Published:Updated:

முன்பு 5 சீட், இப்போது 7 சீட்... வந்துவிட்டது டிகுவான் ஆல்ஸ்பேஸ்!

டிகுவான் ஆல்ஸ்பேஸ் (Tiguan All space)
டிகுவான் ஆல்ஸ்பேஸ் (Tiguan All space)

டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் இன்று விற்பனைக்கு வந்துவிட்டது.

எஸ்யூவி போட்டியில் ஃபோக்ஸ்வாகன் இறங்கிவிட்டது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய நான்கு எஸ்யூவிகளில் முதல் எஸ்யூவியைக் கொண்டுவந்துவிட்டார்கள். இன்று, 33.17 லட்சம் ரூபாய் என, எக்ஸ்ஷோரூம் விலையில் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபோக்ஸ்வாகன்.

Tiguan Allspace
Tiguan Allspace

டிகுவான், இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் எஸ்யூவிதான் என்றாலும் தற்போது இருப்பது 5 சீட் மாடல். ஆல்ஸ்பேஸ் (Allspace) அதே காரின் 7 சீட் வேரியன்ட். 2500 கார் இம்போர்ட் செய்யக்கூடிய திட்டத்தின் கீழ் இந்த காரை CBU முறையில் இறக்குமதி செய்திருக்கிறார்கள். ஆடி, ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன் மூன்று நிறுவனத்துக்கும் சேர்த்து 2500 கார் இறக்குமதி என்பதால், டிகுவான் ஆல்ஸ்பேஸ் மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படவுள்ளது. அதுமட்டுமல்ல, ஏற்கெனவே இருக்கும் 5 சீட் டிகுவான் இனி விற்பனையிலிருந்து நிறுத்தப்படும்.

பழைய டிகுவான் மாடலைவிட 5 லட்ச ரூபாய் அதிக விலையில் வந்துள்ள இந்த காரில் எக்ஸ்டீரியர், இன்ட்டீரியர் டிசைன் எதுவும் மாறவில்லை. காரின் நீளம் 215 மிமீ அளவும், வீல்பேஸ் 110 மிமீ அளவும் அதிகரித்துள்ளது. 3-ம் வரிசை பாசஞ்சர்களுக்கு ஹெட்ரூம் கொடுப்பதற்காகக் கொஞ்சம் உயரத்தையும் அதிகப்படுத்தியுள்ளார்கள். பூட் ஸ்பேஸ், 340 லிட்டர். சீட்டை மடித்து வைத்து 1,274 லிட்டர் ஸ்பேஸ் வரை உயர்த்திக்கொள்ளலாம்.

Tiguan Allspace
Tiguan Allspace

CBU வழியில் இம்போர்ட் என்பதால் ஒரே ஒரு வேரியன்ட் மட்டுமே. இதில் LED லைட்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கிளைமேட் கன்ட்ரோல், வியென்னா லெதர் சீட், 8 ஸ்பீக்கர் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் பூட் டோர் போன்ற வசதிகள் வருகின்றன. 7 ஏர்பேக், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர், ஐசோபிக்ஸ் மவுன்ட், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரிவர்ஸ் கேமரா எனப் பாதுகாப்பு வசதிகள் அத்தனையும் வந்துவிடுகின்றன.

Volkswagen
Volkswagen

2.0 லிட்டர் TSI டர்போ எனும் பெட்ரோல் இன்ஜின் மட்டுமே வருகிறது. இது 190bhp பவர் மற்றும் 320Nm டார்க் உருவாக்ககூடியது. 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ், பேடில் ஷிஃப்ட்டர் வசதியுடன் வருகிறது. 4 வீல் டிரைவ் மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் ஸ்டாண்டர்டு வசதி. விலையை வைத்துப் பார்க்கும்போது ஸ்கோடா கோடியாக், டொயோட்டா பார்ச்சூனர் போன்ற கார்களுக்குப் போட்டியாக வருகிறது இந்த கார்.

அடுத்த கட்டுரைக்கு