Published:Updated:

கொரோனா பாதுகாப்பு... கைகளை மட்டுமில்லை, கார்களையும் கழுவ வேண்டியது அவசியம்! #Corona

Car washing
Car washing

COVID-19 வைரஸ் காற்றில் பரவாது. ஆனால், இவை உலோகம் மற்றும் பிளாஸ்டிக் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால், உங்கள் தனி வாகனத்தில் வெளியே சென்றாலும், உங்களிடம் லிஃப்ட் கேட்காமலேயே உங்களுடைய காரில் கொரேனா உங்களோடு பயணிக்கும்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் தங்களைத் தாங்களே வீட்டுக்குள் முடக்கிக்கொள்கிறார்கள். அலுவலகங்கள், வொர்க் ஃபிரம் ஹோம் கொடுத்துள்ளன. என்னதான் சமூகத்தை விட்டு விலகியிருக்க முயன்றாலும் சில அத்தியாவசியமான நேரங்களில் நாம் வெளியே செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுவது சகஜம். இதுபோன்ற சூழலில் பாதுகாப்பாக இருப்பதற்கு அடிப்படைச் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

car interior
car interior

COVID-19 வைரஸ் காற்றில் பரவாது. ஆனால், இவை உலோகம் மற்றும் பிளாஸ்டிக் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால், நீங்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தாமல் உங்கள் தனி வாகனத்தில் வெளியே சென்றாலும், உங்களிடம் லிஃப்ட் கேட்காமலேயே உங்களுடைய காரில் கொரேனா தொற்றிக்கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் ஓட்டுநர்கள் கவனமாக இருக்கவேண்டும். இந்தக் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க காரை நன்கு சுத்தப்படுத்துங்கள்.

அடிப்படை சுகாதாரம்

எல்லோருமே எப்போதும் பின்பற்றவேண்டியவை என்பதால்தான் அடிப்படை சுகாதாரம் என்கிறோம். இதுவரை ஆரம்பிக்கவில்லை என்றால் இப்போதாவது உங்கள் கைகளை அவ்வப்போது கழுவ பழகுங்கள். முக்கியமாக வெளியே செல்பவர்கள் டிரைவ் கிளம்புவதற்கு முன்னும், டிரைவிங் முடித்த பின்பும் கைகளைக் கழுவ வேண்டும். இருமும்போதும், தும்மும்போதும் வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ளவேண்டும். வாகனத்தில் எப்போதும் டிஷ்யூ பேப்பர் மற்றும் சிறிய குப்பைத்தொட்டி வைத்துக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில் கையில் சானிடைசர் இருப்பது நல்லது.

கொரோனா முன்னெச்சரிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை

கேபினைச் சுத்தம் செய்யவேண்டும்

கேபினை disinfectant பயன்படுத்தி சுத்தப்படுத்தவேண்டும். ஆனால், இந்த கெமிக்கல் திரவங்கள் வேலைசெய்யவேண்டும் என்றால் கேபினில் தூசு அல்லது மண் மாதிரியான அழுக்குகள் இருக்கக்கூடாது. முதலில் டேஷ்போர்டு, டோர்பேட், சீட் போன்றவற்றை வேக்யூம் கிளீனர் அல்லது துணியை வைத்துத் துடைத்துவிட்டு disinfectant பயன்படுத்தலாம்.

கார் கேபின் சுத்தம்
கார் கேபின் சுத்தம்

அதிகம் தொடும் பாகங்கள்

Disinfectant என்றால் புதிய பொருள் என்று நினைத்துக்கொள்ளவேண்டாம். இது சாதாரணமாக நமக்குக் கிடைக்கக்கூடிய காரைச் சுத்தப்படுத்தும் திரவம்தான். Disinfectant wipes என டிஷ்யூ பேப்பர் போலவும் விற்கப்படுகிறது. உங்களுடைய வாகனத்தில் முதலில் டோர் ஹேண்டில், ஸ்டீயரிங் வீல், கியர் ஷிஃப்ட்டர், ஹேண்ட் பிரேக், வைஸர், சீட் அட்ஜஸ்ட்மென்ட் லீவர், சீட் பெல்ட், டேஷ்போர்டு, டச் ஸ்கிரீன், பட்டன்கள் மற்றும் வாகனத்தின் சாவியை சுத்தப்படுத்தவேண்டும். எலெக்ட்ரானிக் பாகங்களில் எக்ஸ்ட்ரா கவனம் தேவை.

இந்தப் பாகங்களைத் தொடர்ந்து தொடுதலுக்கு உட்படுபவை அதனால் இவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம். கேபினைச் சேதப்படுத்தாமல் சுத்தப்படுத்தவேண்டும் என்றால் பிளீச்சிங் பவுடர் மற்றும் அமோனியா இருக்கும் திரவங்களை பயன்படுத்தவேண்டாம். 

