Published:Updated:

BS-6 டூ-வீலர்கள் - விலை அதிகமாக இருக்க என்ன காரணம்?! #BS6_Bikes

BS-6 டூவீலர்கள்
BS-6 டூவீலர்கள் ( Autocar India )

முந்தைய BS-4 விதிகளைவிட BS-6 விதிகளில் ஒட்டுமொத்தமாகவே குறைவான காற்று மாசுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சராசரியாக BS-4 மாடல்களைவிட BS-6 டூவீலர்கள் 10-15% அதிக விலையில் வெளியாகியுள்ளன.

கடந்த மூன்று மாதங்களில், வரிசையாகப் புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட டூவீலர்களின் அறிமுகங்களைப் பார்க்கிறோம். அவை முந்தைய BS-4 மாடல்களைவிடக் குறைவான பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்துவதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக BS-3ல் இருந்து BS-4க்கு இந்தியா மாறியபோது, இந்தளவுக்குப் பெரிய மாற்றம் நடக்கவில்லையே என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், BS-6ல் இன்ஜின்கள் வெளியிடும் புகையின் மாசு அளவுகளில் அதிகக் கட்டுப்பாடு இருப்பதால், 100சிசி டூவீலர்களில்கூட, தற்போது கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் எக்ஸாஸ்ட்டின் உள்ளே இருக்கக்கூடிய Catalytic Converter அமைப்பில் இடம்பெறக்கூடிய தாதுக்களின் அளவும் முன்பைவிடக் கணிசமாக அதிகரித்திருக்கிறது. நிலைமை ஒருபுறம் இப்படி இருந்தாலும், மறுபுறத்தில் ஹோண்டா மூன்று லட்சத்துக்கும் அதிகமான BS-6 டூவீலர்களை (ஆக்டிவா 125, டியோ, SP125, ஆக்டிவா 6G, ஷைன், யூனிகார்ன்) இந்தியாவில் ஏற்கெனவே விற்பனை செய்துவிட்டது!

இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம்?

SP 125 Engine
SP 125 Engine
Autocar India

பொதுவாகவே 100-125சிசி இன்ஜின்கள் அதிக மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்பைக் கருத்தில்கொண்டு கட்டமைக்கப்படுவது தெரிந்ததே. இருப்பினும் முந்தைய BS-4 விதிகளைவிட BS-6 விதிகளில் ஒட்டுமொத்தமாகவே குறைவான காற்று மாசுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலைப் பொறுத்தவரை, வாகனங்கள் வெளியிடும் புகையில் இருக்கக்கூடிய NOx-ன் அளவு 25% (0.06g/km) குறைந்திருக்கிறது. இதனால்தான் சிம்பிளான மற்றும் விலைகுறைவான கார்புரேட்டருக்குப் பதில், துல்லியமான ஆனால், விலை அதிகமான ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனுடன் இருக்கக்கூடிய இன்ஜெக்‌டர், ஃப்யூல் பம்ப், ECU, OBD-II, Catalytic Converter ஆகியவற்றின் விலையைக் கணக்கில் கொண்டால், சராசரியாக BS-4 மாடல்களைவிட BS-6 வெர்ஷன் 10-15% அதிக விலையில் வெளியாகியுள்ளன. முன்பைவிட Catalytic Converter அளவில் பெரிதாகி இருப்பதால், ஏற்கெனவே Fi சிஸ்டம் கொண்ட சில 150-160சிசி பைக்குகளின் (FZ, ஜிக்ஸர், அப்பாச்சி) விலைகூட கொஞ்சம் உயர்ந்திருக்கின்றன.

கார்புரேட்டர்களுக்கு எண்ட் கார்டு போட்டாச்சா?

