ரெனோ - நிஸானின் காம்பேக்ட் எஸ்யூவிகளில் சன்ரூஃப்! -அசத்தல் கார்களின் பெயர் தெரியுமா?

தற்போதைய சூழலில், இவற்றின் அறிமுகம் கொரோனா காரணமாகத் தள்ளிப்போகலாம். இவை இரண்டுமே 5-5.5 லட்ச ரூபாய் ஆரம்ப விலையில் வெளிவரலாம்.
சன்ரூஃப்... தற்போது புதிதாக அறிமுகமாகும் கார்களில் இந்த வசதி இருக்கிறதா என்பதில், மக்கள் ஆர்வமுடன் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. எனவே, அந்த மாடல் இருக்கும் செக்மென்ட்டுக்கு ஏற்ப, சன்ரூஃப்பின் அளவும் மாறுபடுகிறது. இதன் வெளிப்பாடாக, தாங்கள் வெளியிடப்போகும் பட்ஜெட் காம்பேக்ட் எஸ்யூவிகளில் (ரெனோ: HBC, நிஸான்: EM2) இந்த வசதியை வழங்கும் முடிவில் ரெனோ - நிஸான் நிறுவனங்கள் உள்ளன. இதனால், 'சன்ரூஃப் உடன் கூடிய விலை குறைவான கார்' என்ற பெருமையை இவை பெறும் என நம்பலாம். தற்போதைக்கு இந்தப் பெயரை ஹோண்டா WR-V வைத்திருக்கிறது. ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக, இப்போது விற்பனை செய்யப்படும் எந்தவொரு ரெனோ - நிஸான் தயாரிப்பிலும் சன்ரூஃப் இல்லை என்பது தெரிந்ததே.

ரெனோவின் காம்பேக்ட் எஸ்யூவிக்கு Kiger எனவும், நிஸானின் காம்பேக்ட் எஸ்யூவிக்கு Magnite எனப் பெயர் சூட்டப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. இவை இரண்டுமே ரெனோ ட்ரைபர் தயாரிக்கப்படும் CMF-A+ பிளாட்ஃபார்மில்தான் உற்பத்தி செய்யப்படும். அதை விட இவை பிரிமியம் தயாரிப்பாக பொசிஷன் செய்யப்படும் என்பதால், ட்ரைபரில் இல்லாத கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல்கள், கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், LED லைட்டிங் போன்ற சிலபல அம்சங்கள் காம்பேக்ட் எஸ்யூவிகளில் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதில் 95bhp பவரைத் தரக்கூடிய 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (HR10) பொருத்தப்படும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக மே 2020 மாதத்தில் Magnite-ம், ஜூலை 2020 மாதத்தில் Kiger-ம் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழலில், இவற்றின் அறிமுகம் கொரோனா காரணமாகத் தள்ளிப்போகலாம். இவை இரண்டுமே 5-5.5 லட்ச ரூபாய் ஆரம்ப விலையில் வெளிவரலாம். எனவே போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது லேட்டாக வந்தாலும், மிகக் குறைவான விலையில் ரெனோ - நிஸானின் காம்பேக்ட் எஸ்யூவிகள் வரும்.

வென்யூ - நெக்ஸான் - XUV3OO - எக்கோஸ்போர்ட் ஆகியவற்றில் சன்ரூஃப் இருக்கும் நிலையில், விட்டாரா பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட்டிலும் சன்ரூஃப் இடம்பெறாதது நெருடல். இந்த காம்பேக்ட் எஸ்யூவிகளைத் தொடர்ந்து, காம்பேக்ட் செடான் CMF-A+ பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட உள்ளது.