Published:Updated:

தமிழ்நாட்டில் தயாரான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குத் தயார்... என்ன ஸ்பெஷல், என்ன விலை?

ஓலா ஸ்கூட்டர்
ஓலா ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றாலே சார்ஜிங்தான் பிரச்னை. அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறதாம் ஓலா. அதாவது, ஹைப்பர் சார்ஜர் என்றொரு ஆப்ஷனைச் சொல்கிறார்கள். இந்த ஹைப்பர் சார்ஜர் மூலம் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 75 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக இருக்கிறது ஓலா எலெக்ட்ரிக் தொழிற்சாலை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Etergo எனும் நெதர்லாந்து நிறுவனத்தை வாங்கியது ஓலா. அந்த நிறுவனத்தின் Etergo Appscooter மாடலை சின்னச் சின்ன மாற்றங்களுடன் தமிழ்நாட்டில் தயாரித்து இப்போது விற்பனைக்கும் தயாராகிவிட்டது. ஓலாவின் இந்த முதல் ஸ்கூட்டரின் பெயரே ஓலாதான்.

Ola Factory
Ola Factory

பல மாதங்களாக டெஸ்ட்டிங்கில் இருந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புக்கிங் இப்போது தொடங்கிவிட்டது. 499 ரூபாய் கொடுத்து புக்கிங் செய்து கொள்ளலாம் என்று அறிவித்து விட்டது ஓலா. இதை வேண்டாம் என்றால் ரீஃபண்ட்டும் செய்து கொள்ளலாம்.

டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக், ஏத்தர், ஆம்பியர், ஹீரோ போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்க வருகிறது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்னென்ன ஸ்பெஷல்?!

டச் ஸ்க்ரீனில் சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர்
டச் ஸ்க்ரீனில் சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர்

ஏற்கெனவே சொன்னபடி Etergo AppScooter-யை அப்படியே நகல் எடுத்ததுபோல் இருக்கிறது ஓலா. இதன் முன்பக்க ஏப்ரானில் ஆரம்பித்து, முன்பக்க டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனில் ஆரம்பிக்கிறது இந்த ஒற்றுமை. ‘‘ஆனால், இந்தியச் சாலைகளுக்கு ஏற்றபடி இதன் சஸ்பென்ஷன் செட்அப்பையும், ப்ளாட்ஃபார்மையும், பெர்ஃபாமன்ஸையும் மொத்தமாக மாற்றுவோம்’’ என்று சொல்லியிருந்தார் ஓலாவின் CEO பவிஷ் அகர்வால் கூறியிருந்தார். நிஜம்தான்; அதற்கு ஏற்றபடி ஏகப்பட்ட வசதிகளையும் மாற்றங்களையும் செய்து ‘தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்’ எனும் பிராண்டில் வரவிருக்கிறது ஓலா எலெக்ட்ரிக்.

முழுக்க முழுக்க LED ஹெட்லைட்ஸ்தான் இதன் முதல் சிறப்பம்சம். அதிலும் இரட்டை புரொஜக்டர் இருக்கலாம். DRL –ம் எல்இடிதான். இதில் கார்களில் இருப்பதுபோல், கீலெஸ் என்ட்ரி இருக்கும். அதாவது சாவி இல்லாமலே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து கொள்ளலாம். ஓலா ஆப்பை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டு, கனகெ்ட் செய்து கொண்டால் போதும். மொபைல் மூலமே வாகனத்தை ஸ்டார்ட் செய்யலாம். ஸ்கூட்டரின் சீட்டில் அமர்ந்திருப்பது நீங்கள்தான் என்பதை ஸ்கூட்டரே கண்டறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் உண்டு. இதன் கன்சோலில் உள்ள டச் ஸ்க்ரீனில் மொபைலில் வரும் இன்கமிங் கால் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள், நேவிகேஷன் சிஸ்டம், ரைடு மோடுகள், ஸ்கூட்டரின் ரேஞ்ச் விவரம், பேட்டரி விவரம் என எல்லாமே தெரியும். இதில் புளூடூத் கனெக்ட்டிவிட்டியும் உண்டு.

தமிழ்நாட்டில் தயாரான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குத் தயார்... என்ன ஸ்பெஷல், என்ன விலை?
தமிழ்நாட்டில் தயாரான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குத் தயார்... என்ன ஸ்பெஷல், என்ன விலை?

அலாய்வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள் என்று சில முக்கியமான வசதிகளும் இருக்கின்றன. முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும் உண்டு.

இந்த செக்மென்ட்டிலேயே ஒரு விஷயத்தில் சொல்லியடிக்கக் காத்திருக்கிறது ஓலா. அது சீட்டுக்கு அடியிலான இடவசதி. அதாவது, இதன் சீட்டுக்கு அடியில் இரண்டு ஹெல்மெட்டுகளை வைத்துக் கொள்ளும் அளவுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது வேறெந்த ஸ்கூட்டர்களிலும் இல்லை என்பது இதன் சிறப்பம்சம்.

இதன் டாப் ஸ்பீடு 95 கிமீ–க்குமேல் இருக்கும் என்கிறார்கள். அதேபோல் இதன் பிக்–அப்பும் நன்றாக இருக்கும் என்றே தெரிகிறது. வெறும் 4 விநாடிகளுக்குள் இது 40 கிமீ–யை எட்டிவிடுமாம். சிட்டிக்குள் ஓட்டுவதற்கு இந்த ஸ்கூட்டர் செம சாய்ஸாக இருக்கலாம். ஆனால், முழுமையான விவரங்களை நாம் டெஸ்ட் டிரைவ் செய்தபிறகே சொல்ல முடியும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றாலே சார்ஜிங்தான் பிரச்னை. அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறதாம் ஓலா. அதாவது, ஹைப்பர் சார்ஜர் என்றொரு ஆப்ஷனைச் சொல்கிறார்கள். இந்த ஹைப்பர் சார்ஜர் மூலம் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 75 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என்கிறார்கள். இந்தியா முழுக்க 400 நகரங்களில் ஹைப்பர் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ இருக்கிறார்களாம்.

தமிழ்நாட்டில் தயாரான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குத் தயார்... என்ன ஸ்பெஷல், என்ன விலை?

100% சதவிகிதம் சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை போகலாம் என்கிறார்கள். இது உண்மையாக இருந்தால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்தான்!

மேட் ஃபினிஷிங்கில் புளூ, பிங்க், கறுப்பு என மொத்தம் 3 வண்ணங்களில் வருகிறது இந்த ஸ்கூட்டர். அநேகமாக, இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1 லட்ச ரூபாய் இருக்கலாம். 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் ஒரு லிட்டர் கூட வரமாட்டேங்குதே என்பவர்கள் தாராளமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பக்கம் ஒதுங்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு