Published:Updated:

`BS-4ல் இருந்து BS-6... ஆனால், அதே விலை!' -வெல்கம் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் RS

ட்ரையம்ப் BS-6
ட்ரையம்ப் BS-6 ( Triumph India )

இது மார்ச் மாதத்தின் இறுதியில் அறிமுகமாகவிருந்த நிலையில், கொரோனா அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், BS-4 மாடலின் விலையிலேயே BS-6 வெர்ஷன் வந்திருப்பதுதான்!

இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையான 11.13 லட்ச ரூபாய்க்கு, தனது புகழ்பெற்ற ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் RS பைக்கின் BS-6 வெர்ஷனைக் களமிறக்கியுள்ளது ட்ரையம்ப். இது, மார்ச் மாதத்தின் இறுதியில் அறிமுகமாகவிருந்த நிலையில், கொரோனா அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், BS-4 மாடலின் விலையிலேயே BS-6 வெர்ஷன் வந்திருப்பதுதான்!

2020 ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் RS பைக்கின் புக்கிங் ஆரம்பமாகிவிட்டதுடன் (ஆன்லைன்), டெஸ்ட் ரைடு மற்றும் டெலிவரி ஆகியவை ஊரடங்கு உத்தரவு முடிந்தபிறகு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Triumph Street Triple RS
Triumph Street Triple RS
Triumph India

இதைத்தொடர்ந்து, 3 வேரியன்ட்களை உள்ளடக்கிய புதிய டைகர் 900 சீரிஸ் ADV பைக்ஸ் மே மாதத்தில் விற்பனைக்கு வரும் எனத்தெரிகிறது. ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் RS பைக்கின் BS-4 மாடல் போலவே BS-6 வெர்ஷனும், ஹரியானாவில் இருக்கும் ட்ரையம்ப் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

ஏனெனில், இதர மாடல்கள் எல்லாமே தாய்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகின்றன. தற்போதைய சூழலில் இந்த Middle Weight பைக்குக்குப் போட்டியாளர்களே இல்லையென்றாலும், அடுத்த ஆண்டில் 890 R பைக்கை ஒருவேளை இந்தியாவுக்குக் கேடிஎம் கொண்டுவந்தால் நிலைமை மாறலாம். Z900 BS-6க்கு வந்துவிட்டாலும், GSX-S750 & MT-09 பைக்குகள் இன்னும் மாறவில்லை.

கொரோனா.... ட்ரையம்பின் முடிவு என்ன?

தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, போனவில்லி ரேஞ்ச்சின் (ஸ்ட்ரீட் ட்வின், T100, T120, ஸ்பீடுமாஸ்டர்) விலை ஜூலை மாதம் வரை உயர்த்தப்படாது என ட்ரையம்ப் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற மாடல்கள் விரைவில் BS-6 விதிகளுக்கு அப்கிரேடு செய்யப்படும் எனவும் தகவல் வந்திருக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் இவற்றை வாங்குவதற்கு என, ஃபைனான்ஸ் திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.

Twin Headlamps
Twin Headlamps
Autocar India

2017-ம் ஆண்டு வெளிவந்த ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் RS, வெடிக்கும் பர்ஃபாமன்ஸ் - அற்புதமான மெக்கானிக்கல் பேக்கேஜ் (பிரெம்போ M50 Monobloc கேலிப்பர், Fully அட்ஜஸ்டபிள் 41 மிமீ Showa USD ஃபோர்க், Fully அட்ஜஸ்டபிள் Öhlins STX40 மோனோஷாக், 17 இன்ச் பைரலி Supercorsa SP V3 டயர்கள், Twin Spar அலுமினிய ஃபிரேம்) - துல்லியமான கையாளுமை - அட்டகாசமான தரம் எனப் பெயர் பெற்றது தெரிந்ததே.

இதனாலேயே இந்த நேக்கட் ஸ்ட்ரீட் பைக், சூப்பர் ஸ்போர்ட் ஆர்வலர்களையும் தன்வசம் ஈர்த்ததில் வியப்பேதும் இல்லை. ஏறக்குறைய குறைகளே இல்லாமல் பக்காவான டிராக் பைக்காகவும் அசத்திய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் RS பைக்கை, இன்னும் சிறப்பான தயாரிப்பாக மேம்படுத்தியுள்ளது ட்ரையம்ப். BS-6 பைக்கும் முன்பைப் போலவே பர்ஃபாமன்ஸ் மற்றும் கையாளுமையில் அசத்தும் என எதிர்பார்க்கலாம்.

இன்ஜினில் என்ன மாற்றம்?

முந்தைய BS-4 மாடலில் இருந்த அதே 765சிசி - இன்லைன் 3 சிலிண்டர் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் என்றாலும், டார்க்கில் சின்ன மாறுதல் தெரிகிறது (BS-4: 7.7kgm, BS-6: 7.9kgm@9,350rpm). இது அதே 123bhp@11,750rpm பவரையே வெளிப்படுத்தினாலும், மிட்ரேஞ்ச்சில் முன்பைவிட ஆக்ஸிலரேஷன் அதிரடியாக இருக்கும்படி (9% அதிகம்) பவர் டெலிவரி மாற்றப்பட்டுள்ளது.

TFT Display
TFT Display
Autocar India

முன்பு Quickshifter கியரை ஏற்றும்போது மட்டுமே செயல்பட்ட நிலையில், தற்போது அதற்குப் பதில் Bidirectional Quickshifter வழங்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். BS-6 விதிக்கேற்ப இன்ஜினை மேம்படுத்த ஏதுவாக, இதன் இன்டேக் சிஸ்டம் மற்றும் 2 Stage Catalytic Converter அமைப்பு புதிது. தவிர Crankshaft, கிளட்ச், பேலன்சர் ஆகியவற்றின் எடை முன்பைவிடக் குறைந்திருக்கிறது.

புதுசாக என்ன வசதிகள்?

Brembo M50 Calipers
Brembo M50 Calipers
Autocar India

இரட்டை ஹெட்லைட்டில் புதிதாக LED DRL சேர்க்கப்பட்டுள்ளது. TFT டிஸ்பிளேவின் கலர் - கிராஃபிக்ஸ் மாறியிருப்பதுடன், கூடுதலாக GoPro - ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி - Turn By Turn Navigation ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளைப் பயன்படுத்த, My Triumph மொபைல் அப்ளிகேஷன் மற்றும் ஆக்ஸசரியில் கிடைக்கும் Chip ஆகியவற்றை உடன் வைத்திருக்க வேண்டும்.

Triumph Street Triple RS
Triumph Street Triple RS
Triumph India

ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் RS பைக்கில் போதுமான எலெக்ட்ரானிக் அம்சங்கள் இருந்தாலும் (டிராக்ஷன் கன்ட்ரோல், 5 ரைடிங் மோடுகள்), அதன் விலையுடன் ஒப்பிடும்போது இங்கே IMU இல்லாதது கொஞ்சம் மைனஸ்தான். மற்றபடி பைக்கை உற்றுநோக்கும்போது Belly Pan, டெயில் பகுதி, ரேடியேட்டர் ஆகியவற்றின் வடிவமைப்பில் மாற்றம் தெரிகிறது. முன்பு Matte Silver கலர் இருந்த நிலையில், தற்போது Glossy Silver நிறத்துக்கு பைக் மாறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு