Published:Updated:

2020 யமஹா MT-15 மற்றும் FZ-25 BS-6 பைக்குகளில் என்ன ஸ்பெஷல்?

MT-15 BS-6
MT-15 BS-6 ( Yamaha India )

MT-15 பைக்கின் அளவுகள், வசதிகள், எலெக்ட்ரிக்கலாக எந்த மாறுதலும் இல்லாவிட்டாலும், 15 மி.மீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்க அம்சம் (170 மி.மீ).

1,39,600 ரூபாய்க்கு (சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை) MT-15 பைக்கின் BS-6 வெர்ஷனைக் களமிறக்கியுள்ளது யமஹா. இது முன்பைப் போலவே Metallic Black, Dark Matte Blue எனும் இரு கலர்களைத் தவிர, புதிதாக Ice Fluo Vermillion எனும் கலர் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கிடைக்கும் நிறம் இது. இதில் அலாய் வீல்கள் ஆரஞ்ச் நிறத்தில் இருப்பதுடன், டூயல் டோன் ஃபினிஷில் பைக் கவர்கிறது. இதனால் வழக்கமான கலர்களைவிட 500 ரூபாய் அதிக விலையில் இது வருகிறது (1,40,100 ரூபாய், சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை). MT-15 BS-6 பைக்கின் விலை, BS-4 மாடலைவிட 2,861 ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது.

MT-15 BS-6
MT-15 BS-6
Yamaha India

மற்றபடி MT-15 பைக்கின் அளவுகள், வசதிகள், எலெக்ட்ரிக்கலாக எந்த மாறுதலும் இல்லாவிட்டாலும், 15 மி.மீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்க அம்சம் (170மி.மீ). முந்தைய மாடலைப் போலவே இதிலும் R15 V3.0 பைக்கிலுள்ள அதே 155சிசி VVA இன்ஜின் - ஸ்லிப்பர் கிளட்ச் உடனான 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான் இங்கேயும் தொடர்கிறது. ஆனால், அதே ஆர்.பி.எம்-களில் BS-4 மாடலைவிட 0.8bhp குறைவான பவரையும் (18.5bhp), 0.1kgm டார்க்கையும் (1.4kgm) வெளிப்படுத்துகிறது. கூடுதலாக R15 V3.0 BS-6 போலவே, இங்கேயும் சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச் மற்றும் பின்பக்க ரேடியல் டியூப்லெஸ் டயர் (140/70-R17 66H) பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், MT-15 பைக்கின் விலையுடன் ஒப்பிட்டால், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது.

FZS-25
FZS-25
Yamaha India

ஃபஸினோ 125, ரே சீரிஸ் 125 சி.சி ஸ்கூட்டர்களின் BS-6 மாடல்களின் அறிமுக விழாவில், YZF-R15 மற்றும் MT-15 பைக்கின் BS-6 வெர்ஷன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அப்போதே FZ-25, ஃபேஸர் 25 ஆகியவற்றின் BS-6 மாடல் குறித்த கேள்வி எழுந்தது. அப்போது மெளனம் காத்தாலும், தற்போது அதற்கான பதிலைத் தந்திருக்கிறது யமஹா. இதன் விலை குறித்த அறிவிப்பு வராவிட்டாலும், என்னென்ன மாற்றங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகின்றன. 150சிசி FZ போலவே, இங்கேயும் FZS வேரியன்ட் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

FZ-25
FZ-25
Yamaha India

இதை வைத்துப் பார்க்கும்போது, குறைவான வரவேற்பைப் பெற்றுள்ள ஃபேஸர் 25 பைக்கில் BS-6 வெர்ஷன் வருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. BS-4 மாடலுடன் ஒப்பிடும்போது, BS-6 வெர்ஷனின் டிசைன் மற்றும் கலர் ஆப்ஷன்களில் வித்தியாசம் தெரிகிறது. Metallic Black, Racing Blue ஆகிய சிங்கிள் டோன் கலர்களில் FZ 25 கிடைக்கிறது. இதில் Belly Pan, Bi-Functional LED ஹெட்லைட், Negative LCD மீட்டர், சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச் ஆகியவை புதிது.

Dark Cyan, Dark Matte Blue, Metallic White ஆகிய டூயல் டோன் நிறங்களில் FZS-25 வருகிறது. இதில் FZ-25 பைக்கில் புதிதாக இருக்கும் வசதிகளுடன் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கும் Knuckle Guards, தங்க நிற அலாய் வீல்கள், பெரிய வைஸர் ஆகியவை FZS-25 பைக்கின் டிசைனை ஸ்பெஷல் ஆக்குகின்றன. வெள்ளை கலர் பைக்கில், சிவப்பு நிற கிராஃபிக்ஸ் மற்றும் Rim Strip இருப்பது அழகு.

FZS-25
FZS-25
Yamaha India

முந்தைய அம்சங்களால், பைக்கின் எடை முன்பைவிட 1 கிலோ அதிகமாகிவிட்டது (153 கிலோ). மற்றபடி 249 சிசி ஆயில் கூல்டு இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு, ஏறக்குறைய BS-4 மாடலுக்குச் சமமான செயல்திறனையே இதுவும் வெளிப்படுத்துகிறது (20.8bhp பவர்/2.01kgm டார்க்). மெக்கானிக்கலாக BS-6 வெர்ஷனில் எந்த மாறுதலும் இல்லை. ஏப்ரல் 2020 முதலாக FZ-25, FZS-25 ஆகியவற்றின் விற்பனை தொடங்கும் எனத் தகவல் வந்துள்ளது. இது BS-6 மாடல் என்பதால், 4,000-8,000 ரூபாய் வரை விலை உயர்வு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு