12 புதிய கார்கள், எலெக்ட்ரிக் டியாகோ, சீனா கூட்டணி... டாடாவின் விஷன் 2030 இதுதான்!

12 முதல் 14 புதிய மாடல்களை டாடா மோட்டார்ஸ் புதிதாக கொண்டுவரப்போகிறது. இதில், எலெக்ட்ரிக் கார்களும் அடங்கும்.
இந்த ஆண்டு, டாடா மோட்டார்ஸ் புது யுகத்தில் அடியெடுத்து வைக்கிறது. தன் பழைய புராணங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, 2020-க்குப் பிறகு புது டாடாவாக வரப்போகிறது. இதற்கான முன்னோட்டம்தான், சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஆல்ட்ராஸ். 2020ல் ஆரம்பித்து அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டத்தை 2010ல் இருந்தே டிசைன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

உலகத்தரத்துடன், இந்தியாவில் கட்டுபடியாகும் விலையில் கார்களை வடிவமைக்கவும் கட்டமைக்கவும் 2012-ம் ஆண்டே அட்வான்ஸ் மாடுலர் பிளாட்ஃபார்ம் (AMP) எனும் புதிய பிளாட்ஃபார்மை இந்த நிறுவனம் உருவாக்கத் தொடங்கிவிட்டது. இந்த AMP இப்போது, டாடாவின் முதல் மாடுலர் பிளாட்ஃபார்ம் ALFA ஆக மாறியுள்ளது. ALFA என்றால் Agile, Light, Flexible, Advance என்று அர்த்தம். இந்த ஆல்ஃபா பிளாட்ஃபார்மும், கேரியருக்காக லேண்ட்ரோவரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஒமெகா பிளாட்ஃபார்மும் சேர்ந்துதான், அடுத்த 10 ஆண்டுகளுக்கு வரவிருக்கும் டாடா கார்களுக்கு அடித்தளம்.

ஆல்ட்ராஸ் மீடியா டிரைவின்போது பேசிய டாடா மோட்டார்ஸின் செயல் அதிகாரி கன்ட்டர் புட்செக், "4 ஆண்டுகளில் ஆல்ஃபா மற்றும் ஒமெகா பிளாட்ஃபார்மில் மொத்தம் 12 முதல் 14 கார்களைக் கொண்டுவரும் திட்டம் வைத்திருக்கிறோம்" என்றார். அதன் அடிப்படையில், டாடாவில் என்னென்ன கார்கள் வரப்போகின்றன என்பதைப் பார்ப்போம்.
ALFA
ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் கார்கள், அதிகபட்சம் 3.7 மீட்டர் முதல் 4.3 மீட்டர் நீளத்தில், 2,450 மி.மீ வீல்பேஸ் மற்றும் 1800 மி.மீ அகலத்துடனும் இருக்கும். இதில் ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி என வெவ்வேறான கார்களை வடிவமைக்க முடியும். இந்த பிளாட்ஃபார்ம், 90 சதவிகிதம் தானியங்கி (ரோபோ) மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனால், பில்டு குவாலிட்டி துல்லியமாக இருக்கும்.

தற்போது, டாடாவிடம் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே கார் மாடல்கள் இருக்கின்றன. இந்த நிறுவனத்தின் பிளான், இன்னும் 10 ஆண்டுகளில் 90 சதவிகித கார் சந்தையைக் கவர் செய்ய வேண்டும் என்பதே. இதுவரை நாங்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இந்த கார்கள் வரப்போகின்றன என்பதை சொல்ல முடியும்.
டாடா மோட்டார்ஸில் முதலில் வரப்போகும் கார்கள் H2X/ஹார்ன்பில் மற்றும் நெக்ஸானின் அடுத்த தலைமுறை மாடல். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட செடான் மாடல் ஒன்று ஹோண்டா சிட்டியின் செக்மென்ட்டில் வரப்போகிறது. இந்த செடானை அடிப்படையாகக் கொண்ட காம்பாக்ட் செடான் ஒன்றும் திட்டத்தில் இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக ஒரு காரை டாடா களமிறக்க, சீன நிறுவனமான செரியுடன் (Chery) பேச்சு வார்த்தையில் இருக்கிறது. இந்த கார், ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் கட்டமைக்க முடியாத அளவு பெரியது. ஹேரியரின் ஒமெகா பிளாட்ஃபார்மில் தயாரிக்க இது சிறியது. இதனால், சீனாவில் JLR நிறுவனத்தின் பார்ட்னராக இருக்கும் செரி (Chery) நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். மேலே சொன்ன 5 கார்களையும், அடுத்த 5 ஆண்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறது இந்நிறுவனம்.

2026ல் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், எர்டிகா செக்மென்ட் எம்பிவி மற்றும் வேகன் ஆர், சான்ட்ரோ மாடல்களுக்குப் போட்டியாக ஒரு காம்பாக்ட் ஹேட்ச்பேக் திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு சேர்த்து, அடுத்த தலைமுறை டியாகோ மற்றும் டிகார் மாடல்களும் அதன் எலெக்ரிக் வெர்ஷன்களும் வரப்போகின்றன. ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் என எல்லாவிதமான பவர் ட்ரெயின் ஆப்ஷன்களும் கொடுக்க முடியும். இந்த பிளாட்ஃபார்மில் வரும் கார்களுக்காக DCT கியர்பாக்ஸ் ஒன்றையும் உருவாக்கிவருகிறார்கள்.

OMEGA
ஆல்ஃபா அளவுக்கு ஒமெகா பிளாட்ஃபார்ம் இளக்கமானது கிடையாது. இதில், மூன்று கார்கள் மட்டுமே வரவிருக்கின்றன. ஹேரியரின் 7 சீட் வெர்ஷன் கிராவிடாஸ், ஹெக்ஸாவுக்குப் பதிலாக கூபே போன்ற ரூஃப் கொண்ட எஸ்யூவி, இனோவா போன்ற ஒரு எம்பிவி ஆகிய மாடல்கள் வரப்போகின்றன. ஒமெகா பிளாட்ஃபார்ம் கார்களுக்காக டாடாவிடம் தற்போது 2.0 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின் மட்டுமே இருக்கிறது. விலை மற்றும் அதிக திறனுக்காக 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை இவர்கள் டிசைன் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஒமெகா பிளாட்ஃபார்ம் திடமானது என்றாலும், டாடா இதில் அதிக கார்களைக் கொண்டுவரப்போவதில்லை. காரணம், ஆல்ஃபா பிளாட்ஃபார்ம் பயன்படுத்தும்போது, கார்களின் விலையைக் கட்டுப்படுத்தமுடியும். இந்த பிளாட்ஃபார்மை 15 கட்டங்களாகப் பிரித்து, அனைத்து கார்களிலும் பொதுவான பாகங்களைப் பயன்படுத்தும்படி டிசைன் செய்திருக்கிறார்கள். இதற்காக, உதிரிப்பாக சப்ளையை சீராக்கியிருக்கிறது இந்நிறுவனம். 600-க்கு அதிகமாக இருந்த உதிரிப் பாக சப்ளையர்களைக் குறைத்து, 300 என்ற நிலையில் தற்போது நிறுத்தியுள்ளது. இதனால், டாடாவின் ஸ்பேர்களுக்கு டிமாண்டு ஏற்படும் என்றாலும், தரத்தை இவர்கள் எதிர்பார்க்கும் அளவிலேயே கொடுக்கமுடியும்.
நானோ சிறியதுதான். ஆனால், டாடாவின் கனவு பெரியது. இப்போது இன்னொரு பெரிய கனவோடு களமிறங்கியிருக்கிறது. பாதுகாப்பான, திடமான, எல்லோருக்குமான காராக புதிய மாடல்கள் இருக்குமா? உங்கள் கருத்து என்ன...