகள், மெக்கானிக்குகளும் கலந்து கொண்டு பயனடைகிறார்கள் என்பதுதான் ஸ்பெஷல்.
கோவையில் ஜீப் ரீ-மாடிஃபிகேஷன் வொர்க்ஷாப் வைத்திருக்கும் ஷனாஸ் என்பவர், ‛‛நான் பிராக்டிக்கலாக ஒரு காரை டிசைன் செய்து விடுவேன். ஆனால், ஒரு காரை டிசைன் செய்வதில் இவ்வளவு பிராக்டிக்கல் விஷயங்கள் இருக்குனு சத்தியசீலன் சார் சொல்லித்தான் தெரிஞ்சுக்கிட்டேன்! பிராக்டிக்கல் அறிவு பெற விரும்பும் மாணவர்கள், என்னிடம் கூட இன்டர்ன்ஷிப்புக்கு, பயிற்சிக்கு வரலாம்!’’ என்று தானாக முன் வருகிறார்.
அப்புறம் என்ன, உங்கள் குழந்தைகளுக்கு எல்லா கதவுகளும் திறந்திருக்கின்றன.

உங்கள் ஆர்வத்துக்குத் தடைபோட யாரையும் அனுமதிக்காதீர். நவம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை நடக்கும் இந்த பயிலரங்கம், மாணவர்களுக்கு மட்டுமல்ல; டிசைனிங் துறையில், கிரியேட்டிவிட்டியில் ஆர்வமுள்ள, வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் யாவருக்குமானது.