Published:Updated:

எந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இன்னும் BS-4 வாகனங்களை வைத்திருக்கின்றன?

BS-4 மாசு விதிகள்
BS-4 மாசு விதிகள் ( Autocar India )

வெளிவந்திருக்கும் மார்ச் 2020 மாத கார் மற்றும் டூ-வீலர் விற்பனை விவரங்கள், கொரோனாவால் இந்திய ஆட்டோமொபைல் துறை எதிர்கொண்டிருக்கும் சரிவை உணர்த்தும் வகையிலேயே அமைந்துள்ளன.

ஏப்ரல் 1, 2020 முதலாக நாடெங்கும் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வந்துவிட்டாலும், இன்னுமே சில நிறுவனங்களின் வசம் BS-4 வாகனங்கள் விற்பனையாகாமல் இருக்கின்றன என்பதே நிதர்சனம். இவற்றை விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை 10 நாள்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும்போது, அது டீலர்களுக்கு எந்த அளவு பிரயோஜனமாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஏனெனில், கொரோனா நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு அப்படி. தவிர, வெளிவந்திருக்கும் மார்ச் 2020 மாத கார் மற்றும் டூ-வீலர் விற்பனை விபரங்கள், கொரோனாவால் இந்திய ஆட்டோமொபைல் துறை எதிர்கொண்டிருக்கும் சரிவை உணர்த்தும் வகையிலேயே அமைந்துள்ளன. எனவே, எந்தெந்த நிறுவனங்கள் BS-4 வாகனங்களை விற்பனைசெய்து முடித்துவிட்டன/முடிக்கவில்லை என்பதைப் பற்றி இனி பார்க்கலாம்.

டூ-வீலர் நிறுவனங்களின் நிலைப்பாடு என்ன?

BS-4 வாகனங்கள்
BS-4 வாகனங்கள்
Autocar India

'எங்கள் வசமிருந்த BS-4 வாகனங்களை விற்று முடித்துவிட்டோம்' என அதிகாரபூர்வமாக அறிவித்தது ராயல் என்ஃபீல்டு மட்டும்தான். BS-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்ததை வைத்துப்பார்த்தால், பஜாஜும் BS-4 வாகனங்களின் விற்பனையை முடித்திருக்கும் என்றே நம்பலாம். இது, கேடிஎம்முக்கும் பொருந்தும்; ஏனெனில், கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் இந்த ஆண்டின் பொங்கல் நேரத்திலேயே ஆஃபர்கள் வழங்கப்பட்டதே இதற்கான முக்கியக் காரணம். டிவிஎஸ், தன்வசம் குறைவான எண்ணிக்கையிலேயே BS-4 வாகனங்களை வைத்திருந்தாலும், அவற்றுக்கு 7,500 - 11,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகளைக் கொடுத்தது. ஹீரோவும் தன் பங்குக்கு 5,000 - 12,500 ரூபாய் வரை BS-4 ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்குத் தள்ளுபடி வழங்கியது தெரிந்ததே.

யுஎம், க்ளீவ்லேண்ட் ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே உற்பத்தியை நிறுத்திவிட்டன. ஹஸ்க்வர்னா BS-6 என்பதால் பிரச்னையில்லை. பியாஜியோ - ஏப்ரிலியா மற்றும் மஹிந்திரா - ஜாவா குழும நிறுவனங்கள், யமஹா, பெனெல்லி ஆகியோரிடமிருந்து, இதுகுறித்து எந்த அப்டேட்டும் இல்லை. ஆனால், பிரிமியம் நிறுவனங்கள் (கவாஸாகி, பிஎம்டபிள்யூ, ஹார்லி டேவிட்சன், இந்தியன், டுகாட்டி, ட்ரையம்ப்) பஜாஜின் பாணியிலேயே அசத்தலான தள்ளுபடிகளைக் கொடுத்தன என்பதால், அவர்கள் தங்கள் வசமிருந்த BS-4 பைக்குகளை விற்றிருப்பதற்கான சாத்தியம் அதிகம்தான்! ஹோண்டா, யமஹா, பியாஜியோ - ஏப்ரிலியா ஆகியோர், டீலர்கள் அளவில் ஆஃபர்களை அறிவித்ததால், BS-4 தேக்கநிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றே தெரிகிறது.

ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
Autocar India

5.5 லட்சத்துக்கும் அதிகமான BS-6 டூ-வீலர்களை ஹோண்டா ஏற்கெனவே இந்தியாவில் விற்பனை செய்திருந்தாலும், எவ்வளவு BS-4 வாகனங்கள் கையிருப்பில் உள்ளன என்பதைப் பற்றி எதுவுமே கூறவில்லை. ஆனால், இந்த நிறுவனம் ஆஃபர்களை வழங்கியதால், BS-4 மாடல்களின் விலையில் தள்ளுபடி கிடைத்தது. ஏனெனில் உச்ச நீதிமன்றத்திடம் BS-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதில், ஹீரோ மற்றும் ஹோண்டாதான் அதிக ஆர்வம் காட்டினார்கள். தனது டீலர்கள் வசமிருந்த 1.4 லட்ச டூ-வீலர்களுக்கு, ஹீரோ ஏற்கெனவே பொறுப்பேற்றுக்கொண்டுவிட்டது. டெல்லியில் BS-4 வாகனங்களை விற்பனை செய்யமுடியாது என்பதால், அங்கேயிருக்கும் 15,000 BS-4 டூ-வீலர்களைத் திரும்பப் பெற்று, லத்தீன், அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஹீரோ ஏற்றுமதிசெய்யும் எனத் தோன்றுகிறது. அங்கே, ஐரோப்பிய மற்றும் இந்தியாவைப் போல, மாசு விதிகளில் அவ்வளவு கெடுபிடி கிடையாது என்பதே காரணம். மற்ற நகரங்களில் இருக்கக்கூடிய 1.25 லட்சம் டூ-வீலர்களுக்கான பொருளாதார உதவியாக, ஒரு வாகனத்துக்கு 10,000 ரூபாய் என 125 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது ஹீரோ.

`BS-4 பைக்குகளை விற்க அவகாசம் தேவை!’ -நீதிமன்றத்தை நாடிய ஹீரோ நிறுவனம் #Corona

கார் நிறுவனங்களின் நிலை எப்படி?

கடந்த ஆண்டில் செல்ட்டோஸ் அறிமுகமானதே BS-6 வெர்ஷனில்தான் என்பதால், BS-4 பிரச்னை கியாவுக்குச் சுத்தமாகக் கிடையாது. கார்னிவலும் BS-6 வாகனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜியைப் பொறுத்தவரை, தனது ஆலை மற்றும் டீலர்களிடம் BS-4 ஸ்டாக் இல்லை என அறிவித்துவிட்டது. இந்த நிறுவனத்தின் இரண்டாவது மாடலான ZS எலெக்ட்ரிக் கார் என்பதால், எந்த நெருக்கடியும் எம்ஜிக்கு இல்லை. மஹிந்திராவைப் பொறுத்தவரை, நூற்றுக்கும் குறைவான BS-4 கார்களே தன்வசம் இருப்பதாகக் கூறியுள்ளது. பல வாகனங்களின் விற்பனை முடிந்துவிட்டாலும், அவற்றை முன்பதிவு செய்யும் பணிகள் மட்டும் பாக்கி இருப்பதாகத் தெரிகிறது. மார்ச் 2020 மாதத்தில் டொயோட்டா விற்பனை செய்தது BS-6 வாகனங்கள் மட்டுமே என்பதை வைத்துப்பார்த்தால், அந்த நிறுவனம் BS-4 வாகனங்களை விற்பனை செய்திருக்கலாம்.

BS-4 ஆட்டோமொபைல்
BS-4 ஆட்டோமொபைல்
Autocar India

டொயோட்டா போலவே டாடாவும் BS-4 வாகனங்களின் விற்பனையை முடித்துவிட்டது. கடந்தஆண்டு முதலாகவே BS-6 பெட்ரோல் கார்களைக் களமிறக்கத் தொடங்கிவிட்டதுடன், ஒட்டுமொத்தமாகவே டீசல் கார்களின் உற்பத்தியையும் நிறுத்திவிட்டது மாருதி சுஸூகி. தான் விற்பனை செய்யும் மாடல்களை BS-6 அவதாரத்துக்கு மாற்றிவிட்ட ஃபோர்டு வசம், அநேகமாக BS-4 ஸ்டாக் இருக்காது என்றே தோன்றுகிறது. இது ஹோண்டாவுக்கும் பொருந்தும் என்றாலும், அந்த நிறுவனம் சில மாடல்களை BS-6-க்கு அப்டேட் செய்யவில்லை. மற்றபடி ரெனோ, டட்ஸன், நிஸான், ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா ஆகியோரிடம் கணிசமான BS-4 கார்கள் இருக்கலாம். இதனாலேயே அவை தொடர்ந்து அதிக தள்ளுபடிகளை வழங்கியதைப் பார்க்கமுடிந்தது.

ஆனால், இதே ஆஃபர் ஃபார்முலாவைப் பின்பற்றியே, மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற லக்ஸூரி கார் நிறுவனங்கள், தங்களிடம் இருந்த BS-4 மாடல்களை விற்பனை செய்திருக்கிறார்கள். இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாத ஜீப், ஜாகுவார், லேண்ட்ரோவர், வால்வோ, ஃபோர்ஸ், இசுஸூ ஆகியோர் குறைவான எண்ணிக்கையிலேயே நம் நாட்டில் வாகனங்களை விற்பனை செய்யும் அடிப்படையில் பார்த்தால், இந்நேரம் Safe Zone-ல் இருப்பார்கள் என்றே நம்பலாம்.

Corona Logos
Corona Logos
Autocar India
தொழில்துறை  சந்திக்கும் பாதிப்புகள்! - மிரட்டும் கொரோனா நெருக்கடி!

தனது மாடல்களை க்ராஷ் டெஸ்ட் மற்றும் BS-6 விதிகளுக்கு அப்டேட் செய்யவில்லை என்பதுடன், இந்தியாவுக்கே டாடா காட்டிவிட்டது ஃபியட். இதைவிடப் பரிதாபமான நிலையில் மிட்சுபிஷி இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு