Published:Updated:

லாக்டெளனுக்குப் பிறகு ஸ்கூட்டர் விற்பனைதான் அதிகம் இருக்குமாமே... எது வாங்கலாம்? ஓர் அலசல்! 

ஸ்கூட்டர்கள்
ஸ்கூட்டர்கள் ( Autocar India )

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்திய ஆட்டோமொபைல் துறையே ஊசலாட்டத்திலேயே இருக்கிறது. BS-6 என்பதைத் தாண்டி, சீரற்ற பொருளாதாரத்தினால் மக்களின் வாங்கும் திறன் குறைந்ததும் இதற்கான காரணம்.

ஸ்கூட்டர்.... சரிவைக் கண்டிருக்கும் இந்திய டூ-வீலர் துறைக்குத் தோள்கொடுத்த பெருமை இதையே சேரும். நீண்ட காலமாகவே, வருடா வருடம் சராசரியாக 20% வளர்ச்சியைக் கண்டிருக்கிறது ஸ்கூட்டர் செக்மென்ட். இது பாசஞ்சர் கார் பிரிவில் டிரெண்டிங்கில் இருக்கும் எஸ்யூவிகளுக்கு இணையான ஏற்றம். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்திய ஆட்டோமொபைல் துறையே ஊசலாட்டத்திலேயே இருக்கிறது. BS-6 என்பதைத் தாண்டி, சீரற்ற பொருளாதாரத்தினால் மக்களின் வாங்கும் திறன் குறைந்ததும் இதற்கான காரணம்.

Scooters
Scooters
Autocar India

அதன்படி ஸ்கூட்டர் மற்றும் எஸ்யூவிகளின் விற்பனை ஏறக்குறைய 18% வீழ்ச்சியடைந்திருக்கிறது. தற்போதைய சூழலில், கொரோனா ஒட்டுமொத்த இந்தியாவின் சமநிலையைச் சோதித்துப் பார்த்திருக்கிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகும், இந்தத் தொற்று நோயின் வீரியத்தைக் குறைக்கும் பொருட்டு, டாக்ஸி /பேருந்து /ஆட்டோ/ ரயில் போன்ற பொதுப்போக்குவரத்தின் பயன்பாடு குறைந்து, தனிநபர் வாகனப் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, வீடுகளில் இவ்வளவு நாள்கள் முடங்கிக் கிடந்த டூ-வீலர்கள் எல்லாம், தடாலடியாகச் சாலைகளை நோக்கிப் படையெடுக்கும் என்பதே நிதர்சனம். மேலும், தனக்கெனப் புதிதாக பைக் வாங்கும் எண்ணத்தில் இருந்தவர்கள், சிக்கன நடவடிக்கையாக வீட்டில் இருக்கும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஸ்கூட்டருக்கு மாறவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள் எனத் தோன்றுகிறது. எனவே, நடப்பு நிதியாண்டில் அதிகளவில் விற்பனையான ஸ்கூட்டர்களை அடிப்படையாகக் கொண்டு, அதை நகர்ப்புற மற்றும் கிராமப்புற பயன்பாடு அடிப்படையில் பிரித்துச் சொல்ல முற்பட்டுள்ளோம்.

Activa 125 BS-6
Activa 125 BS-6
Honda India

பொதுவாகவே நகரங்களுடன் ஒப்பிட்டால், கிராமங்களில் டீலர் - சர்வீஸ் சென்டர் எண்ணிக்கை கொஞ்சம் குறைவாகவே இருக்கும். எனவே, ஒவ்வொரு மாதமும் அதிகளவில் விற்பனையாகும் ஹோண்டா - ஹீரோ - டிவிஎஸ் ஸ்கூட்டர்கள், இந்த விஷயத்தில் நகரம் - கிராமம் என இரண்டுக்குமே ஏற்புடையதாக உள்ளன. யமஹா மற்றும் சுஸூகி ஆகிய நிறுவனங்கள், இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹோண்டா ஆக்டிவா 6G

ஒரு வருடத்தில் 2.6 மில்லியன் விற்பனையானதை வைத்துப் பார்த்தால், `இந்தியாவின் டாப் செல்லிங் ஸ்கூட்டர்' என்பதற்கு முழு நியாயம் கற்பிக்கிறது ஆக்டிவா 6G. 57% ஸ்கூட்டர் சந்தையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இது, நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 7,100 பேரை சென்றடைகிறது! ஆக்டிவாவின் BS-6 வெர்ஷனான 6G, முந்தைய மாடல்களில் இருந்த குறைகளைக் கிட்டத்தட்ட களைந்துவிட்டது ஹோண்டா. டெலிஸ்கோபிக் ஃபோர்க், வெளிப்புற பெட்ரோல் டேங்க் மூடி, முன்புற 12 இன்ச் வீல் ஆகியவை அதற்கான உதாரணம்.

Activa 6G
Activa 6G
Honda India

மெட்டல் பாடி, ஸ்மூத் இன்ஜின், எளிதான ஓட்டுதல் என இதன் ப்ளஸ் பாயின்ட்களும் அப்படியே தொடர்கின்றன. இப்படி அனைத்து வயதினருக்கு ஏற்றதாக இருக்கும் ஆக்டிவா 6G, ஃப்யூல் இன்ஜெக்ஷன் உடனான புதிய 110சிசி இன்ஜினைப் பெற்றிருக்கிறது. என்றாலும் இது பலதரப்பட்ட மெக்கானிக்குகளாலும் பழுது பார்க்கக்கூடிய ரீதியில் சிம்பிளான வடிவமைப்பையே பெற்றிருப்பது ப்ளஸ். ஆனால், முன்பைவிட வாகனத்தில் இருக்கக்கூடிய எலெக்ட்ரிக் அம்சங்கள் கூடியிருப்பதால் கவனம் தேவை!

டிவிஎஸ் ஜூபிட்டர் 110

3 மில்லியனுக்கும் அதிகமானோரைச் சென்றடைந்துவிட்ட ஜூபிட்டர், ஆக்டிவாவைவிட ஒரு வேரியன்ட் கூடுதலாகக் கொண்டிருக்கிறது. அவற்றின் தோற்றத்திலும் வித்தியாசம் இருப்பது கவனிக்கத்தக்கது. 12 இன்ச் வீல்கள், பின்பக்க கேஸ் சஸ்பென்ஷன், எக்கோ/பவர் இண்டிகேட்டர், பாஸ் லைட் ஸ்விட்ச், அனலாக் - டிஜிட்டல் மீட்டர், அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக் எனத் தனது பைக்குகளில் காணப்படும் சில விஷயங்களை வழங்கியதிலேயே, இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரின் வெற்றி உறுதியாகிவிட்டது!

Jupiter ZX BS-6
Jupiter ZX BS-6
TVS Motors

ஆனால் BS-6 வாய்ப்பைப் பயன்படுத்தி, 2013-ல் வெளிவந்த ஜூபிட்டரின் டிசைனில் கணிசமான மாறுதல் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! ஏனெனில் எடை அதிகமான - பவர் குறைவான 110சிசி ஸ்கூட்டர் என்பதால், இது வேகத்தில் வெல்லாது. ஆனால், சொகுசான ஓட்டுதல் அனுபவம் அதைச் சரிகட்டிவிடுகிறது. BS-4 வெர்ஷனில் இருந்த அதே இன்ஜின்தான் BS-6 மாடலிலும் இருப்பதால், இதன் சர்வீஸ் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவேண்டாம்.

சுஸூகி ஆக்ஸஸ் 125

போட்டியாளர்களின் விற்பனை குறைந்த சூழலில், ஆக்ஸஸ் 125 முன்பைவிட அதிக வீச்சுடன் வெற்றிநடை போட்டது உண்மையிலேயே ஆச்சர்யம்தான்! என் நண்பர் வட்டத்திலேயே, கொரோனாவுக்கு முன்பு 3 பேர் இந்த ஸ்கூட்டரை வாங்கியிருந்தனர்; இந்திய அளவில் அதிகமாக விற்பனையான மூன்றாவது ஸ்கூட்டர் இந்த சுஸூகிதான் (5.71 லட்சம்). இதற்கும் ஜூபிட்டருக்கும் வெறும் 25,000-தான் வித்தியாசம் (5.96 லட்சம்). 110சிசியில் ஆக்டிவா எப்படியோ, 125சிசி செக்மென்ட்டில் ஆக்ஸஸ் அப்படி. Unisexual டிசைன் இந்த ஸ்கூட்டரின் பெரும்பலம்.

Access 125 LE BS-6
Access 125 LE BS-6
Suzuki India

ஆக்டிவா/ஜூபிட்டர் விட ஆக்ஸஸின் குறைவான எடை (4-6 கிலோ), இதைத் தனித்துக் காட்ட உதவுகிறது. இதர ஜப்பானிய தயாரிப்புகள் போலவே, இதுவும் ஸ்மூத்தான இன்ஜினால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. சிறப்பான மைலேஜ் போனஸ்தான். வசதிகளில் பின்தங்கினாலும், பிராக்டிக்காலிட்டியில் முந்துகிறது ஆக்ஸஸ் 125. BS-6 மாடலில் சுஸூகி புதுமைகளைப் புகுத்தியிருந்தால், இது இன்னும் எகிறியடிக்கும் திறனை எட்டியிருக்கும். BS-4ன் அதே இன்ஜினே BS-6லும் இருப்பதால், இதன் பராமரிப்பு ஒகேதான். ஆனால், உதிரிபாகங்கள் உடனடியாகக் கிடைப்பதில் கொஞ்சம் இடர்பாடு இருக்கவே செய்கிறது.

ஹோண்டா டியோ 110

BS-6 காரணமாக பல ஸ்கூட்டர்களின் உற்பத்தியை ஹோண்டா நிறுத்திவிட்ட நிலையில், இப்போதைக்கு அந்த நிறுவனத்தின் விலைகுறைவான ஸ்கூட்டர் டியோதான். ஆக்டிவாவின் யூத்ஃபுல் வெர்ஷனாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ள இது, BS-6 அவதாரத்தில் பல முன்னேற்றங்களைப் பெற்றிருக்கிறது (2 வேரியன்ட்கள் உண்டு). 110சிசி செக்மென்ட்டில் ஸ்போர்ட்டி மாடலாக அறியப்படும் டியோ, அதற்கேற்ற டிசைன் - கலர்/கிராஃபிக்ஸ் காம்போவில் ஈர்க்கிறது.

Dio DLX BS-6
Dio DLX BS-6
Honda India

ஆக்டிவா 6G-ன் அதே மெக்கானிக்கல் அம்சங்களுடன் (சேஸி - சஸ்பென்ஷன் - பிரேக்ஸ் - வீல்கள் -இன்ஜின்), ஃபைபர் ப்ளாஸ்டிக் பாடியில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்பார்த்தபடியே ஆக்டிவாவைவிட 2 கிலோ குறைவான எடையில் இருக்கும் டியோ, வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு ஏற்புடையதாக உள்ளது. மேலும் இளைஞர்களைக் கவரும்படி டிஜிட்டல் மீட்டர், தங்க நிற வீல்கள், LED DRL, பாஸ் லைட், Kill ஸ்விட்ச், சைடு ஸ்டாண்ட் இன்ஜின் Cut-Off, Multifunction Key-Slot என அசத்துகிறது

டிவிஎஸ் என்டார்க் 125

அறிமுகமாகி 26 மாதங்களே ஆகும் நிலையில், 5 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி அமர்களப்படுத்திவிட்டது என்டார்க் 125. நடப்பு நிதியாண்டில் டிவிஎஸ் விற்பனை செய்த 10.19 லட்சம் ஸ்கூட்டர்களில் 26% இந்த 125சிசி ஸ்கூட்டர்தான்! ஷார்ப்பான டிசைன், அதிகப்படியான வசதிகள், பவர்ஃபுல் பர்ஃபாமன்ஸ், ஸ்போர்ட்டி கையாளுமை, கொடுக்கும் காசுக்கான மதிப்பு என ஆல்ரவுண்டர் பேக்கேஜாக என்டார்க் கவர்ந்திழுக்கிறது.

Ntorq 125 BS-6
Ntorq 125 BS-6
TVS Motors

ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி உடனான டிஜிட்டல் மீட்டர், Hazard இண்டிகேட்டர்கள், பெட்டல் டிஸ்க் பிரேக், அகலமான 12 இன்ச் வீல்கள், 3 வால்வ் இன்ஜின், ஸ்போர்ட்டி எக்ஸாஸ்ட் சத்தம் என கியர்லெஸ் பைக் போன்ற அனுபவத்தைத் தந்ததில், இந்த 125சிசி ஸ்கூட்டர் போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடுகிறது. வேலைக்குச் செல்லும் இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் என்டார்க்கின் சர்வீஸ் தொடர்பான பணிகளுக்கு, டீலர்களின் சர்வீஸ் சென்டருக்கு செல்பவர்களே அதிகம் எனத் தெரிகிறது.

