Published:Updated:

பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால்… கார் தீப்பிடிக்குமா?

தேவகோட்டை பெட்ரோல் பங்க்கில் என்ன நடந்திருக்கும்?

`தேவகோட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் காரில் டீசல் நிரப்பியதால் தீ விபத்து!' – இப்படி ஒரு செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதெப்படி… பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால், தீ விபத்து ஏற்படுமா..?

எரிபொருள் நிரப்பிய பிறகு, அந்த காரை ஸ்டார்ட் செய்ய முயற்சித்திருக்கிறார் டிரைவர். கார் க்ராங்க் ஆகாமல் திணறிய பிறகுதான் தெரிய வந்திருக்கிறது – அவர் நிரப்பியது டீசல் என்று. அருகில் உள்ள மெக்கானிக்கை வரவழைத்து, டீசலை டிரெய்ன் செய்ய முயன்றபோதுதான் இந்தத் தீ விபத்து நடந்ததாகச் சொல்கிறார்கள். பொதுவாக, பெட்ரோலைவிட டீசல் மிகவும் அடர்த்தியானது. அதிகமான கம்ப்ரஸன் இருந்தால் மட்டுமே டீசல் எரியும். அழுத்தம் இல்லாமலேயே எரியக் கூடியது பெட்ரோல்.

உதாரணத்துக்கு, ஒரு பெட்ரோலை தட்டில் ஊற்றி வைத்து பக்கத்திலேயோ, அதன் மேலேயோ ஒரு சின்னத் தீப்பொறி வைத்தால் போதும்; படாரெனப் பற்றி எரியும். இதுவே டீசலை மேலோட்டமாக எரிய வைக்க முடியாது. டீசலின் மேலே, ஒரு தீக்குச்சியை உரசி எரிய வைத்தால்கூட அது பற்றாது. இன்டர்நெலாக அழுத்தம் ஏற்பட்டால் மட்டுமே டீசல் எரிய வாய்ப்புண்டு. காரணம், இரண்டின் அடர்த்தியும் கொதிநிலையின் தன்மையில் உள்ள வேறுபாடும் அப்படி. பெட்ரோல் 40 டிகிரி செல்சியஸிலிருந்து 205 டிகிரி வரை கொதிநிலைத் தன்மை கொண்டது. டீசல் - 250 டிகிரி முதல் 350 டிகிரி செல்சியஸ் வரை பாயிலிங் டெம்பரேச்சர் கொண்டது. இப்படி இருக்கையில் டீசலை வெளியே எடுத்தபோது கார் பற்றிக் கொண்டது எப்படி என்பதுதான் குழப்பமாக இருக்கிறது.

இங்கே பல விஷயங்கள் நடந்திருக்கலாம். டீசலை டிரெய்ன் செய்யும்போது, ஏற்கெனவே உள்ள பெட்ரோலும் சேர்ந்து வெளியே வந்திருக்கலாம். அந்த நேரத்தில் பக்கத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருந்திருக்கலாம். செல்போன் கதிர்வீச்சாலும் தீப்பற்றக் கூடிய ஆபத்து உண்டு. அந்த நேரத்தில் மொபைல் அழைப்பு வந்து, அதில் கதிர்வீச்சு ஏற்பட்டிருக்கலாம். மெக்கானிக் எரிபொருளை டிரெய்ன் செய்தபோது, பேட்டரி டெர்மினலைக் கழற்றாமல் இருந்திருக்கலாம். பேட்டரி டெர்மினல்களில் ஏற்படும் ஷார்ட் ஷர்க்யூட்டால்கூட தீப்பற்றி இருக்கலாம்.

ஆனால், பெட்ரோல் காரில் டீசல் நிரப்புவதால், பொதுவாகத் தீப்பற்றும் அபாயம் உண்டா…? பெட்ரோல் காரில் டீசல் / டீசல் காரில் பெட்ரோல் – இப்படி எரிபொருளை மாற்றி நிரப்புவதை Fuel Swapping என்று சொல்வார்கள். இந்தச் சின்னக் கவனக் குறைவினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்… எப்படித் தீர்வு காணலாம் என்பதைப் பார்க்கலாம்!

Petrol pump
Petrol pump
பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகள் எவ்வளவு? | Doubt of Common Man
  • உதாரணத்துக்கு, எரிபொருள் மாற்றிப் போடப்பட்ட கார்களை சாவி கொடுத்து ஸ்டார்ட் செய்தால், க்ராங்க் ஆகவே ஆகாது. நல்ல கண்டிஷனில் இருந்தால், ஸ்டார்ட் ஆகும். இன்னும் சில கார்கள் 1 கிமீ வரை கூடப் போகும். குறிப்பிட்ட சில நேரம் கழித்து பெட்ரோலும் டீசலும் கலந்து கன்னாபின்னாவென இன்ஜின் குழம்பி… ஒரு கட்டத்தில் கார் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் வார்னிங் லைட் எரிய ஆரம்பிக்கும். ‘கிளிப்பிள்ளை’ போல் ‘கீக்கீக்கீகீ’ என சொன்னதையே திரும்பச் சொல்லும். கார் ஆஃப் ஆகி படாரென முட்டி நிற்கும். அப்புறமென்ன… பிரேக்டவுன்!

petrol and diesel
petrol and diesel
  • முந்தைய பெட்ரோல் கார்களில் டீசலை நிரப்ப வாய்ப்பு பெரிதாக இல்லை. காரணம், பெட்ரோல் கார்களின் டேங்க், டீசல் நாஸிலை உள்வாங்காது. டீசல் நாஸில்கள் அளவில் பெரிதாக இருப்பவை. இப்போது அந்த வேறுபாடு இல்லை என்பதால்தான் இந்தச் சிக்கல்.

