Published:Updated:

டி-ரோக் VS கரோக்... இந்த எஸ்யூவி-யில் வெல்லப்போவது யார்?

இந்த இரு எஸ்யூவி-களுமே, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை ஆகின்றன என்பதுடன், ஒரே ப்ளாட்ஃபார்ம் (MQB), 1.5 லிட்டர் TSI EVO டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் கூட்டணியையே கொண்டிருக்கின்றன.

க்ரெட்டா மற்றும் செல்ட்டோஸ் இருக்கக்கூடிய மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டிலேயே, இன்னும் ப்ரீமியமான ஆப்ஷன்கள் தற்போது கிடைக்கின்றன. ஸ்கோடா - ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் டி-ரோக் மற்றும் கரோக் ஆகியவை அதற்கான உதாரணம். இந்த இரு எஸ்யூவிகளுமே, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை ஆகின்றன என்பதுடன், ஒரே ப்ளாட்ஃபார்ம் (MQB), 1.5 லிட்டர் TSI EVO டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் கூட்டணியையே கொண்டிருக்கின்றன. இதனால் இவை சைஸில் க்ரெட்டா & செல்ட்டோஸ் போலவே இருந்தாலும், விலை விஷயத்தில் ஹெக்டர் & காம்பஸ் ஆகியவற்றுக்கு சமமாகவே இந்த கார்கள் இருக்கின்றன. எனவே, இதை ஒப்பிட்டுப் பார்த்து, எது பெஸ்ட் என்ற முடிவுக்கு இனி வரலாம்.

வெளிப்புறத் தோற்றம்

கரோக்
கரோக்
Skoda India

டி-ரோக் மற்றும் கரோக் ஆகிய இரண்டுமே, சிறப்பான Road Presence கொண்ட எஸ்யூவி வேண்டும் என்பவர்களின் தேர்வாக இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவுதான். ஆனாலும் 148 மி.மீ அதிக நீளம் (4,382மி.மீ), 22மி.மீ அதிக அகலம் (1,841மி.மீ), 51மி.மீ அதிக உயரம் (1,624மி.மீ), 48மி.மீ அதிக வீல்பேஸ் (2,638மி.மீ), 76 லிட்டர் அதிக பூட் ஸ்பேஸ் (521 லிட்டர்) என அசத்துகிறது கரோக். மினி கோடியாக் போன்ற டிசைனில் ஈர்க்கும் இது, யெட்டிக்கு மாற்றாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸூகியின் எஸ்-க்ராஸ் சைஸில் இருந்தாலும், க்ராஸ்ஓவர் பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் டி-ரோக் மாடர்னாகவே காட்சியளிக்கிறது. சரிவடையும் A&C பில்லர்கள், தாழ்வான கேபின் பகுதி, பெரிய வீல் ஆர்ச் அதை உறுதிப்படுத்துகின்றன. இதில் இருக்கும் 5 கலர்களுமே டூயல் டோன் என்பது கவனிக்கத்தக்கது. கரோக்கில் சிங்கிள் டோன் கலர்கள் மட்டும்தான்.

கேபின் சிறப்பம்சங்கள்

வருடத்துக்கு 2,500 கார்கள் என்ற Homologation Free Quota Scheme அடிப்படையில் நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் இந்த எஸ்யூவிகளை, ஒரே டாப் வேரியன்ட்டில்தான் வாங்கமுடியும். ப்ரீமியம் வசதிகளைப் பொறுத்தவரை, இரண்டிலுமே அதிக ஒற்றுமைகள் இருப்பது எதிர்பார்த்த விஷயம்தான் (TPMS, முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், LED ஹெட்லைட்ஸ், டிஜிட்டல் மீட்டர்கள்). மற்றபடி டி-ரோக்கில் இருப்பதைவிட 3 காற்றுப்பைகள் அதிகமாக கரோக்கில் உள்ளது (மொத்தம் 9).

Karoq Cabin
Karoq Cabin
Skoda India

மேலும், டிரைவர் சீட்டுக்கு 12 Way எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மற்றும் சீட் மெமரி வசதி, ஸ்கோடாவில் கிடைக்கிறது. 10 கலர்களுடன் கூடிய ஆம்பியன்ட் லைட்டிங்கும், இந்த மினி கோடியாக்கில் உண்டு. டேஷ்போர்டைப் பொறுத்தவரை, அது ஸ்கோடா கார்களுக்கே உரித்தான குணாதிசயங்களுடன் கவர்ந்திழுக்கிறது. காரின் விலையுடன் ஒப்பிட்டால் இது குறைகளே என்றாலும், கலர்ஃபுல் டேஷ்போர்டால் அதை சரிகட்டிவிடுகிறது டி-ரோக். இதிலும் பல வசதிகள் உண்டு. ஆனால் வென்டிலேட்டட் சீட்ஸ் & வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை இரண்டிலுமே இல்லாதது மைனஸ்.

