ரெனோ க்விட், அறிமுகமான 4 ஆண்டுகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் விற்பனை ஆகிவிட்டன. இந்த வெற்றிக்கு மினி எஸ்யூவி போன்ற டிசைனும், அதிக வசதிகளும்தான் காரணம். மேலும், 98% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் காரில் பயன்படுத்தப்பட்டதால், அதன் விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள் போட்டியாளரைவிடக் குறைவாகவே இருந்தன; இடையிடையே பல்வேறு விதமான ஸ்பெஷல் எடிஷன்கள், க்ளைம்பர் மாடல், 2 ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் என க்விட்டை ரெனோ அப்டேட்டாக வைத்திருந்ததால், ஆல்ட்டோவுக்கு தொடர்ச்சியாகச் சவால்விடக்கூடிய காராகவே அது இருந்திருக்கிறது. தற்போது, இதற்குப் போட்டியாக மாருதி சுஸூகி நிறுவனம் S-Presso காரை கடந்த செப்டப்மர் 30, 2019 அன்று களமிறக்கிய நிலையில், அதற்கு அடுத்த நாளே, க்விட் ஃபேஸ்லிஃப்ட்டைத் தடாலடியாக அறிமுகப்படுத்திவிட்டது ரெனோ!

டிசைன் மற்றும் அளவுகள்
சீனாவில் கிடைக்கும் K-ZE EV காரின் முன்பக்கத்தை நினைவுபடுத்தும்படி அமைந்திருக்கிறது, க்விட் பேஸ்லிஃப்ட்டின் முகம். அதன்படி LED DRL மேலேயும், ஹெட்லைட் கீழேயும் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இவை, குறைவான வேகத்தில் செல்லும்போது கார் விபத்தைச் சந்தித்தால்கூட, இந்த ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ் பாதிப்படையாது என்று சொல்லப்படுகிறது. மேலும், HoneyComb ஃபினிஷுக்குப் பதில், புதிய முன்பக்க பம்பரின் கீழ்ப்பகுதியில் Horizontal Slats இருப்பது நைஸ். அதேபோல, கிரில்லில் இருக்கும் க்ரோம் பட்டை, LED DRL உடன் இணைவது அழகு. S-Presso-வில் இந்த வசதி கிடையாது. பின்பக்க பம்பரும் புதிது என்பதுடன், அதில் கூடுதலாக Reflectiors இடம்பெற்றுள்ளன. தவிர, டெயில் லைட்டில் LED பட்டை இருப்பது, இரவு நேரத்தில் பார்க்க அழகு. முந்தைய மாடலில் 13 இன்ச் வீல்கள் இருந்த நிலையில், இங்கே அது 14 இன்ச்சாக (165/70 R14) வளர்ந்திருக்கிறது.
இன்னமும் அவை 3 Lug Nut-களையே கொண்டிருக்கின்றன. ஆனால், வீல் கேப்ஸ் புதிது. மேலும், வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது, கிளைம்பரில் கூடுதலாக ஸ்கிட் பிளேட், பாடி கிளாடிங், ரூஃப் ரெயில், ஆரஞ்ச் நிற வேலைப்பாடுகள் ஆகியவை ஸ்பெஷல்.
அலாய் வீல்கள் புதிய டிசைனில் உள்ளதுடன், Gunmetal Grey ஃபினிஷில் அசத்தலாகக் காட்சியளிக்கின்றன. புதிய பம்பர்கள் காரணமாக, காரின் நீளம் முன்பைவிட 52மி.மீ அதிகரித்திருக்கிறது (3,731மி.மீ). அதேபோல பெரிய டயர்களினால், க்விட்டின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 2 மி.மீ உயர்ந்துள்ளது (184மி.மீ). ஆனால், காரின் உயரம், முன்பைவிட 39 மி.மீ குறைந்திருப்பது முரண் (1,474மி.மீ). தவிர, பூட் ஸ்பேஸும் முந்தைய மாடலைவிட 21 லிட்டர் குறைந்திருக்கிறது (279 லிட்டர்). இந்த மாதம் அமலுக்கு வந்திருக்கும் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கேற்ப, க்விட்டின் கட்டுமானம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், முன்பைவிட காரின் எடை 35-40 கிலோ வரை அதிகரித்திருக்கிறது.

கேபின் மற்றும் வசதிகள்
காருக்குள்ளே நுழையும்போது, முதலில் கவனத்தை ஈர்ப்பது புதிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன்தான். முன்பைவிட அளவில் பெரிதாகி இருக்கும் இது, ட்ரைபரில் இருக்கும் அதே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமே! இதுதவிர, LED டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் ட்ரைபரில் இருந்தே பெறப்பட்டுள்ளது. அதன்படி, 800சிசி செக்மென்ட்டில் டேக்கோமீட்டருடன் கூடிய ஒரே கார் இதுதான்.
இதனுடன் புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் ஏசி வென்ட்கள், ஏசி கன்ட்ரோல்களுக்கு மேலே வைக்கப்பட்டிருக்கும் பவர் விண்டோ ஸ்விட்ச், வழக்கமான இடத்துக்கு வந்திருக்கும் AMT கியர் நாப், புதிய சீட் அப்ஹோல்சரி மற்றும் டோர் பேடு ஆகியவை சேரும்போது, அடிப்படை டிசைனில் மாற்றமில்லாவிட்டாலும், கேபின் கொஞ்சம் புதுப்பொலிவைப் பெற்றிருக்கிறது எனலாம். டாப் வேரியன்ட்களில் 2 காற்றுப்பைக்கான ஆப்ஷன் இருப்பதால், டேஷ்போர்டில் முன்பிருந்த ஸ்டோரேஜ் பாக்ஸ் மற்றும் Shelf ஆகியவற்றை இழந்து, தற்போது ஒரே ஒரு க்ளோவ் பாக்ஸுக்கு மாறியுள்ளது. க்ளைம்பர் மாடலில் முன்பைப் போலவே, ஆரஞ்ச் நிற வேலைப்பாடுகள் இருப்பது வாவ்.
S-Presso போல ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல்கள் இல்லாதது மைனஸாக இருந்தாலும், அந்தக் காரில் இல்லாத ரிவர்ஸ் கேமராவை & சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டைக் க்விட்டில் வழங்கி, அதைச் சரிகட்டிவிட்டது ரெனோ. இதனுடன் டாப் வேரியன்ட்களில் தேவைபட்டால், பின்பக்க பவர் விண்டோவை சேர்த்துக்கொள்ளலாம்.

இன்ஜின் - கியர்பாக்ஸ் மற்றும் விலை
Standard, RxE, RxL, RxT, Climber என மொத்தம் 8 வேரியன்ட்கள் மற்றும் 6 கலர் ஆப்ஷன்களுடன் (Zanskar Blue, Fiery Red, Moonlight Silver, Ice Cool White, Outback Bronze, Electric Blue) வந்திருக்கும் க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் 3 சிலிண்டர் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, BS-4 விதிகளின்படி டியூன் செய்யப்பட்டிருக்கும் இந்த 0.8/1.0 லிட்டர் இன்ஜின்களின் பவர் - டார்க் - வாரன்ட்டி அளவுகளில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால், அராய் மைலேஜில் பலத்த வித்தியாசம் தெரிகிறது. 800சிசி மாடல் முன்பு 25.17கி.மீ மைலேஜ் தந்த நிலையில், இங்கே அது 22.30 கி.மீட்டராகக் குறைந்திருக்கிறது.
1.0 லிட்டர் மாடல், முன்பு முறையே 23.04/24.04கிமீ (MT/AMT) மைலேஜ் தந்த நிலையில், தற்போது அவை முறையே 21.70/22.50கிமீ (MT/AMT)-யாகக் குறைந்துள்ளன. இதற்கு, பெரிய டயர்கள் மற்றும் அதிகரிக்கப்பட்ட எடை ஆகியவை காரணங்களாக இருக்கலாம். முன்பிருந்த மாடலைவிட, தோராயமாக 10 ரூபாய் மட்டுமே விலை உயர்ந்திருக்கும் க்விட் ஃபேஸ்லிஃப்ட், 'கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க கார்' என்ற தனது பெருமையைத் தக்கவைத்திருக்கிறது. ஆனால், S-Presso-வில் BS-6 இன்ஜின் இருக்கும் சூழலில், இங்கே BS-4 இன்ஜின்கள் இருப்பது நெருடல். இதனால், பின்னாளில் க்விட்டின் விலை உயர்வதற்கான சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது. காரின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு...

Standard 0.8: 2.83 லட்ச ரூபாய்
RxE 0.8: 3.53 லட்ச ரூபாய்
RxL 0.8: 3.83 லட்ச ரூபாய்
RxT 0.8: 4.13 லட்ச ரூபாய்
RxT 1.0: 4.33 லட்ச ரூபாய்
RxT AMT: 4.63 லட்ச ரூபாய்
Climber: 4.54 லட்ச ரூபாய்
Climber AMT: 4.84 லட்ச ரூபாய்
