கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

டைகூனுக்கு முதல் பிறந்த நாள்!

ஃபோக்ஸ்வாகன் டைகூன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபோக்ஸ்வாகன் டைகூன்

அனிவர்ஸரி எடிஷன்: ஃபோக்ஸ்வாகன் டைகூன்

இந்தப் பண்டிகைக் காலத்தில் ஃபோக்ஸ்வாகனின் கொண்டாட்டம், அதன் டைகூன் காரை மையப்படுத்தி நடத்தப்பட்டது. டைகூன் விற்பனைக்கு வந்து 1 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, அதன் முதல் பிறந்த நாள் விழாவை அதன் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதத்தில், லோனாவாலாவில் இருக்கும் ஆம்பிவேளியின் விமான ஓடுபாதையில் நடத்தினார்கள்.

ஸ்பீட் டெஸ்டில் - ஜஸ்ட் லைக் தட் - 150 கிமீ வேகத்தை எட்ட முடிந்தது. இப்படி ஒரு வேகத்தில் டைகூனை ஓட்டும்போது குறுக்கே ஏதாவது ஆடு மாடு வந்துவிட்டால் வண்டியை உடனடியாகத் திருப்பும் அதே வேகத்தில் மீண்டும் தன் லேனுக்குச் சடுதியில் திரும்பிவர சுலபமாக இயலும் என்பதை, மூஸ் டெஸ்டில் (Moose Test) -ல் நாமே சோதனை செய்து பார்க்க முடிந்தது. ஸ்லாலம் (Slalom) எனப்படும் ஸ்டீயரிங்கை வளைத்து வளைத்து ஓட்டும் டெஸ்ட்டில், வேகத்தைக் குறைக்காமல், பிரேக்கில் கால் வைக்காமல் ஓட்டுவதற்கு டைகூன் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை உணர முடிந்தது.

இந்தக் கொண்டாட்டங்களுக்கு டைகூன் தகுதி படைத்தது என்பதற்கு முக்கியமாக மூன்று காரணங்களைச் சொல்லலாம். அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்திலேயே வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அது ஸ்டார்ட்/ஸ்டாப், டயர் பிரஷர் மானிட்டர் ஆகிய வசதிகளைச் சேர்த்தது. ஸ்டார்ட்- ஸ்டாப் வசதியைச் சேர்த்ததன் பலனாக மைலேஜ் 6%அளவுக்குக் கூடியதாக ARAI ஐ மேற்கோள் காட்டி அது கூறியது.

அடுத்ததாக டைகூன் குளோபல் NCAP சோதனையில் `அடல்ட் சேஃப்டி' மற்றும் `சைல்ட் சேஃப்டி' ஆகிய இரண்டிலுமே 5 ஸ்டார் பெற்று, தான் ஒரு பக்காவான பாதுகாப்பு கார் என்பதை நிரூபித்திருக்கிறது. இதற்கு முன்பு செய்யப்பட்டு வந்த குளோபல் NCAP சோதனைக்கும், இப்போது புதிதாக மாற்றியமைப்பட்டிருக்கும் டெஸ்ட்டுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. முன்பிருந்த வரைமுறைகளின் படி நேருக்கு நேராக கார்கள் மோதிக் கொண்டால், ஏற்படும் விளைவுகளைs சோதனை செய்யும் க்ராஷ் டெஸ்ட் மற்றுமே பிரதானமாக இருந்தது. ஆனால், இப்போது பக்கவாட்டில் இருந்து வேறு ஒரு கார் வந்து மோதினாலும், சோதனைக்கு உட்படுத்தப்படும் காரில் இருக்கும் பயணிகள் பாதுகாப்பாக இருப்பார்களா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சோதனை செய்கிறது. அது மட்டுமல்லாமல் `Side Pole Impact' அதாவது காரின் ஒரு பக்கம் மட்டும் ஒரு கம்பத்தில் மோதினால் பயணிகள் பாதுகாப்பாக இருப்பார்களா என்பதைக் கண்டறியும் சோதனையிலும் டைகூன் பாஸாகியிருக்கிறது.

இதில் டைகூன் பெருமைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், குழந்தைகளுக்கான ISOFIX சீட் பொருத்தக்கூடிய வசதியை இது கொடுக்கிறது என்பது மட்டுமல்லாது, Child Safety - டெஸ்ட்டில், GNAP நடத்திய 49 சோதனைகளில் இது 42-ல் பாஸாகியிருக்கிறது. அதேபோல அடல்ட் சேஃப்டி என்று எடுத்துக் கொண்டால், பயணிகளின் தலை மற்றும் கழுத்தைப் பாதுகாக்கும் அம்சங்களை முக்கியமாகச் சொல்லலாம். அடல்ட் டெஸ்ட்டில், இது 34க்கு 29.4 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறது.

டைகூனுக்கு முதல் பிறந்த நாள்!

முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் அடையாளமாக ஃபர்ஸ்ட் அனிவர்ஸரி எடிஷனை ஃபோக்ஸ்வாகன் விற்பனைக்கு இறக்கியிருக்கிறது. `ரைஸிங் புளூ' நிறம் இதன் சிறப்பாக இருக்கும்.

இந்த ஒரு ஆண்டில் டைகூனின் விலை அடுத்தடுத்து மூன்று முறை ஏற்றப்பட்டிருக்கிறது. அதேசமயம், விழாக்காலச் சலுகையாக பெரிய அளவுக்கு தள்ளுபடியும் நடந்தது.

க்யூட்டான, பாதுகாப்பான, ஸ்போர்ட்டியான எஸ்யூவி வேண்டும் என்கிறவர்களுக்கான தேர்வு டைகூன் என்பது, இந்த ஓர் ஆண்டில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.