சினிமாவைப் பொருத்தவரை சூப்பர் ஸ்டார்களின் படம் ஓடினாலும் செய்தி; ஓடாவிட்டாலும் ஹாட் டாபிக்! அப்படித்தான் ஆட்டோமொபைலில் ஓலா! அறிவித்த ஒரே நாளில் ஒரு லட்சம் ஸ்கூட்டர்கள் புக் ஆகி செம ட்ரெண்டிங்கில் இருந்த அதே ஓலாதான் இப்போது சோகமான ஹாட் டாப்பிக்கிலும் சிக்கியிருக்கிறது.
ஆம்! சென்ற டிசம்பர் மாதம் ஓலாவில் விற்பனையான ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை வெறும் 111தானாம்! இப்படி ஒரு புள்ளிவிவரம் சொல்லியிருப்பது, FADA (Federation of Automobile Dealers Association) எனும் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு.
‘ஃபடா சொன்னா பெருமாள் சொன்னது மாதிரி’ என்றொரு கருத்து ஆட்டோமொபைல் ஏரியாவில் உண்டு. காரணம், இதுதான் ஒரு நாட்டில் ஒரு வாகனம் எத்தனை விற்பனையாகி இருக்கிறது என்பதைச் சொல்லும் நேரடிப் புள்ளி விவரம். சில நிறுவனங்கள் தங்கள் சார்பாக ஒரு புள்ளி விவரத்தைச் சொல்லும். ஆனால், அது டீலர்களுக்கு தாங்கள் அனுப்பிய வாகனங்களின் எண்ணிக்கை. இதுவே, FADA சொல்வது விற்பனையான வாகனங்களை மட்டும்தான். இதைப் பற்றி ஓலா இன்னும் புள்ளிவிவரம் எதுவும் சொல்லவில்லை.
ஒரு லட்சம் ஸ்கூட்டர் புக்கிங்கிலிருந்து வெறும் 111 ஸ்கூட்டர்களாகக் குறைந்த அளவுக்கு ஓலாவுக்கு என்னாச்சு?
இந்தியாவில் ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு என மொத்தம் 4 மாநிலங்களில் மட்டும்தான் ஓலா, தனது ஸ்கூட்டரை விற்பனை செய்து கொண்டிருக்கிறது. ஓலாவுக்கு கர்நாடகாவில்தான் டிமாண்ட் அதிகம். இந்த 111–ல் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி சதவிகிதம், அதாவது சுமார் 60 ஸ்கூட்டர்கள், கர்நாடக மாநிலத்துக்குத்தான் பார்சல் ஆகியிருக்கின்றன. இதில் 25 ஸ்கூட்டர்கள் தமிழ்நாட்டில் டெலிவரி ஆகியிருக்கின்றனவாம்.
ஓலாவுக்கு டீலர் நெட்வொர்க் இல்லை என்பது இந்தியாவுக்கே தெரியும். அந்த வகையில்தான் இதில் தாமதமாகிறதா என்பதற்கும், இந்தக் குறைவான விற்பனைக்கும் ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால் பதில் சொல்லிவிட்டார். ‘‘இந்தப் புதிய டிஜிட்டல் செயல்முறை முதல் முறை என்பதால், சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், முதல் யூனிட் தயாரிப்பு எல்லாம் வெளியே போய்விட்டது. வாடிக்கையாளர்களின் பக்கத்தில் உள்ள டெலிவரி மையங்களுக்கு இவை போய்விட்டன. எங்களுக்கு டீலர்ஷிப் இல்லை; சில்லறை டெலிவரி மையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறோம். அதனால்கூட FADA எங்களின் விற்பனையைக் குறைவாகக் காட்டுகிறது என எண்ணுகிறேன்!’’ என்று காட்டமாகச் சொல்லியிருக்கிறார்.
குறைவான டெலிவரியைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஆகஸ்ட் 15–ல் இருந்து ஒருவழியாக டிசம்பர் வரை ‘எப்போடா டெலிவரி கிடைக்கும்’ என்று ஆசையாகக் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கும் பலவிதங்களில் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது ஓலா என்கிறார்கள்.
ஆம்! சோஷியல் மீடியாக்களில் தங்களுக்கு டெலிவரி ஆன ஓலா ஸ்கூட்டர்களின் மோசமான தரத்தைப் பற்றி விமர்சித்திருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

கார்த்திக் வர்மா என்றொரு வாடிக்கையாளர், தனது ட்விட்டரில் இப்படிச் சொல்லியிருக்கிறார். ‘‘விசாகப்பட்டினத்தில் ஒரு நிகழ்ச்சியில் இருந்தபோது எனக்கு ஓலா ஸ்கூட்டர் டெலிவரி செய்திருந்தார்கள். பாடியில் வெடிப்பு, சொட்டையுமான ஸ்கூட்டர் எனக்குக் கொடுக்கப்பட்டது. ‘‘உங்கள் பாதிப்பைச் சரி செய்துவிடுவோம்’’ என்று மேனேஜர் சொல்லியிருக்கிறார். நான் கொடுத்தது புது தயாரிப்புக்கு. ஓட்டை ஸ்கூட்டரைச் சரி செய்வதற்கு இல்லை!’’ என்று நொந்து போய்ச் சொல்லியிருக்கிறார். ‘‘எல்சிடி பேனலில் பெரிய கேப் இருப்பதையும் சுட்டிக்காட்டி, மழை வந்தால் என் டச் ஸ்க்ரீனுக்கு ஓலாவா பொறுப்பேற்கும்? திரும்ப பணம்தான் கட்ட வேண்டி வரும்’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ராகுல் பிரசாத் என்றொருவர், ‘‘ஒரு ஸ்கூட்டரின் கிராப் ரெயிலைக்கூட டிசைன் செய்யத் தெரியாத டிசைனர்தான் ஓலாவில் இருக்கிறாரா?’’ என்று தனக்குக் கிடைத்த ஸ்கூட்டரின் மோசமான கிராப் ரெயிலைச் சுட்டிக் காட்டி போஸ்ட் போட்டிருக்கிறார்.
இன்னொருவர் வேறு மாதிரிப் புலம்பியிருக்கிறார். ‘‘நேற்று டெலிவரி கிடைத்த ஸ்கூட்டரை 6 கிமீ ஓட்டுவதற்குள், ரெக்கவரி வேனில்தான் வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டியிருந்தது!’’ என்று சொல்லியிருக்கிறார். இவருக்கு வண்டி ஓட்டும்போது கறகறவென சத்தம் கேட்பதாகவும், ஸ்கூட்டரின் ஹெட்லைட்டில் பிரச்னை இருப்பதாகவும் புகார் கூறியிருக்கிறார். ‘‘ஒரு புது ஸ்கூட்டரை வெறும் 19 கிமீ ஓட்டுவதற்குள் ஹெட்லைட்டையும் கேலிப்பரையும் மாற்றியது இந்த உலகத்தில் நானாகத்தான் இருப்பேன்!’’ என்றும் சொல்லியிருக்கிறார்.


ஓலாவின் பெரிய யுஎஸ்பியே அதன் ரேஞ்ச்தான். 180 கிமீ ரேஞ்ச் என்று சொல்லித்தான் விற்பனை செய்கிறது ஓலா. ஆனால், ஸ்கூட்டரின் ரேஞ்சிலும் பிரச்னை இருப்பதாகச் சிலர் சொல்லியிருப்பதுதான் ஓலாவை புக் செய்தவர்களுக்குப் பீதியைக் கிளப்பியிருக்கிறது. ‘‘100 கிமீ கூட ஃபுல் சார்ஜுக்கு வரமாட்டேங்குதே’’ என்று ஒருவர் புலம்பியிருக்கிறார். தாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்த ஸ்கூட்டரைக் காட்டிலும், தங்களது சொந்த ஸ்கூட்டர் கன்னாபின்னாவென கிமீ குறைவான ரேஞ்ச் தருவதாகவும் சொல்லியிருக்கிறார்கள் சிலர்.
சித்தார்த் ரெட்டி என்றொருவர், சார்ஜரிலும் கசமுசாக்கள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ‘‘எனது S1 Pro ஸ்கூட்டரை இரவு 11.56–க்கு சார்ஜ் போட்டேன். 100% சார்ஜ் ஏறுவதற்கு அது காலை 4.03 மணி ஆகும் என்று வார்னிங் காட்டியது. ஆனால் நள்ளிரவிலேயே சார்ஜிங் நின்று போயிருக்கிறது. பிறகு ரீசெட் செய்ய வேண்டியிருக்கிறது!’’ என்று சொல்லியிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் பவிஷ் அகர்வால், சோஷியல் மீடியாக்களிலேயே பதில் சொல்லிக் கொண்டிருப்பது ஒரு வகையில் ஆறுதல்தான். ஒரு பக்கம் தங்களுக்கு ஓலா ஸ்கூட்டர் டெலிவரி கிடைத்ததைத் திருவிழாபோல் கொண்டாடும் வாடிக்கையாளர்கள் இருந்தாலும் – இதுபோல் ஸ்பீடோ மீட்டர் அக்யூரஸியாக இல்லை; டச் ஸ்க்ரீனில் சாஃப்ட்வேர் அப்டேட்டாக இல்லை; ஓடோ மீட்டர் சரியான தூரத்தைக் காட்டவில்லை; ஃபுல் சார்ஜுக்கு 100 கிமீ கூடக் கிடைக்கவில்லை; ஃபிட் அண்ட் ஃபினிஷ் சரியில்லை என்று எக்கச்சக்கப் புகார்கள் வந்தால்... ஓலா ஓனர்களுக்குக் கலக்கம் வராதா என்ன?
ஹலோ... அந்த 25 நம்ம ஊரு ஓலா வாடிக்கையாளர்களே... நீங்க சந்தோஷமா இருக்கீங்களா?