
எப்படி கொரோனாவிலிருந்து வெளிவர உலகநாடுகள் முயற்சி செய்கின்றனவோ, அதேபோல தனது நிலையை இந்தியாவில் மாற்றுவதில் நிஸான் மும்முரமாக இறங்கியிருக்கிறது.
நிஸான்... இந்த ஜப்பானிய நிறுவனம், இந்தியாவில் தனக்கான இடத்தைப் பிடிப்பதில் தடுமாறிக்கொண்டே இருக்கிறது. மார்ச் 2020 மாதத்தில், இந்நிறுவனம் நம் நாட்டில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை வெறும் 826 மட்டுமே; இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 72% சரிவு! இதனால் நிஸானின் சர்வதேச விற்பனையில், இந்தியாவின் பங்களிப்பு வெறும் 0.4%தான். எப்படி கொரோனாவிலிருந்து வெளிவர உலகநாடுகள் முயற்சி செய்கின்றனவோ, அதேபோல தனது நிலையை மாற்றுவதில் நிஸான் மும்முரமாக இறங்கியிருக்கிறது. Magnite எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய காம்பேக்ட் எஸ்யூவி, அதற்கான தீர்வாக இருக்கும் என அந்த நிறுவனம் நம்புகிறது. விட்டாரா பிரெஸ்ஸா, வென்யூ, XUV3OO, நெக்ஸான், எக்கோஸ்போர்ட் ஆகியவற்றுக்குப் போட்டியாக வரப்போகும் இதன் மற்ற டெக்னிக்கல் விவரங்களை இனி பார்க்கலாம்.

1. நிஸான் பேட்ஜில் இந்த கார் வந்தாலும், விலையில் டட்ஸன் போல சிக்கனமாக இருக்கும் எனத் தெரிகிறது. சிறப்பான தயாரிப்பாக இருப்பினும், விலையில் சொதப்பியதால் கிக்ஸ் என்னவானது என்பது நாம் அறிந்ததுதான். எனவே Magnite-ன் ஆரம்ப விலை ரூ.5.25 லட்சமாக இருக்கலாம் (எக்ஸ்-ஷோரூம்). விட்டாரா பிரேஸ்ஸா சைஸில் இருக்கக்கூடிய Magnite, இவ்வளவு குறைந்த விலையில் கிடைப்பது செம விஷயம்!
2. விலை குறைவு என்பதால், வசதிகளிலோ டிசைனிலோ கார் சீப்பாக இருக்கும் என எண்ண வேண்டாம். க்ராஸ் ஓவர் டிசைன் - டூயல் டோன் கலர்கள் - டைமண்ட் கட் அலாய் வீல்கள் - LED லைட்டிங் - Scuff Plates - அகலமான வீல் ஆர்ச் என லேட்டஸ்ட் அம்சங்கள் இங்கே இருக்கும். மேலும் Magnite-ன் டாப் வேரியன்ட்களில் 360 டிகிரி கேமரா, சன்ரூஃப், கனெக்ட்டிவிட்டி உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம் போன்ற வசதிகள் இருப்பது ப்ளஸ்.
3. ஆரம்ப வேரியன்ட்டில் 1.0 லிட்டர் BR10 பெட்ரோல் இன்ஜின் உள்ளது. BS-6 ரெனோ ட்ரைபரில் உள்ள அதே செட்-அப்தான்; 72bhp பவர் - 9.6kgm டார்க் தரும் இந்த 3 சிலிண்டர் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் AMT ஆப்ஷனும் வரலாம். டாப் வேரியன்ட்களில் 1.0 லிட்டர் HR10 டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும். 95bhp பவரைத் தரும் இந்த 3 சிலிண்டர் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வரும். BS-6 டஸ்ட்டர் போலவே, இங்கும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது.

4. டர்போ பெட்ரோல் இன்ஜின் - CVT கூட்டணி கொண்ட Magnite-ன் எக்ஸ்-ஷோரூம் விலை, 6 லட்ச ரூபாயாக இருக்கலாம் எனத் தகவல் வந்துள்ளது. இதே HR10 இன்ஜின், ரெனோ ட்ரைபர் மற்றும் Kiger காம்பேக்ட் எஸ்யூவிகளில் பயன்படுத்தப்படும். என்றாலும், முதலில் இந்த நிஸான் மாடலில்தான் இது அறிமுகமாகும். ட்ரைபரைத் தொடர்ந்து, CMF-A+ பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் இரண்டாவது கார் Magniteதான்.
5. ரெனோவின் காம்பேக்ட் எஸ்யூவிக்கு முன்பாகவே, அதாவது ஆகஸ்ட் மாதத்தில் நிஸானின் காம்பேக்ட் எஸ்யூவி வெளிவரலாம். தீபாவளி வாக்கில்தான் Kiger வரும் என்பதால், விற்பனையில் முன்னிலை பெற Magnite-க்கு நேரம் வாய்த்திருக்கிறது. ஆனால் பிராண்ட் மதிப்பு - டீலர் நெட்வோர்க் - மாடல்களின் எண்ணிக்கை ஆகியவற்றில், ரெனோவைவிட நிஸான் பின்தங்கியிருப்பது உண்மைதான்.
6. அடிப்படையில் HR10 நிஸானின் இன்ஜின் என்பதால், அதனைப் பயன்படுத்த நிஸானுக்கு ரெனோ Transfer Fee செலுத்த வேண்டியிருக்கும். இதனால் டாப் வேரியன்ட்களில், Kiger-ன் விலை Magnite-விட அதிகமாக இருக்கலாம். ஆனால் அதனை ஈடுகட்டும் வகையில், தனது காம்பேக்ட் எஸ்யூவியின் டிசைன் மற்றும் இடவசதியில் ரெனோ மாயாஜாலம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7. 'செய் அல்லது செத்துமடி' என்ற ரிதியில், EM2 என்ற குறியிட்டுப் பெயரைக்கொண்ட Magnite-யைத் தயாரித்துள்ளது நிஸான். எனவே தனது மொத்த வித்தையையும், இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் அந்த நிறுவனம் காட்டியிருக்கக்கூடும். இதன் வெற்றியைப் பொறுத்தே, இந்தியாவுக்கான நிஸானின் வருங்கால மாடல்களின் வருகை (Patrol/X-Trail, Leaf/Note e-Power, Micra/Sunny) அமையலாம்.