காரில் சுத்தப்படுத்தவேண்டிய இடங்கள்
காரில் சுத்தப்படுத்தவேண்டிய இடங்கள்

இதைத் தவிர வீட்டைச் சுத்தப்படுத்த பயன்படுத்தும் லைஸால், காலின் போன்ற பொருள்களையும், மருந்தகங்களில் கிடைக்கும் சானிடைசர்களை கூடப் பயன்படுத்தலாம். Isopropyl alcohol இருக்கும் திரவம் என்றால் முதலில் ஏதாவது சிறிய ரப்பர் பாகத்தின் மீது பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த பிரச்னையும் இல்லையென்றால் அதை வைத்துச் சுத்தப்படுத்துங்கள். 

எதுவுமே இல்லையென்றால் சோப்பு தண்ணீரைப் பயன்படுத்துங்கள். சோப்பினால் காரின் மீது ஏற்படும் கரைகளை வேக்ஸ் அல்லது பாலிஷ் போட்டு பிறகு துடைத்துக்கொள்ளலாம். முதலில் கொரோனாவை கழுவி வெளியே ஊற்றுவதுதான் நமக்கு முக்கியம். 

காரைச் சுத்தப்படுத்தும்போது சாதாரண துணியைப் பயன்படுத்தக்கூடாது. கண்ணுக்குத் தெரியாத கீறல்கள் விழும் என்பதால் மைக்ரோ ஃபைபர் துணியைப் பயன்படுத்தவேண்டும்.

சீட்
சீட்

சீட் சுத்தம்

ஹெட்ரெஸ்ட், சீட்டின் பின்பகுதி, பேக்ரெஸ்ட், ஆர்ம்ரெஸ்ட் போன்ற இடங்களைச் சுத்தப்படுத்த சீட் கண்டிஷனர் எனத் தனியாகவே விற்பனைச் செய்யப்படுகிறது. முடிந்தால் ஒருமுறை ஸ்டீம் அல்லது டிரை கிளீனிங் செய்யுங்கள். காரின் இன்டீரியரை சுத்தப்படுத்துவது சவாலாக இருந்தால் ஏதாவது டீடெயிலிங் சென்டருக்கு காரை கொண்டுசெல்லுங்கள்.

ஏசி

ஏசி சுத்தம்
ஏசி சுத்தம்

கொரோனா காற்றில் பரவாது. அதனால் என்ன, காரையே சுத்தப்படுத்தும்போது ஏசியைச் சுத்தப்படுத்தாமல் விட்டால் நிச்சயம் ஏதாவது பிரச்னை வரும். அதுவும் முக்கியமாக ஏசியை சுத்தப்படுத்தாமல் இருந்தால் சுவாசப் பிரச்னை வரும். இதனால் காரை சர்வீஸ் சென்டர் அல்லது டீடெயிலிங் சென்டர்களுக்கு எடுத்துச்சென்று ஏசியைச் சுத்தப்படுத்திவிடுங்கள். ஏசி வென்ட்டை சுத்தப்படுத்தத் தனியாக ஸ்பிரே அல்லது ஃபோம் கடைகளில் கிடைக்கும்.

சோஷியல் டிஸ்டன்சிங்

நேரடியாக ஒருவரைச் சென்று பார்ப்பதைத் தவிர்க்கமுடியும் பட்சத்தில் அதைத் தவிர்ப்பது நல்லது. கொரோனா பரவாமல் தடுக்கச் சிறந்த வழி காதலியை பார்த்த இதயம் முரளி போல ஒதுங்கி இருப்பதே. மற்றவர்களின் வாகனத்தை நீங்கள் பயன்படுத்தாதீர்கள், மற்றவர்களிடம் உங்களுடைய வாகனத்தைக் கொடுக்காதீர்கள். முக்கியமாக வேலட் பார்க்கிங் போன்ற இடங்களில் வாகனங்களைக் கொடுக்காதீர்கள். பெட்ரோல் பங்குகள், டோல் போன்ற இடங்களில் பணத்துக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் செலவுசெய்யுங்கள். 

பிசிக்கல் டிஸ்டன்ஸிங்
பிசிக்கல் டிஸ்டன்ஸிங்

வீடு, அலுவலகத்துக்குப் பிறகு அதிகநேரம் செலவிடும் இடம் உங்களுடைய வாகனம். அதைச் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதுவும் இதுபோன்ற கொரோனா வேலையில் பயணத்தை தவிர்த்துவிடுங்கள். பயணம் செய்ய நேர்ந்தால் சுகாதாரத்தில் அக்கறை இருக்கட்டும்.

அடுத்த கட்டுரைக்கு