Election bannerElection banner
Published:Updated:

சம்மரில் வாகனங்கள் மக்கர் பண்ணாதிருக்க, இந்த 6 செக்கிங் அவசியம் பாஸ்! #CarCare

Car Underbody
Car Underbody ( Autocar India )

டிராஃபிக் நெரிசல் மட்டுமல்லாது, கத்திரி வெயிலும் வாகனங்களின் டெம்ப்ரேச்சரை உயர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே, இது வாடிக்கை ஆகிவிட்டால், வாகனம் தனது ஆயுளையும் பொலிவையும் இழக்கத் தொடங்கிவிடும் என்பதே நிதர்சனம்.

கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதனால், டூவீலர், கார்களைப் பயன்படுத்துபவர்கள் அதிகமாகி வருகின்றனர்.

சம்மர் என்றாலே சூடுதான்... சூரியனும் அதன் வெப்பமும் எப்படி நம்மை சோர்வாக்குகின்றனவோ, அதேபோல அவை நம் வாகனங்களையும் டயர்டு ஆக்கிவிடும். டிராஃபிக் நெரிசல் மட்டுமல்லாது, கத்திரி வெயிலும் வாகனங்களின் டெம்ப்ரேச்சரை உயர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே, இது வாடிக்கை ஆகிவிட்டால், வாகனம் தனது ஆயுளையும் பொலிவையும் இழக்கத் தொடங்கிவிடும் என்பதே நிதர்சனம். நாம் எப்படி அவ்வப்போது நீர் ஆகாரங்களைச் சாப்பிட்டு உடல் சூட்டினைத் தணித்துக்கொள்கிறோமோ, அதேபோல வெயிலின் தாக்கத்திலிருந்து வாகனங்களைக் காப்பாற்றுவது எப்படி எனப் பார்க்கலாம்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை சரியான பிறகு, நின்ற வாகனங்கள் வரிசையாக சர்வீஸ் சென்டருக்குப் படையெடுக்கக்கூடும். எனவே அதிகப்படியான வாகன வரத்தால், சர்வீஸ் சென்டர்கள் அதனைச் சரியாகப் பழுதுபார்க்க முடியாத சூழலே ஏற்படும். எனவே சில விஷயங்களை, அருகில் இருக்கும் மெக்கானிக்கின் உதவியுடன் தெரிந்துகொள்ளவும் செய்யவும் ஏதுவாக இருப்பதை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

கொரோனாவால் உங்கள் வாகனத்தின் ஆயுள் குறையாமல் இருக்க, சில டிப்ஸ்!

1. டயர் காற்றழுத்தம்

Tyre Pressure
Tyre Pressure
Autocar India

மனிதனுக்குக் கால்கள் எப்படியோ, வாகனங்களுக்கு டயர் அப்படி. கண் பார்வையிலிருந்து விலகியே இருப்பதால் என்னவோ, அதிகம் கண்டுகொள்ளாத அம்சமாக இது இருக்கிறது. வாகனத்தில் பெட்ரோல்/டீசல் போடும்போதுதான், டயரில் காற்றடிக்க வேண்டும் என்பதே பலரின் நினைவுக்கு வரும். எத்தனை பேருக்குத் தங்கள் வாகனத்தின் காற்றழுத்தம் தெரியும்? இந்த அலட்சியத்தால், சம்மரில் டயர் விரைவாகவே தமது வாழ்நாளில் சரிவைக் கண்டுவிடும்.

உங்கள் வாகனத்தில் இருக்கும் டயர் Soft Compound வகையைச் சேர்ந்தது என்றால், சரியான காற்றழுத்தம் இல்லாவிட்டால் அதன் Sidewall பகுதி சேதமாகிவிடும். வெயிலால் தகதகவென இருக்கும் சாலையில் செல்ல நேரிட்டால், சில சந்தர்ப்பங்களில் டயர் வெடிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது (கரடுமுரடான நிலப்பரப்பிலும்தான்). போதுமான காற்று இல்லாததால், டயரின் Sidewall அதிக அழுத்தத்தைச் சந்திக்க நேரிடும். இதனால் டயரின் ரப்பர் தனது உறுதித்தன்மையை இழக்கத் தொடங்கும். ஏற்கெனவே டயரில் வெடிப்பு/விரிசல் இருந்தால், அது இந்தச் சமயத்தில் அதிகமாகிவிடும். எனவே இந்த வெயில் காலத்தில், வழக்கத்தைவிட 3-5Psi அளவு அதிக காற்றை டயரில் செலுத்துவது நலம். ஆனால் இது ரொம்பவும் அதிகமாகிவிட்டால், டயருடன் இணைந்திருக்கும் சஸ்பென்ஷன் - பிரேக்ஸ் - ஸ்டீயரிங் ஆகியவற்றின் ஃபீட்பேக் மற்றும் கண்டிஷனில் பாதிப்பு ஏற்படும். தவிர ஓட்டுதல் தரத்திலும் ஒரு இறுக்கம் தெரியும்.

சுற்றுச்சூழலின் தட்பவெப்பநிலை அதிகரிக்கும்போது, அது டயருக்குள்ளே இருக்கும் காற்றை நேரடியாகப் பாதிக்கிறது. அதனால் வாகனத்தை ஓட்டும்போது, அந்தக் காற்று Expansion மோடுக்குச் சென்றுவிடும். இதனால் டயரின் வெப்பநிலையும் தேய்மானமும் கணிசமாக அதிகரிக்கும். இதனைத் தவிர்க்கவே, நைட்ரஜன் வாயுவை டயர்களில் பரவலாக நிரப்பத் தொடங்கிவிட்டார்கள். பொதுவாகவே அதிகாலை அல்லது இரவு நேரங்களில் டயருக்குக் காற்றடிப்பது நலம். வெளியே வெப்பம் அதிகமாக இருந்தால், காற்றழுத்தத்தில் மாறுதல் ஏற்படும். குறைந்தது ஒரு வாரத்துக்கு ஒருமுறையாவது டயர் காற்றழுத்தத்தை செக் செய்ய மறக்கவேண்டாம்.

Tyre Thread
Tyre Thread
Autocar India

சாலையின் தன்மை மற்றும் வாகனத்தில் ஏற்றப்போகும் எடையைப் பொறுத்து, டயரில் அடிக்கும் காற்றின் அளவு மாறுபடும். எனவே ஃபுல் லோடில் வாகனத்தை இயக்கப்போகிறீர்கள் என்றால், வழக்கமாக அடிக்கும் அளவைவிட 10% அதிக காற்றழுத்தத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். ஒருவேளை பில்லியன் இல்லாமல் நீங்கள் மட்டுமே வாகனத்தைப் பயணிப்பீர் என்றால், காற்றழுத்தத்தை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளவேண்டும். இது கேட்க சிறிய விஷயமாகத் தெரிந்தாலும், இதுதான் வாகனத்தின் ரோடு க்ரிப் மற்றும் பிரேக்கிங் Distance-யைத் தீர்மானிக்கிறது. முக்கியமாக, ஸ்பேர் வீலிலும் கச்சிதமான காற்றழுத்தத்தை மெயின்டெயின் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் டீலர்களிடம் வீல் அலைன்மென்ட் - வீல் பேலன்ஸிங் ஆகியவற்றைச் செய்யலாம்.

2. ரேடியேட்டர் & கூலன்ட்

Additive
Additive
Autocar India

நமக்குப் போதுமான இடைவெளியில் எப்படி நீர் தேவையோ, அதேபோல வாகனங்களில் இருக்கும் கூலன்ட் சரியான அளவில் இருக்கவேண்டும். கார்களுக்கும் லிக்விட் கூல்டு இன்ஜின்கள் கொண்ட பைக்குகளுக்கும் இது பொருந்தும். இந்த சம்மரைச் சமாளிக்க, வாகனங்களில் ஆபத்பாந்தவனாக இருப்பவை தரமான கூலன்ட்தான். வெயில் காலத்தில் பெரும்பான்மையான வாகனங்கள் பிரேக் டவுன் ஆகி நிற்பதற்கு, குறைவான அளவில் கூலன்ட் இருப்பதே ஆகும். இதனால் இன்ஜின் வழக்கத்தைவிட அதிகமாகச் சூடாகி, தனது இயக்கத்தை நிறுத்துவிடும். எனவே கூலன்ட் அளவை செக் செய்யும்போது, ரேடியேட்டரின் கண்டிஷனையும் சரிபார்க்கவும். ஏனெனில் உங்கள் வாகனத்தின் வயது 3 வருடத்தைத் தாண்டியிருந்தால், ரேடியேட்டர் லீக் ஆவதற்கான சாத்தியம் அதிகம் (சீரற்ற ஃபேன், துருப்பிரச்னை ஆகியவை உதாரணம்). பலவகையான கூலன்ட்கள் இருப்பதால், உங்கள் வாகனத்துக்கேற்ற தரமான கூலன்ட்டை வாங்கிப் பயன்படுத்தவும்.

3. ஆயில்கள் & திரவம்

Engine Block
Engine Block
Autocar India

எரிபொருளையே ஆவியாக்கிவிடும் திறன் வெயிலுக்கு உண்டு. அத்தகைய தன்மைகொண்ட வெப்பம், இன்ஜினுக்குள் இருக்கும் ஆயிலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உங்கள் வாகனத்தில் இருக்கும் ஆயில் பழையது அல்லது டாப்-அப் செய்யப்பட்டதாக இருந்தால், தொடர்ச்சியாக இன்ஜினை இயக்கும்போது ஏற்படும் சேதம் மற்றும் உராய்வு முன்பைவிட அதிகமாக இருக்கும். எனவே குறிப்பிட்ட இடைவெளியில், சரியான கிரேடு ஆயிலைக் கச்சிதமான அளவில் மாற்றிவிடவும். நம் நாட்டில் அதிகமாக விற்பனையாகும் ஹீரோ மற்றும் ஹோண்டா டூவீலர்களில், 10W30 கிரேடு கொண்ட மினரல் இன்ஜின் ஆயில் பயன்படுத்தப்படுகிறது.

எனவே இந்த வெயில் காலத்தில், இதற்குப் பதிலாக இன்ஜின் சிசிக்கேற்ப செமி சிந்தடிக் 10W30 கிரேடு இன்ஜின் ஆயில் அல்லது 10W40 கிரேடு மினரல்/செமி சிந்தடிக் இன்ஜின் ஆயில்களைப் பயன்படுத்தலாம். பழைய இன்ஜினாக இருக்கும்பட்சத்தில், புதிய ஆயிலை ஊற்றும் முன்பு ஆயில் ஃப்ளஷ் உபயோகப்படுத்தலாம். இது இன்ஜினுக்குள்ளே இருக்கும் அழுக்கை, பழைய ஆயிலுடன் அப்படியே வெளியே கொண்டுவந்துவிடும். ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை, பலர் கியர் ஆயிலைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. எனவே அதையும் கருத்தில் கொள்வது நலம். கார்களில் பவர் ஸ்டீயரிங் - பிரேக் - கியர்பாக்ஸ் ஆகியவற்றின் ஆயில் மற்றும் வைப்பர் திரவம் ஆகியவை சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

4. ரப்பர் பாகங்கள்

சம்மர் டிப்ஸ்
சம்மர் டிப்ஸ்
விகடன்

ஒவ்வொரு பாகத்துக்கும் ஓர் ஆயுட்காலம் இருக்கும். எனவே போதிய இடைவெளியில் அதை மாற்றிவிடுவது, நிச்சயம் நன்மை பயக்கும். ரப்பரால் ஆன ஹோஸ் - பெல்ட் - பீடிங் ஆகியவற்றுக்கு இந்த கண்டிஷன் பொருந்தும். உச்ச வெப்பநிலையை எட்டும்போது, இவை தமது நிலைத்தன்மையை இழந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், காலப்போக்கில் ரப்பர் என்பது இறுகும் திறனையே கொண்டிருக்கிறது. வாகனத்தின் இன்ஜின் பகுதியில் இவை அதிகமாக இருக்கும் (கூலன்ட், டர்போ, ஃபேன், பிரேக், மவுன்ட், கதவு, வைப்பர்). இந்த ஹோஸ்களை இணைக்கும் க்ளிப்/க்ளாம்ப் மற்றும் சிறிய ஆணிகள் நல்ல நிலையில் இருப்பதும் அவசியம். இன்ஜின் அதிர்வுகள் காருக்குள்ளே இருப்பவர்களுக்கு வராமல் இருக்க, நிறைய ரப்பர் பாகங்களை காரில் பார்க்கமுடியும். இவை சரியாக இல்லாவிட்டால், வாகனத்தின் இயக்கத்தில் ஒரு சுணக்கம் தெரியும்.

தவிர கதவுகள் மற்றும் பானெட்டுக்கு அடியே இருக்கும் பீடிங், தொள தொளவென இல்லாமல் கட்டுறுதியுடன் இருத்தல் அவசியம். இல்லாவிட்டால் வெளிச்சத்தம் காருக்குள்ளே கேட்பது அதிகமாக இருக்கும். உங்கள் வாகனத்தில் இன்சுலேஷன் டேப் சுற்றப்பட்ட வயரிங் அதிகமாக இருந்தால், முடிந்தமட்டும் இதைப் புதிதாக மாற்றிவிடுவது நல்லது. வயரின் தரம் சரியாக இல்லாவிட்டால், வெயிலால் தீப்பிடிக்கக்கூட சாத்தியம் இருக்கிறது.

5.பேட்டரி

Battery Removal
Battery Removal
Autocar India

தொடர்ச்சியாக அதிக வெப்பத்தில் இருக்கும்போது, பேட்டரிக்குள்ளே இருக்கும் அமிலத்தின் அளவு குறையத் தொடங்கும். இதனால் சில நேரங்களில் ரசாயன மாற்றம் விரைவாக நடந்து, பேட்டரி ஓவர் சார்ஜ் ஆகி அதன் திறனை சீக்கிரமே இழந்துவிடும். ஆனால் இதற்கு வேறுசில காரணங்களும் உண்டு (Alternator - Capacitor - Rectifier). எனவே, பேட்டரி Terminal-கள் துரு/அழுக்கு இல்லாமல் சுத்தமாக இருத்தல் அவசியம். க்ரீஸ் வைப்பது இதற்கான முடிவாக இருக்கும். மேலும், கேபிள் கனெக்‌ஷன் எல்லாம் டைட்டாக இருக்கவேண்டும்.

லேட்டஸ்ட் வாகனங்களில் VRLA (Valve Regulated Lead Acid) அல்லது MF (Maintanence Free) வகை பேட்டரிகள் இருப்பதால், பேட்டரி பராமரிப்பு குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். ஒருவேளை உங்கள் வாகனத்தில் இன்னுமே Distilled Water ஊற்றக்கூடிய பேட்டரியாக இருந்தால், வெயில் காலத்தில் வழக்கத்தைவிட அதிக இடைவெளியில் டாப் அப் செய்யவேண்டும். பேட்டரியின் ஆயுளைக் கூட்ட ஏதுவாக, வாகனத்தின் எலெக்ட்ரிக்கல் அமைப்பில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்தாலே போதும் (புதிய ஆக்ஸசரீகள்). மேலும் தேவை இல்லாமல் ஹாரன் - லைட்டிங் - வைப்பர் - மியூசிக் சிஸ்டம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

6. பாடி மற்றும் கேபின்

Car Exterior
Car Exterior

வெயில் - பெயின்ட்... இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. அதாவது தொடர்ச்சியாக வெயிலில் நிற்கும் காரைப் பார்த்தால், அதன் கலர் வாகனம் முழுக்க ஒரே தரத்தில் இருக்காது. ஆங்காங்கே வெளுத்துப் போயிருப்பதற்கான தடங்கள் தெரியும். இதைத் தவிர்ப்பதற்காகவே, வழக்கமான Wax Coating தொடங்கி ப்ரீமியமான Ceramic Coating வரை எல்லாமே புழக்கத்துக்கு வந்துவிட்டன. இவற்றின் விலை அதிகம் என்றாலும், 5 வருடங்கள் வரை காரின் தோற்றம் ஃப்ரெஷ்ஷாகத் தெரிவதற்கு இவை உத்தரவாதம் தருகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பறவைகளின் எச்சம் - இலை/குச்சி - தூசு/மண் ஆகியவை காரில் படரும்போது, அவை வெளிப்புறத்தில் கீறல்களை ஏற்படுத்தும். கேபினைப் பொறுத்தவரை, பீஜ் நிற பிளாஸ்டிக்ஸ் மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்சரி அழுக்காகும் என்றால், கறுப்பு நிற பிளாஸ்டிக்ஸ் மற்றும் லெதர் அப்ஹோல்சரி நிறம் மாறும் குணாதிசயத்தைப் பெற்றுள்ளன. எனவே இதற்கெனக் கிடைக்கும் பாலிஷ் பயன்படுத்தினால், கேபினின் வயது அப்படியே இருக்கும். கொரோனா, பலரைக் காற்றின் தரம் மற்றும் சுற்றுப்புறச் சுத்தம் குறித்து யோசிக்க வைத்திருக்கிறது. எனவே இன்டீரியர் மண்/தூசு இல்லாமல் நீட்டாக இருத்தல் நலம். முடிந்தால் Portable Air Purifier ஓன்றை வாங்கி, காருக்குள்ளே வைப்பது கூட நல்லதுதான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு