Published:Updated:

கிளாஸிக் கார் பிரியர்களைக் கவர்ந்த டொயோட்டா  கொரோனா! ஏன் நின்றது?

கொரோனா
கொரோனா ( Motorbeam )

உலகில் அதிகமாக விற்பனையாகும் காராக இருக்கும் கரோலா சீரிஸுக்கு ஒருகாலத்தில் அண்ணனாகக் கொரோனா இருந்துள்ளது; 1957 - 2001 வரை விற்பனை செய்யப்பட்ட இந்தச் சிறிய கார், அமெரிக்கக் கார் சந்தையை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டது.

COVID-19 காரணமாக, Work From Home ரீதியில் கடந்த ஒரு வாரமாக இயங்கிக்கொண்டிருக்கிறேன். எங்கே பார்த்தாலும் கொரோனா குறித்த செய்திகளும் வாட்ஸ் அப் ஃபார்வர்டுகளுமாக இருக்கும் சூழலில், இந்தப் பெயரில் வேறு என்னவோ இருக்கிறதே என ஒரு இடைவேளை நேரத்தில் அப்படியே யோசித்துக் கொண்டிருந்தேன். ஆம்... இதே பெயரில் ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம், ஒரு சிறிய காரைத் தயாரித்திருக்கிறது! உலகில் அதிகமாக விற்பனையாகும் காராக இருக்கும் கரோலா சீரிஸுக்கு ஒரு காலத்தில் அண்ணனாகக் கொரோனா இருந்துள்ளது; 1957 - 2001 வரை விற்பனை செய்யப்பட்ட இந்தச் சிறிய கார், அமெரிக்கக் கார் சந்தையை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டது. 1970-களில் உலகெங்கும் பெட்ரோலியத் தட்டுப்பாடு எழுந்தபோது, கொரோனா போல அதிக மைலேஜ் தரும் கார்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. ஜப்பானில் 2001-ம் ஆண்டு இதன் மூச்சை நிறுத்திவிட்டது டொயோட்டா.

1966 Toyota Corona
1966 Toyota Corona
Autocar India

லத்தின் மொழியில் கொரோனா என்றால் கிரீடம் (Crown) என அர்த்தம். இதே பெயரில் ஒரு லக்ஸூரி செடானை 1955 முதலாகத் தயாரித்து வருகிறது டொயோட்டா. 1958-ம் ஆண்டில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்ட முதல் டொயோட்டா கார் என்ற பெருமையை Toyopet Crown பெற்றுள்ளது. இதில் Toyopet என்பது இந்த நிறுவனத்தின் சிறிய கார்களைக் குறிக்கும் பிராண்டிங் ஆகும். எனவே, டொயோட்டாவின் வழக்கமான டீலர்களில் Crown காட்சிபடுத்தப்பட்டிருந்தால், ஜப்பானின் Toyopet டீலர்களில் கொரோனா வீற்றிருந்தது.14 தலைமுறைகளாகத் தயாரிப்பில் இருக்கிறது Crown. கிளாஸிக் கார் ஆர்வலர்களிடையே, 1971-1974 வரையிலான காலத்தில் தயாரிக்கப்பட்ட நான்காம் தலைமுறை Crown - மோஸ்ட் வான்டட் காராக உள்ளது!

கொரோனா Rings
கொரோனா Rings
Sycamore BMW

ஐரோப்பா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய சர்வதேச நாடுகளுக்குக் கொரோனா ஏற்றுமதி செய்யப்பட்டது. அங்கேயும் ஓரளவுக்கு நற்பெயரையே இந்தச் சிறிய கார் டொயோட்டாவுக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. இதன் வெளிப்பாடாக, முதன்முறையாக டொயோட்டா பங்கேற்ற 1965 லண்டன் மோட்டார் ஷோவில் கொரோனா காட்சிக்கு வைக்கப்பட்டது. 1970-களின் நடுவாக்கில் இதன் விற்பனை பிரிட்டனில் நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும், கரோலாவின் வருகைக்குப் பிறகு, அதைவிடப் பிரிமியம் தயாரிப்பாகக் கொரோனா பொசிஷன் செய்யப்பட்டது. இடையே Vinyl Roof உடன் கூடிய மாடல்களும் இந்தச் சிறிய காரில் விற்பனை ஆகியுள்ளன.

1955 Toyota Crown
1955 Toyota Crown
Autocar India

44 ஆண்டுகளில் 11 தலைமுறைகளைக் கண்ட கொரோனா, எக்கச்சக்கமான வேரியன்ட்கள் - இன்ஜின்/கியர்பாக்ஸ் கூட்டணியுடன் வலம் வந்திருக்கிறது. அதைப் பற்றிப் பேசத் தொடங்கினால், பக்கங்கள் போதாது மக்களே. 2 கதவுகளைக் கொண்ட கூபே, 4 கதவுகளைக் கொண்ட செடான், ஸ்டேஷன் வேகன் எனப் பலவிதமான பாடி ஸ்டைல்களில் கொரோனா வந்திருக்கிறது. 1.5 லிட்டர் தொடங்கி 2.4 லிட்டர் வரையிலான இன்ஜின்கள் தவிர, 1 டர்போ பெட்ரோல் - 2 டீசல் இன்ஜின்களும் இந்தச் சிறிய காரின் பானெட்டுக்கு அடியே இருந்துள்ளன. தவிர டாக்ஸி மார்க்கெட்டைக் கருத்தில் கொண்டு, LPG-யில் இயங்கும் மாடல்களும் வெளிவந்தன. பயன்பாட்டுக்கு ஏற்றபடி ஃப்ரன்ட்/ரியர் வீல் டிரைவ் அமைப்புகளுடன் கொரோனா டயர் பதித்திருக்கிறது. தற்போதைய மாடர்ன் கார்களுடன் ஒப்பிட்டால், எந்தவிதமான எலெக்ட்ரிக் அம்சங்களும் இல்லாமல் கொரோனா தயாரிக்கப்பட்டது. எனவே, கிளாஸிக் கார் ஆர்வலர்களை இது கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை. இதே பெயரை, தனது கார்களின் ஹெட்லைட்களுக்கு (Corona Rings) பிஎம்டபிள்யூ சூட்டியிருந்தது.

அடுத்த கட்டுரைக்கு