பன்னிரண்டு ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்த போலோவின் உற்பத்தியை நிறுத்துவது என்று ஃபோக்ஸ்வாகன் முடிவு செய்துவிட்டது. இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேலான போலோ கார்கள், நம்நாட்டில் விற்பனையாகி இருக்கின்றன என்ற செய்தியே...போலோ மீது அதன் ரசிகர்கள் கொண்டிருந்த காதலுக்குச் சாட்சி. அதன் கவர்ச்சி, பெர்ஃபாமன்ஸ், ஓட்டுதல் அனுபவம், தரம் என்று அனைத்துமே போலோ ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்டது. அதனால் அது இந்தியாவை விட்டு விடைபெறுவதற்கு முன்னர், அதற்குக் கொடுக்கும் ஒரு மரியாதையாக `லெஜெண்ட்’ என்ற பெயரில் ஒரு லிமிடெட் எடிஷனை ஃபோக்ஸ்வாகன் அறிமுகம் செய்திருக்கிறது.
போலோவின் GT TSI எடிஷனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இது, வெறுமனே 700 கார்கள் மட்டுமே விற்பனைசெய்யப்படும். ஒரு லிட்டர் டர்போ இன்ஜின் கொண்ட இது 110 bhp சக்தியையும் 175 Nm டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ள இதன் ஆன்ரோடு விலை ரூ.10.25 லட்சம்.

சரி, லெஜெண்ட் எடிஷனில் என்ன ஸ்பெஷல் என்றால், `Legend' என்ற முத்திரையும் பாடி கிராபிக்ஸும்தான் பிரதானமாகக் கண்ணுக்குத் தெரிகின்றன. கறுப்பு வண்ணத்தில் இருக்கும் அதன் ரூஃப் ரெயில் இன்னொரு அட்ராக்ஷன்.
லெஜெண்ட் அறிமுகமான அதே தினம், போலோவின் பல்வேறு மாடல்களைப் பத்திரிகையாளர்களுக்கு சென்னை ரேஸ் மைதானத்தில் ஓட்டிப் பார்க்கும் அனுபவத்தை அளித்தது ஃபோக்ஸ்வாகன். இந்தப் பரவச அனுபவத்தில் நம்முடைய வாசகர் சரவணனும் இணைந்து கொண்டார்.
மீண்டும் சந்திப்போம் போலோ!