Published:Updated:

நார்ட்டன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்கியது டிவிஎஸ்!

நார்ட்டன்
நார்ட்டன் ( Autocar India )

டிவிஎஸ்ஸுக்கு இருக்கும் உலகளாவிய சந்தை மதிப்பைப் பயன்படுத்தி, பல்வேறு புதிய நாடுகளுக்குத் தமது தயாரிப்புகளை வழங்க நார்ட்டன் முயற்சிக்கும் எனத் தோன்றுகிறது.

GBP 16 Million (இந்திய மதிப்பில் 153 கோடி ரூபாய்)-க்கு, பிரிட்டனைச் சேர்ந்த நார்ட்டன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது டிவிஎஸ். வெளிநாடுகளில் இருக்கும் தனது துணைநிறுவனங்களின் உதவியுடன், இதை டிவிஎஸ் நிறுவனம் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

'பைக் ஆர்வலர்கள் மத்தியில் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருப்பதால், உலக பைக் சந்தைகளில் கால்பதிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சர்வதேச பைக் சந்தைகளில் நார்ட்டனின் வரலாற்றுப் பெருமையைக் காக்கும் விதமாக, அவர்களுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக இருக்கிறோம்' என்றார், டிவிஎஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநரான சுதர்சன் வேணு. இந்த 153 கோடி ரூபாயையும் All Cash ஆகக் கொடுத்து, இந்த நிறுவனம் டீலை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. கொரோனா காரணமாக, இந்திய ஆட்டோமொபைல் துறையே WFH-ல் இருக்கும்போது, அதில் சிறப்பாகப் பணிபுரிந்திருப்பதாகப் பல்வேறு இடங்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுவருகிறது டிவிஎஸ்!

பஜாஜ் - KTM, டாடா - JLR, மஹிந்திரா - Pininfarina என இந்தியாவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களை வாங்கும் போக்கு அதிகரித்திருப்பது பெருமையான தருணம்தான்.

நார்ட்டனுக்கு நடந்தது என்ன?

650cc Scramblers
650cc Scramblers
Norton Motorcycles

டிவிஎஸ்ஸுக்கு இருக்கும் உலகளாவிய சந்தை மதிப்பைப் பயன்படுத்தி, பல்வேறு புதிய நாடுகளுக்குத் தமது தயாரிப்புகளை வழங்க நார்ட்டன் முயற்சி செய்யும் எனத் தோன்றுகிறது. மேலும் தான் சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்த நிறுவனம் மீண்டு வருவதற்கும் டிவிஎஸ் தோள் கொடுத்திருக்கிறது. இத்தகைய சூழலுக்கு ஒரு வகையில் காரணமான நார்ட்டனின் முன்னாள் உரிமையாளரான ஸ்டூவர்ட் கார்னர் மீது, பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட V4 SS லிமிடெட் எடிஷன் பைக்கின் விலை GBP 44,000 (இந்திய மதிப்பில் 40.88 லட்சம் ரூபாய்) என்றாலும், புக்கிங் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அவை விற்று முடிந்துவிட்டன! என்றாலும், இவற்றைத் தனது டானிங்டன் ஹால் தொழிற்சாலையில் தயாரிப்பதற்குத் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகள் ஆகியவற்றுக்கு, நார்ட்டனிடம் பணம் இல்லாதது சிக்கலின் உச்சம்.

650சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளின் கதி?

Atlas Ranger
Atlas Ranger
Norton Motorcycles

அட்லஸ் நோமட் மற்றும் அட்லஸ் ரேஞ்சர் எனும் பெயரைக் கொண்ட இரு 650சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளைத் தயாரிக்க, அதிகளவில் தனது கையிருப்பைச் செலவழித்திருந்தது நார்ட்டன். 84bhp பவர் - 6.4kgm டார்க் வெளிப்படுத்திய இந்த மிட்சைஸ் பைக்குகளை, தனது முந்தைய தயாரிப்புகளைவிடக் குறைவான விலையில் அறிமுகப்படுத்தும் முடிவில் இருந்தது (இந்திய மதிப்பில் 9-11.5 லட்ச ரூபாய் வரை). 2018-ம் ஆண்டின் இறுதியிலேயே 5 கலர்களில் இந்த ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் வெளியாகிவிட்டன; ஆனால் இந்த அட்லஸ் சீரிஸ் பைக்குகளைத் தயாரிப்பதற்குத் தேவையான வசதிகளை, தனது தொழிற்சாலையில் இன்னும் செய்துமுடிக்காமல் தவிக்கிறது நார்ட்டன். தவிர இதை இந்தியாவில் தயாரித்து ஆசியச் சந்தைகளில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக, புனேவைச் சேர்ந்த கைனடிக் குழுமத்துடன் இந்த நிறுவனம் கூட்டணி அமைந்திருந்தது (கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர் நினைவிருக்கிறதா?). காஸ்ட்லியான கமாண்டோ 961 பைக்கின் உற்பத்தியும் அதில் அடக்கம். ஆனால் இவை எதுவுமே திட்டமிட்டபடி நடக்காததுதான் நெருடல்.

டிவிஎஸ்ஸுக்கு இருக்கும் சிக்கல்!

Atlas Nomad
Atlas Nomad
Norton Motorcycles

தற்போதைய சூழலில் இந்தியாவில் 6 டீலர்களைக் கொண்ட கைனடிக் குழுமத்தின் மோட்டோராயல் மல்ட்டிபிராண்டு டீலர்ஷிப் (சென்னையில் ஒன்று உண்டு), BS-6 விதிகள் காரணமாக விநோதமான பிரச்னையைச் சந்தித்திருக்கிறது. அதாவது இந்த ஆண்டில் விற்பனை செய்வதற்கு, இவர்களிடம் BS-6 விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்ட மாடல்கள் இல்லை என்பதே சோகம். ஏனெனில், மோட்டோராயலில் இருக்கும் ஹயோசங், FB மோண்டியல், SWM, நார்ட்டன், MV அகுஸ்டா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள், Euro 5 விதிக்கு அப்டேட் ஆகி வர 2021 வரை ஆகிவிடும்! மேலும் 500சிசி-க்கும் குறைவான பைக்குகளை உற்பத்தி செய்ய, பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் ஏற்கெனவே டிவிஎஸ் கூட்டணி அமைத்திருப்பது தெரிந்ததே. இதன் வெளிப்பாடாக, பிஎம்டபிள்யூ G310R/G310GS மற்றும் அப்பாச்சி RR310 பைக்குகள் வந்துவிட்டன; எனவே ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், டிவிஎஸ் எப்படிச் செயல்படும் என்பதைப் பார்க்க ஆர்வமாகவே இருக்கிறோம். தோனி மற்றும் கமல்ஹாசன் (ஹேராம் படத்தில் வருமே), நார்ட்டன் பைக்குகளை வைத்திருக்கிறார்கள்!

அடுத்த கட்டுரைக்கு