Published:Updated:

நார்ட்டனுக்கு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறது டிவிஎஸ்?

நார்ட்டன் - டிவிஎஸ்
நார்ட்டன் - டிவிஎஸ் ( Twitter )

ப்ரிமீயம் பிராண்டாக அறியப்படும் நார்ட்டனின் வருடாந்திர உற்பத்தி வெறும் 400 பைக்குகள்தான்! வருடத்துக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான டூ-வீலர்களை உற்பத்தி செய்யும் டிவிஎஸ், இந்த எண்ணிக்கையை ஒரு ஷிஃப்ட்டின் சிலமணி நேரங்களிலேயே தாண்டிவிடும்.

இந்திய ரூபாய் மதிப்பில் 153.12 கோடிக்கு, பிரிட்டனைச் சேர்ந்த நார்ட்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை, தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது. 50சிசி மொபெட் வழியே டூ-வீலர் தயாரிப்பில் 42 வருடங்களுக்கு முன்பு நுழைந்த ஒரு நிறுவனம், 122 வருடம் பழைமையான ஒரு பைக் நிறுவனத்தை வாங்கியிருப்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான்! 'நெடிய வரலாறு, சர்வதேசப் புகழ், தொழில் நேர்த்தி, உலகளாவிய சந்தை மதிப்பு, பெரிய வாடிக்கையாளர் வட்டம் என நார்ட்டனைப் பிடிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன' என டிவிஎஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநரான சுதர்சன் வேணு கூறினார். இந்தப் பாரம்பர்யமிக்க நிறுவனத்தின், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த தொழில் முனைவோரின் சாதனையாகவே இது பார்க்கப்படுகிறது. ஐஷர் - ராயல் என்ஃபீல்டு போல, உலகளவில் பெயர்பெற்ற பிராண்டை ஒரு இந்திய நிறுவனம் கையகப்படுத்தும் முறை வெற்றியே பெற்றுள்ளது.

நார்ட்டனின் எதிர்காலம் எப்படி?

Norton - TVS
Norton - TVS
Autocar India

ப்ரிமீயம் பிராண்டாக அறியப்படும் நார்ட்டனின் வருடாந்திர உற்பத்தி எவ்வளவு தெரியுமா? வெறும் 400 பைக்குகள்தான்! வருடத்துக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான டூ-வீலர்களை உற்பத்தி செய்யும் டிவிஎஸ், இந்த எண்ணிக்கையை ஒரு ஷிஃப்ட்டின் சிலமணி நேரங்களிலேயே தாண்டிவிடும். நார்ட்டனின் உரிமையாளர் டிவிஎஸ்தான் என்றாலும், இரண்டுக்கும் தனித்தனியாகவே ஊழியர்கள் இருப்பார்கள். அதன்படி, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவின் தலைவராக இருந்த ஜான் ரஸ்ஸல், நார்ட்டனின் இடைக்கால CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமையில் ஓர் அணி செயல்படவிருக்கிறது. 'டூ-வீலர் துறை சார்ந்த அறிவு அவருக்கு அதிகமாக இருக்கிறது. வாடிக்கையாளர்களையும் வாகனங்களையும் நன்கு புரிந்துவைத்திருக்கும் அவர், தமது பணியைத் திறம்படச் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது' என ஜான் ரஸ்ஸல் குறித்துப் பேசியுள்ளார் சுதர்சன் வேணு.

நார்ட்டன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்கியது டிவிஎஸ்!

நார்ட்டனின் தற்போதைய தொழிற்சாலையின் Lease ஆறு மாதத்தில் முடிவடைவதால், புதிய ஆலைக்கு இந்த நிறுவனம் விரைவில் இடம்பெயரலாம். நார்ட்டனின் வரலாற்றுச் சிறப்பைத் தக்கவைக்கும் விதமாக, பைக்குகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள், UK-வில் தான் நடைபெறும். Advanced Engineering தொடர்பாக, Warwick Manufacturing Group (WMG) உடன் டிவிஎஸ் கூட்டணி வைத்திருப்பது தெரிந்ததே. தற்போது நார்ட்டன் வாயிலாக, அந்தக் கூட்டணி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கலாம். உலகெங்கும் 21 நாடுகளில் 76 டீலர்களை இந்தப் பிரிட்டன் நிறுவனம் வைத்திருக்கிறது. 'நார்ட்டனை மறுகட்டமைப்பதில், அவர்களின் வாடிக்கையாளர்களும் பங்குபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஏற்கெனவே இருக்கும் நார்ட்டன் வாடிக்கையாளர்களில் பலர், எங்களை இதற்காகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். நம்பகத்தன்மைமிக்க அவர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படும்' என சுதர்சன் வேணு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

650சிசி-961சிசி பைக்குகளின் கதி என்ன?

