
இதன் தோற்றம் மற்றும் வசதிகளில் எந்த வித்தியாசமும் இல்லாவிட்டாலும், பானெட்டுக்கு அடியே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆம், 1.3 லிட்டர் HR13DDT டர்போ பெட்ரோல் இன்ஜின், 156bhp பவர் - 25.4kgm டார்க் தருகிறது.
போட்டி நிறுவனங்கள் எல்லாம் BS-6 வாகனங்களை அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், நிஸான் அமைதியாகவே இருந்துவந்தது. இதன் குழும நிறுவனமான டட்ஸன், சமீபத்தில் ரெடி-கோ BS-6 குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அதன் தொடர்ச்சியாக, கிக்ஸ் BS-6 வெர்ஷன் பற்றிய விவரங்களை நிஸான் அறிவித்துள்ளது.

இதன் தோற்றம் மற்றும் வசதிகளில் எந்த வித்தியாசமும் இல்லாவிட்டாலும், பானெட்டுக்கு அடியே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆம், 1.3 லிட்டர் HR13DDT டர்போ பெட்ரோல் இன்ஜின், 156bhp பவர் - 25.4kgm டார்க் தருகிறது. இதனால் விற்பனையில் எகிறியடிக்காவிட்டாலும், மிட்சைஸ் எஸ்யூவி -யில் பவர்ஃபுல் மாடலாக கிக்ஸ் மாறுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், செல்ட்டோஸ் மற்றும் க்ரெட்டா ஆகியவற்றில் இருக்கும் 1.4 லிட்டர் T-GDi இன்ஜின், 140bhp பவரையே தருகிறது.
கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், BS-6 டஸ்ட்டரைக் காட்சிப்படுத்தியிருந்தது ரெனோ. இதில் இருந்ததும் அதே 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான்! இதை டெய்ம்லர் உடன் இணைந்து தயாரித்திருக்கிறது நிஸான். எனவே, A-க்ளாஸ் செடான் மற்றும் GLA ஆகியவற்றில் இந்த HR13DDT இன்ஜின் பொருத்தப்படும்.

ஆனால், இங்கே 163bhp பவரை இது வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது. GT-R சூப்பர்காரின் இன்ஜினில் இருக்கும் சிலிண்டர் கோட்டிங், இந்த 1.3 லிட்டர் இன்ஜினிலும் உண்டு. CVT-ல் மேனுவல் மோடு இருப்பதுடன், அது 40% குறைவான உராய்வை ஏற்படுத்துகிறது. இது எல்லாம் சேர்ந்து, செம பர்ஃபாமன்ஸ் - மைலேஜ் ஆகியவற்றைத் தரும் என நிஸானின் நிர்வாக இயக்குநரான ராகேஷ் ஶ்ரீவத்சவா கூறியுள்ளார்.
i-SPVT சஸ்பென்ஷன் காரணமாக, முன்பு போலவே 210 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கிக்ஸில் இருக்கும். தனது புகழ்பெற்ற 1.5 லிட்டர் K9K டர்போ டீசல் இன்ஜினை BS-6 விதிகளுக்கு அப்டேட் செய்யாததால், டஸ்ட்டர் & கிக்ஸில் இனி டீசல் ஆப்ஷன் கிடையாது. இந்த மிட்சைஸ் எஸ்யூவிகளின் ஆரம்ப வேரியன்ட்டில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் இருந்தால், டாப் வேரியன்ட்டில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது.

விலை விஷயத்தில் இம்முறை நிஸான் உஷாராகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. டாப் வேரியன்ட்களில் Around View Monitor, Remote Engine, 50-க்கும் அதிகமான வசதிகளை உள்ளடக்கிய கனெக்ட்டிவிட்டி, க்ரூஸ் கன்ட்ரோல், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 4 காற்றுப்பைகள், ABS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், லெதர் இன்டீரியர் ஆகியவை இடம்பெற்றிருக்கும். கட்டுமானத் தரத்தில் அசத்திய கிக்ஸ், ஹெக்டர் - ஹேரியர் உடனும் போட்டிபோடுகிறது.