பிரீமியம் ஸ்டோரி

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட விலை குறைவான கார்கள் எவை (பெட்ரோல்/டீசல்)?

- ரமேஷ், தேவகோட்டை.

மோட்டார் கிளினிக்

பெட்ரோல் கார்களில், டட்ஸன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்தான் விலை குறைவான ஆட்டோமேட்டிக் கார். 1000 சிசி இன்ஜினில் AMT ஆப்ஷன் வருவதுடன், ஒரே டாப் வேரியன்ட்டில் மட்டுமே [S(O)] ஸ்மார்ட் டிரைவ் ஆட்டோ வசதி கிடைக்கிறது. பட்ஜெட் காராக இருப்பினும், இதில் போதுமான வசதிகள் இருக்கின்றன. ஆனால் BS-6 விதிகள் அமலுக்கு வந்தபிறகு, பெரும்பான்மையான ஹேட்ச்பேக்குகளில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் காணாமல் போய்விட்டது. எனவே இருக்கக்கூடிய சில டீசல் மாடல்களில், ஹூண்டாயின் கிராண்ட் i10 நியோஸ்தான் விலை குறைவான ஆட்டோமேட்டிக் கார். இதுவும் ஒரே வேரியன்ட்டில்தான் (ஸ்போர்ட்ஸ்) ஸ்மார்ட் ஆட்டோ அம்சத்துடன் கிடைக்கிறது. இது மிட் வேரியன்ட் என்பதால், டாப் வேரியன்ட்டில் இருக்கக் கூடிய வசதிகளில் சில இங்கே கிடைக்காது என்பது மைனஸ்.

நான் கடந்த சில ஆண்டுகளாக, ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டரைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது புதிதாக 125சிசி பைக் வாங்கலாம் என முடிவெடுத்துள்ளேன். பல்ஸர் 125 Neon, ஷைன், கிளாமர் ஆகியவற்றில் எதை வாங்கலாம்? அது நல்ல Road Presence உடன் இருப்பது அவசியம்.

- கிருஷ்ணா, கோயம்புத்தூர்.

மோட்டார் கிளினிக்

நீங்கள் குறிப்பிட்ட மாடல்களில், எலெக்ட்ரானிக் கார்புரேட்டர் மற்றும் பெரிய பைக் தன்மை ஆகியவற்றைக் கொண்ட ஒரே மாடல் பஜாஜ் பல்ஸர் 125 Neonதான். இதன் 150சிசி வெர்ஷனில் இருக்கக்கூடிய பல அம்சங்கள் இங்கேயும் இருப்பதால், இது நகரம் - நெடுஞ்சாலை ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கு ஏதுவான தயாரிப்பாக இருக்கிறது. ஆனால் முன்னே சொன்ன காரணத்தால், போட்டி பைக்குகளைவிட பல்ஸர் 125 Neon-ன் எடை 17-26 கிலோ வரை அதிகமாக உள்ளது. ஷைனைப் பொறுத்தவரை, அது SP125 போலவே 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கிடைப்பது ப்ளஸ். மேலும் கிளாமரைவிட இது 8 கிலோ குறைவான எடையில் இருப்பதும் செம! ஆனால் SP125 பைக்கில் இருக்கக்கூடிய LED ஹெட்லைட் - டிஜிட்டல் மீட்டர் போன்ற அம்சங்கள் ஷைனில் இருக்காது என்பதை நினைவில் கொள்ளவும். புத்தம் புதிய தயாரிப்பாக வந்திருக்கும் கிளாமரில் Auto Sail வசதி, அகலமான பின்பக்க டயர், அனலாக் - டிஜிட்டல் மீட்டரில் சைடு ஸ்டாண்ட் & மைலேஜ் இண்டிகேட்டர்கள், 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப் புது அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அதிக எடை ஒரு பிரச்னை இல்லையென்றால், பவர்ஃபுல் 125சிசி பைக்காக இருக்கும் பல்ஸர் 125 Neon பைக்கையே நீங்கள் பரிசீலிக்கலாம். இருப்பினும் ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவெடுக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் தற்போது ஹோண்டா சிட்டி காரை வைத்திருக்கிறேன். தற்போது 6-8 சீட்களுடன் கூடிய எஸ்யூவியை வாங்கத் தீர்மானித்துள்ளேன். முன்பு TUV3OO பயன்படுத்திய அனுபவம் இருக்கிறது. எனது பட்ஜெட் 15 லட்ச ரூபாய். இதே விலையில், யூஸ்டு கார் மார்க்கெட்டில் என்ன ஆப்ஷன்கள் கிடைக்கும்?

- சண்முகம், சிங்கப்பூர்.

