Published:Updated:

டெஸ்ட்டிங்கில் டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட்... என்ன எதிர்பார்க்கலாம்?

டியாகோ ஃபேஸ்லிஃப்ட்
டியாகோ ஃபேஸ்லிஃப்ட் ( மோ.வி வாசகர் )

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, எதிர்பார்த்தபடியே காரின் முன்பக்கத்தில் அதிகப்படியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மெலிதான ஹெட்லைட் மற்றும் க்ரில் ஆகியவை அதற்கான உதாரணம்.

`More car per car’ - 1999 ஆம் ஆண்டில் அறிமுகமான இண்டிகாவின் கோட்பாடு இதுதான்! அப்போது தொடங்கி இப்போது வரைக்குமே, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க கார்களை டாடா மோட்டார்ஸ் அளித்துவருகிறது என்று புகழப்படுவதில் உண்மையிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், `காரின் விலை குறைவாக இருந்தால், அதன் தரம் சுமாராக இருக்கும்' என்று பரவலாகச் சொல்லப்படுவதைத் தகர்த்தெறிந்த பெருமை, இந்த நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோரையே சேரும். இண்டிகா மற்றும் இண்டிகோ eCS ஆகிய கார்களுக்கு மாற்றாக வந்த இவை இரண்டுமே, டாடாவுக்குப் புதிய வாடிக்கையாளர்களை ஈட்டித்தந்தன என்பதே உண்மை. மேலும், பட்ஜெட் காராக இருப்பினும், மிட் காம்பேக்ட் கார்களுக்கு இணையான அனுபவத்தை இந்த இரு கார்களும் தந்தன என உறுதியாகச் சொல்லலாம்.

டியாகோ
டியாகோ
மோ.வி வாசகர்

இதனாலேயே காரில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படாமல், டியாகோ மற்றும் டிகோரின் JTP மாடல்கள் பின்னாளில் களமிறக்கப்பட்டன. இதற்கிடையே புதிய போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், அதிக வசதிகளுடன் இவற்றின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவரை 2.5 லட்சத்துக்கும் அதிகமான டியாகோக்கள் விற்பனை ஆகியிருப்பதுடன், அதில் 80% பெட்ரோல் மாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. BS-6 விதிகள் ஏப்ரல் 1, 2020 முதலாகவும், Pedestrian Protection விதிகள் அக்டோபர் 1, 2020 முதலாகவும் நாடெங்கும் அமலுக்கு வரும் சூழலில், டியாகோ மற்றும் டிகோரின் BS-4 மாடல்களுக்கு ரூ.90,000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதன் மேம்படுத்தப்பட்ட BS-6 வெர்ஷனை, நீண்ட நாள்களாக டாடா மோட்டார்ஸ் டெஸ்ட் செய்துவது தெரிந்ததே. இவை இறுதிக்கட்ட டெஸ்ட்டிங்கில் இருந்தபோது அதைப் படம்பிடித்திருக்கிறார், பெருந்துறையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான சி.கே.நந்தகுமார்.

ஃபேஸ்லிஃப்ட்
ஃபேஸ்லிஃப்ட்
மோ.வி வாசகர்

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, எதிர்பார்த்தபடியே காரின் முன்பக்கத்தில் அதிகப்படியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மெலிதான ஹெட்லைட் மற்றும் க்ரில் ஆகியவை அதற்கான உதாரணம். முன்பைவிட பானெட்டின் உயரம் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், ஏர்டேம் மற்றும் பனிவிளக்குகள் கொண்ட பம்பரின் தோற்றத்திலும் மாற்றம் தெரிகிறது. காரின் பக்கவாட்டுப் பகுதியில் எந்த மாற்றங்களும் இருக்காது என்பதுடன், முன்பைப் போலவே Dual Tone ஃபினிஷ் ஆப்ஷன் இங்கும் தொடரலாம். LED டெயில் லைட் மற்றும் பின்பக்க பம்பரின் வடிவமைப்பில் சில மாறுதல் இருக்கும். இந்த டிசைன் மாற்றங்கள், அப்படியே டியாகோ NRG - டிகோர் EV, டியாகோ மற்றும் டிகோரின் JTP மாடல்களிலும் பின்னாளில் செய்யப்படலாம்.

Tiago Facelift
Tiago Facelift
Autocar India
`ஆல்ட்டோ ஏன், லம்போகினிபோல இல்லை' கார் டிசைன்களின் அடிப்படை விஷயங்கள்!

கேபினில் புதிய ஃபேப்ரிக் அப்ஹோல்சரி தவிர, க்விட்டைப் போலவே டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் இடம்பெறும் என்பது ப்ளஸ். இதனுடன் XZ+ வேரியன்ட்டில் இருந்த 15 இன்ச் அலாய் வீல்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ஆப்பிள் & ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி, கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, Knitted ரூஃப் லைனர், டிரைவிங் மோடுகள், பின்பக்க ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை, எலெக்ட்ரிக் மிரர்கள் அப்படியே இதிலும் இடம்பெறும் என்பது ப்ளஸ். காரின் பாதுகாப்புக்கு 2 காற்றுப்பைகள், ABS, EBD, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் / ரிவர்ஸ் கேமரா, சீட்பெல்ட் ரிமைண்டர், ஹை-ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இந்த இரு கார்களின் ப்ரோ ஆக்ஸசரி பேக்கேஜில் இருக்கும் Pop-Up சன்ரூஃப், Magnetic சன்ஷேடு, மூட் லைட்டிங், டிராக்கிங் சிஸ்டம் போன்ற வசதிகளில் சில, இந்தப் புதிய வெர்ஷன்களில் ஸ்டாண்டர்டாக வழங்கப்படலாம்.

Tiago Instrumentation
Tiago Instrumentation
Autocar India
வேகன்-ஆர், கிராண்ட் i10... யூஸ்டு கார் மார்க்கெட்டில் எதற்கு மவுசு?

தற்போதைய டியாகோ மற்றும் டிகோர் கார்களில் இருக்கும் 1.2 லிட்டர் Revotron பெட்ரோல் இன்ஜின் (85bhp பவர்), BS-6 அவதாரத்தில் வரும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, AMT ஆப்ஷனும் வழங்கப்படும். அதற்கேற்ப BS-4 ஆனால் 1.05 லிட்டர் Revotorq டீசல் இன்ஜின் (70bhp பவர்), BS-6 விதிகளுக்கேற்ப அப்டேட் செய்யப்பட மாட்டாது எனத் தகவல் வந்திருக்கிறது. இதனால் வேகன்-ஆர், செலேரியோ, டட்ஸன் கோ, சான்ட்ரோ எனப் போட்டியாளர்களைப் போலவே, BS-6 டியாகோவை பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வாங்க முடியும்! இதுவே எக்ஸென்ட்/Aura, டிசையர், ஆஸ்பயர், அமேஸ் ஆகியவற்றுப் போட்டியாக வரும் டிகோர், டிசையரைப் போலவே பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்; டீசலுக்குப் பதில் CNG ஆப்ஷனுடன் கூடிய மாடல்களை, டாடா மோட்டார்ஸ் கொண்டு வரும் முடிவில் உள்ளது. இதைப் போலவே, இந்த நிறுவனம் விற்பனை செய்யும் போல்ட் மற்றும் ஜெஸ்ட் ஆகிய கார்களின் BS-6 வெர்ஷன்களிலும், டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடைக்காது.

அடுத்த கட்டுரைக்கு