போன மாதம் வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்தன. இப்போது ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஷோரூமுக்குள்ளேயே தீப்பிடித்து எரிந்து புகை மண்டலமாக்கி இருப்பது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் ஐடியா உள்ளவர்களிடம் பீதியைக் கிளப்பியிருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள Okinawa எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டீலர்ஷிப், புகைமண்டலமாகி இருப்பதுதான் எலெக்ட்ரிக் மார்க்கெட்டில் இப்போதைய ஷாக்கிங் நியூஸ். ‘என்னது, ஒரு டீலர்ஷிப்பே எரிஞ்சிடுச்சா!’ என்று என்னைப்போல் நீங்களும் பீதியாவது நம் கண்களுக்குக் கண்ணாடி மாதிரி அப்படியே தெரிகிறது.
சாலைகளில் ஒரு ஸ்கூட்டர் நிற்கும்போது, அந்த ஸ்கூட்டருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால், இது டீலர்ஷிப் என்பதால், ஒரு வாகனத்தில் ஏற்பட்ட ஸ்பார்க் அப்படியே தொடர்ச்சியாகப் பிடிக்க… அந்த டீலர்ஷிப்பே புகை மண்டலமாகி இருக்கிறது. இதிலும் பேட்டரிதான் இந்தத் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஒக்கினாவா, 2015–ல் குர்காவுனில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம். FADA (Federation of Automobile Dealers Association) அறிக்கையின்படி, 2021–2022 ஆண்டில் மட்டும் சுமார் 46,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருக்கிறது ஒக்கினாவா. இந்த மார்ச்சில் மட்டும் 8,000 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கிறது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தத் தீ விபத்து நடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான், ஒக்கினாவா தனது 3,215 ஸ்கூட்டர்களை ரீ–கால் செய்திருந்தது. ஆட்டோமொபைலில் ரீ–கால் என்பது வழக்கமாக நடக்கக்கூடிய விஷயம். பொதுவாக, கார் நிறுவனங்கள்தான் ஃப்யூல் பம்ப், காற்றுப் பைப் பிரச்னை, பிரேக் ஃபெயிலியர் – என்று தங்கள் வாகனங்களை ரீ–கால் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும். இந்தக் குறிப்பிட்ட ஆண்டிலிருந்து வேறொரு ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில் ஒரு பாகத்தில் பழுது இருப்பதைக் கண்டுபிடித்தாலோ… வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் வந்தாலோ… அதை ரீ–கால் செய்து, இலவசமாக சர்வீஸ் செய்து பழுது பார்த்துத் தரும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள். இதைத்தான் ரீ–கால் என்கிறோம்.
அப்படித்தான் தங்கள் மாடலான ஒக்கினாவா ப்ரெய்ஸ் ப்ரோ எனும் மாடலில், பேட்டரி பிரச்னை என்று சொல்லி, தனது 3,215 தயாரிப்புகளை ரீ–கால் செய்திருந்தது ஒக்கினாவா. உங்களிடம் ஒக்கினாவா ப்ரெய்ஸ் ப்ரோ ஸ்கூட்டர் இருந்தால், தயவுசெய்து டீலர்ஷிப்பிடம் சர்வீஸுக்கு விடுங்கள்! ஏற்கெனவே ஒக்கினாவா ஸ்கூட்டர் தீ விபத்தில் வேலூரில் ஒரு தந்தையும் மகளும் பலியானது கொடூரத்தின் உச்சம். ‘‘இந்த விபத்துக்கு ஒக்கினாவா காரணம் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்று ஒக்கினாவா அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க… சார்ஜிங்கில் ஏற்பட்ட ஷார்ட் ஷர்க்யூட்தான் அந்தத் தீ விபத்துக்குக் காரணம் என்று சொல்லியிருந்தது ஒக்கினாவா தரப்பு. Niti Aayog (National Institution of Transforming India) அமைப்பின் CEO அமிதாப் கன்ட், தீ விபத்தான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களுக்கு, ‘பேட்டரிதான் பிரச்னை என்றால், உடனே ரீ–கால் செய்யுங்கள்’ என்று ஓர் அறிவுரை சொல்லியிருந்தார். அதன் அடிப்படையில்தான் இந்த ரீ–கால் நடந்ததாகவும் சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரீ–கால் செய்து முடிப்பதற்குள் நிஜமாகவே இப்படி ஒரு அசம்பாவிதம்… அதுவும் டீலர்ஷிப்பிலேயே நடந்திருப்பது பயமாகவே இருக்கிறது. இந்தத் தீ விபத்துக்கும் – கட்டடத்தில் உள்ள ஒயரிங்கில் ஏற்பட்டிருக்கும் ஷார்ட் ஷர்க்யூட்தான் காரணம் என்று வழக்கம்போல் சொல்லியிருக்கிறது ஒக்கினாவா.
வெயில் சூடுதான் பேட்டரி ஸ்பார்க் ஆவதற்குக் காரணம் என்றிருந்தோம்; தவறான சார்ஜிங் பிரச்னைகூட தீப்பிடிக்கக் காரணமாக இருக்கலாம் என்றும் நம்பினோம். இப்போது ஒரு குளுகுளு டீலர்ஷிப்பிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்திருப்பதுதான் கதி கலங்க வைக்கிறது.