யமஹா ஃபஸினோ 125

இங்கிருக்கும் ஸ்கூட்டர்களிலேயே, BS-6 விதிகளால் அடுத்த செக்மென்ட்டுக்கே ப்ரமோஷன் பெற்றிருப்பது ஃபஸினோதான். 110சிசியில் இருந்து 125சிசிக்குச் சென்றிருந்தாலும், செயல்திறனில் அதிரடியான முன்னேற்றம் தெரியாதது நெருடல்தான். ஆனால் 125சிசி ஸ்கூட்டர்களிலேயே குறைவான எடை கொண்ட மாடலாக இருப்பதால் (99 கிலோ), முன்பைவிட இன்னும் பெண்களுக்குப் பிடித்தமான தயாரிப்பாக இது மாறியதில் வியப்பேதும் இல்லை.

Fascino Disc BS-6
Fascino Disc BS-6
Yamaha India

BS-4 110சிசி மாடல் ஒரே வேரியன்ட்டில் வந்த நிலையில், BS-6 125சிசி மாடல் 2 வேரியன்ட்களில் (டிரம்/டிஸ்க்) கிடைக்கிறது. வெஸ்பாவைப் போல ரெட்ரோ தோற்றத்தில் அசத்தினாலும், ஃபஸினோவில் வசதிகள் அவ்வளவாக இல்லாதது மைனஸ்தான். அந்தக் குறைபாட்டை யமஹா ஓரளவுக்கு சரிசெய்திருக்கிறது. ஆனால் விலையைக் கட்டுக்குள் வைக்க, முன்புபோலவே சில வசதிகள் மிஸ்ஸிங். புதிய இன்ஜின் & அதிக எலெக்ட்ரிக் அம்சங்கள் உள்ளதால், டீலர் வசமே ஃபஸினோ சர்வீஸுக்குச் செல்லக்கூடும்.

ஹீரோ ப்ளஷர் சீரிஸ்

`கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்கது' என்ற பெயர்பெற்ற ப்ளஷர், 14 ஆண்டுக்குப் பிறகுத் தனது பெயரில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ப்ளஸ்ஸுக்கு அழகு சேர்த்திருக்கிறது. கடந்தாண்டு இதே மாதத்தில் களமிறங்கிய இந்த 110சிசி ஸ்கூட்டர், ஆக்டிவா போலவே இரு வேரியன்ட்களில் கிடைக்கிறது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் இருந்திருந்தால், பெண்களால் தவிர்க்கமுடியாத தயாரிப்பாக இது மாறியிருப்பதற்கு சாத்தியமுள்ளது.

Pleasure Plus BS-6
Pleasure Plus BS-6
Hero Motocorp

ஒருவர் ஸ்கூட்டரில் அன்றாடம் பயன்படுத்தும் வசதிகள் அனைத்தும் ப்ளஷர் ப்ளஸ்ஸில் இருப்பதுடன், பிராக்டிக்காலிட்டியிலும் இது அசத்துகிறது. ஆனால், பட்ஜெட் ஸ்கூட்டர் என்ற உணர்வு அதிகமாக எழுவதே இதன் மைனஸ். மேலும் சிறிய சைஸில் இருப்பதால், அனைவருக்குமான ஸ்கூட்டராக ப்ளஷர் ப்ளஸ்ஸை முன்மொழிய முடியவில்லை. BS-4ல் இருந்த அதே இன்ஜினே BS-6லும் உள்ளதால், இதன் சர்வீஸ் எளிதாகவே இருக்கும்.

ஹீரோ டெஸ்ட்டினி 125

125சிசியில் தனது முதல் தயாரிப்பு என்பதால் என்னவோ, அந்த செக்மென்ட்டின் விலைகுறைவான மாடலாக டெஸ்ட்டினியைப் பாதுகாப்பாக முன்னிறுத்தியது ஹீரோ. ஆனால், அந்த அம்சமே, இந்தத் திறன்மிக்க தயாரிப்புக்குப் பாதகமாக அமைந்துவிட்டது பெரிய முரண். இதுவும் 2 வேரியன்ட்களில் வந்தது என்றாலும், அது விற்பனையில் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆக்டிவா 6G விடக் குறைவான விலையில் டெஸ்ட்டினி BS-6 கிடைக்கிறது!

Destini VX 125 BS-6
Destini VX 125 BS-6
Hero Motocorp

BS-6க்கு அப்டேட் ஆகும்போது பல ஸ்கூட்டர்கள் பவர்-டார்க்கில் வீழ்ச்சியைச் சந்தித்தபோது, இது ஏற்றம் கண்டது செம. எனவே அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், டெஸ்ட்டினியின் லைட்டிங் (LED ஹெட்லைட்) மற்றும் பிரேக்கிங் (முன்பக்க டிஸ்க் பிரேக்) ஆகியவற்றில் முன்னேறியிருந்தால், இது ஆக்ஸஸுக்கு கடும் சவால் விடக்கூடிய தயாரிப்பாக இருந்திருக்கும். ஏனெனில் அதில் இல்லாத பல அம்சங்கள் டெஸ்ட்டினியில் இருக்கின்றன. மேலும் ஃபேமிலி ஸ்கூட்டர் என்ற அடைமொழிக்கு இந்த ஹீரோ ஸ்கூட்டர் பக்காவாகப் பொருந்துகிறது. என்ன எடைதான் அதிகம் (114 கிலோ).

யமஹா ரே சீரிஸ்

ஃபேஸினோவின் ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட ஆண்கள் ஸ்கூட்டர்தான் ரே-ZR. டியோவுக்குப் போட்டியாக 2 வேரியன்ட்களில் களமிறங்கியிருக்கும் இது, ஸ்ட்ரீட் ராலி எனும் இன்னோரு வெர்ஷனிலும் வருகிறது. இதன் BS-4 மாடல் ஸ்போர்ட்டியான வெர்ஷனாக இருந்தால், BS-6 வெர்ஷன் கொஞ்சம் ADV அம்சத்துடன் வந்துள்ளது. Block Pattern டயர்கள், பாடி கார்டு, Brush Guard அதற்கான உதாரணம். மற்ற விஷயங்கள் எல்லாமே, இரு ரே-ZR ஸ்கூட்டர்களுக்கும் பொதுவானதுதான்.

Ray ZR 125 BS-6
Ray ZR 125 BS-6
Yamaha India

இதுவும் ஃபஸினோ 125 போல 99 கிலோ லைட் வெயிட் ஸ்கூட்டர் என்றாலும், அதைப் போலவே இங்கும் கூடுதல் ரோடு க்ரிப்புக்கு பின்பக்கத்தில் அகலமான டயர் வழங்கப்பட்டுள்ளது (110/90-10). முன்பு போல ஸ்டாண்டர்டு ரே கிடையாது. ரே-ZR டியோவுக்கு டஃப் கொடுக்கிறது என்பதை, இதிலிருக்கும் டிஜிட்டல் மீட்டர் மற்றும் LED DRL உணர்த்திவிடுகிறது. BS-4 110சிசி ரேவைவிட, BS-6 ரே-ZR 125 சுமார் 15.000 அதிக விலையில் விற்பனை ஆகிறது. ஆனால் தலைமுறை மாற்றம் என்பதால் இதை ஏற்றுக்கொள்ளலாம். சர்வீஸ் சென்டர் எண்ணிக்கையில் உயர்ந்தால் நல்லது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் சீரிஸ்

கடும் ஆரவாரத்துக்கு மத்தியில் வெளிவந்து, பின்னர் ஆர்ப்பாட்டமே இல்லாமல் போன ஸ்கூட்டர்களில் மேஸ்ட்ரோ எட்ஜ் ஒன்று. கடந்த நிதியாண்டில் 2.72 லட்சம் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையான நிலையில், நடப்பு நிதியாண்டில் வெறும் 94,533 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன! இப்படி 65% சரிவைச் சந்தித்திருக்கும் தனது ப்ரிமீயம் ஸ்கூட்டருக்குப் புத்துணர்ச்சி ஊட்ட, யமஹா போலவே 110சிசியை ஏறக்கட்டிவிட்டு, 125சிசியில் வெர்ஷனாகக் கடந்தாண்டில் தடம் பதித்தது ஹீரோ.

Maestro Edge 125 BS-6
Maestro Edge 125 BS-6
Hero Motocorp

டெஸ்ட்டினிக்கும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125-க்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் 12 இன்ச் வீல் இதன் பொசிஷனிங்கைத் தெரிவித்துவிடுகின்றன. என்டார்க் மற்றும் SR125 ஆகியவற்றுக்குப் போட்டியாக வந்திருக்கும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125, அவற்றைவிட அதிக விலையில் கிடைப்பது ஏனோ? BS-4 மாடல் போலவே BS-6 வெர்ஷனும் 3 வேரியன்ட்களில் அறிமுகமாகியுள்ள நிலையில், Fi சிஸ்டம் ஸ்டாண்டர்டு ஆகிவிட்டது. ஒட்டுமொத்தத் தரத்தில் கொஞ்சம் முன்னேற்றம் இருந்தால், இந்த ஸ்கூட்டரின் பராமரிப்பு சிம்பிள்தான்.

அடுத்த கட்டுரைக்கு