லிஃப்ட் கொடுப்பது குற்றமா? என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்! #DoubtOfCommonMan

`வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட விரோதம் – உங்கள் லைசென்ஸ் பறிபோகும் – உஷார்' என ஒரு குறுங்கட்டுரை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.
லிஃப்ட் கொடுப்பது உண்மையிலேயே சட்டவிரோதமா? என #DoubtOfCommonMan பக்கத்தில் விஸ்வநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஸ்வநாதன் குறிப்பிடும் கட்டுரையைக் கண்டுபிடித்தபோது அதில் மும்பையைச் சேர்ந்த நிதின் நாயர் என்பவரின் அனுபவத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள். நிதின் நாயர், தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்த அனுபவத்தைப் பல பத்திரிகைகளும்கூட பதிவுசெய்துள்ளன. நிதின் நாயரின் கதையை முதலில் பார்ப்போம்.

''18-ம் தேதி காலை, காரில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன். ஐரோலி சர்க்கில் அருகே சென்றபோது, சிலர் வாகனத்தை நிறுத்தி லிஃப்ட் கேட்டார்கள். அதில் ஒருவர் 60 வயது முதியவர் ; 2 பேர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறவர்கள். அப்போது மழை அதிகமாகப் பெய்துகொண்டிருந்தது. பேருந்துகள், கூட்டநெரிசலுடன் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன; சில பேருந்துகள் நேரம் கடந்தும் வரவில்லை. அந்த மூவரும், 'காந்தி நகர்ப் பகுதிக்குச் செல்ல வேண்டும்' என்றார்கள். காந்தி நகர், நான் அலுவலகம் செல்லும் வழியில் இருக்கிறது என்பதால், அவர்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டேன்.
அவர்களை காரில் ஏற்றிய சிறிது நேரத்தில், டோ-வாகனத்துடன் இருந்த ஒரு போலீஸ் என்னை நிறுத்தினார். நான், 'நோ பார்க்கிங்' பகுதியில் நின்றிருந்தேனோ என நினைத்தேன். அவர், வேகமாக ரெசிப்ட் எழுதி நீட்டினார். 'தெரியாத ஆட்களுக்கு காரில் லிஃப்ட் கொடுப்பது குற்றம்' என்றார். லஞ்சம் வாங்க கதை விடுவதாக நினைத்தேன். ஆனால், என்னிடம் லைசென்ஸ் வாங்கிக்கொண்டு ரெசிப்ட் கொடுத்து, 'போலீஸ் ஸ்டேஷன் வந்து அபராதம் கட்டிவிட்டு லைசென்ஸ் வாங்கிக்கோ' என்றார்.
அடுத்த நாள், போலீஸ் ஸ்டேஷன் சென்று லைசென்ஸ் கேட்டபோது, செக்ஷன் 66/192-ன் கீழ் குற்றம் பதியப்பட்டுள்ளது. 'கோர்ட் சென்று நீதிபதி முன்பு குற்றத்தை ஒப்புக்கொண்டு, அபராதம் கட்டி லைசென்ஸ் வாங்கிக்கொள்ளுங்கள்' என்றார்கள். உடனடியாக எனக்குத் தெரிந்த வழக்கறிஞரிடம் பேசினேன். இப்படி ஒரு சட்டம் இருப்பதே அப்போதுதான் தெரிந்தது.
வேறு வழியின்றி, ஜூன் 22-ம் தேதி நீதிமன்றம் சென்றேன். நான் செய்தது தவறு என ஒப்புக்கொண்டேன். தெரியாத நபர்களுக்கு ‘லிஃப்ட்’ கொடுத்து தனது தனிப்பட்ட காரை, பயணிகள் காராக மாற்றிய குற்றத்துக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்தார்கள். பல கோரிக்கைகளுக்குப் பின் 500 ரூபாய் குறைத்து 1,500 ரூபாய் அபராதம் செலுத்தச் சொன்னார்கள். பிறகு, மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் சென்று லைசென்ஸ் பெற்றுக்கொள்ளச் சொன்னார்கள்.
இப்படிப்பட்ட சட்டங்கள் இருந்தால், சாலையில் யாரேனும் இறந்துகிடந்தால்கூட, யாரும் உதவிசெய்ய முன்வர மட்டார்கள்'' எனப் பதிவுசெய்திருந்தார்.

நிதின் நாயர் குறிப்பிடும் மோட்டார் வாகனச் சட்டம் 66/192 என்ன சொல்கிறது?
இந்தக் கேள்வியை மூத்த வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டோம். ''66/192 என்பது இரண்டு ப்ரொவிஷன்களை உள்ளடக்கியது. மோட்டார் வாகனச் சட்டம், ப்ரொவிஷன் 192 என்பது ஒரு விதியை மீறும்போது, அதற்கான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்கிறது. அதன்படி, ஒவ்வொரு விதிமீறல்களுக்கும் அபராதம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே முக்கியமானது செக்ஷன் 66. இந்தச் சட்டம், ஒரு பாசஞ்சர் வாகனத்தை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறது. எந்த கமர்ஷியல் வாகனத்திலும் பணம் வாங்கிக்கொண்டு பயணிகளை ஏற்றக்கூடாது என்கிறது. லிஃப்ட் கொடுப்பதைப் பற்றி இந்தச் சட்டத்தில் எதுவுமே சொல்லப்படவில்லை.

