Published:Updated:

ராயல் என்ஃபீல்டு Meteor 350 - தண்டர்பேர்டுக்கு மாற்றான பைக்கா? #Analysis

Meteor 350
Meteor 350 ( Autocar India )

ராயல் என்ஃபீல்டு வரலாற்றில், காலத்துக்குத் தேவையான பல முதல்களுக்கு வழிவகை செய்த பெருமை தண்டர்பேர்டையே சேரும். பைக்கில் டூர் அடிக்க வேண்டும் என ஆசைப்பட்டவர்களை உற்சாகப்படுத்திய பைக்குகளில் இதுவும் ஒன்று.

தண்டர்பேர்டு... பைக்கில் டூர் அடிக்க வேண்டும் என ஆசைப்பட்டவர்களை உற்சாகப்படுத்திய பைக்குகளில் இதுவும் ஒன்று. 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இந்த பைக்கில்தான் சிம்பு, மஞ்சிமாவுடன் டிராவல் செய்தார் என்றாலும், பைகள் சகிதம் தனியாகக் கிளம்பியவர்களேயே நான் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன் (90'ஸ் கிட்ஸ் - சிங்கிள்ஸ் பரிதாபங்கள்)!

ராயல் என்ஃபீல்டு வரலாற்றில், காலத்துக்குத் தேவையான பல முதல்களுக்கு வழிவகை செய்த பெருமை தண்டர்பேர்டையே சேரும். ஆம், LED DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட், அலாய் லீவர்கள், டிஜிட்டல் ஸ்க்ரீன் - டேக்கோமீட்டர் கொண்ட ஸ்பீடோமீட்டர், LED டெயில் லைட், அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், கேஸ் ஷாக் அப்சார்பர், பின்பக்க டிஸ்க் பிரேக், Box-Section ஸ்விங்-ஆர்ம், Offset முடி கொண்ட 20 லிட்டர் பெட்ரோல் டேங்க், Fi என இதற்கான உதாரணங்கள் அதிகம்.

Meteor 350
Meteor 350
Automobile Infiniti

இன்னும் சொல்லப்போனால், வின்டேஜ் ஃபீலில் இருந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு, கொஞ்சம் மாடர்ன் ரத்தம் புகுத்தியது இந்த டூரிங் பைக்தான்! BS-6 விதிகள் அமலுக்கு வந்தபிறகு, தண்டர்பேர்டு சீரிஸையே காணவில்லை. 500சிசி மாடல்களையே ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டதாக ராயல் என்ஃபீல்டு கூறிவிட்டது. இந்தச் சூழலில்தான், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக புதிய பைக்குகளை டெஸ்ட் செய்துகொண்டிருப்பது நினைவுக்கு வருகிறது. அதற்கேற்ப புதிய தண்டர்பேர்டின் படங்கள், இணைய உலகில் வைரலாகப் பரவிவருகின்றன. 1950-களில் Meteor என்ற பெயரில், ராயல் என்ஃபீல்டு ஒரு பைக்கை விற்பனை செய்தது. அதைப் பின்பற்றியே இந்த க்ரூஸருக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஃபோர்டு நிறுவனம் சர்வதேச அளவில் தண்டர்பேர்டு பெயருக்கு காப்புரிமை வைத்திருப்பதே, இந்தப் பெயர் மாற்றத்துக்கான காரணம்.