  • பெட்ரோல் இன்ஜின் கொண்ட காரில் டீசலை நிரப்பும்போது, தடிமனான டீசலும், ஒல்லியான பெட்ரோலும் ஒன்றோடொன்று சேர முடியாமல் தவித்து, பெட்ரோல் காரில் உள்ள ஸ்பார்க் பிளக்குகள் டீசலை எரிக்க முடியாமல் தவிக்கும். அதனால், கார் நிற்கும் முன்பெல்லாம் இன்ஜெக்டர்கள் டீசல் கார்களில் மட்டும்தான் இருக்கும். இப்போது பெட்ரோல் கார்களில் ஸ்பார்க் பிளக்குகளோடு இன்ஜெக்டர்களும் வந்துவிட்டன என்பதால்… பர்ஸ் பழுக்கும் அபாயம் உண்டு.

என்ன செய்ய வேண்டும்?

  • புது கார்கள் என்றால், ‘டோ’ செய்யக் கூடாது. இதை கம்பெனியே அனுமதிக்காது. இதற்கு ‘ஃப்ளாட் பெட்’ என்றொரு சிஸ்டம் இருக்கிறது. அதாவது, காரை அப்படியே அலேக்காக ட்ரக்கில் ஏற்றி வருவது. முடிந்தளவு ஃப்ளாட் பெட் மூலம்தான் காரை ஏற்றி வர வேண்டும். வந்தவுடன் நீங்கள் நினைப்பதுபோல், உடனடியாக பெட்ரோலையோ டீசலையோ ‘சர்’ரென டிரெய்ன் செய்துவிட முடியாது.

  • இன்ஜின் ஆயில், கியர்பாக்ஸ் ஆயிலுக்கு மட்டும்தான் டிரெயின் ப்ளக் உண்டு. எரிபொருள் டேங்க்கையே இறக்கித்தான் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு இன்ஜினுக்கு வரும் ஃப்யூல் லைன்கள் அனைத்தையும் காற்றை அனுப்பி க்ளீன் செய்ய வேண்டும். பெட்ரோல் ஃபில்ட்டர், ஸ்பார்க் பிளக், ஏர் ஃபில்ட்டர் எல்லாவற்றையும் ரீ-ப்ளேஸ் செய்ய வேண்டும். இவ்வளவு வேலைகளைச் செய்தபிறகு பெட்ரோலை வைத்து இன்ஜினைச் சுத்தம் செய்து, பெட்ரோலை நிரப்பிவிட்டு காரை ஓட்ட வேண்டியதுதான்.

  • ஃப்யூல் ஸ்வாப் ஆனது தெரிந்தால்… முடிந்தவரை காரை ஸ்டார்ட் செய்யாமல் இருந்தால் சூப்பர். உடனடியாக லோக்கல் மெக்கானிக்குகளைக் கூப்பிட்டு டேங்க்கை டிரெய்ன் செய்யலாம். இதற்கு 1,000 – 1,300 ரூபாய்க்குள் வேலை முடிந்துவிடும். காரை ஓட்டி… ஃப்யூல் லைன்களுக்குள் தவறான எரிபொருள் பரவினால்… சர்வீஸ் சென்டர்தான் ஆப்ஷன். லேபர் சார்ஜோடு 8,000 ரூபாய் வரை ஆகலாம். என்ன ஒரு விஷயம் – இதனால் இன்ஜினுக்கு எதிர்காலத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பது ஓர் ஆறுதலான செய்தி!

petrol nozzle
petrol nozzle


இப்படி பெட்ரோல்/டீசல் ஸ்வாப்பிங்கைத் தடுக்க இரண்டே இரண்டு ஆப்ஷன்கள் உண்டு.

முதல் விஷயம் – உங்கள் காரின் எரிபொருள் டேங்க்கில் டீசல் அல்லது பெட்ரோல் ஸ்டிக்கரை மறக்காமல் ஒட்டிவிடுங்கள். வெறும் 50 ரூபாய்க்குள் வேலை முடியும்.

இரண்டாவது – எரிபொருள் நிரப்பும்போது, காருக்குள் ஜமீன்தார் மாதிரி பாட்டுக் கேட்டுக் கொண்டிராமல் – காரை ஆஃப் செய்துவிட்டு, கீழே இறங்கி பெட்ரோலா டீசலா… எவ்வளவுக்கு என்பதைச் சொல்லிவிட்டு, ரீடிங்கைக் கவனித்துவிட்டு நீங்களே டேங்க்கை மூடவும்!

பெட்ரோல்/டீசல் நிரப்பும்போது கவனமா இருங்க மக்கா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு