புதிய கலர் ஆப்ஷன்களுடன் களமிறங்கியுள்ள BS-6 சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 எப்படி?

ஆக்ஸஸின் BS-6 மாடலில் பெட்ரோல் டேங்க் மூடி வெளியே வந்துவிட்ட நிலையில், பர்க்மேன் ஸ்ட்ரீட் 125-ல் அது பழையபடி சீட்டுக்கு அடியே இருப்பது நெருடல்.
BS-4 மாடலைவிட 6,900 ரூபாய் கூடுதல் விலையில், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் BS-6 வெர்ஷனைக் களமிறக்கியுள்ளது சுஸூகி. 77,900 ரூபாய்க்கு வந்திருக்கும் இதில், Metallic Matte Bordeaux Red எனும் புதிய கலர் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற 4 கலர் ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கின்றன. இதை நடந்துமுடிந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் இந்த நிறுவனம் காட்சிக்கு வைத்தது தெரிந்ததே. டிசைனில் எந்த மாறுதலும் இல்லையென்றாலும், முன்பைவிட 40மிமீ அதிக அகலம் (715மிமீ) மற்றும் 2 கிலோ அதிக எடை (110 கிலோ) என வளர்ந்திருக்கிறது பர்க்மேன் ஸ்ட்ரீட் BS-6.

மேலும், பெட்ரோல் டேங்க்கின் அளவும் 100 மில்லி சுருங்கிவிட்டது (5.5 லிட்டர்). ஆக்ஸஸ் 125-ன் BS-6 மாடலில் பெட்ரோல் டேங்க் மூடி வெளியே வந்துவிட்ட நிலையில், பர்க்மேன் ஸ்ட்ரீட் 125-ல் அது பழையபடி சீட்டுக்கு அடியே இருப்பது நெருடல். மற்றபடி க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய பாடி பேனல்கள், விண்ட் ஸ்க்ரீன், பெரிய சீட், மேல்நோக்கிய எக்ஸாஸ்ட் பைப், கால்களை வைக்க அதிக இடம், DC பாயின்ட் உடனான முன்பக்க ஸ்டோரேஜ் பாக்ஸ், LED ஹெட்லைட் & டெயில் லைட், டிஜிட்டல் மீட்டர் ஆகிய அம்சங்கள் இதிலும் அப்படியே தொடர்கின்றன.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பின்பக்கத்தில் பெரிய 12 இன்ச் வீல், சீட்டுக்கு அடியே Boot Light, பாஸ் லைட் ஸ்விட்ச், ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு இன்ஜின் கட்-ஆஃப் ஸ்விட்ச் ஆகியவற்றைச் சுஸூகி இதில் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!

இதிலிருக்கும் 124சிசி SEP இன்ஜின், BS-4 மாடலைப் போலவே 8.7bhp பவரைத் தந்தாலும், அது வெளியாகும் ஆர்பிஎம் மாறிவிட்டது (6,750rpm). ஆனால், டார்க்கில் சிறிய சரிவு தெரிகிறது (1kgm@5,5000rpm). இங்கே எதிர்பார்த்தபடியே கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்ஷன் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் இன்ஜின் கில் ஸ்விட்ச் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அதன் வாயிலாகவே இன்ஜினை ஸ்டார்ட் செய்யவும் முடியும். கூடவே சுஸூகியின் Easy Start System இருப்பதால், வண்டியை ஆன் செய்ய ஸ்டார்ட்டர் பட்டனை ஒருமுறை அழுத்தினாலே போதும்! ஜிக்ஸர் பைக்குகளில் கிடைக்கக்கூடிய MotoGP நிறத்தில், ஒரு பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரைக் காட்சிக்கு வைத்திருந்தது சுஸூகி. இதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பொறுத்து, இந்த கலரை அறிமுகப்படுத்தும் முடிவில் இந்த நிறுவனம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.