புது பைக் வாங்கலாம் என்றால்... ஒரு பக்கம் எகிறியடிக்கும் பெட்ரோல் விலை; இன்னொரு பக்கம் அங்கங்கே தீப்பிடித்து எரியும் எலெக்ட்ரிக் பைக்குகள்! யாரைக் குறை சொல்வது என்று தெரியவில்லை.
`தெர்மல் ரன்-அவே’ என்று சொல்லக்கூடிய பேட்டரி ஸ்பார்க் பிரச்னையையும் தாண்டி... `ஸ்கூட்டர் ரிவர்ஸில் போகுது; OTA அப்டேட் ஆகலை; டச் ஸ்க்ரீன் ஒர்க் ஆகலை; ரேஞ்ச் கம்மியா தருது’ என்று ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கஸ்டமர்கள் ரொம்பவே சோஷியல் மீடியாக்களில் பரபரப்பாக இருக்கிறார்கள். அப்படி ஒரு புதுப் பிரச்னையில் சிக்கி மருத்துவமனையில் இருக்கிறார், பல்வந்த் சிங் என்பவரின் மகன். பல்வந்த் சிங் சொல்லும் புகார் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கிறது.
மார்ச் 26-ம் தேதி அன்று, தான் புதிதாய் வாங்கிய ஓலா S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்றிருக்கிறார், பல்வந்த் சிங்கின் மகன். அப்போது ஸ்பீடு பிரேக்கரில் ஏற்றும்போது, பிரேக் அடிக்க... அந்த விபத்து நடந்திருக்கிறது.
இதில் தன் மகனின் மீது எந்தத் தப்பும் இல்லை என்கிறார் பல்வந்த் சிங். காரணம், அவர் பிரேக் பிடிக்கும்போது, வேகம் குறைவதற்குப் பதில்... ஆக்ஸிலரேஷன் அதிகமாகி பைக்கின் வேகம் அதிகரித்திருக்கிறது. இதனால் நிலை தடுமாறி ஸ்கூட்டரோடு கீழே விழுந்திருக்கிறார் அவர். இதில் தனது மகனின் இரு கைகளிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 16 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் இடது கை வாழ்நாள் முழுவதும் செயல்படாத நிலை உருவாகலாம் எனவும் தெரிவிக்கிறார் பல்வந்த் சிங்.
பொதுவாக, எலெக்ட்ரிக் பைக்குகளில் Re-Generative Braking System என்றொரு அம்சம் உண்டு. அதாவது, நீங்கள் பிரேக் பிடிக்கும்போது வீணாகும் ஆற்றலைச் சேமித்து பேட்டரிக்கு அனுப்புவதுதான் இந்த ரீ-ஜென் பிரேக்கிங் சிஸ்டம். இதனால் பேட்டரிக்கு ஆயுளும் சக்தியும் கூடும் என்பது விதி. இதில்தான் பிரச்னை இருந்திருக்கலாம் என்கிறார் பல்வந்த் சிங்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விபத்துக்குள்ளான ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் சோதனைக்காக எடுத்துச் சென்றிருக்கிறது. `ஸ்கூட்டரில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. நாங்கள் முழுமையாகப் பரிசோதித்துவிட்டோம்’ என அறிவித்திருக்கிறது ஓலா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, `அதிகரித்து வரும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான புகாரை விசாரிப்பதற்காக சிறப்பு வல்லுநர் குழுவை அரசு அமைக்கும்’ என தெரிவித்திருந்தார். குறைபாடுள்ள வாகனங்களைத் திரும்பப் பெறவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். அப்படித்தான் ப்யூர் எனும் ஹைதராபாத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம், தனது 3,000-க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்களை ரீ-கால் செய்திருந்தது. பேட்டரி பிரச்னை என்று சொல்லி ப்யூர் ரீ-கால் செய்த அடுத்த இரண்டாவது நாளே டீலர்ஷிப்பே புகை மண்டலமாகிப் போன சம்பவமும் அதிர்ச்சியாகவே இருந்தது.
ஓலா உரிமையாளர்கள் இப்படிப் புகார் வாசிக்கும் பட்சத்தில், ஓலாவும் தங்கள் ஸ்கூட்டர்களை ரீ-கால் செய்தால் ஓரளவு இதுபோன்ற பிரச்னைத் தடுக்கலாமோ என்னவோ!