Published:Updated:

குட்டி எலெக்ட்ரிக் காரா இந்தப் புது ஹோண்டா சிட்டி!

ஹோண்டா சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா சிட்டி

சிட்டியின் இன்டீரியர், இப்போது ப்ரீமியம் ரகமாகி இருக்கிறது. பார்க்கிங் பிரேக் கூட எலெக்ட்ரானிக்.

குட்டி எலெக்ட்ரிக் காரா இந்தப் புது ஹோண்டா சிட்டி!

சிட்டியின் இன்டீரியர், இப்போது ப்ரீமியம் ரகமாகி இருக்கிறது. பார்க்கிங் பிரேக் கூட எலெக்ட்ரானிக்.

Published:Updated:
ஹோண்டா சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா சிட்டி

‘ஹோண்டா நிறுவனத்தில் இருந்து சிட்டி காரில் ஒரு பவர்ஃபுல் ஹைபிரிட் வருகிறது’ என்கிற தகவல் தெரிந்ததுமே உற்சாகமாக வாசகர்களிடம் இருந்து அழைப்புகள். நான்கூட நமது டீமுடன் இப்போது ஹோண்டா சிட்டியை ஓட்டுவதற்குத்தான் பெங்களூருவுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்பு வாசகர்களுக்கு ஹோண்டா சிட்டி ஹைபிரிட்டின் அறிமுகத்தைச் சொல்லியாக வேண்டிய கட்டாயம். அடுத்த மாதம் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் படிப்பதற்குள், இப்போது ‘நறுக் சுறுக்’ என ஒரு ஃபர்ஸ்ட் லுக் பார்த்து விடலாம்.

இந்தியாவின் ஹைபிரிட்டுக்குச் சொந்தக்காரர் என்றால், சட்டென மாருதியைக் கைகாட்டுவார்கள் வாடிக்கையாளர்கள். அந்த அளவுக்கு ஹைபிரிட்டில் புகுந்து விளையாடி விட்டது மாருதி. ஆனால், மாருதி கார்கள் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கானது. இப்போது, ‘இந்தியாவின் ப்ரீமியம் மற்றும் ஸ்ட்ராங்கான ஹைபிரிட் கார்’ என்கிற அடைமொழியுடன் தனது சிட்டி காரின் 5–வது ஜென் மாடலைக் கொண்டு வந்திருக்கிறது ஹோண்டா.

‘உறுதியான ஹைபிரிட் கார்’ என்று சொல்வதற்குக் காரணம் – இதில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள். Atkinson Cycle பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். வாட்டர் கூல்டு சிஸ்டமும், 16 வால்வுகளும் கொண்ட இது, எரிபொருள் சிக்கனத்துக்குப் பெயர் பெற்ற தொழில்நுட்பம். இதை அடிப்படையாகக் கொண்ட 1.5 லிட்டர், 4 சிலிண்டர் i-VTEC DOHC – VTC பெட்ரோல் இன்ஜின்தான் இந்த சிட்டியில் இருக்கிறது. சிட்டி காரின் பூட்டில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி பேக், இதன் பீக் பவராக 2,000rpm வரை அனுமதிக்கிறது. பெர்ஃபாமன்ஸை இதன் பீக் டார்க்கான 2,000rpm நெருக்கத்திலேயே கிடைக்குமாறு இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த சிட்டி. அப்படியென்றால், லோ ஸ்பீடு – ஹை ஸ்பீடு என எந்த இடத்திலும் தொய்வு இருக்காது. 4,000rpm –ஐ இன்ஜின் நெருங்கும் போது என்னாகும் என ஓட்டிப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.

இந்த ஹைபிரிட் சிட்டியின் அதிகபட்ச பவர் 109 bhp. மற்றும் 253 Nm டார்க். எலெக்ட்ரிக்கில் ஓடும்போது இந்த அம்சங்கள் கிடைக்கின்றன. இதுவே பெட்ரோலில் ஓடினால் இதன் பவர் 98 bhp மற்றும் டார்க் 127Nm. இரண்டும் சேர்ந்து ஓடினால் அதிகபட்ச பவராகக் கிடைப்பது – 126bhp. ஹைபிரிட் என்றாலே, மைலேஜ்தான் நம்மவர்களுக்கு நினைவுக்கு வரும்… ஆம், ஹோண்டா இந்த சிட்டியின் மைலேஜாக 26.5கிமீ–யை க்ளெய்ம் செய்கிறது. இது மாருதி ஹைபிரிட்களுக் கெல்லாம் சவால் விடும் ஒரு விஷயம். இந்த சிட்டி இவ்வளவு மைலேஜ் தந்தாலும் ஆச்சரியமில்லை; ஏனென்றால், ஒரு பக்கா எலெக்ட்ரிக் கார் மாதிரியே இது செயல்படுவதுதான் விஷயமே! பொதுவாக, கார்களில் சிட்டி டிராஃபிக்கில் மைலேஜ் குறைவாகக் கிடைக்கும்தானே! ஆனால், இந்த சிட்டி, சிட்டி டிராஃபிக்கில்தான் மைலேஜில் வியக்க வைக்கப் போகிறது எனலாம்.

இந்த இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களில் ஒன்று – முக்கியமான எலெக்ட்ரிக் ஜெனரேட்டர் ஆகவும், இரண்டாவது – காரைச் செலுத்தக் கூடிய ப்ரொப்பொல்ஸன் மோட்டாராகவும் செயல்படுகிறது.

குட்டி எலெக்ட்ரிக் காரா இந்தப் புது ஹோண்டா சிட்டி!

இந்த சிட்டியில் கியர்பாக்ஸ் இல்லை என்பது வியக்க வேண்டிய இன்னொரு விஷயம். அதற்காக கியர் லீவர் இல்லை என்பது அர்த்தமில்லை. இதில் CVT கிடையாது; கியர் செட் கிடையாது; கியர் வீல்களும் கிடையாது. ஒரு ஒற்றை டைரக்ட் கியர் மட்டும் ஹைவே டிரைவிங்குக்காகக் கொடுத்திருக்கிறார்கள். கியர்பாக்ஸ் இருக்க வேண்டிய இடத்தில்தான் அந்த 2 எலெக்ட்ரிக் மோட்டார்களும் இருக்கின்றன. இதை இன்ஜினின் கடைசியில் இணைத்திருக்கிறார்கள். இந்த மோட்டாரும்/ஜெனரேட்டரும் சேர்ந்து மின்சாரத்தை உருவாக்கி, இன்ஜினை இயக்கி, அந்த ஆற்றலை இதன் பூட் ஸ்பேஸில் உள்ள பேட்டரியில் சேமித்து… என்று சிட்டி செமையாக வேலை பார்க்கிறது. இதில் பேட்டரிக்குத் தானாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் – ரீ–ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் உண்டு. அட, சிட்டியை ஹைபிரிட் என்று சொல்வதைவிட, ஒரு குட்டி எலெக்ட்ரிக் கார் என்றே சொல்லலாம் போல!

சிட்டியின் இன்டீரியர், இப்போது ப்ரீமியம் ரகமாகி இருக்கிறது. பார்க்கிங் பிரேக் கூட எலெக்ட்ரானிக்.
சிட்டியின் இன்டீரியர், இப்போது ப்ரீமியம் ரகமாகி இருக்கிறது. பார்க்கிங் பிரேக் கூட எலெக்ட்ரானிக்.

வழக்கமான கார்களில் இன்ஜினில் இருந்து பவர் நேரடியாக வீல்களுக்குச் செல்லும்தானே! இதில் எலெக்ட்ரிக் மோட்டார் வழியாக வீல்களுக்குப் பவர் கடத்தப்படுகிறது. வீல்கள் ஸ்பின் ஆவதற்குத் தேவையான பவர் எலெக்ட்ரிக் மோட்டாருக்கு, பேட்டரி வழியாகக் கிடைக்கிறது. இதனால் 95% ஆற்றல், மின்சாரமாகச் சேமிக்கப்படுகிறது. இதனாலேயே வழக்கமான கார்களைவிட 40% மைலேஜ் இந்த சிட்டியில் அதிகமாகக் கிடைக்குமாம். 120 கிமீ–க்கு மேல் அதிக வேகங்களில் மட்டும்தான் இதன் இன்ஜின், முன் பக்க வீல்களுடன் கனெக்ட் ஆகிக் கொள்ளுமாம்.

இதில் 3 டிரைவ் மோடுகள் கொடுத்திருக் கிறார்கள். EV, Hybrid, Engine என எந்த மோடிலும் நாம் இந்த சிட்டியை ஆப்பரேட் செய்து கொள்ளலாம்.

கொஞ்சம் டெக்னிக்கலாக இருந்தாலும், சிட்டியை ஓட்டிப் பார்க்கும்போது, இதன் தொழில்நுட்பம் புரிந்துவிடும்.

சும்மாவே ப்ரீமியம் வசதிகளில் சொல்லியடிக்கும் ஹோண்டா. இது காஸ்ட்லியான ஹைபிரிட் ஆச்சே! இதில் 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆறு காற்றுப்பைகள், நமது மூடுக்கு ஏற்ற ஆம்பியன்ட் லைட்டிங், டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம், ஸ்மார்ட் வாட்ச் இன்டெக்ரேஷன் (IOS and Android) என்று கலக்குகிறது. பார்க்கிங் பிரேக்கூட காஸ்ட்லி கார்களில் இருப்பது மாதிரி எலெக்ட்ரானிக் ஹேண்ட் பிரேக்! வாவ்!

இன்டீரியரில் டூயல் டோன் ஐவரி மற்றும் கறுப்பு நிற ஸ்கீம் கொடுத்திருக் கிறார்கள். பாதுகாப்பிலும் சிட்டி நன்றாகவே சொல்லியடிக்கிறது. லேன் கீப்பிங் அசிஸ்ட், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் என்று கலக்குகிறது சிட்டி. சின்ன கார்களே கனெக்டட் ஆக இருக்கும்போது, சிட்டி இருக்காதா! ஆம், இதுவும் ஒரு கனெக்டட் வசதி கொண்ட செடான்தான். ‘அலெக்ஸா, ஓகே கூகுள்’ என 37 வகையான கனெக்டட் வசதிகள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் – ஒயர்லெஸ் சார்ஜிங், வென்டிலேட்டட் சீட்கள் இதெல்லாம் இருக்குமா தெரிய வில்லை!

குட்டி எலெக்ட்ரிக் காரா இந்தப் புது ஹோண்டா சிட்டி!



அட, ADAS (Advanced Driver Assistance System) வசதியோடும் சிட்டி வரவிருக்கிறது என்றொரு தகவல். இதை Honda Sensing Technology என்கிறது ஹோண்டா. இது தேவையான நேரத்தில் டிரைவர்களை அலெர்ட் செய்து, விபத்துகளைக் குறைக்கும் தொழில்நுட்பம். அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டமும் இதனுடன் சேர்ந்து நன்றாகவே கைகொடுக்கும்.

ஆசியன் என்கேப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்குவதற்கு ஏற்ற கட்டுமானத்தில் ரெடியாகி இருக்கிறதாம் இந்த 5–வது ஜென் ஹோண்டா சிட்டி.

சாதாரண சிட்டியில் இருந்து இதை வித்தியாசப்படுத்திக் காட்ட வெளிப்பக்க டிசைனில் சில கிம்மிக்ஸ் செய்திருக்கிறது. ஒரு நீல நிற கோடு கொண்ட ஹோண்டா லோகோ, முன் /பின் பக்கம் இருந்தால்… அது ஹைபிரிட் சிட்டி என்று அறிந்து கொள்ளலாம். டொயோட்டா லெக்ஸஸ் கார்களில் இந்த நடைமுறைதான் இருக்கும். பின் பக்கம் ஹைபிரிட் என்பதைச் சொல்லும் e:HEV எனும் பேட்ஜும், பின் பக்கம் பூட்டுக்கு ஸ்பாய்லரும், பின் பக்க பம்பருக்கு டிஃப்யூஸரும் இருந்தால், அது ஹைபிரிட் சிட்டி.

மொத்தம் 5 கலர்களில் வரவிருக்கிறது ஹோண்டா சிட்டி e:HEV. முதல் கட்டமாக இப்போது ராஜஸ்தானில் உள்ள தபுகரா ப்ளான்ட்டில் இந்த ஹைபிரிட் சிட்டியைத் தயார் செய்யத் துவங்கிவிட்டது ஹோண்டா. ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ், மாருதி சுஸூகி சியாஸ் என்று இந்த கார்களுடன் ப்ரீமியம் செக்மென்ட்டில் மல்லுக்கு நிற்க வந்திருக்கும் சிட்டி ஹைபிரிட்டின் விலையைக் கவனமாக ஹோண்டா பொசிஷன் செய்தால்… இந்த மார்க்கெட்டில் சொல்லியடிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism