வேகம்தான் ஆட்டோமொபைலின் மொழி. மோட்டோ ஜிபி போன்ற ரேஸ்களைக் கவனித்தால் தெரியும். ‘வ்வ்ர்ர்ரூம்’ எனக் காதைக் கிழிக்கும் பைக்குகளின் எக்ஸாஸ்ட் சத்தம், பைக் பிரியர்களுக்குச் சங்கீதம்! சாம்பியன் ராஸி, 320 கிமீ–ல் அடிக்கடி பறப்பார். அதிகபட்சமாக மோட்டோ ஜிபியில் ரெக்கார்டு செய்யப்பட்ட டாப் ஸ்பீடு - 362.4 கிமீ. ‘இவ்வளவு வேகமாவெல்லாம் பைக் போகுமா’ என்று ஆச்சரியப்படும் அதே வேளையில், அதையும் தாண்டி… கிட்டத்தட்ட ஒரு விமானத்தின் வேகம் போகும் பைக்குகளெல்லாம் இருக்கின்றன. மோசமான அந்த பைக்குகளில் முக்கியமான 10 பைக்ஸ் பற்றி ஒரு ‘வ்வ்ர்ர்ரூம்’ ரிப்போர்ட்!

பிஎம்டபிள்யூ K1200S
விலை: சுமார் 21 – 25 லட்சம் இன்ஜின்: 1,157 சிசி பவர்: 164bhp 0–100கிமீ: 3.2 விநாடிகள்
பிஎம்டபிள்யூ பைக்குகள் சுறுசுறுப்புக்கும் வேகத்துக்கும் பெயர் பெற்றவை. இந்தப் போட்டியில் கடைசியில் இருப்பதால், இந்த பிஎம்டபிள்யூ K1200S பைக்கைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். இதன் 1,157 சிசி கொண்ட 4 சிலிண்டர் இன்ஜினின் பவர் 10,250rpm–ல் 164bhp. இது மணிக்கு 280 கிமீ வரை பறக்கும் வல்லமை கொண்டது. இதன் டார்க் 8,250rpm-ல் 129Nm. இது 0–100 கிமீ–யை 3.2 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. இதன் லைட் வெயிட்டும், குறுக்குவெட்டாக இந்த இன்ஜின் மவுன்ட் செய்யப்பட்ட விதமும், கையாளுமையில் வேற லெவல் ஆக்குகிறது. 264 கிலோ எடைதான் என்பதால், பல டூரிங் பைக்குகளைவிட இதன் ஹேண்ட்லிங் அருமை. இதிலுள்ள இன்டக்ரேட்டட் ABS பிரேக்ஸின் ஃபீட்பேக் பக்கா! இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 21 – 25 லட்சம் வரும்.

ஏப்ரிலியா RSV1000R Mille
இன்ஜின்: 998 சிசி பவர்: 141.3 bhp 0–100 கிமீ : 3.1 விநாடிகள் 0–100கிமீ 3.2 விநாடிகள்
Mille என்றால், இத்தாலியில் 1,000 என்று அர்த்தம். இது 1998 – 2000 ஆண்டில் தயாரிக்கப்பட்ட பைக். இப்போதும் இத்தாலி போன்ற நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. 998 சிசி லிக்விட் கூல்டு இன்ஜினில் உள்ள எலெக்ட்ரானிக் ஃப்யூல் இன்ஜெக்ஷன் செம ஸ்மூத்தாக இருக்கும். வழக்கம்போல, இத்தாலி பைக்கின் டிசைனைப் பற்றிக் குறைகூறிவிட முடியாது. இந்த ஏப்ரிலியாவும் அப்படித்தான். பார்க்கும்போதே இந்த ஸ்போர்ட்டி டிசைன் கொண்ட பைக், ஆக்ஸிலரேட்டரை முறுக்கிப் பறக்க வேண்டும்போல் இருக்கும். இந்த இன்ஜினில் இருப்பது Rotex - V ட்வின் இன்ஜின். 60டிகிரி சாய்மானத்தில் இதை மவுன்ட் செய்திருப்பதால், இதன் சென்டர் ஆஃப் கிராவிட்டியில் நல்ல முன்னேற்றம். இதில் உள்ள ADVC (Anti Vibration Double Countershaft), பைக் ஓட்டும்போது ஏற்படும் அதிர்வுகளைப் பெரிதாகக் கடத்தவில்லை. இதுவும் பிஎம்டபிள்யூ போலவே 0–100 கிமீ –யைக் கடக்க 3.1 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. 10,000rpm–ல் வெளிப்படும் இதன் பவர் 141.3bhp. இது மணிக்கு 285 கிமீ வேகத்தில் பறக்கும்.

எம்வி அகுஸ்ட்டா F4 1000R
0–100 கிமீ: 2.7 விநாடிகள் இன்ஜின்: 1,000 சிசி பவர்: 174bhp
பைக் பிரியர்களின் மோஸ்ட் வான்டட் லிஸ்ட்டில் எம்வி அகுஸ்ட்டாவும் இருக்கும். இத்தாலி நாட்டைச் சேர்ந்த எம்வி அகுஸ்ட்டாவின் டிசைன் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். ஈஸியான ஹேண்ட்லிங் கொண்ட சூப்பர் பைக்குகளின் கையாளுமையை எளிமை, அருமை என்று வர்ணிக்கலாம். ஆனால், எம்வி அகுஸ்ட்டாவைக் கையாளுவது அழகாக இருக்கும். எம்வி அகுஸ்ட்டாவில் கார்னரிங் செய்வது, வெண்ணெயைக் கத்தியை விட்டு நறுக்குவதுபோல் அத்தனை ஜாலியாக இருக்கும். இதன் இத்தாலியத் தயாரிப்பின் கட்டுமானம் அப்படி! இதில் 8 லெவல்களில் ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் கொடுத்திருப்பார்கள். எளிமையான க்ராங்க்ஷாப்ட்டும், ஷார்ட் ஸ்ட்ரோக் கொண்ட மோட்டாரும்… ‘வ்வ்ர்ர்ரூம்’ எனப் பறப்பதற்கு செம கம்பெனி கொடுக்கும். 2.7 விநாடிகளில் 60 கிமீ–யைக் கடக்கும் இந்த அகுஸ்ட்டா F4 1000R. இதன் பவர் 174 bhp. இதன் டார்க் 10,000rpm-ல் 115Nm. எம்வி அகுஸ்ட்டா F4 1000R பைக்கை இந்தியாவில் வாங்க வேண்டுமென்றால், 38.83 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.

ஹோண்டா சிபிஆர் 1100XX பிளாக் பேர்டு
0–100 கிமீ: 2.8 விநாடிகள் இன்ஜின்: 1,137 சிசி பவர்: 152 bhp
‘பிளாக் பேர்டு’ எனும் பெயருக்கேற்ப, இந்த ஹோண்டா பைக் இறக்கைகள் கொண்ட ஒரு கறுப்புப் பறவையைப் போல்தான் இருக்கிறது. இதன் இரண்டு பக்க பக்கவாட்டு ஸ்கூப்கள், இதற்கு இறக்கை போன்ற உருவ அமைப்பையே தருகின்றன என்று சொல்லலாம். இந்த சிபிஆர் சீரிஸ் – 1996–ல் ஆரம்பித்தது ஹோண்டா. அதன் நீட்சியாக இந்த சிபிஆர் 1100XX பைக்கை சில பல ட்வீக்குகளுடன் கொண்டு வந்திருக்கிறது ஹோண்டா. கவாஸாகி ZX-11 பைக்கை டார்கெட்டாக வைத்தே இந்த பிளாக் பேர்டு வந்திருப்பதால், இதை ஒரு டூரிங் பைக்காகவே வடிவமைத்திருக்கிறது. இதிலுள்ள 1,137 சிசி இன்ஜினின் பவர் 152 bhp; 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் என எல்லாமே வெறித்தனம். இதன் சீட் உயரம் 800 மிமீதான் என்பதால், உயரம் குறைவானவர்கள்கூட இதில் எளிதில் டூரிங் அடிக்கலாம். இரண்டு பக்கமும் 120 மிமீ சஸ்பென்ஷன் டிராவலும் – DCBS (Dual Combined Braking System) –ம் உண்டு என்பதால், இது கையாளுமையிலும் சொகுசிலும்கூட பக்கா!

கவாஸாகி நின்ஜா ZX-14R
0–100 கிமீ: 2.6 விநாடிகள் இன்ஜின்: 1,441சிசி பவர்: 144bhp
என்னது, நின்ஜாவுக்கு 6–வது இடமா என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. கவாஸாகி பைக் என்றாலே வேகத்தில் ‘பீஸ்ட்’ என்பது உலகத்துக்கே தெரியும். டாப்–10 பைக்ஸில் கவாஸாகிக்கு இரண்டாவது இடம் என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதன் கிரே நிறமும், வழக்கமான ஸ்டைலில் இல்லாமல் ஹயபூஸா வடிவத்தில் இதன் ஸ்போர்ட்டினெஸ்ஸும் பார்ப்பதற்கே வெறித்தனமாக இருக்கிறது. இந்த பீஸ்ட்டுக்குள் ஒரு பீஸ்ட் இருக்கிறது. 1,441 சிசி கொண்ட இன்லைன் 4 சிலிண்டரை ஸ்டார்ட் செய்தால்தான் தெரிகிறது இதன் வெறித்தனம். இதில் இருப்பது 6 ஸ்பீடு கியர்பாக்ஸ். இந்த நின்ஜா ஓட்டுவதற்கு ஜாலியாக இருப்பதற்குக் காரணம், இதிலுள்ள 3 லெவல் ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம். இந்த 200 கிலோ எடை கொண்ட பைக்கை, 50 கிலோ இருக்கும் யாருமே எளிதில் கன்ட்ரோல் பண்ணலாம். 10,500rpm–ல் 144bhp பவரில் இதை 300 கிமீ–க்கு விரட்டினால், எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்!

பிஎம்டபிள்யூ S1000RR–ல்
0–100கிமீ: 2.7 விநாடிகள் இன்ஜின்: 999 சிசி பவர்: 195.2bhp
முந்தைய கவாஸாகியைவிட சின்ன 1 லிட்டர் இன்ஜின்தான் இந்த பிஎம்டபிள்யூ S1000RR–ல். ஆனால், டாப் ஸ்பீடு போட்டியில் கவாஸாகி நின்ஜா ZX-14R–யை விட 5 கிமீ வேகமாக இருக்கிறது. காரணம், இதன் பவர் –192.5bhp. இந்த இன்ஜினுக்கு மொத்தம் 16 வால்வுகள் இருக்கின்றன. இதன் முந்தைய மாடலைவிட இது செம ஸ்மூத்தாக இருப்பதற்குக் காரணம் இதுதான். இதன் இன்டேக் கேம்ஷாஃப்ட்டிலும் வேலை பார்த்திருக்கிறது பிஎம்டபிள்யூ. பழசைவிட எடை குறைந்த ஃப்ரேம் பொருத்தியிருப்பதால், இது 4 கிலோ எடை குறைந்திருக்கிறது. கையாளுமைக்கும் ஓட்டுதலுக்கும் இதிலுள்ள செமி–ஆக்டிவ் சஸ்பென்ஷன் பேக் மற்றும் இதன் நிலைத்தன்மைக்கு இதன் டைனமிக் டேம்ப்பர் கன்ட்ரோலும் துணை புரிகின்றன. இது 2.7 விநாடிகளில் 60 கிமீ வேகத்தைத் தொடுகிறது. இந்த பைக்குகளை WSBK (World Super Bike Race) –க்காகவே வடிவமைத்திருக்கிறது பிஎம்டபிள்யூ.

சுஸூகி ஹயபூஸா
0-100 கிமீ: 2.8 விநாடிகள் இன்ஜின்: 1,340 சிசி பவர்: 197bhp
ஹயபூஸா என்றதுமே எஸ்ஜே சூர்யாவின் ‘மயிலிறகே’ பாடல்தான் நினைவுக்கு வரும். ஹயபூஸாவை ஆட்டோமொபைலில் ‘கோஸ்ட்’ என்று செல்லமாக அழைப்பார்கள். இந்த கோஸ்ட்டின் சீட்டில் அமர்ந்தால், ஏதோ விமானத்தின் காக்பிட்டைப் பார்ப்பதுபோல் பிரம்மாண்டமாக இருக்கும். பைக்கின் முன் பக்க ஸ்கூப்பிலுள்ள அந்த ஜப்பானிய எழுத்துக்களைப் பார்த்தாலே பரவசமாக இருக்கும் என் போன்ற ரைடர்களுக்கு. இதிலுள்ள இன்லைன் 4 சிலிண்டர் 1,340 சிசி இன்ஜின் 197 bhp பவரைக் கொடுக்கிறது. லேட்டஸ்ட் ஹயபூஸாவின் ஸ்பெஷலாக – BATTLAX Hypersport S22 எனும் பிரிட்ஜ்ஸ்டோன் டயர்கள்; முரட்டுத்தனமான பிரெம்போ ஸ்டைலெமா மற்றும் Nissin பிரேக்குகள், SIRS (Suzuki Intelligent Riding System), 10 மோடுகள் கொண்ட ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் என்று பல விஷயங்களைச் சொல்லலாம். சுமார் 324 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த ஹயபூஸாதான் இந்தப் போட்டியில் 4–வது இடத்தில் இருக்கிறது.

MTT டர்பைன் Y2K
0-100 கிமீ2.5 விநாடிகள்இன்ஜின்ரோல்ஸ்ராய்ஸ் 250 C–18பவர்320 bhp
ரோல்ஸ்ராய்ஸ் காரின் இன்ஜினை ஒரு பைக்கில் பொருத்தினால் எப்படிப் பறக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆம், இந்த MTT டர்பைன் பைக்கில் இருப்பது ரோல்ஸ்ராய்ஸின் Dyne Jet 200 எனும் 320bhp பவரும், 42.5kgm டார்க்கும் கொண்ட இன்ஜின். பெயருக்கு வேற்ப ஜெட் வேகத்தில் பறக்கிறது இந்த MTT டர்பைன் பைக். 2.5 விநாடிகளில் 100 கிமீ வேகத்தைத் தொடும் இதன் டாப் ஸ்பீடு 367 கிமீ. ‘அதிகப் பொருட்செலவில் தயார் செய்யப்பட்ட பைக்’ எனும் டைட்டிலில் கின்னஸ் ரெக்கார்டு செய்த இந்த MTT டர்பைன் பைக்கின் பெரிய ஸ்விங் ஆர்ம் மற்றும் பெரிய பைரலி டயப்லோ டயர்கள்தான் இதன் முக்கிய அட்ராக்ஷன். இதற்கடுத்த MTT டர்பைன் Y2K மாடலில் 420bhp பவர் கொண்டு ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம்.

கவாஸாகி நின்ஜா H2R
0–100 கிமீ: 2.5 விநாடிகள் இன்ஜின்: 998 சிசி பவர்: 310 bhp
கவாஸாகியின் இன்னொரு பீஸ்ட் – இந்த நின்ஜா. H2R பற்றி உலகத்துக்கே தெரிந்திருக்கும். காரணம், இதன் சூப்பர் சார்ஜர் கொண்ட இன்ஜின். ஃபார்முலா 1 கார்களில் இருக்கும் சூப்பர் சார்ஜரை ஒரு பைக்கின் இன்ஜினுக்குப் பொருத்தினால்… அது பீஸ்ட்டாகத்தானே இருக்கும். 310bhp பவரும், 16 வால்வுகளும் கொண்ட இந்த 998 சிசி இன்ஜினின் ‘வ்வ்ர்ர்ரூம்’ தன்மையை யோசித்துப் பாருங்கள். ஆக்ஸிலரேட்டரை முறுக்கும்போதே காது கிழியலாம். எத்தனை தொழில்நுட்பங்கள் உண்டோ, அத்தனையையும் இந்த H2R பைக்கில் பார்க்கலாம். பெரிய கூலன்ட், KQS (Kawasaki Quick Shifter), KCMF (Kawasaki Cornering Management Function), Ohlins நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்ப்பர், கிண்ணென்ற ட்ரெல்லிஸ் ஃப்ரேம், Ohlins –யைச் சேர்ந்த TTX36 ரியர் சஸ்பென்ஷன், த்ராட்டில் வால்வ்களுக்குக்கூட எலெக்ட்ரானிக் சிஸ்டம் என்று கலக்குகிறது H2R. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இது 100 கிமீ–யை 2.5 விநாடிகளில் கடக்கும். இதன் டாப் ஸ்பீடு சுமார் 395 கிமீ! சுமார் 22 லட்சம் இருந்தால், இந்த H2R பைக்கை வாங்கலாம்.கவாஸாகி நின்ஜா H2R

டாட்ஜ் டோமாஹா
0–100 கிமீ: 1.95 விநாடிகள் இன்ஜின்: 8,277 சிசி பவர்: 500bhp
H2R–க்கு அண்ணன் ஒருவன் இருக்கிறார் என்றால், இது DodgeTomohawk எனும் இந்த பைக். பார்ப்பதற்கு ஏதோ கண்காட்சி பைக் அல்லது ஏதோ ட்ரக் போல இருக்கும் இந்த டாட்ஜ் டோமாஹாக்தான் இந்த டாப் ஸ்பீடு போட்டியில் முதலிடம். இதிலுள்ள 8,277 சிசி இன்ஜினில் 10 சிலிண்டர்கள் என்றால்… இதன் உறுமலை நினைத்துக் கொள்ளுங்கள். இதன் டார்க், நம் ஊர் டீசல் எஸ்யூவிக்களைவிட இரண்டு மடங்கு அதிகம். 71.2 kgm டார்க்தான், இத்தனை பெரிய எடை கொண்ட இந்த பைக்கின் புல்லிங் பவருக்குப் பெரிதும் உதவுகிறது. 680 கிலோ எடை கொண்ட இதைக் கையாள பாடிபில்டராக இருந்தால் மட்டுமே சாத்தியம். இதன் டாப் ஸ்பீடு பற்றிப் பலரும் பலவிதமாகப் பலர் சொல்கிறார்கள். 500 கிமீ–யைத் தாண்டி 550 கிமீ வரை இந்த டாட்ஜ் டோமோஹாக் பறக்கும் என்கிறார்கள் சிலர். இது காரா, பைக்கா என்று பலர் இதை விவாதம் செய்வதற்குக் காரணம் – இதில் 4 டயர்கள் உண்டு. இதன் பெரிய அந்த டயர்களாலேயே இதைச் சாலைகளில் ஓட்டத் தடை செய்துள்ளது அமெரிக்கப் போக்குவரத்துத் துறை.