Published:Updated:

லாக்டெளனுக்குப் பிறகு பொதுப்போக்குவரத்தில் சீன அரசு என்ன செய்தது... அதை நாமும் பின்பற்ற முடியுமா?

கொரோனா சமயத்தில் வாகனப் போக்குவரத்து
கொரோனா சமயத்தில் வாகனப் போக்குவரத்து

கொரோனாவால் தற்போது பொதுப் போக்குவரத்து முறைகள் அனைத்தும் தடைபட்டிருக்கும் வேலையில், லாக்டௌனுக்குப் பிறகு இங்கே போக்குவரத்து எப்படியிருக்கும்?

ரயிலிலும், பேருந்திலும் தோள்கள் உரச, கூட்ட நெரிசலில் பயணித்து வெகுகாலம் ஆகிவிடவில்லை. வெறும் 40 நாள்கள்தான் கடந்திருக்கின்றன. ஓயாமல் ஓடிக்கொண்டிருந்த ரயில், பேருந்து, மெட்ரோ ரயில், ஃபிளைட், கார், பைக் என எல்லாவற்றுக்கும் கொரோனாவால் விடுமுறை கிடைத்திருக்கிறது. லாக் டௌன் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டாலும் நாம் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. பொதுப் போக்குவரத்தை எடுத்துக்கொண்டால் சமூக விலகலால் 40 பேர் போகக்கூடிய பேருந்தில் 15 பேர் மட்டுமே செல்லமுடியும். நான்கு பேர் போகக்கூடிய காரில் இரண்டு பேர் மட்டுமே செல்லமுடியும். போக்குவரத்து தட்டுப்பாடால் பாதிக்கப்படப் போவது மிடில் கிளாஸ் மக்கள்தான்.

பரபரப்பான திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இயங்காமல் நிற்கும் பேருந்துகள்
பரபரப்பான திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இயங்காமல் நிற்கும் பேருந்துகள்

சீனாவிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்

76 நாள் லாக் டௌன் முடிந்த அடுத்த நாளே வுஹான் மாகாணத்தில் 6,26,300 பேர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். வுஹானுக்கு உள்ளே வந்தவர்கள் மற்றும் வெளியே சென்றவர்களின் எண்ணிக்கை இது. இதில் சப்வே ரயிலைப் பயன்படுத்தியவர்களே அதிகம். இதே போன்ற ஒரு சவால் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. லாக்டௌவுன் முடிந்த முதல் வாரத்தில் நிச்சயமாக நகரங்களிலிருந்து வெளியேறுபவர்களும் நகரங்களுக்குள் வருபவர்களின் எண்ணிக்கையும் எக்குத்தப்பாக அதிகரிக்கும். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பு, பொதுப்போக்குவரத்தைத் திறந்து விடும் தவற்றை மட்டும் அரசு செய்துவிடவே கூடாது. அது நிலமையை இன்னும் கடினமாக்குமே தவிற உதவாது.

சென்னையில் இருந்து கோவை அழைத்துவர தற்போது ஒரு ட்ரிப்புக்கு 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள் கார் ஓட்டுநர்கள்.
India under Lockdown
India under Lockdown
Rajanish Kakade - AP

லாக் டெளனுக்குப் பிறகு சீனாவில் டாக்ஸி பயன்பாடு அதிகரித்துள்ளது. டாக்ஸி விலையும்கூட அதிகரித்துள்ளது. தனியார் டாக்ஸி, ஆட்டோ மற்றும் கேப் போக்குவரத்துக்கு அனுமதித்தாலும் ஒரு வாகனத்தின் எத்தனை பேர் செல்கிறார்கள், அவர்களின் சுகாதாரம் மற்றும் பயணத்தின் விலையில் கவனம் இருக்கவேண்டும். சமீபத்தில் டிரைவர் ஒருவரிடம் பேசும்போது, வங்கி அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்காக தற்போது கார் ஓட்டிக்கொண்டிருப்பதாகக் கூறினார். கோவையைச் சேர்ந்த ஒருவர், தன் மகனைச் சென்னையில் இருந்து அழைத்து வர இவருக்கு 15,000 ரூபாய் கொடுத்தாராம். வங்கி மேலாளர் ஒருவரை அலுவலகம் கூட்டிச் சென்று மீண்டும் கூட்டிவந்தால் 1000 ரூபாய் தருகிறாராம். மக்கள் அதிகம் வெளியே வராத சூழலில் வருபவர்களிடம் சம்பாதித்துதான் பிழைப்பு ஓடுகிறது என்கிறார் அந்த டாக்ஸி ஓட்டுநர்.

Taxi
Taxi
Document photo

லாக் டௌன் முடிந்த பிறகும் இந்த நிலை தொடரும். பல லட்சம் வாகன ஓட்டுநர்கள் தற்போது ஊதியம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அரசுப் போக்குவரத்து எதுவும் இல்லாத வேலையில் மக்களின் அடுத்த ஆப்ஷன் இந்த டாக்ஸிகள்தான். இந்த ஒரு நம்பிக்கை போதும் பயணத்தின் விலையை அதிகரிக்க. கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நேரத்தில் பெட்ரோல் விலையைக் குறைத்தால் இதைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அரசு ஏற்கெனவே பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரியை அதிகப்படுத்தியுள்ளது.

கொரோனா லாக்டெளன் முடிந்த முதல் மாதம் ஒவ்வொரு குடும்பமும் தங்களது பட்ஜட்டில் போக்குவரத்துச் செலவை நிச்சயம் அதிகரிக்க வேண்டியிருக்கும்.
லாக் டௌனுக்குப் பிறகு...
சீனா எப்படிப் பொது போக்குவரத்தை மீட்டெடுத்தது?

27 மாகாணங்கள் மற்றும் 428 நெரிசலான நகரங்களின் போக்குவரத்தைக் கையாள்வது சுலபமான விஷயமில்லை. மார்ச் இறுதியில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் வழக்கத்தை விட 40 முதல் 50 சதவிகிதம் குறைவான மக்கள்தான் தினசரி பொது போக்குவரத்தைப் பயன்படுத்த முன்வந்தார்கள். ஆனால், இதுவே பெரிய தொகைதான். பணத்தால் ஏற்படும் ரிஸ்க்கைக் குறைத்து இவர்கள் அனைவரையும் கான்ட்டாக்ட் டிரேசிங் செய்வதற்காக டிக்கெட் பரிவர்த்தனை முழுவதையும் டிஜிட்டலுக்கு மாற்றினார்கள். சிறிய முனிசிபல் பேருந்திலிருந்து, ரயில் வரை எல்லாவற்றுக்கும் QR கோடு, வீசேட், அலி-பே, ஸ்மார்ட்கார்ட் முறைகள் வந்தன.

Fully covered frontline workers
Fully covered frontline workers
Jens Meyer - AP

அதிக ரிஸ்க் இருந்த வுஹான் போன்ற இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் மாஸ்க், கண்கவசம் மற்றும் முழுப் பாதுகாப்பு உடையில் செயல்பட்டார்கள். பேருந்துகளில் பயணிகளுக்கு இடையே இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. விமான நிலையம் போன்ற இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறுபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. பேருந்துகள் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

சென்னையில் வாடகை சைக்கிள்
சென்னையில் வாடகை சைக்கிள்
கொரோனா லாக்டௌனின் போது சைக்கிள் வாடகைக்கு எடுப்பது 120-187 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சீனாவில் வாடகை சைக்கிள் என்பது பிரபலமான விஷயம். கொரோனா லாக்டௌனுக்குப் பிறகு, இந்த வாடகை சைக்கிள்கள் கைகொடுத்துள்ளன. சென்னை மெட்ரோ நிலையங்களில் வாடகைக்குக் கிடைக்கும் ஸ்மார்ட் பைக் போல சீனாவில் மெய்ட்டுவான் பைக் நிறுவனம் பிரபலமானது. கொரோனா லாக்டௌனின் போது மட்டும் இவர்கள் 23 லட்சம் முறை சைக்கிளை வாடகைக்குக் கொடுத்திருக்கிறார்கள். இது வழக்கத்தை விட 120-187 சதவிகிதம் அதிகம். பீஜிங்கில் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை 69 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக பீஜிங் சைக்கிளர்ஸ் அமைப்பு தெரிவிக்கிறது. இந்த லாக் டௌனுக்குப் பிறகு 3 கி.மீ தூரத்தைக் கடந்து சைக்கிளில் செல்பவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாம்.

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து

சென்னை, கோவை, திருச்சி போன்ற அடர்த்தியான நகரங்களில் மாற்றுப் போக்குவரத்து முறையாகத் தமிழக அரசு இதை ஊக்குவிக்கலாம். சைக்கிள் ஷேரிங் என்பது விலையை அடிப்படையாக வைத்து இயங்கும் சந்தை. பொதுவான விலையில் ஸ்மார்ட் பைக் போல் இன்னும் அதிக நிறுவனங்களை நகரங்களில் பரவலாகக் களத்தில் இறங்கச்செய்தால் பேருந்து, ரயில்களில் மக்கள் நெரிசல்களை நிச்சயம் சமாளிக்கமுடியும்.

விமானநிலையம்
விமானநிலையம்
Hau Dinh - AP

இந்தியாவில் விமானப் பயணிகள் குறைவு. அதுமட்டுமல்ல வான்வழி போக்குவரத்தைச் சுலபமாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்தே முதலில் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதற்குப் பிறகே மற்ற போக்குவரத்து முறைகள் திறக்கப்படும். உள்நாட்டு ரயில் போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக சீர் செய்யப்பட்ட பிறகே லோக்கல் ரயில்களும் பேருந்துகளும் செயல்பாட்டுக்கு வரும். சீனா உட்பட மற்ற நாடுகளும் இதே முறையைத்தான் கையாண்டுள்ளன.

கொரோனாவுக்குப் பிறகு விலை குறைந்த புது வாகனங்கள் வாங்குபவர்கள் அதிகரிப்பார்கள் என்று கணிக்கிறார்கள் ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள். அதிலும் முக்கியமாகப் பழைய பைக் மற்றும் ஸ்கூட்டர் வாங்குவது அதிகரிக்கப்போவதாகச் சொல்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது. அதுவும் தற்போது தொழிற்துறையின் விநியோகச் சங்கிலி உடைபட்டுக் கிடக்கும் நிலையில் போக்குவரத்து அதிகரிப்பதற்கு முன்பு ஆட்டோமொபைல் சப்ளை செயினை வலுவாக்கவேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி கொடுத்திருப்பது ஒரு நல்ல விஷயம்தான்.

சென்னை
சென்னை
பெரிய மாற்றங்கள் உடனே வந்துவிடாது. லாக்டௌன் முடிந்த உடன் பழைய நிலை திரும்பிவிடாது. ஆனால், சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் சில மாதங்களிலேயே அனைத்தையும் சரிசெய்துவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அடுத்த கட்டுரைக்கு