Published:Updated:

20 வருட பழைய கார்களைப் பயன்படுத்தலாமா... மத்திய அரசின் புதிய கொள்கை சொல்வது என்ன?!

car scrap
car scrap

20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்கள் உங்கள் கைவசம் இருக்கும் பட்சத்தில், அதை ஸ்க்ராப்பேஜ் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும். அதாவது, குப்பையில் போட வேண்டும்.

2021 பட்ஜெட்டில் ஒரு முக்கியமான விஷயத்துக்கு நிர்மலா சீதாராமனுக்குப் பாராட்டுகள் குவிகிறது. அதுதான் ‘ஓல்டு கார் ஸ்க்ராப்பேஜ் பாலிஸி’. ஆட்டோமொபைல் துறையில் எக்கச்சக்க லைக்குகள். ‘இதற்குத்தானே காத்துக் கொண்டிருந்தோம்’ என்று கார் நிறுவனங்களும், உதிரிபாகத் தயாரிப்பாளர்களும் இந்த பாலிஸியைத் தூக்கிக் கொண்டாடுகிறார்கள். அது என்ன கார் ஸ்க்ராப்பேஜ் பாலிஸி?

அதாவது, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை ஸ்க்ராப்பில் போட வேண்டும் என்பதுதான் அது. ஆனால், அரசாங்கத்துக்குச் சொந்தமான வாகனங்கள், PSU எனும் Public Sector Undertaking வாகனங்கள் போன்றவற்றுக்கு மட்டும்தான் இந்த ஸ்க்ராப்பேஜ் திட்டம் என்றார்கள். இப்போது பட்ஜெட்டில், தனியார் மற்றும் டாக்ஸி வாகனங்கள்... அதாவது ஓன் போர்டு மற்றும் T போர்டு வாகனங்களுக்கும் இந்த ஸ்க்ராப்பேஜ் பாலிஸியை அறிமுகப்படுத்தி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
"20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்கள், Scrappage Policy - கார் அழிப்புக் கொள்கை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். இதுவே கமர்ஷியல் வாகனங்களுக்கு 15 ஆண்டுகள்தான் உச்சகட்டம்!"
நிர்மலா சீதாராமன்

ஸ்க்ராப்பேஜ் பாலிஸி என்றால் என்ன, எதற்கு?

20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்கள் உங்கள் கைவசம் இருக்கும் பட்சத்தில், அதை ஸ்க்ராப்பேஜ் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும். அதாவது, குப்பையில் போட வேண்டும்.

BS-4 நார்ம்ஸில் இருந்து ஏப்ரல் 2020–ல் இருந்து வாகனங்கள் அனைத்தும் BS-6-க்கு அப்டேட் ஆனது நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வாகனங்கள் வெளியிடும் கார்பன் எமிஷனைக் குறைக்கும் அம்சம்தான் BS-6. பழைய கரி உமிழும் வாகனங்களைக் குப்பையில் கிடத்திவிட்டால், வாடிக்கையாளர்கள் புது கார், அதாவது BS-6–க்கு மாறுவார்கள். அதனால் சுற்றுச்சூழலில் சீர்கேடு ஏற்படுவது குறையும் என்பதால்தான் இந்த ஸ்க்ராப்பேஜ் பாலிஸி.

அப்படியென்றால், 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காரை ஓட்ட முடியாதா?

இதை `Volunteer Car Scrappage Policy' ஆகத்தான் அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. அதாவது, நீங்கள் உண்மையிலேயே சுற்றுச்சூழலில், நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் வாகனங்களை ஸ்க்ராப்பில் போட்டுவிட்டு, புது வாகனங்களுக்கு அப்டேட் ஆக வேண்டும். அந்த முடிவு நம் கையில்தான் இருக்கிறது. அப்படி அந்த காரை ஸ்க்ராப் ஆக்கும் பட்சத்தில், புது கார் வாங்குவதற்கு உத்வேகமாக, ரிஜிஸ்ட்ரேஷன் மற்றும் சாலை வரி போன்றவற்றில் அந்தந்த கார் உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கப்படும்.

Car scrappage Policy
Car scrappage Policy

அதையும் மீறி, ‘நான் காரைக் குப்பையிலெல்லாம் போடமாட்டேன்; ரோட்லதான் ஓட்டுவேன்’ என்பவர்களுக்கு ஒரு வரி உண்டு. அதற்குப் பெயர் Green Tax எனும் பசுமை வரி. அதாவது, ஒவ்வொரு வாகனத்தையும் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை RC-யைப் புதுப்பிப்பதற்காக, FC-க்காக ரென்யூவல் செய்ய வேண்டும். அப்படி புதுப்பிக்கும்போது, இந்தப் பசுமை வரியை 15% முதல் 25% வரை கூடுதலாகக் கட்ட வேண்டும். சாலை வரி எல்லாம் எக்ஸ்ட்ரா! இதுவே டெல்லி போன்ற மாசு அதிகமான நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் என்றால், பசுமை வரி 50%–க்கு மேல் எகிறியடிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த ஃபிட்னெஸ் சர்ட்டிஃபிகேட், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டும்தான் என்பதையும் கூடவே நினைவில் கொள்ள வேண்டும். அந்த 20 ஆண்டு கால கார் - அரசுக்குச் சொந்தமான Automated Fitness Center-களில் சோதனை செய்யப்படும். இந்தச் சோதனையில் மாசு உமிழ்வு, காரின் பாதுகாப்புத் தரம் போன்றவற்றிலெல்லாம் கார் டாப் மார்க் வாங்க வேண்டும். அந்த டெஸ்ட்டில் பாஸ் ஆனால்தான் உங்களுக்கு FC வழங்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சோதனைக்கு ரூ.40,000வரை ஆகுமாம். கூடவே பசுமை வரி, சாலை வரி... எல்லாமும் உண்டு. இப்படி தகுதிச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படாத வாகனங்கள் அல்லது ஃபெயிலான வாகனங்கள் சாலைகளில் ஓட்டினால் அது சட்டப்படி குற்றம்.

ஸ்க்ராப்பேஜ் பாலிஸியால் நன்மை உண்டா?

"எல்லாம் ஓகே... வரி கட்டிட்டா மாசு குறைஞ்சிடுமா?" என்பவர்களுக்கு இப்படிப் பதில் சொல்கிறார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி. "இதன் மூலம் வரும் வரிப் பணம், தனியாக ஒரு அக்கவுன்ட்டில் சேரும். இது மாசுக்கட்டுப்பாட்டுக்காக மட்டுமே செலவு செய்யப்படும்" என்பதுதான் அவரது பதில்.

Auto scrap
Auto scrap

இந்தியா முழுக்க 51 லட்சம் தனியார் வாகனங்களும், 17 லட்சம் கமர்ஷியல் வாகனங்களும் ஸ்க்ராப்பில் விழக் காத்திருக்கின்றன. கார்களை ஸ்க்ராப் ஆக்குவதால், வாகனங்கள் தயாரிக்கப் பயன்படும் ஸ்டீல், உலோகம், இரும்பு போன்றவற்றை இறக்குமதி செய்யத் தேவையில்லாத பட்சத்தில், கார்களுக்கான தயாரிப்புச் செலவு கணிசமாகக் குறையும். இதனால் கார்களின் ஆன்ரோடு விலை குறையும். மைலேஜ் அதிகம் தரும் BS-6 தரும் வாகனங்களால் எரிபொருள் பயன்பாடும் குறைவதால், கச்சா எண்ணெய் இறக்குமதி தளர்ந்து, அந்நியச் செலாவணி இழப்பீடும் குறையும் என்கிறார்கள். முக்கியமாக, 10,000 கோடி ரூபாய்க்குத் தொழில் துறையில் முன்னேற்றமும், 50,000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பும் கிடைக்குமாம். அதைவிட, மாசில்லா பூமி உருவாகும் என்பதும் இதன் ஐடியா.

"ராப்பகலா சம்பாதிச்சு பார்த்துப் பார்த்து வாங்கின காரைக் குப்பையில போடணுமா" என்று பழைய கார் ஓனர்கள் புலம்புவது நன்றாகவே கேட்கிறது. ஆனால், காசை விட மாசு முக்கியமே ப்ரதர்!
அடுத்த கட்டுரைக்கு