SP 125 Exhaust Pipe
SP 125 Exhaust Pipe
Autocar India

BS-6 விதிகளுக்கு ஏற்ப தமது தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கு, ஹீரோ - ராயல் என்ஃபீல்டு - மஹிந்திரா போன்ற இந்திய நிறுவனங்களும், ஹோண்டா - யமஹா - சுஸூகி போன்ற ஜப்பானிய நிறுவனங்களும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தையே தேர்வு செய்துள்ளன. உலகளவில் இதற்கு மாற்றாக E-Carb எனப்படும் எலெக்ட்ரானிக் கார்புரேட்டர் அமலில் உள்ளது. இதைத் தனது CT 100/110 மற்றும் பிளாட்டினா 100/110 ஆகிய பைக்குகளின் BS-6 வெர்ஷனில் பஜாஜ் நிறுவனம் சேர்த்திருந்தது. இதனால் வழக்கமான கார்புரேட்டர் கொண்ட பைக்குகளில் இருக்கக்கூடிய ஆட்டோமேட்டிக் Chock மற்றும் பெட்ரோல் Tap ஆகியவை இங்கே இடம்பெற்றிருந்தன! மேலும் எலெக்ட்ரானிக் கார்புரேட்டரை, தனது 125சிசி-க்குட்பட்ட டூவீலர்களில் பொருத்தும் பணிகளில் டிவிஎஸ் இருப்பதாகத் தெரிகிறது. இந்த E-Carbல் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் போலவே Oxygen சென்சார் மற்றும் OBD-II இருந்தாலும், அது Fi சிஸ்டம் அளவுக்குத் துல்லியமாக இருக்காது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் எலெக்ட்ரானிக் கார்புரேட்டரின் விலை குறைவு என்பதுடன், அதன் பராமரிப்பும் எளிது என்பது கவனிக்கத்தக்கது. இதன் செயல்பாடு பற்றி, மக்கள்தான் சொல்ல வேண்டும்.

இன்ஜினின் பவர் மற்றும் டார்க் சரிவது ஏன்?

200சிசிக்கும் அதிகமான டூவீலர்களைத் தவிர்த்து, கிட்டத்தட்ட BS-6 விதிகளுக்கு அப்கிரேடாகி வந்திருக்கும் அனைத்து டூவீலர்களும், அதன் BS-4 வெர்ஷன்களைவிடக் குறைவான பவர் மற்றும் டார்க்கையே வெளிப்படுத்துகின்றன. இதற்கு டூவீலர் உற்பத்தியாளர்கள், விலை மற்றும் பர்ஃபாமன்ஸ் ஆகியவற்றில் சமநிலையைக் கடைப்பிடிப்பதே காரணம். அதாவது முன்பைவிட அதிக செயல்திறன் கிடைக்க வேண்டுமென்றால், அது வெளிப்படுத்தும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், முன்பிருந்ததைவிட எக்ஸாஸ்ட்டில் இருக்கக்கூடிய Catalytic Converter-ன் அளவைப் பெரிதாக்க வேண்டும். இது பவர்ஃபுல் மற்றும் விலை அதிகமான பைக்குகளில் ஒரு பொருட்டல்ல.

Bajaj BS-6
Bajaj BS-6
Autocar India

என்றாலும் விலை குறைவான கம்யூட்டர் வகை வாகனங்களில், பர்ஃபாமன்ஸைவிட மைலேஜுக்கே அதிக தேவை இருக்கிறது. இதனால் இன்ஜினுக்குள்ளே செல்லும் Fuel Air Mixture, ஏறக்குறைய Stochiometric Ratio எனப்படும் 14.7:1 விகிதத்தில் அமைக்கப்பட்டன. மேலும் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த இன்ஜின்களை (சுஸூகி, டிவிஎஸ், ராயல் என்ஃபீல்டு, பஜாஜ்) BS-4ல் இருந்து BS-6க்கு மாற்றியதில், Catalytic Converter-ன் அளவைத் தவிர, பவர் மற்றும் டார்க்கும் ஒருசேரக் குறைந்தன; கூடுதல் பாகங்கள் இடம்பெற்றதன் விளைவாக, முன்பைவிட டூவீலர்களின் எடையும் விலையும் அதிகரித்தன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து, டூ-வீலரின் ஓட்டுதலில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், சில சந்தர்ப்பங்களில், எக்ஸாஸ்ட் ஏற்படுத்தக்கூடிய Back Pressure மற்றும் இன்ஜின் கூடுதலாகச் சுமக்கக்கூடிய எலெக்ட்ரிக் அம்சங்கள் ஆகியவைதாம், பவர் மற்றும் டார்க் குறைபாட்டுக்குக்கான மூல காரணம். கார்புரேட்டரை விடத் துல்லியமாக இயங்கும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - இன்ஜினின் ஆக்ஸிலரேஷனைச் சீர்படுத்துவதுடன், அதிக மைலேஜுக்கும் வழிவகை செய்கிறது. தவிர BS-4 விட அதிக Compression Ratio-வில் இயங்கக்கூடிய BS-6 இன்ஜின்கள், சிறப்பான Combustion-க்கும் குறைவான மாசுக்கும் துணைநிற்கின்றன. இதனால் நெரிசல்மிக்க நகர்ப்புறச் சாலைகளுக்குத் தேவையான தொடக்கக் கட்ட மற்றும் மிட் ரேஞ்ச் வேகங்களில், இன்ஜினின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருக்கும்படி (சுமார் 5-10% வளர்ச்சி) டியூனிங் செய்யப்படுவதே உண்மை.

Burgman Street 125
Burgman Street 125
Suzuki Motorcycles

மேலும் ஆக்ஸிலரேட்டரில் காட்டப்படும் பலத்தைப் பொறுத்து, கச்சிதமான அளவில் எரிபொருள் இன்ஜினுக்கு அனுப்பப்படுவதால், முன்பைவிட இங்கே மைலேஜில் முன்னேற்றம் (10-15%) தெரிவதே நிதர்சனம். இதனால் இன்ஜின் ஸ்மூத்னெஸ் அதிகரிப்பது ப்ளஸ் என்றாலும், பவர் டெலிவரியில் தெரியக்கூடிய Rawness காணாமல் போய்விடுவது மைனஸ்தான். இதுபோன்ற பிரச்னைகள் ஏதும் எழக்கூடாது என்பதால், முற்றிலும் புதிய இன்ஜின்களைத் தமது BS-6 டூவீலர்களில் ஹீரோ, ஹோண்டா, யமஹா, ஏப்ரிலியா போன்ற வாகனத் தயாரிப்பாளர்கள் அறிமுகப்படுத்தினர். இதில் சில தயாரிப்புகள், புதிய மற்றும் எடை குறைவான ஃபிரேம்களைத் தன்வசப்படுத்தி இருந்தன.

இந்தியாவில் பிரீமியம் பைக்குகளின் எதிர்காலம் எப்படி?

Kawasaki Z900
Kawasaki Z900
Kawasaki India

Euro Emission Norms-யைப் பின்பற்றித்தான், நமது நாட்டில் உள்ள பாரத் ஸ்டேஜ் மாசு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே Euro 4 விதிகளில் என்ன இருக்கிறதோ, BS-4 உத்தேசமாக அதே மாதிரிதான் கட்டமைக்கப்பட்டிருந்தது. இதனால் டூ-வீலர்களில் Euro 5தான், BS-6 ஆக உருமாறியிருக்கிறது. இந்தியா முழுவதும் ஏப்ரல் 1, 2020 முதலாக, BS-6 மாசு விதிகள் அமலுக்கு வருவது தெரிந்ததே. உலகளவில் ஜனவரி 1, 2020-க்குப் பிறகு அறிமுகமாகும் புதிய டூ-வீலர்கள், Euro-5 படி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் டூவீலர்களை Euro-5க்கு மாற்ற, இன்னும் ஒரு ஆண்டுக்காலம் காலக்கேடு வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் பிரிமியம் பைக்குகளுக்கான சந்தை மதிப்பு பெரியளவில் இல்லாவிட்டாலும், அது அடுத்தடுத்த ஆண்டுகளில் வளர்வதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது.

எனவே, சர்வதேச டூ-வீலர் உற்பத்தியாளர்கள், தமது தயாரிப்புகளை இந்தியாவுக்காக முன்கூட்டியே மேம்படுத்தி, அதை இங்கே கொண்டு வருவார்களா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. ஆனால், அதைப் பொய்யாக்கும் விதத்தில், சுஸூகி - கவாஸாகி - ஹோண்டா ஆகியோர் தங்கள் வாகனங்களை முன்னேற்றிக் களமிறக்கியுள்ளார்கள்.

Suzuki V-Strom 650XT
Suzuki V-Strom 650XT
Autocar India

மேலும், பொதுவாகவே ஹார்லி டேவிட்சன், கவாஸாகி, பெனெல்லி, பிஎம்டபிள்யூ, ட்ரையம்ப், டுகாட்டி, ஹோண்டா, யமஹா, சுஸூகி போன்ற உலகளாவிய நிறுவனங்களின் பிரிமியம் தயாரிப்புகளில், ஏற்கெனவே ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம்தான் இருக்கிறது. தவிர, இவற்றில் இருக்கக்கூடிய எலெக்ட்ரானிக்ஸ் அமைப்பும் Advanced ரகம்தான். எனவே இன்ஜினின் இன்டேக் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியமைப்பதன் வாயிலாகவே, Euro-5க்கு பைக்கை மாற்றிவிடலாம் எனத் தோன்றுகிறது.

பழைய டூ-வீலர்களில் BS-6 பெட்ரோல் போட்டால் என்ன நடக்கும்?

Kawasaki Ninja 650
Kawasaki Ninja 650
Kawasaki India

BS-6 பெட்ரோலை எரியூட்டுவதால் வெளியாகும் CO, HC ஆகியவை, BS-4 பெட்ரோலுக்குச் சமமாகவே இருக்கின்றன. ஆனால், NOx மற்றும் PM அளவுகளில் மாற்றம் தெரிகிறது. மேலும் BS-6 பெட்ரோலில் இருக்கக்கூடிய Sulphur-ன் அளவு (10ppm), BS-4 பெட்ரோலைவிட மிகவும் குறைவு (50ppm). தவிர BS-4 பெட்ரோல் போலவே, BS-6 பெட்ரோலும் 91 Octane Rating-யையே கொண்டிருக்கிறது. BS-6 பெட்ரோல் போலவே, இன்ஜின் ஆயிலிலும் அதற்கேற்றபடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே BS-6 டூவீலர்களில் BS-4 பெட்ரோலைப் போடும்போது, அது Catalytic Converter அமைப்பில் அதிக மாசுப் பொருள்கள் சேர்வதற்கு வழிவகுக்கும். மேலும் எதிர்பார்த்த பர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ் கிடைக்காமல் போகலாம். இன்ஜினும் கொஞ்சம் Rough ஆக இயங்குவது போலத் தோன்றும். ஆனால் இதை நிச்சயம் எல்லாராலும் உணர முடியாது.

இதுவே மற்றபடி பழைய டூ-வீலர்களில் புதிய BS-6 பெட்ரோலைப் பயன்படுத்தும்போது, ஆரம்பத்தில் இன்ஜின் கொஞ்சம் ஸ்மூத்தாகவும் சத்தம் குறைவாகவும் இயங்குவது போலத் தெரியும். புதிய இன்ஜின் ஆயில்களின் மசகுத்தன்மையில் (Viscosity), கணிசமான மாற்றம் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் இன்ஜின் பாகங்கள் அதிக வெப்ப நிலையிலும் தொடர்ச்சியாகத் திறம்பட இயங்குவதற்கு, BS-4 பெட்ரோலில் இருக்கக்கூடிய அதிக Sulphur நேரடியாக உதவி செய்கிறது.

Platina H-Gear BS-6
Platina H-Gear BS-6
Bajaj Auto

எனவே நாளடைவில் பழைய டூ-வீலரின் மைலேஜ் மற்றும் பர்ஃபாமன்ஸில் கணிசமான மாறுதல் தெரியத் தொடங்கும். இதன் தொடர்ச்சியாக, BS-6 பெட்ரோலில் ஓடும் பழைய இன்ஜின்கள், Premature Wear வாயிலாகத் தமது செயல்திறனை இழக்கக்கூடியச் சூழலுக்குத் தள்ளப்படுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது. இவை எல்லாம் உடனடியாக நடக்காது என்பது மட்டும் உறுதி!

அடுத்த கட்டுரைக்கு