கிராமங்களில் லோடு வாகனங்களில் காசு வாங்கிக்கொண்டு பயணிகளை ஏற்றும் வழக்கம் இருக்கிறது. அதேபோல, வெள்ளை போர்டு வாகனங்களுக்கு எந்த பர்மிட்டும் தேவையில்லை என்ற காரணத்தினால், ஒரு சொந்த கார் வாங்கி அதை வெளியூர் பயணங்களுக்குப் பயன்படுத்தி சம்பாதிக்கும் வழக்கமும் இருந்தது. இதைத் தடுப்பதற்கே இந்தச் சட்டங்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக கமர்ஷியல் வாகனங்களுக்கென தனி வரி, பர்மிட் உண்டு. மேலும், ஒரு கமர்ஷியல் வாகனத்தில் டிரைவர்களுக்கு மட்டுமில்லாமல் பாசஞ்சர்களுக்கும் இன்ஷூரன்ஸ் உண்டு. ஆனால், தனிநபர் வாகனங்களில் டிரைவருக்கு மட்டுமே இன்ஷூரன்ஸ் என இரண்டுக்கும் நடைமுறையே வெவ்வேறாக இருக்கிறது. இதனால், சட்டங்கள் தனிநபர் வாகனத்தை கமர்ஷியல் வாகனமாகவோ, கமர்ஷியல் வாகனத்தைத் தனிநபர் வாகனமாகவோ பயன்படுத்தத் தடை போட்டுள்ளது'' என்கிறார்.

மழை வருகிறது; பேருந்து இல்லை. அவசரத்துக்கு நம்மிடம் வந்து லிஃப்ட் கேட்கிறார்கள் என்றால், நீங்கள் அவர்களுக்கு உதவி செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், அதைவைத்து பணம் சம்பாதித்தால், அதற்கு சட்டப்படி தண்டனை உண்டு.ரமேஷ்
தனிநபர் வாகனத்தைப் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துக்குப் பயன்படுத்தக்கூடாது என்றால், பிளாபிளா கார், ரைடிலி, S-ரைடு போன்ற ரைடு ஷேரிங் ஆப்களைப் பயன்படுத்துவது தவறா?
மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் 2019-ல், ''digital intermediaries'' என்ற புதிய வார்த்தையைச் சேர்த்துள்ளது மத்திய அரசு. அதாவது, ஓலா, ஊபர் மட்டுமில்லை, பிளாபிளா கார் போன்ற ஆப் மூலம் செயல்படும் வாகனம் சார்ந்த சர்வீஸ்களை முறைப்படுத்த இவர்களை டிஜிட்டல் இன்டர்மீடியரிக்குள் அடக்குகிறார்கள். இந்தச் சேவைகளை முறைப்படுத்த தனிச் சட்டங்கள் வரவுள்ளன.

கார் வைத்திருப்பவர்கள் தனியாகச் செல்லும்போது, அதே வழியில் செல்லும் 3 பேரை நட்புரீதியாக அழைத்துச் செல்வதன் பெயர் கார்பூலிங். இதனால், எரிபொருள், காற்று மாசு, சாலையின் வாகன நெரிசல், பயணச் செலவு எல்லாமே குறைகிறது. மத்திய, மாநில அரசுகள் கார்பூலிங்கை ஊக்கப்படுத்தவே முயன்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே, கார்பூலிங் ஆப்களைப் பயன்படுத்துபவர்கள் நாளொன்றுக்கு 4 ரைடுகளுக்கு மேல் கார்பூலிங் செய்யக்கூடாது. ஆதார் எண்ணைக் கட்டாயமாக இணைக்க வேண்டும். மொபைல் ஆப் மூலமாக மட்டுமே கார்பூலிங் செய்ய வேண்டும். ட்ரிப் ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொருவரின் ஷேர் எவ்வளவு என்பதை ஆப் மூலம் தெரியப்படுத்த வேண்டும் போன்ற புதிய சட்டங்களை வகுத்துள்ளார்கள்.

கார்களுக்கு மட்டும்தான் இவ்வளவு சிக்கலா?
இதற்கு நேரடியான பதில், ஆம். கார்களுக்கு மட்டும்தான் சிக்கல். பைக்கைப் பொறுத்தவரை வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டு என தனித்தனியாகக் கிடையாது. மோட்டார் சைக்கிள் என்றாலே, அது பெர்சனல் வாகனமாக மட்டுமே கருதப்படுகிறது. இதனால்தான் ரேப்பிடோ போன்ற ஆப்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயங்கமுடிகிறது.
சமீபத்தில், கர்ப்பிணியைக் காப்பாற்ற ஒரு மருத்துவரே ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய கதைகளை கேள்விப்பட்டிருப்போம். ஆம்புலன்ஸைப் பொறுத்தவரை அதை இயக்குபவர்களுக்கென சில வரைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதையெல்லாம் பின்பற்றாமல் எப்படி ஆம்புலன்ஸ் ஓட்டமுடியும் என்ற கேள்வியைக் கேட்கலாம். அது சட்டப்படி தவறுதான். ஆனால், நியாயப்படி சரிதானே? இதனால், நீதிமன்றமும் இவரைத் தண்டிக்காது. சட்டம் மக்களைப் பாதுகாக்கவே உருவாக்கப்பட்டுள்ளது. லிஃப்ட் கொடுப்பது தவறு கிடையாது. லிஃப்ட் கொடுப்பதற்காக யாரும் உங்களைத் தண்டிக்க முடியாது. ஆனால், லிஃப்ட் கொடுக்கிறேன் என்று அழைத்து இறங்கும்போது பணம் கேட்டால், அது சட்டப்படி தவறு.