டிசைன் மற்றும் வசதிகள்

Meteor 350
Meteor 350
Automobile Infiniti

லீக் ஆகியிருக்கும் படங்களைப் பார்க்கும்போது, Meteor-ன் தோற்றம் ஏறக்குறைய தண்டர்பேர்டு 350X பைக் போலவே அமைந்திருக்கிறது. ஆனால், பைக்கை உற்றுநோக்கும்போது, டிசைனில் மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. Meteor புதிய பைக்காக இருந்தாலும், பல விஷயங்களில் அது ரிவர்ஸ் கியரில் சென்றிருக்கிறது. பல்ப் கொண்ட ஹெட்லைட் - டெயில்லைட் அதற்கான ஆரம்பப்புள்ளி. பின்பக்க ஷாக் அப்சார்பர் வழக்கமான ஹைட்ராலிக் முறைக்கு மாறிவிட்டதுடன், பெட்ரோல் டேங்க் மூடியும் நடுவே வந்துவிட்டது. மேலும் Bar End Weight - பில்லியன் Back Rest - அலாய் லீவர்கள் & Foot Pegs - க்ரோம் ஃபினிஷ் ஆகியவை மிஸ்ஸிங். ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கே உரித்தான டூல் பாக்ஸ் காணவில்லை. பாடி பேனல்கள், கலர்கள் அதேதான். ஆனால், பைக்கில் ஆங்காங்கே சில முன்னேற்றங்களும் இருக்கவே செய்கிறது.

Offset டிஜிட்டல் மீட்டர் (ஜாவா 42 போல), கிக் லீவர் இல்லாத இன்ஜின், ரெட்ரோ பைக்குகளைப் போன்ற ஸ்விட்ச் கியர், மெட்டல் மிரர்கள், இடதுபுறத்துக்கு மாறியிருக்கும் செயின் ஸ்ப்ராக்கெட், வலதுபுறத்துக்கு வந்திருக்கும் டிஸ்க் பிரேக்ஸ், சிறிய மட்கார்டு, புதிய அலாய் வீல்கள் அதை உணர்த்துகின்றன. மற்றபடி தண்டர்பேர்டு பைக்கில் நாம் ஏற்கெனவே பார்த்த மெக்கானிக்கல் பாகங்கள்தான் Meteor-யிலும் இடம்பிடித்துள்ளன. மாற்றம் என்னவென்றால், பின்பக்க மட்கார்டில் நம்பர் பிளேட் - இண்டிகேட்டர்கள், வட்டமான டெயில் லைட்டுக்குக் கீழே தாழ்வாக வைக்கப்பட்டுள்ளன. தவிர எக்ஸாஸ்ட் பைப்பும் சிறியதாகிவிட்டது (பின்வீலுக்கு முன்பே முடிந்துவிடுகிறது). ஆக்ஸசரீஸ் பட்டியல் மிக நீளம் என்பது நல்ல விஷயம். புதிய பைக் புதுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை, இந்த RE பைக் நமக்கு உணர்த்துவதாகவே தோன்றுகிறது.

Meteor 350
Meteor 350
Automobile Infinti

இன்ஜின் மற்றும் சேஸி

பக்கவாட்டு பாடி பேனலில், Meteor 350 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்துப் பார்த்தால், இந்தப் பைக்கில் இருக்கப்போவது 350சிசி இன்ஜின்தான். க்ளாஸிக் 350 பைக்கில் இருக்கும் Unit Construction இன்ஜினைவிட இது மேம்பட்டதாகவே இருக்கும் எனத் தெரிகிறது. கியர்பாக்ஸ் கேஸிங் முன்பைவிட மெலிதாகக் காட்சியளிப்பதுடன், த்ராட்டில் பாடியில் வேறுபாடு இருக்கிறது. எனவே, ஹிமாலயனின் இன்ஜின் போலவே, ஃப்யூல் இன்ஜெக்ஷன் - SOHC வால்வ் செட்-அப் இதில் இருக்கலாம். ஆனால், ஆயில் கூலர் இல்லை. மற்றபடி பைக்கின் விலையைக் கட்டுக்குள் வைக்க, 5 ஸ்பீடு கியர்பாக்ஸே தொடரலாம். தண்டர்பேர்டில் பிரதான பிரச்னையாக இருந்த அதிர்வுகள், இம்முறை Counter Balancer வழியே சரி செய்யப்பட்டிருக்கலாம்.

இது புதிய Double Cradle சேஸியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, Foot Pegs-யைக் கொஞ்சம் முன்னால் தள்ளிவிட்டது ராயல் என்ஃபீல்டு. மேலும் ஹேண்டில்பாரும் ஸ்ட்ரீட் பைக் பாணியில் தட்டையாகக் காட்சியளிக்கிறது. இதனால் ரைடிங் பொசிஷன் முன்பைவிட ரிலாக்ஸ்டாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம். எனவே முன்பக்க சக்கரம், பின்பக்க சக்கரத்தின் அதே சைஸில் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. Meteor-ன் ஓட்டுதலில் இவையெல்லாம் ஒன்று சேர்ந்து என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தியிருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள, உங்களைப் போல நாங்களும் ஆர்வமாகவே இருக்கிறோம்.

Meteor 350
Meteor 350
Automobile Infiniti

போட்டியாளர்கள் மற்றும் விலை

சில ஆக்ஸசரிகள் தேர்வு செய்யப்பட்ட Meteor பைக்கை, ராயல் என்ஃபீல்டின் Online Configurator-ல் இருப்பதுபோன்ற படங்கள் லீக் ஆகிவிட்டன. அதில் பைக்கின் விலை 1,68,550 ரூபாய் என்பது தெளிவாகத் தெரிகிறது (இது எக்ஸ்ஷோரூம் விலைதான்). BS-4 தண்டர்பேர்டு 350X பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை 1.63 லட்ச ரூபாய் என்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்த விலை நிச்சயம் டூரிங் பார்ட்டிகளுக்கு தித்திப்பாகவே தெரியும். Online Configurator-ல் பைக்கின் பெயரில், Fireball என்ற வார்த்தை இருந்ததைப் பார்த்திருப்பீர்கள். Meteor டெஸ்ட்டிங்கில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களைப் பார்த்தால், இந்தப் பைக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட எடிஷன்களை, ராயல் என்ஃபீல்டு திட்டமிடுகிறதோ என்ற எண்ணம் வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தண்டர்பேர்டு மற்றும் X போல இந்த நிறுவனம் சர்ப்ரைஸ் செய்யக்கூடும்.

New Thunderbird
New Thunderbird
Autocar India

மற்றுமொரு எடிஷனில் மேல்நோக்கிய காம்பேக்ட்டான எக்ஸாஸ்ட், சிங்கிள் பீஸ் சீட், LED டெயில்லைட், Fork Gaitors, பின்னோக்கி வைக்கப்பட்டிருக்கும் Foot Pegs, கிராப் ரெயில், கொஞ்சம் தடிமனான டயர்கள், தாழ்வான பெட்ரோல் டேங்க் மற்றும் சீட் என வித்தியாசங்கள் இருக்கலாம். மேலும் Meteor-ன் அதே ப்ளாட்ஃபார்மில், புத்தம் புதிய க்ளாஸிக் தயாரிக்கப்படும் என்பது தெரிந்ததே. இது வரவேற்கத்தக்கது என்றாலும், போட்டியாளர்கள் (ஜாவா, இம்பீரியல், டொமினார்) அணிவகுத்து வந்துவிட்டார்கள் என்பதை ராயல் என்ஃபீல்டு உணர்ந்திருக்கிறது. எனவே, இந்த செக்மென்ட்டில், தான் விட்ட இடத்தைப் பிடிப்பதில் மும்முரமாக அந்த நிறுவனம் இறங்கியிருப்பதாகவே தோன்றுகிறது. கொரோனா காரணமாக இவற்றின் அதிகாரபூர்வமான அறிமுகம் தள்ளிப் போயிருக்கிறது. அதுகுறித்து, ஊரடங்கு முடிந்த பிறகு கூடுதல் தகவல்கள் தெரிய வரலாம்.

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாஸிக்கில் அனலாக் டிஜிட்டல் மீட்டர்!
Meteor 350 Fireball
Meteor 350 Fireball
Autocar India
அடுத்த கட்டுரைக்கு