முதலில் பஸ்ஸார்டு என்றார்கள்... பிறகு கிராவிட்டாஸ் என்று கொண்டாடினார்கள். பிறகு H7X என்று குறியீட்டுப் பெயரெல்லாம் வைத்து அழைத்தார்கள். ஒருவழியாக இந்த ஹேரியரின் 7 சீட்டர் வெர்ஷனுக்கு, பழைய சஃபாரியின் பெயரையே சூட்டியே களமிறக்கி விட்டிருக்கிறார்கள். டாடாவின் சஃபாரிதான் இப்போதைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க எஸ்யூவிகளில் ஒன்று. இருக்காதா பின்னே… 90'களில் சஃபாரிதான் சூப்பர் ஸ்டார். எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், XUV5OO, 7 சீட்டர் க்ரெட்டா போன்ற கார்களுக்குப் போட்டியாக வந்திருக்கும் டாடா சஃபாரியின் ப்ளஸ் மைனஸ் என்ன?
ப்ளஸ்!
கட்டுமானத் தரம்: லேண்ட்ரோவர் டிஃபெண்டர் போல, லேடர் ஃபிரேமிலிருந்து மோனோ காக் வடிவமைப்புக்கு மாறியிருக்கிறது சஃபாரி. லேண்ட்ரோவர் ப்ளாட்ஃபார்மான OmegaArc கட்டுமானத்தில் தயாராகியிருக்கிறது சஃபாரி என்பதுதான் இதன் முதல் ப்ளஸ். டாடாவின் நெக்ஸான், அல்ட்ராஸ் மாதிரி நிச்சயம் சஃபாரியும் 5 ஸ்டார் வாங்கும் என்றே தெரிகிறது..
பாதுகாப்பு: கட்டுமானம் தாண்டி இதில் பாதுகாப்பு வசதிகளையும் எக்கச்சக்கமாகக் கொடுத்திருக்கிறது டாடா. 6 காற்றுப்பைகள், (வாவ்!), டிராக்ஷன் கன்ட்ரோல், ESC, EBD, CSC, TPMS, ISOFIX, ஹில் டிசென்ட் கன்ட்ரோல், டெரெய்ன் ரெஸ்பான்ஸ் மோடு என ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகள் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிசைன்: சஃபாரியின் ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸையும், Tri Arrow Pattern கொண்ட கிரில்லையும் நேராகப் பார்த்தால், கார் சிரிப்பதுபோலவே இருக்கிறது. பின் பக்கமும் முழு அளவு குவார்ட்டர் கிளாஸ், ரூஃப் டிசைன், பெரிய 18 இன்ச் பெரிய வீல்கள் போன்றவை – இதன் ரோடு பிரசன்ஸைத் பிரமாண்டமாகக் காண்பிக்கின்றன.
நிலைத்தன்மை: கட்டுமானமும் ஏரோ டைனமிக்ஸும்தான் சஃபாரியின் நிலைத்தன்மைக்குப் பெரிதும் உதவுகிறது. சில கார்கள் மூன்றிலக்க வேகங்களில் அலைபாயும். சஃபாரி ஆடாமல் அசையாமல் சீராக பறக்கிறது. திருப்பங்களிலும் அவ்வளவாக பாடி ரோல் தெரியவில்லை.
மூன்றாவது வரிசை இடவசதி: சில 7 சீட்டர் கார்களில், கடைசி வரிசை இருக்கைகள் சும்மா பேருக்குத்தான் இருக்கும். குழந்தைகளுக்கு வேண்டுமானால் செட் ஆகலாம். ஆனால், சஃபாரியின் 3–வது வரிசை சீட், நல்ல தாராளம். பெரியவர்கள்கூட கால்களை நம் இஷ்டத்துக்கு நீட்டி மடக்கிப் பயணிக்கும் அளவுக்கு இடவசதி தாராளமாகவே இருக்கிறது.
சொகுசு: இரண்டாவது வரிசை சீட்டும் நல்ல சொகுசு. 6 சீட் போதும் என்றால், கேப்டன் சீட் நல்ல ஆப்ஷன். பின் பக்கப் பயணிக்கு லெக்ரூமை அதிகரிக்கும் Boss மோடு வசதி நல்ல வடிவமைப்பு. மூன்றாவது வரிசைக்குக்கூட ஏசி வென்ட்டும், 2 USB சார்ஜிங் பாயின்ட்டும் உண்டு.
இன்ஜின்: இதன் 2.0 லிட்டர் – 4 சிலிண்டர் Kyrotec டர்போ இன்ஜினில் 170bhp பவர் தெறிப்பதால், மிட்–ரேஞ்ச் – லோ ரேஞ்ச் – டாப் எண்ட் என எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்கிறது சஃபாரி. ஆனால், இது எல்லாமே 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் மட்டும்தான்.
டிரைவிங்: எக்கோ, சிட்டி, ஸ்போர்ட் என மோடுகள் வழக்கமான டாடா கார்களில் இருப்பதுபோல், சஃபாரியிலும் உண்டு என்பதால், டிரைவிங் அனுபவம் நன்றாகவே இருக்கிறது சஃபாரியில். ஸ்போர்ட்ஸ் மோடில் 160 கிமீ வரை பறந்தோம்.

மைனஸ்!
4வீல் டிரைவ்: சஃபாரியை ஒரு ஆஃப்ரோடராகத்தான் எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால், 2 வீல்/ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டத்தைக் கொடுத்ததால், சஃபாரி மீது ஆஃப்ரோடிங் ஆர்வலர்கள் அதிருப்தியில் இருக்கலாம்.
மோடுகள்: Sand, Mud, Wet, Rough Terrain Response என மோடுகள் இருந்தாலும், இதன் 2வீல் டிரைவ் சிஸ்டம் கொஞ்சம் திணறத்தான் செய்கிறது. சஃபாரியின் சரியான கிரவுண்ட் கிளியரன்ஸ் தெரியவில்லை. ஓரளவு மேடு பள்ளங்களைத்தான் திணறாமல் சமாளிக்கிறது சஃபாரி. பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் சஃபாரி… ப்ச்! இதுவே இதன் சின்ன சைஸ் காரான ஹேரியரின் கி.கிளியரன்ஸ் 205 மிமீ என்பதையும் கவனிக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஸ்டீயரிங்: டாடாவின் கார்களில் இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குறைந்த வேகங்களில் இதன் ஸ்டீயரிங் மிகவும் எடை அதிகமாகி, கார்னரிங் செய்யும் உற்சாகத்தைக் குறைத்து விடுகிறது. இது நெடுஞ்சாலைகளில் சிறப்பாக இருந்தாலும், சட் சட் எனத் திருப்பி வளைத்து ஓட்ட சஃபாரி அலுப்புத் தட்டுகிறது.


க்ளட்ச்/கியர்: ஓட்டுதலில் நல்ல அனுபவம் தருவது ஆட்டோமேட்டிக் சஃபாரி மட்டும்தான். மேனுவல் காரில் இதன் எடை அதிகமான க்ளட்ச், நிச்சயம் டிராஃபிக்கில் கால் வலியை ஏற்படுத்தலாம். அதேப்போல், கியர்பாக்ஸும் சொல் பேச்சுக் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இன்னும் ஸ்மூத்னெஸ் வேண்டும்.
எர்கனாமிக்ஸ்: டாடா கார்களில் இந்த எர்கானமிக்ஸ் பிரச்னை எப்போதுமே இருக்கும். உதாரணம் – சென்டர் கன்ஸோல் டிரைவரின் இடது முழங்காலில் இடிக்கிறது. அப்புறம் – அந்தச் சின்ன டச் ஸ்க்ரீன். 8.8 இன்ச் ஸ்க்ரீன் இந்தப் பெரிய காருக்குச் சிறுசுதான். ரெஸ்பான்ஸ் சுமார் என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
வசதிகள்: எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், IRA கனெக்டட் வசதி, ரியர் ஏசி வென்ட், பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் இருந்தாலும், MG, 7 சீட்டர் க்ரெட்டா போன்றவற்றில் இருக்கும் 360 டிகிரி கேமரா, ஒயர்லெஸ் சார்ஜிங், வென்டிலேட்டட் சீட்கள், ஃபுல் டிஜிட்டல் மீட்டர் போன்ற முக்கிய வசதிகள் எங்கே டாடா? குறைந்தபட்சம் நெக்ஸானில் இருக்கும் Express Cool ஆப்ஷனாவது கொடுத்திருக்கலாம்.

சஃபாரி வாங்கலாமா?
மொத்தம் 6 வேரியன்ட்களில் (XE, XM, XT, XT+, XZ, XZ+), 15–21 லட்சத்தில் வரவிருக்கும் சஃபாரி, ஹேரியரைவிட 1 லட்சம் எக்ஸ் ஷோரூமில் அதிகமாக இருக்கும். இதன் ஆன்ரோடு விலை தெரியவில்லை. ஆஃப்ரோடெல்லாம் செய்ய மாட்டோம்; ஊருக்குப் போக… Month End ட்ரிப் அடிக்க... சிட்டிக்குள் புகுந்து புறப்பட்டு வர… ஒரு அருமையான, கட்டுறுதியான 7 சீட்டர் வேண்டுமென்றால், சஃபாரியில் மேனுவலைவிட ஆட்டோமேட்டிக் மாடலைத் தேர்ந்தெடுப்பது நல்லது. XM, XZ, XZ+ என மூன்று வேரியன்ட்களில் மட்டும்தான் ஆட்டோமேட்டிக் கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.