650CC Scramblers
650CC Scramblers
Norton Motorcycles

தனது 650சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளை, இந்திய மற்றும் ஆசிய சந்தைகளில் விற்பனை செய்ய, புனேவின் கைனடிக் குழுமத்துடன் கைகோத்திருந்தது நார்ட்டன். தற்போது, டிவிஎஸ் இந்த நிறுவனத்தைத் தன்வசப்படுத்தி விட்டதால், இதில் நிச்சயம் மாற்றம் இருக்கும். 961சிசி மற்றும் 650சிசி பேரலல் ட்வின் இன்ஜின்களின் உரிமையை, முறையே சீன நிறுவனங்களான Jinlang மற்றும் Zhongshen ஆகியோருக்கு, நார்ட்டனின் முன்னாள் உரிமையாளரான ஸ்டூவர்ட் கார்னர் விற்பனை செய்துவிட்டார்! இந்த நிலையில் கவாஸாகி வெர்சிஸ் 650-க்குப் போட்டியாக, 650சிசி இன்ஜினுடன் Cyclone RX6 என்ற பெயரில், ஒரு ADV பைக்கை Zhongshen தயாரித்தே விட்டது! எனவே இவற்றைத் தனது மோட்டார்சைக்கிள்களில் நார்ட்டன் தொடர்ந்து பயன்படுத்தமுடியுமா என்ற கேள்வி/சந்தேகம் எழுந்திருக்கிறது.

Vikatan

டிவிஎஸ்ஸுக்கு இருக்கும் சிக்கல்!

நார்ட்டனின் 800சிசி-க்கும் அதிகமான மாடல்களான Commando, Dominator, V4RR-ன் அனைத்து வேரியன்ட்களின் உற்பத்தியையும் மீண்டும் தொடங்கி, அதன் விற்பனையைப் பெருக்குவதில் தீர்க்கமாக உள்ளது டிவிஎஸ். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, தாய்லாந்து ஆகியவை அதில் பெரும்பங்கு வகிக்கும் என நம்பலாம். இந்தியாவும் இந்தப் பட்டியலில் இணையவிருக்கிறது. ஏனெனில் இந்த நாடுகளில் 800சிசிக்கும் அதிகமான பைக்குகளுக்கான சந்தை மதிப்பு இருக்கவே செய்கிறது. மேலும் சர்வதேச தரத்திலான தயாரிப்புகளை உற்பத்தி செய்யக்கூடிய திறமை, நம் நாட்டுக்கும் இருக்கிறது. 1980-களில் தொடக்கத்தில் ஜப்பானின் சுஸூகியுடன் டிவிஎஸ் கூட்டணி அமைந்த நிலையில், 2000-களின் தொடக்கத்தில் அது முடிவுக்கு வந்துவிட்டது.

Norton Motorcycles
Norton Motorcycles
Autocar India

இதைத் தொடர்ந்து 500சிசி-க்கும் குறைவான பைக்குகளைத் தயாரிக்க, பிஎம்டபிள்யூ மோட்டோராடு உடன் கடந்த 2013-ம் ஆண்டு டிவிஎஸ் கூட்டணி அமைத்தது. பிஎம்டபிள்யூ G310R/G310GS மற்றும் அப்பாச்சி RR310 ஆகிய தயாரிப்புகள் அதற்கான உதாரணம். 'பிஎம்டபிள்யூ உடனான எங்கள் கூட்டணி ரொம்பவே ஸ்பெஷல். ஆனால் நார்ட்டனின் வாடிக்கையாளர்கள், இதிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டவர்கள் என்பதை அறிந்திருக்கிறோம். அவர்களைத் திருப்திபடுத்தும்படி அந்த நிறுவனம் இயங்குவதற்குத் தேவையான உதவிகளைச் செய்வோம்' எனக் கூறியுள்ளார் சுதர்சன் வேணு. எனவே மூன்றாவது முறையாக ஒரு சர்வதேச வாகனத் தயாரிப்பாளருடன் இணைந்து, டிவிஎஸ் எப்படிச் செயல்படப்போகிறது? வீ ஆர் வெயிட்டிங்....

அடுத்த கட்டுரைக்கு