மோட்டார் கிளினிக்

ந்த பட்ஜெட்டில், முழுமையான 6-8 சீட்டர் எதுவுமே இல்லை என்பதே நிதர்சனம். இந்த விலையில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஆரம்ப மாடல் (S5) வாங்க முடியும் என்றாலும், அது வசதிகள் மற்றும் கடைசி வரிசை இடவசதியில் பின்தங்கிவிடுகிறது. தவிர, இதன் புதிய வெர்ஷன் டெஸ்ட்டிங்கில் இருப்பதால், இதனை இப்போது வாங்குவது நல்ல முடிவாகவும் இருக்காது. மற்றபடி எம்பிவிகளில் மஹிந்திரா மராத்ஸோவின் M4 Plus - 8 சீட்டர் மாடல், நீங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டில் கிடைக்கிறது. இது நீங்கள் பயன்படுத்திய TUV3OO விட, அனைத்து ஏரியாக்களிலும் பலமடங்கு முன்னேறிய தயாரிப்பாக இருக்கிறது. நீட்டான டிசைன் & கேபின் - போதுமான அம்சங்கள் மற்றும் இடவசதி - சிறப்பான ஓட்டுதல் அனுபவம் & தரம் என ஈர்க்கும் இந்த எம்பிவி, உங்களுக்கான வாகனமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

எனக்கு யமஹாவின் XSR155 பைக் மிகவும் பிடித்திருக்கிறது. அது எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்?

அருண் குமார் நாகராஜன், தர்மபுரி.

மோட்டார் கிளினிக்

நியோ - ரெட்ரோ பாணியில் தயாரிக்கப்பட்டுள்ள XSR 155, ஹஸ்க்வர்னா பைக்குகளைப் போலவே வித்தியாசமான டிசைனைக் கொண்டிருக்கிறது. இதன் டெல்டா பாக்ஸ் ஃப்ரேம் - அலுமினியம் ஸ்விங் ஆர்ம் - 155சிசி VVA இன்ஜின் ஆகியவை, அப்படியே R15 பைக்கில் நாம் பார்த்ததுதான். எனவே, இந்த பைக்கை இந்தியாவில் தயாரிப்பதில் யமஹாவுக்கு நடைமுறைச் சிக்கல்கள் ஏதும் இல்லை. மற்றபடி வட்ட வடிவ ஹெட்லைட் மற்றும் மீட்டர்கள், சிங்கிள் பீஸ் சீட், ஆன்/ஆஃப் ரோடு டயர்கள் என வித்தியாசங்களும் உண்டு. ஆனால் சர்வதேச மாடலுடன் ஒப்பிடும்போது, MT-15 போலவே XSR 155 பைக்கும் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பாக்ஸ் செக்‌ஷன் ஸ்விங் ஆர்ம் - சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடனேயே இந்தியாவில் வரலாம். சுமார் 1.4 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் இது பொசிஷன் செய்யப்படலாம். அடுத்த ஆண்டில்தான் XSR 155 நம் நாட்டில் டயர் பதிக்கக் கூடும்.

கொரோனா காரணமாக ஏற்பட்டிருக்கும் லாக்டெளன் காலத்தில், கார் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. 1-2 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், யூஸ்டு கார் மார்க்கெட்டில் என்ன காரை வாங்கலாம்? இல்லை, புதிதாகக் கார் வாங்குவது நல்ல முடிவாக இருக்குமா?

விக்னேஷ், ஈரோடு

மோட்டார் கிளினிக்

ப்போதுமே புதிதாகக் கார் ஓட்டக் கற்றுக் கொள்வதற்கு என்றால், குறைவான விலையில் யூஸ்டு காரை வாங்குவதே சிறப்பான முடிவாக இருக்கும். ஏனெனில், புதிய காரை வாங்கி அதில் ஓட்டிப் பழகும்போது, ஏதேனும் விபத்து நேர்ந்தால் அது ஒருசேர மனச்சோர்வையும் பண விரயத்தையும் ஏற்படுத்திவிடும். நீங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டில் மாருதி சுஸூகி ஆல்ட்டோ/வேகன்-ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ/கிராண்ட் i10 ஆகிய கார்கள் யூஸ்டு மார்க்கெட்டில் கிடைக்கின்றன. 2010-ம் ஆண்டில் நம் நாட்டில் BS-4 விதிகள் கார்களில் அறிமுகமானதை வைத்துப் பார்த்தால், அந்த ஆண்டுக்குப் பிறகான மாடல்களையே யூஸ்டு கார் மார்க்கெட்டில் பார்ப்பது நலம். முன்னே சொன்ன மாடல்கள் அனைத்துமே முதன்முறையாக கார் வாங்குபவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டவை என்பதால், அதன் பராமரிப்புச் செலவுகள் கட்டுபடியாகக்கூடிய ரகத்திலேயே இருக்கும். பெரும்பாலும் முறையான ஆவணங்களுடன் கூடிய சிங்கிள் ஓனர் வாகனங்களைத் தேர்வு செய்வது நல்லது. ஏனெனில், அவை தனிநபரால் திறம்படக் கையாளப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம். மேலும் LPG கிட் இணைக்கப்பட்ட கார்கள் அல்லது மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கார்களைத் தவிர்த்து விடவும்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

மோட்டார் கிளினிக்

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு