Published:Updated:

சின்னக் கார் விலையில் ஒரு எஸ்யூவி... நிஸான் மேக்னைட்டை வாங்கலாமா? ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

Nissan Magnite Plus and Minus Report - நிஸான் மேக்னைட்

தமிழ்நாடு முழுக்க நிஸான் ஷோரூமுக்கு ஒரு ரவுண்டு அடித்தால், கிக்ஸைத் தவிர வேறு எந்த காருமே நின்றிருக்காது. இப்போது கிக்ஸுக்குத் துணையாக வந்திருக்கிறது மேக்னைட். நிஸானுக்கு இப்போதைக்கு எஸ்யூவி மார்க்கெட்தான் கை கொடுக்கக் காத்திருக்கிறது. கிக்ஸ், கொஞ்சம் பெரிய எஸ்யூவி. மேக்னைட், 4 மீட்டருக்குட்பட்ட ஒரு காம்பேக்ட் எஸ்யூவி. ஆனால், இதை ஒரு காம்பேக்ட் ஹேட்ச்பேக்குக்கு இணையான விலையில் பொசிஷன் செய்திருக்கிறது நிஸான். அதுதான் மேக்னைட்டின் இப்போதைய பெரிய பலம். இதன் சென்னை ஆன் ரோடு விலை 6.31 லட்சத்தில் ஆரம்பிக்கிறது. இது சிறிய காம்பேக்ட் கார்களுக்கு இணையான விலை என்பதுதான் இப்போதைக்கு ஹாட் டாபிக். அதாவது, ஒரு காம்பேக்ட் கார் வாங்கும் விலையில் எஸ்யூவியான மேக்னைட்டை வாங்கிவிடலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி
காம்பேக்ட் எஸ்யூவி

ஓகே! நிஸான் மேக்னைட்டின் ப்ளஸ், மைனஸ் என்ன?

MT & CVT Transmission
MT & CVT Transmission

ப்ளஸ்...

 • எஸ்யூவி பிரியர்களுக்கு இப்போதெல்லாம் க்ராஸ்ஓவர் டிசைன்தான் பிடிக்கும் என்பதைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறது நிஸான். அதனால், விலைக்குப் பிறகு மேக்னைட்டின் முக்கியமான ப்ளஸ் – இதன் க்ராஸ்ஓவர் டிசைன். லம்போகினி URUS காரில் இருப்பதைப்போன்ற இதன் ஏசி வென்ட்கள், நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.

 • 4 மீட்டருக்குட்பட்ட கார் என்பதால், இடவசதியில் சொதப்பிவிடும் என்று எல்லோரும் நினைக்க, இதன் வீல்பேஸை 2,500 மிமீ ஆக்கி, முன்/பின் என இரு பக்கங்களிலும் இடவசதியை நெருக்கடியில்லாமல் டிசைன் செய்திருக்கிறார்கள். பொதுவாக, காம்பேக்ட் கார்களில் 6 அடி உயரம் உள்ளவர்களுக்கு இடவசதி மிகவும் டைட்டாக இருக்கும். இதில் தேவைக்கு அதிகமாகவே லெக்/ஹெட்/ஷோல்டர் ரூம்களும் இருக்கின்றன.

 • சொகுசிலும் பிராக்டிக்காலிட்டியிலும் ப்ரீமியம் கார்களுக்கு இணையாக இருக்கிறது மேக்னைட். அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட், ஆர்ம்ரெஸ்ட், பின் பக்கம் ஏசி வென்ட்கள் என எல்லாமே உண்டு. இதன் பூட் ஸ்பேஸ் 334 லிட்டர் என்பதும் முக்கியமான ப்ளஸ். இது பிரெஸ்ஸாவைவிட அதிகம். இந்த செக்மென்ட்டிலேயே 10 லிட்டர் க்ளோவ் பாக்ஸ் கொண்ட ஒரே கார் – மேக்னைட்.

 • வசதிகள் – மேக்னைட்டின் பெரிய பலம். நிஸானில் இனிமேல் 360 டிகிரி கேமரா இல்லாமல் கார்கள் வராதுபோல. கிக்ஸில் தொடங்கி வைத்த இதை மேக்னைட்டிலும் தொடர்ந்திருக்கிறது நிஸான். 360 டிகிரி கேமரா, பார்க்கிங்குக்குப் பெரிய பலம். பெரிய கார்களில் உள்ளதுபோல் TPMS (Tyre Pressure Monitor System), சோனெட்டில் இருப்பதுபோல் வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம், ஸ்மார்ட் வாட்ச், ஜியோஃபென்சிங் (காரை ட்ரேஸ் செய்யலாம்), வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே – ஆண்ட்ராய்டு ஆட்டோ என 50 வசதிகளைச் சொல்கிறது நிஸான்.

334 லிட்டர் பூட் ஸ்பேஸ்
334 லிட்டர் பூட் ஸ்பேஸ்
ஏசி வென்ட்கள்
ஏசி வென்ட்கள்
 • ஆட்டோமேட்டிக், மேனுவல் என இரண்டு பிரியர்களுக்கும் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்கிறது மேக்னைட்டில்.

 • 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மேக்னைட்டின் 0–100 கிமீ வேகம் – 11.16 விநாடிகள். இது எக்கோஸ்போர்ட், எக்ஸ்யூவி300, வென்யூ கார்களைவிட வேகம்.

 • பாதுகாப்பிலும் மேக்னைட் சிறப்பாகவே இருக்கிறது. கார் அலைபாயாமல் இருக்க VDC ஆப்ஷன் இருக்கிறது. மிகவும் டைட்டான ஏரியாக்களில் வளைத்து நெளித்து ஓட்ட வசதி. HAS (Hill Start Assist) – மலைப் பகுதிகளில் கார் கீழே இறங்காமல் இருக்கும். Traction Control – பலவிதமான டெரெய்ன்களில் போகும்போது, கார் நம் கன்ட்ரோல் இழக்காமல் இருக்கும். Anti Roll Bar – வேகங்களில் வளையும்போது, கார் அதிகபட்சம் நிலைத்தன்மையை இழக்காமல் பார்த்துக் கொள்ளும்.

 • எஸ்யூவி என்பதால், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸிலும் குறையில்லை. டஸ்ட்டர், ஃபார்ச்சூனர் போன்ற எஸ்யூவிகளுக்கு இணையாக 205 மிமீ கி.கிளியரன்ஸ் இருப்பதால், மேடு பள்ளங்களைப் பார்த்து பயப்படவேண்டாம்.

Traction Control
Traction Control
Hill Start Assist
Hill Start Assist

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மைனஸ்...

 • இதன் வெளிப்புற டிசைன் ஓகேதான் என்றாலும், ஆங்காங்கே பேனல்களுக்கு இடையே இடைவெளி இருப்பது காரின் தரத்தைக் குறைக்கிறது.

 • இப்போது டீசலுக்கு எல்லா நிறுவனங்களும் முற்றுப்புள்ளி வைத்திருக்கும் நிலையில், மேக்னைட் காரிலும் டீசல் இருக்காது. என்னதான் டர்போ பெட்ரோல் இருந்தாலும், டீசல் பிரியர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

 • இடவசதியிலும் டிரைவிங் பொசிஷனிலும் வேற லெவலில் இருந்தாலும், இதன் ஸ்டீயரிங்கில் ரேக் ஆப்ஷன் மட்டும்தான் உண்டு. ரீச் கிடையாது.

 • பின் பக்கம் ஏசி வென்ட்கள் உண்டுதான். ஆனால், USB சார்ஜிங் ஸாக்கெட் கொடுக்கவில்லை. அதற்குப் பதில் 12V பவர் ஸாக்கெட்தான்.

Interior
Interior
USB சார்ஜிங்
USB சார்ஜிங்
 • அத்தனை பாதுகாப்பு வசதிகளைக் கொடுத்த நிஸான், வெறும் இரண்டு காற்றுப் பைகள்தான் கொடுத்திருக்கிறது.

 • நெக்ஸான், வென்யூ, சோனெட்டுக்குப் போட்டியாக வந்திருக்கும் மேக்னைட்டில், ஆப்ஷனலாகக் கூட சன்ரூஃப் கிடையாது.

 • வென்யூ போன்ற டாப் மாடல்களில் இருப்பதுபோல், மேக்னைட்டில் பின் பக்கம் டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் கொடுக்கவில்லை. இதனால், குறைந்த வேகங்களில் செட்டில் ஆக மறுக்கிறது மேக்னைட்.

 • என்னதான் CVT ஆட்டோமேட்டிக்கில் டர்போ மாடலைக் களமிறக்கினாலும், மேனுவல் விரும்பிகளுக்கு வென்யூபோல் பேடில் ஷிஃப்ட்டர்கள் கொடுத்திருக்கலாம்.

 • இதன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் க்ளட்ச்சும் பயன்படுத்த கொஞ்சம் டைட் ஆக இருப்பதால், சிட்டிக்குள் கார் ஓட்டும்போது கொஞ்சம் அலுப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், சிட்டிக்குள் இதன் ஸ்டீயரிங் செயல்பாடு அற்புதம்.

சில குறைகள் இருந்தாலும், விலையும், வசதிகளும் ஓகே என்றால் சிட்டிக்கு ஏற்ற காராக நிஸான் மேக்னைட்டை வாங்கலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு