Published:Updated:

கியா செல்ட்டோஸ் முதல் ஹூண்டாய் கோனா வரை... 2019 -ன் டாப் 10 கார்கள் இவைதாம்!

2019-ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த கார்களின் பட்டியலை எடுத்துப்பார்த்தால் ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் ஒரு கேள்வி கேட்கத்தோன்றுகிறது. "மை டியர் கார் நிறுவனங்களே, இந்தியாவில் எஸ்யூவி மட்டும்தான் வாங்குகிறார்களா?"

டாப் 10 கார்ஸ் 2019

2019-ல் புதிதாக வந்த கார்களில் 70 சதவிகிதம் எஸ்யூவி/எம்பிவி மாடல்கள்தான். சில கார்களைப் பார்த்தால் "அட இதெல்லாம் எஸ்யூவியா" என்று கேட்கத்தோன்றுகிறது. எல்லாமே ஐஸ்தான் என்றாலும் குச்சி ஐஸை, கப் ஐஸ் என்று சொல்லி விற்க முடியுமா?

ஆட்டோமொபைல் நிறுவனங்களால் முடியும். அதற்கு உதாரணம் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்த சில கார்கள். உயரமான, அகலமான எஸ்யூவி போன்ற தோற்றத்தில் ஒரு ஹேட்ச்பேக்கை வடிவமைத்துவிட்டு அதை க்ராஸ் ஓவர் என்று சொன்னால்கூட பரவாயில்லை எஸ்யூவி என்று விற்கிறார்கள். சரி, பெட்ரோல் ஹெட்ஸின் (petrolhead) இந்த ஆக்ரோஷத்தை அடுத்த ஆண்டாவது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்த ஆண்டு விற்பனைக்கு வந்த டாப் 10 கார்களைப் பார்ப்போம்.

* (இவை தர வரிசைப் பட்டியல்ல, டாப் 10 கார்கள் பற்றி அறிமுகம்.)

ஃபோர்டை மஹிந்திரா ஏன் வாங்குகிறது? - இந்தக் கூட்டணியின் வரப்போகும் கார்கள் என்னென்ன?
2
செம சேல்ஸில் செல்ட்டோஸ்!

கியா செல்ட்டோஸ் - Kia Seltos

மெர்சிடீஸ், ஆடி நிறுவனங்களைப் பார்த்து, 50 லட்ச ரூபாய் கார்தான் ப்ரீமியமாக இருக்க வேண்டுமா என்ற கேள்வியைக் கேட்கிறது கியாவின் செல்ட்டோஸ். ஹூண்டாயின் துணை நிறுவனமான கியா கொண்டுவந்த முதல் காரே டாப் 10 விற்பனை பட்டியலில் வரும் அளவுக்கு ஹிட். அசத்தலான தரம், கடும் போட்டியைக் கொடுக்கும் விலை, சுறுசுறுப்பான இன்ஜின் மட்டுமல்ல, எல்லோருக்கும் ஏற்ப அதிகப்படியான வேரியன்ட்களோடு வந்தது கியாவின் வெற்றி ரகசியம். இந்த ஆண்டு வந்த கார்களில் மட்டுமல்ல, 2010 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழைந்த மிக முக்கியமான நிறுவனமாகவும் இருக்கிறது கியா.

3
லேண்ட்ரோவர் பாதி... ஜீப் மீதி...

டாடா ஹேரியர் - Tata Harrier

2019-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த சிறந்த டிசைன் என்றால் அது டாடா ஹேரியர் என்று அடித்துச் சொல்லாம். லேண்ட்ரோவரின் இன்ஸ்பிரேஷன் இருந்தாலும் லேண்ட்ரோவரைப் போல இல்லாமல் Impact Design 2.0 என, தனக்கென ஒரு தனி பாணியை டிசைன் கோட்பாட்டைக் கொண்டு வந்ததற்கு டாடாவைப் பாராட்டியாக வேண்டும். லேண்ட்ரோவரின் சேஸியோடு ஃபியட் ஜீப்பின் இன்ஜின் இணைந்தால் எப்படியிருக்கும்... அதுதான் டாடா ஹேரியர்.

தரம், நம்பிக்கை, பெர்ஃபமன்ஸ் என ஜவுளிக்கடை விளம்பரத்தைப்போல டாடாவின் எல்லை இப்போது விரிந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, புதிய டிசைன் கோட்பாடுகளையும், புது பிளாட்ஃபார்மையும் அடித்தளமிட்டு இன்னும் 12 முதல் 14 கார்களைக் கொண்டுவரப்போகிறது டாடா. ஒரு 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ட்வின் க்ளட்ச் கியர்பாக்ஸும் கூடவே வரப்போகிறது. இவை எல்லாவற்றுக்குமே விதை, ஹேரியர் போட்டது.

4
ஹைபிரிட்... ஹைடெக்... ஹெக்டர்!

எம்ஜி ஹெக்டர் - MG Hector

புது நிறுவனமாக ஹெக்டர் எனும் ஒரே மாடலுடன் 2019-ம் ஆண்டு ஆட்டோமொபைல் சந்தையில் புது என்ட்ரி கொடுத்தது எம்ஜி. ஆனால், இந்த வருடம் முடிவதற்குள் எஸ்யூவி ரசிகர்களின் லைக்ஸை அள்ளிவிட்டது. ஒரே வாரத்தில் 6,000 கார் முன்பதிவு செய்யப்பட்டது என்பது எம்ஜி நிறுவனத்துக்கு ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். அந்த நம்பிக்கையில்தான் இப்போது எலெக்ட்ரிக் கார் முதல் காம்பாக்ட் எஸ்யூவி வரை அடுத்தடுத்து புது கார்களைக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது எம்ஜி. ஏகப்பட்ட கனெக்டட் வசதிகள், வாய்ஸ் கமாண்ட், அதிக இடவசதி கொண்ட கேபின் இவையெல்லாம் சேர்ந்து ஹெக்ட்டரை ஒரு லக்ஸூரி கார் செக்மென்ட்டுக்கே கூட்டிப்போகிறது.

5
ஹூண்டாய் வென்யூ

ஹூண்டாய் வென்யூ - Hyundai Venue

இந்தியாவின் முதல் கனெக்டட் கார் என்று இதைச் சொல்லாம். சிம் கார்டு, 4G வசதியுடன் வந்திருக்கும் இந்த காரில் ஜியோ ஃபென்சிங், ரிமோட் ஏசி/ஸ்டார்ட்/ஸ்டாப், லைவ் ட்ரேக்கிங் என 007 கார்களுக்கே உரித்தான பல அம்சங்கள் உண்டு. அதிரடி பர்ஃபாமன்ஸ் உடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியன்ட் கொடுத்து பர்ஃபாமன்ஸ் விரும்பிகளின் இதயத்தைக்கூட அள்ளிவிட்டார்கள். மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸாவின் சேல்ஸைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிட்டது வென்யூ. இதுவரை 95,000 பேருக்கும் அதிகமாக இந்தக் காரை முன்பதிவு செய்துள்ளார்கள் என்பதே இதன் வரவேற்பைச் சொல்லிவிடுகிறது.

6
நியோஸ்... அள்ளுமா அப்ளாஸ்?

ஹூண்டாய் நியாஸ் - Hyundai Nios

இந்த ஆண்டு ஹூண்டாயிடம் கேட்கும் ஒரே கேள்வி... எப்படி பாஸ் உங்ககிட்ட மட்டும் இவ்வளவு பணம் இருக்கு! எல்லா நிறுவனங்களும் BS-6 மாற்றத்தில் பெரிய தொகைகளை முதலீடு செய்துவிட்டு அமைதியாக இருக்க அடைமான கடை நடத்துபவர் போல வென்யூ, கோனா அதற்கடுத்து நியாஸ் என 3 முக்கியமான கார்களைக் களமிறக்கியது ஹூண்டாய். நியாஸ் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், 9 லட்ச ரூபாய் விலைக்கு இந்த ஹேட்ச்பேக் ரொம்பவே ப்ரீமியம்.

அடிப்படையில் இது ஒரு கிராண்ட் ஐ10. ஸ்விஃப்ட் அளவுக்கு இன்ஜினில் பர்ஃபாமன்ஸ் போதவில்லை என்றாலும் இதன் ப்ரீமியம் தன்மை இதை அடுத்த செக்மென்ட்டுக்கே கொண்டுபோகிறது. வெளிர் நிற இன்ட்டீரியர், பெரிய டச் ஸ்கிரீன், ஒயர்லெஸ் சார்ஜிங், 15 இன்ச் வீல், பின்பக்க வாஷர்/வைப்பர், கீலெஸ் என்ட்ரி, ப்ரொஜக்டர் ஹெட்லைட், LED DRL, ஸ்மார்ட்ஃபோன் கனெக்டிவிட்டி, ரியர் ஏசி வென்ட், டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், EBD மற்றும் ரிவர்ஸிங் கேமரா-பார்க்கிங் சென்சார் என வசதிகளின் லிஸ்ட் பெருசு. வெளிப்புற டிசைன் ஓகே என்றால் இன்ட்டீரியர் டபுள் ஓகே.

7
க்விட் கோதாவில் தாதா ஆகுமா? மாருதி சுஸூகி எஸ்-ப்ரஸ்ஸோ

மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோ - Maruti S - Presso

சப் காம்பாக்ட் எஸ்யூவி என்ற செக்மென்ட்டை உருவாக்கிய க்விட்டுக்குப் போட்டியாக மாருதி களமிறக்கிய கார்தான் எஸ்-ப்ரெஸ்ஸோ. சின்ன இன்ஜின், டப்பா போன்ற டிசைன், எடை ரொம்பவே குறைவு, தரம் ஓகோதான் என்றாலும், இந்தக் காரின் விலை மற்றும் இன்ட்டீரியர் மக்களை அதிகமாகக் கவர்ந்த விஷயம். விற்பனைக்கு வந்த அதே வாரத்தில் 10,000 முன்பதிவுகள் பெற்ற ஒரே கார் இதுதான். மினி கூப்பர் ஸ்டைல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் சேர்த்து இந்த 5 லட்ச ரூபாய் காரில் ஏகப்பட்ட வசதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். பாதுகாப்பு என்று கேள்வி எழுப்பினால் அதற்கும் பதில் உண்டு. க்விட்டில் ஒரு ஏர்பேக் மட்டுமே. இரண்டாவது ஏர்பேக் கூடுதல் தொகை கொடுத்து வாங்கவேண்டும். எஸ்-ப்ரஸ்ஸோவில் இரண்டு ஏர்பேக்கும் உண்டு.

8
எக்ஸ்யூவி-யின் சின்னத்தம்பி! சாலைகளில் கும்கி!

மஹிந்திரா XUV 300 - Mahindra XUV 300

2019-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த எஸ்யூவிகளில் மிக முக்கியமானது XUV300. மஹிந்திராவில் ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் TUV300 இந்த நிறுவனத்துக்குப் பெரிய சந்தை மதிப்பை உருவாக்கவில்லை. காரணம், TUV-யின் மிக எளிமையாக டிசைன். இந்தக் குறையை XUV300 மூலம் நிவர்த்தி செய்துவிட்டது மஹிந்திரா. டக்கரான டிசைன், பவர்ஃபுல்லான டீசல் இன்ஜின் இந்த காரைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

உலகளவில் பெரிய நம்பகத்தன்மையை உருவாக்கிய சாங்யாங் டிவோலியின் சேஸியில் கட்டமைக்கப்பட்டது இதன் மிகப்பெரிய பலம். அதுமட்டுமல்ல, இது கனெக்டட் கார் இல்லையென்றாலும் பெரும்பாலான கனெக்டட் வசதிகளை மஹிந்திரா இதில் கொடுத்துவிட்டது. எல்ஈடி லைட்ஸ், 4 வீல்களுக்கும் டிஸ்க், ஒயர்லெஸ் சார்ஜர், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி... இப்படி இந்திய கார்களில் அதிகபட்சம் 80 வசதிகளைக் கொடுக்க முடியும் என்றால் அதில் 70 வசதிகள் இந்த XUV-யில் உங்களுக்குக் கிடைக்கும்.

9
2019 ஹோண்டா சிவிக்... தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

ஹோண்டா சிவிக் - Honda Civic

ஒரு காருக்காக இந்தியர்கள் இத்தனை ஆண்டுகள் காத்திருப்பார்களா என ஹோண்டாவையே ஆச்சர்யப்படுத்திய மாடல்தான் சிவிக். டூ வீலரில் RX100 என்றால் கார்களில் சிவிக்தான் ரசிகர்களிக் ஏக எதிர்பார்ப்பைக் கொண்ட கார். 10-ம் தலைமுறை சிவிக் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்தபோது ரசிகர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துவிட்டது எனச் சொல்லாம். Type R மாடலை ஹோண்டா வெளியிடாதது மட்டுமே சிவிக் ரசிகர்களுக்கு ஒரு பெரிய நெருடல். எக்ஸிகியூட்டிவ் செடான் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அளவுக்குக் கொடுக்கும் காசுக்குத் தரமான, லக்ஸூரியான ஒரு செடான் இந்த சிவிக். ஜெர்மன் கார்களை ஒப்பிடும்போது பர்ஃபாமன்ஸ் கொஞ்சம் மந்தம்தான். ஆனாலும் இதன் மைலேஜ், தரம், அதிக சர்வீஸ் நெட்வொர்க், நம்பகத்தன்மை, எளிமையான சர்வீஸ் காஸ்ட் என்ற பல விஷயங்களுக்கான சிவிக் மாடலை ஏகமானதோடு வாங்குகிறார்கள் செடான் விரும்பிகள்.

10
4 மீட்டர் - 7 சீட்டர்... இது ரெனோ ட்ரைபர்

ரெனோ ட்ரைபர் - Renault Triber

இப்படி ஒரு காரைக் கொண்டு வர முடியும் என யோசித்ததற்கே ரெனோவுக்கு பெரிய பாராட்டுகளைக் கொடுக்கலாம். 4 மீட்டருக்குள் ஒரு எம்பிவி, அதிலும், தேவையென்றால் மூன்றாம் வரிசை சீட்டைப் பொருத்திக்கொள்ளலாம், தேவையில்லையென்றால் கழட்டிக்கொள்ளலாம் என்பதெல்லாம் பொம்மை விளையாட்டுபோல தெரிந்தாலும் இது நிஜம். ஒரு காரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது அதன் டிரைவர்தான் முடிவுசெய்ய வேண்டும். அதன்படி பார்த்தால் ரெனோ ட்ரைபரின் ஃபிளெக்ஸிபிலிட்டிக்கு பெரிய கிளாப்ஸ் கொடுக்கலாம். இதன் சிறிய பெட்ரோல் இன்ஜின் 7 பேரை இழுக்குமா, ஃபேமிலியை வைத்துக்கொண்டு டூர் அடிக்கலமா என்பதெல்லாம் இனிமேல் டெஸ்ட் செய்துபார்க்க வேண்டும். ஆனால், சிட்டியில் இந்த காரை ஓட்டுவதற்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சுறுசுறுப்பான பெட்ரோல் இன்ஜின் மைலேஜூம் நன்றாகவே கொடுக்கிறது.

11
ஹூண்டாயின் மின்சார கோனா...

ஹூண்டாய் கோனா - Hyundai Kona

இந்திய அரசின் முயற்சியில் வந்த எலெக்டரிக் கார்களான மஹிந்திராவின் ஈ-வெரிட்டோ மற்றும் டாடா டிகார் EV இரண்டுமே கிட்டத்தட்ட தோல்விதான். இந்த கார்களில் போதுமான பவர் இல்லை, ரேஞ்ச் அதிகளவில் கிடைப்பதில்லை என்று சொல்லி அரசு அதிகாரிகளே இதைக் காட்சிப் பொருளாகத்தான் வைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு அரசின் முயற்சியில் வந்த ஹூண்டாய் கோனா செம ஹிட். எலெக்ட்ரிக் கார்களுக்கான ஒரு திடமான பேஸ்மென்ட் வருவதற்கு முன்பே கோனாவைக் களமிறக்கியது ஹூண்டாய். அதுவும், 25 லட்சம் ரூபாய் விலை கொண்ட கார் என்பதால் "இதை 100 பேர் வாங்கினாலே பெரிய விஷயம்" என்று ஹூண்டாய் நிறுவனத்தின் சேல்ஸ் அதிகாரி ஒருவரே சொன்னார். ஆனால், யாரும் எதிர்பார்க்கவில்லை கோனாவுக்கு டிசம்பர் மாத்துக்குள் 302 முன்பதிவுகள் வரும் என!

காரின் விற்பனை விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் இதன் பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு விலை IC இன்ஜின் கார்களில் 5-ல் ஒரு பகுதி மட்டுமே. ஒரு மாத பெட்ரோல்/டீசல் செலவில் 20 சதவிகிதம் மட்டுமே செலவழித்தால் போதும் என்பதால், ஆரம்பத்தில் கொடுக்கும் தொகையை 2 ஆண்டுகளில் எடுத்துவிடலாம். வழக்கமான கார்களுக்கு நிகரான பர்ஃபாமன்ஸ், ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ வரை ரேஞ், குறைவான சர்வீஸ் காஸ்ட் மட்டுமல்ல எலெக்ட்ரிக் காருக்கான பல சலுகைகளும் இந்த காரை வாங்கத்தூண்டும் விஷயங்கள். இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் கோனா ஒரு முன்னோடி.

அடுத்த கட்டுரைக்கு