Published:Updated:

`ஒரு காரை உற்றுப்பாருங்கள்... ஏதாவது உயிரினம் தெரிகிறதா?'-கார் டிசைனின் அடிப்படை அதுவே #MVCarDesign

Motor Vikatan Online Car Design Workshop
Motor Vikatan Online Car Design Workshop

மோட்டார் விகடனும் சத்தியசீலனின் ஆயா (AYA) டிசைன் அகாடமியும் இணைந்து நடத்தும் கார் டிசைனுக்கென்று ஒரு பயிற்சிப் பட்டறை.

நாம் சாப்பிடும் இட்லி முதல், கூப்பிடும் போன் வரை எல்லாவற்றுக்குமே ஒரு அடிப்படை விஷயம் உண்டு. அது என்ன தெரியுமா? டிசைன்; ஆம், உருவாக்கக் கோட்பாடு.

உருண்டையாக இருந்தால்தான் இட்லி; செவ்வகமாக இருந்தால்தான் டிவி என்று எல்லாவற்றுக்கும் ஒரு டிசைன் கோட்பாடு உண்டு. சில நேரங்களில் செரித்துவிடும் இட்லிக்கே அப்படி என்றால், நாம் ஓட்டுகிற கார்களுக்கு டிசைன் என்பது எப்படி ஓர் அடிப்படை அங்கமாக இருக்க வேண்டும்?

Ford Mustang Sketch
Ford Mustang Sketch

மூக்கு கூர்மையாக இருந்தால் ஸ்போர்ட்ஸ் கார், பின்பக்கம் சப்பையாக இருந்தால் கமர்ஷியல் வெஹிக்கிள் என்று கார்களை டிசைன் செய்வதற்கென்றே ஒரு துறை உண்டு. இதற்கென 800 முதல் 1,000 கோடி வரை ஒதுக்குகின்றனவாம் கார் நிறுவனங்கள். அப்படிப்பட்ட டிசைன் துறையில் பழம்தின்று கொட்டை போட்டவர்தான் சத்தியசீலன். அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் தோஸ்த் கமர்ஷியல் வாகனம் முதல் சன்ஷைன் போன்ற பள்ளிப் பேருந்துகள் வரை எல்லாமே இவரின் கை வண்ணத்தில் வந்தவை.

மோட்டார் விகடனும் சத்தியசீலனின் ஆயா (AYA) டிசைன் அகாடமியும் இணைந்து, கார் டிசைனுக்கென்று ஒரு பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி, பல மாதங்களாகப் பயிற்சியளித்து வருகிறார்கள். அதுதான் `ஒரு கார்; ஒரு கனவு' எனும் பயிற்சி வகுப்பு. மாணவர்களுக்கு டிசைன் என்றால் என்ன என்பது தொடங்கி, அதன் அடிப்படை என்ன, காரின் கலைச்சொற்கள், மாடலிங், ஒரு கார் எப்படி உருவாகிறது என்பது வரை அத்தனையையும் எளிய தமிழில் புரியும்படி விளக்கும் வொர்க் ஷாப்தான் ஒரு கார்; ஒரு கனவு.

தற்போதைய கொரோனா பேரிடர் சூழலில் ஆன்லைனில் இந்த வகுப்பை நடத்தத் திட்டமிட்டு, அதுவும் போன மாதம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த ஜூன் மாதமும், ஒரு நாள்; ஒரு கனவு தொழிற்பட்டறையின் ஐந்து நாள் பயிற்சி வகுப்பு ஆன்லைனில் நடந்தது. முதல் நாளான ஜூன் 5-ம் தேதி, எதிர்பார்த்தபடியே நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இதில் மாணவர்கள் மட்டுமல்ல; பேராசிரியர்கள், குடும்பத் தலைவர்கள்/தலைவிகள், பெண்கள், NRI சிட்டிசன்கள் என்று ஏகப்பட்டோர் தங்கள் DP-க்களில் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

முதல் நாள் வகுப்பில் ஒரு காரைப் பற்றி மொத்தமாக விளக்கிவிட்டார் சத்தியசீலன். ‛‛கார் என்பது ஒரு எமோஷனல் புரொடக்ட். அதை டிசைன் செய்வதும் ஒரு உணர்ச்சிகரமான விஷயம். அதைத் தாண்டி உயிருள்ள படைப்பு கார். அப்படித்தான் கார்கள் உருவாகின்றன. நாம் காணும் மிருகங்கள்; கடலில் நீந்தும் சுறா மீன், வானில் பறக்கும் கழுகு, காட்டில் இசை மீட்டும் அருவி என்று எல்லா விஷயங்களுமே கார் டிசைனின் அடிப்படைதான். உதாரணத்துக்கு, நான் ஒரு காட்டெருமையின் திமிலை அடிப்படையாக வைத்துதான் அசோக் லேலாண்டின் ஒரு கட்டுறுதியான வாகனத்தை வரைந்தேன். ஒவ்வொரு காருக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. குதிரைபோல் பறப்பது, சிறுத்தைபோல் சீறுவது, யானை போன்ற பிரம்மாண்டம், மான் போன்ற துள்ளல், புலிபோன்ற பலம், ஜாகுவாரின் பயமுறுத்தும் கண்கள், சுறாமீன் போல் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும் ஸ்டைல்… என்று நீங்கள் சாலையில் பார்க்கும் கார்கள் அனைத்துக்கும் உயிர் உண்டு. அதற்காக, நீர் யானை மாதிரி, செம்மறி ஆடு மாதிரி, பிராய்லர் கோழி மாதிரி எல்லாம் கார் இருக்கிறதா என்று கேட்டு விடாதீர்கள் (சிரிப்புச் சப்தம்). கார்களுக்கு Agility, அதாவது சுறுசுறுப்பு முக்கியம். இப்படி பல சுறுசுறுப்பான விஷயங்களை நாங்கள் கார் டிசைனுக்கு அடிப்படையாக எடுத்துக்கொள்வோம்’’ என்று சத்தியசீலன் சொன்னபோதே எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

நிஜம்தான்; அவர் சொல்வதுபோல், ஒரு காரை உற்றுப் பார்த்தால், ஏதாவதொரு விலங்கு தெரிவதுபோலவே இருக்கிறது. அப்படித்தான் மஹிந்திரா மராத்ஸோ எனும் கார், அப்பாச்சி RR310 பைக் போன்றவை சுறா மீனை இன்ஸபிரேஷனாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை என்று படித்தது நினைவுக்கு வந்தது.

கூடவே கோல்டன் ரேஷியோ எனும் பகுதியைப் பற்றிச் சொன்னபோது, ‛அட, ஆமால்ல’ என்று பலர் கமென்ட் செய்தார்கள். தங்க விகிதம் எனும் 1.618 அளவுதான் டிசைனுக்கு அடிப்படைக் கோட்பாடு. ஐஸ்வர்யா ராய் முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முகம், பல கம்பெனி நிறுவனங்களின் லோகோ, ஆற்றுச் சுழல், ஒரு செடியில் இருந்து பிரியும் கிளைகள், பூக்களின் மடல்கள், காய்கள், கனிகள், ஸ்பைரல் வடிவில் இருக்கும் பிரபஞ்சம் வரை எல்லாமே இந்தத் தங்க விகிதத்தின்படி அமைந்திருப்பதால்தான் அத்தனை அழகு என்று அவர் விளக்கிய விதம்… வகுப்பை இன்னும் சுவாரஸ்யமாக்கிவிட்டது. ஒரு டிவி சதுரமாக ஏன் இல்லை; செவ்வகமாக இருக்கிறது என்பது தொடங்கி, தங்கவிகிதத்தைப் பற்றி சத்தியசீலன் விளக்கிய விதம், நிச்சயம் பரவசமாக்கி விட்டிருக்க வேண்டும்.

கார் டிசைனர் ஆக எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது?- மோட்டார் விகடனின்`ஒரு கார், ஒரு கனவு’ கடைசிநாள்

அட இவ்வளவு ஏன், ஒரு பூனை மேலிருந்து கீழே விழுந்தால், தன்னைச் சுருட்டிக்கொண்டு கீழே அடிபடாமல் தப்பிக்கும் விதம் கவனித்திருப்பீர்கள்தானே... அதுகூட கோல்டன் ரேஷியோதான் என்றபோது, ‛வாவ்’ கமென்ட்கள் குவிந்தன. அப்படியென்றால், காருக்கு கோல்டன் ரேஷியோ இல்லாமலா இருக்கும்?

இந்த முதல் நாள் வகுப்பில், ஒரு கார் வரைவது ரொம்ப ஈஸி என்று அவர் சொன்னபோது நம்பவில்லை. ஆனால், அதற்கான அடிப்படையைச் சொன்னபோது, ‛அட, இவ்வளவுதானா’ என்றிருந்தது.

வேனிஷிங் பாயின்ட், Horizon, ஒன்பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ், டூ பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ் என்று அவர் விளக்கிய விதம்… நமக்கே படம் வரைய ஆர்வம் கிளம்பிவிட்டது.

ஒரு கடற்கரையில் அமர்ந்துகொள்ளுங்கள்; கடலைப் பாருங்கள்; கடலும் வானும் தொடும் இடம் இருக்கிறதே… அதுதான் Horizon. ஒரு ரயில்வே தண்டவாளத்தைப் பாருங்கள்; தூரத்தில் அது சின்ன புள்ளியில் மறையுமே.. அது வேனிஷிங் பாயின்ட்… இப்படி யாருக்கும் புரியும்படி இருந்தது வகுப்பு.

5 days Online Workshop
5 days Online Workshop

படம் வரைய பெரிய ஸ்கெட்ச் எல்லாம் தேவையில்லை; ஒரு பென்சில் போதும்; பென்சிலை எப்படிப் பிடிக்க வேண்டும்; நடுங்காமல் எப்படி வரைய வேண்டும்; ஒரு வட்டத்தையோ எலிப்ஸையோ எப்படி அலுங்காமல் வரைய வேண்டும் என்று சிறு குழந்தைகளுக்குச் சொல்வதுபோல், அவர் பாடம் எடுத்த விதம்… அருமை.

ஒரு புள்ளியை எடுத்துக்கொண்டு அதிலிருந்து படம் வரையத் தொடங்கினால், அது ஒன் பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ். இப்படி ஒரு ஒன் பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவில் 10 மி.மீ பென் டிரைவ் முதல் 10 மாடிக் கட்டடம் வரை அசால்ட்டாக வரையலாம் என்று அவர் வரைந்து காட்டிய எளிமை - யாருக்கும் படம் வரைய ஆர்வத்தைத் தூண்டிவிடும்.

கார்களுக்கும் இந்த ஒன் பாயின்ட், 2 பாயின்ட் பெர்ஸ்பெக்ட்டிவ் எத்தனை அவசியம் என்று பாடத்தை முடித்துவிட்டு, வீட்டுப் பாடமும் கொடுத்ததோடு, இந்த முதல் நாள் வகுப்பு வெற்றிகரமாக முடிந்தது.

அடுத்த கட்டுரைக்கு