வெல்கம் 2020... கவாஸாகி நின்ஜா 1000SX BS-6... என்ன ஸ்பெஷல்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

ஒரே ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட இவ்விரு எஸ்யூவி-களிலும் இருப்பது, ஒரே 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் காம்போதான். 0 - 100கி.மீ வேகத்தை 9 விநாடிகளில் எட்டும் கரோக், 14.49கி.மீ மைலேஜ் (WLTP) தரும் எனவும், அதிகபட்சமாக 202கி.மீ வேகம் வரை செல்லும் எனவும் ஸ்கோடா கூறியுள்ளது. சர்வதேச சந்தைகளில் 4 வீல் டிரைவ் மாடல் கிடைத்தாலும், இந்தியாவுக்கு வந்திருப்பது 2 வீல் டிரைவ் வெர்ஷன்தான். 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட டி-ரோக்கை, இன்னும் நாங்கள் ஓட்டிப் பார்க்கவில்லை. இந்த ஃபோக்ஸ்வாகன் காரும், ஸ்கோடா போலவே 150bhp பவர் & 25kgm டார்க்கையே வெளிப்படுத்துகிறது.

1.5 TSI EVO ACT
1.5 TSI EVO ACT
Volkswagen India

1.5 லிட்டர் TSI EVO இன்ஜினில் Active Cylinder Deactivation தொழில்நுட்பம் இருப்பதால், குறைவான & மிதமான வேகங்களில் செல்லும்போது அதிக மைலேஜை எதிர்பார்க்கலாம். சீரான பவர் டெலிவரிக்குப் பெயர் பெற்ற இந்த 1,498சிசி இன்ஜினுடன், துல்லியமான இயக்கத்துக்குப் புகழ்பெற்ற 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருப்பது செம. ஆனால், இரண்டிலுமே மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லாதது, கார் ஆர்வலர்களுக்கு வருத்தத்தைத் தரலாம். தவிர, அளவில் சிறிதாக இருப்பதால், 1,320 கிலோ எடையுள்ள கரோக்கைவிட, டி-ரோக்கின் எடை கொஞ்சம் குறைவாக இருக்கலாம். இதனால் இதன் பர்ஃபாமன்ஸ் & மைலேஜில் சிறிய மாறுதல் இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.

விலை மற்றும் தீர்ப்பு

கொரோனாவால் நம் நாட்டில் அமலுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்புதான், 19.99 லட்ச ரூபாய் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையில் டி-ரோக் வெளியானது. முதற்கட்டமாக 1,000 கார்களை இந்தியாவுக்காக ஃபோக்ஸ்வாகன் ஒதுக்கியிருந்தது என்றாலும், ஆச்சர்யப்படும் வகையில் 2 மாதங்களுக்குள்ளாகவே அவை முழுவதும் Sold Out ஆகிவிட்டன. அதிரடியான அறிமுக விலையே, இந்த நெருக்கடியான சூழலில் டி-ரோக்குக்குக் கைகொடுத்திருக்கிறது எனத் தெரிகிறது. ஏப்ரலில் டெலிவரி தொடங்கும் எனத் தகவல் வந்த நிலையில், இதன் புக்கிங்கும் முன்பே ஆரம்பித்துவிட்டது தெரிந்ததே. இந்தியா 2.0 திட்டத்தை ஸ்கோடா முன்னின்று நடத்துவதால், ஃபோக்ஸ்வாகனைவிட ப்ரீமியமான பொசிஷனிங் அந்த நிறுவனத்துக்கு தேவைப்பட்டிருக்கிறது.

Digital Instruments
Digital Instruments
Volkswagen India
Karoq - 9 Airbags
Karoq - 9 Airbags
Skoda India

இது, கரோக்கின் அதிக விலையில் தெளிவாக எதிரொலிக்கிறது (24.99 லட்ச ரூபாய், இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை). அந்த 5 லட்ச ரூபாய் விலை உயர்வை நியாயப்படுத்தும் விதமாக சிறப்பம்சங்களின் பட்டியல் நீளமாகவே இருந்தாலும், அது எத்தனை பேரால் ஏற்றுக்கொள்ளமுடியும் என்பது சந்தேகமே. 50,000 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்யலாம் என்றாலும், டெலிவரி குறித்த விவரங்கள் வரவில்லை. இங்கே, டி-ரோக்குக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பை வைத்துப் பார்க்கும்போது, டைகூன் மற்றும் விஷன் IN ஆகியவற்றுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவே தோன்றுகிறது. மேலும், எஸ்யூவிகள் செக்மென்ட்டில் தனக்கிருந்த வெற்றிடத்தை, லேட்டாக வந்தாலும் ஸ்கோடா - ஃபோக்ஸ்வாகன் குழுமம் சிறப்பாகவே நிரப்பத் தொடங்கி இருக்கிறது. CBU முறையில் இந்தியா வந்திருக்கும் டிகுவான் ஆல்-ஸ்பேஸ் அதற்கான உதாரணம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு