``பயணம் செய்யக் கற்றுக்கொள்.. கற்றுக்கொள்ளப் பயணம் செய்" என்பார்கள். இனி நெடுஞ்சாலைகளில் சீராகப் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது! அதாவது சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நேரவிரயம் மற்றும் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் எளிய நடைமுறையைக் கட்டாயப்படுத்தியுள்ளது மத்திய அரசு. ஃபாஸ்டேக் (Fastag) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இது, வரும் டிசம்பர் 1, 2019 முதல் நாடெங்கும் அமலுக்கு வருகிறது. எனவே, நாடெங்கும் உள்ள சுங்கச்சாவடிகளில் 90%, இந்த வசதியுடன் தயாராக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் இந்த ஃபாஸ்டேக்கினால், சராசரியாக 9.7 லட்சம் பரிவர்த்தனைகள் நடப்பதுடன், 2019 செப்டம்பர் மாத இறுதியின் புள்ளிவிவரங்களின்படி, 56 கோடி Fastag Payment வழியே, 13,449 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வந்திருக்கிறது! 'டிஜிட்டல் இந்தியா' முழக்கத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கும் ஃபாஸ்டேக்கை, National Payments Corporation of India (NPCI) உருவாக்கியுள்ளது. இது எப்படி செயல்படுகிறது என்பதை இனி பார்ப்போம்.
#சுங்கச்சாவடிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வழக்கமாக தேசிய நெடுஞ்சாலைகளில் தொலைதூரப் பயணம் செய்வோரிடம், ஒவ்வொரு 46 கிலோ மீட்டருக்கும் ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். வாகனப் பெருக்கத்தின் காரணமாக, ஒருசில சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு, பணம் செலுத்திவிட்டுச் செல்வதில் காலவிரயம் ஏற்படுவது என்பது தவிர்க்க இயலாமல் இருந்தது. மேலும், அடுத்தடுத்து வழியெங்கும் இருக்கும் சுங்கச்சாவடிகளில் இதுபோலக் காத்திருப்பது, வாகன ஓட்டிகளை எரிச்சலடையச் செய்கிறது. இதற்கான தீர்வாகவே, ஃபாஸ்டேக் என்ற டிஜிட்டல் கட்டணத் திட்டம் பார்க்கப்படுகிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS#பாஸ்டேக் அட்டை

RFID எனப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாளத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த அட்டைகளை, காரின் விண்ட்ஷீல்ட்டில் ஒட்டிவிட வேண்டும். டோல்பிளாசாக்களின் அருகே, அதாவது 20-25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது, அங்கேயுள்ள ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்பச் சாதனம், ஃபாஸ்டேக் மூலம் வாகன விவரங்களை கண் இமைக்கும் நேரத்தில் கண்டறிந்து, வருகைப்பதிவு செய்து வாகனங்கள் முன்னே செல்வதற்கு அனுமதிக்கும். இதற்கென சுங்கச்சாவடியில் தனி வழி அமைக்கப்படும் என்பது ப்ளஸ். எனவே, வழக்கம்போல வரிசையில் ஊர்ந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
#எவ்வாறு பெறுவது?

எல்லாச் சுங்கச்சாவடி அலுவலகத்திலும், National Electronic Toll Collection (NETC) திட்டத்தின் கீழ் வரும் வங்கிகளிலும், ஆன்லைனிலும் இதை 100 ரூபாய் செலுத்திப் பெறலாம். இதற்கு வாகனத்தின் வாகனப்பதிவுச் சான்றிதழ், வாகன உரிமையாளரின் புகைப்படம் மற்றும் இருப்பிடச்சான்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், காரில் ஒட்டவேண்டிய ஸ்டிக்கர் வீட்டிற்குத் தபாலில் வந்துவிடும். பின்னர் சிம்-கார்டுக்கு ரீசார்ஜ் செய்வது போலச் செய்ய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருந்தால், ஒவ்வொன்றுக்கும் எனத் தனித்தனியாக ஃபாஸ்டேக் அட்டைகளைப் பெற வேண்டும் (ஒரு வாகனத்தின் பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்ட அட்டையின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்). இதற்கான கட்டணத்துடன், வைப்புத்தொகையாக சில நூறு ரூபாய்களைச் செலுத்த வேண்டும் (வாகனத்தைப் பொறுத்து இது மாறுபடும்).
#கட்டணம் செலுத்தும் முறை

மொபைல் ரீசார்ஜ் போல, ஃபாஸ்டேக் அட்டைக்குக் குறைந்தபட்சம் நூறு ரூபாயிலிருந்து அதிகபட்சம் பத்தாயிரம் வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்கெனப் பிரத்யேகமான செயலி (My FASTag) உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பாஸ்வேர்டு உடன் ஒருவர் கணக்கை உருவாக்கிய பிறகு பணம் செலுத்திக்கொள்ளலாம். இதற்காகத் தேவைப்பட்டால், ஒருவரின் வங்கிக் கணக்குடன்கூட (Current/Saving) ஃபாஸ்டேக்கை இணைத்துக்கொள்ளலாம். நீங்கள் சுங்கச்சாவடியைக் கடந்தவுடன், தங்கள் காரிலுள்ள அட்டையிலிருந்து சுங்கச்சாவடிக் கட்டணம் பிடிக்கப்படும். அதற்கான தகவல், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உங்கள் மொபைலுக்கு மெசேஜ் ஆக வந்துவிடும். முன்பைப் போலவே, ரசீது முறை இங்கே கிடையாது.
#சலுகைகள்
வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் ஃபாஸ்டேக் கணக்குகளில், 2.5% சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் (மார்ச் 31, 2020 வரை மட்டுமே). இந்த நடைமுறையை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் பணியை, IHMCL எனும் இந்தியன் ஹைவே மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொள்கிறது. இதற்காக முதலில் ICICI, HDFC, ஆக்சிஸ், South Indian வங்கி, SBI ஆகிய 5 வங்கிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கை கோத்திருந்தன. தற்போது பேடிஎம் உட்பட மேலும் சில நிதியமைப்புகளும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.

ஃபாஸ்டேக் கொண்ட வாகனங்களுக்காக, டோல்பிளாசாக்களில் உள்ள 5 நுழைவு வாயில்களில், 4 பிரத்யேகமாக ஒதுக்கப்படும். அந்த வசதியில்லாத வாகனங்களுக்கு, இனி ஒரு வழியில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதற்கு வழக்கத்தைவிட இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு, மத்திய அரசே 2 ஃபாஸ்டேக்குகளை இலவசமாக வழங்கும். ஆனால் இது அவர்கள் பதவியில் இருக்கும் வரை மட்டுமே செல்லுபடியாகும். அதேபோல அரசாங்க வாகனங்களும், அரசிடம் வாகனப்பதிவு புத்தகத்துடன் ஃபாஸ்டேக்கையும் சேர்த்து விண்ணப்பித்துப் பெறவேண்டும். இல்லாவிட்டால், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கான ஒரேயோரு நுழைவுப் பகுதியில் காத்திருந்து, அதிகக் கட்டணம் செலுத்த நேரிடும்.
#நன்மைகள்
ஒவ்வொரு முறை கட்டணம் செலுத்தும் போதும், 2.5% சதவிகிதம் திரும்ப நம் கணக்கிற்கே வந்துவிடும். போக்குவரத்து நெரிசலினால் நேர விரயம் இருக்காது. சுங்கச்சாவடிகளில் இனி போலி கணக்கோ, குறைந்த கட்டணத்தைச் செலுத்திவிட்டு ஏமாற்றிவிட முடியாது. வங்கிகளின் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதால், வங்கிகளுக்கான நேரடி முதலீடாகவும் இது அமையும். உள்ளூர்வாசிகள் இனி சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் விண்ணப்பித்து, மாதாந்திர அட்டைகளைப் பெற வேண்டும்.

தவிர வேறு யாரும் இச்சலுகையைப் பயன்படுத்தி சுங்கச்சாவடியைத் தாண்டிச் சென்றுவிட முடியாது. சில்லறை பிரச்னை, ரசீது கொடுக்கும் முறைக்கு அவசியமே இருக்காது. சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் ஆள்களின் எண்ணிக்கையும் குறையும். படிப்படியாக அனைத்து வாகனங்களையும் ஃபாஸ்டேக் திட்டத்தில் இணைப்பதற்கான பணிகளுக்காக, தற்போது துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. ஆனால் அவ்வாறே சாலைகளின் தரத்தினையும் மேம்படுத்த வேண்டும் என்பது, ஒரு சராசரி வாகன ஓட்டியின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது!