மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணம் செய்யும் விதமாக வீல் சேருடன் இணைத்துப் பயன்படுத்தும் வாகனத்தைத் தயாரித்திருக்கிறது நியோ மோஷன் நிறுவனம். பேட்டரியில் இயங்கும் இந்த நியோ போல்ட் என்கிற முன் இணைப்பை இவர்களது நியோ ஃப்ளை என்கிற வீல்சேரில் இணைத்துக் கொண்டு ஓட்டிச் செல்லலாம். ஐஐடி மாணவர்கள் 3 பேரின் கண்டுபிடிப்பில் இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்பாடு குறித்து அந்நிறுவனத்தின் விற்பனை மேலாளர் விஜயாலயனிடம் பேசினோம்...

Also Read
``ஐஐடி மெட்ராஸின் ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் இந்த neomotion assistive solutions private limited. நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான வீல்சேர் மற்றும் வாகனங்கள் இல்லை. அவர்கள் யாரையாவது சார்ந்தே இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்தச் சூழலில்தான் இவர்கள் எளிதாகப் பயணம் செய்யும் கருவியை ஐஐடி மெட்ராஸ் மாணவர்களான ஸ்வஸ்திக், ஆஷிஷ் மோகன் ஷர்மா, சித்தார்த் ஆகியோர் வடிவமைத்தனர். பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் இதற்கு வழிகாட்டியாக இருந்தார். 2015-ம் ஆண்டே இதனைத் தயாரித்தாலும் உரிய பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு 2018-ம் ஆண்டில்தான் விற்பனைக்குக் கொண்டு வந்தோம். ரெடிமேடாக கிடைக்கும் வீல்சேர்கள் அனைவருக்கும் ஒரே விதமாகத்தான் இருக்கும். ஆனால் எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொருவரது உடல் அமைப்புக்கு ஏற்றபடி பிரத்யேகமாகத் தயார் செய்து கொடுக்கிறோம்.
வீல் சேர், தண்டுவட பாதிப்பு ஏற்பட்டவர்களால் நிமிர்ந்து உட்கார முடியாது. வீல்சேரின் உட்காருமிடத்தின் அளவு 22 இருக்கும். இவர்களின் இடுப்பின் அளவு 15 ஆக இருக்கும். இப்படி உட்காரும்போது அவர்களின் பிரச்னை மேலும் வலுப்படும். தோள்பட்டை வலி வரும். நாங்கள் அளவெடுத்துச் செய்வதால் மிகப்பொருத்தமாக உடலை வருத்தாத வண்ணம் இருக்கும். புஷ் ரிங் மூலம் ஒரு சக்கரத்தை நிறுத்தி இன்னொரு சக்கரத்தின் மூலம் 360 டிகிரியில் திருப்பிக் கொள்ளலாம்.
கைகளால் இயக்கும் மற்ற வீல்சேர்களை விடவும் நியோ ஃப்ளையின் வேகம் அதிகமாக இருக்கும். வீல்சேர்களிலேயே ஜாய்ஸ்டிக் மூலம் இயக்கப்படும் எலெக்ட்ரிக் வீல்சேர்கள் இருக்கின்றன. நாங்கள் தயாரித்திருப்பது கைகளால் தள்ளி இயக்கும் வீல் சேர்கள்தான். நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு உடலின் மேற்பகுதி நல்ல நிலையில் இருக்கும். அவர்களுக்கு சிறிய உடற்பயிற்சியாவது தேவை என்தற்காகத்தான் கையால் தள்ளிக்கொண்டு செல்வதைப் போல வடிவமைத்திருக்கிறோம்" என்கிற விஜயாலயனும் தண்டுவட பாதிப்புக்குள்ளானவர்தான். விற்பனை மேலாளர் என்பதைத் தாண்டி அதனைப் பயன்டுத்துகிறவரும் கூட. அடுத்ததாக, பேட்டரி மூலம் இயங்கும் நியோ போல்ட் குறித்துப் பேசினார் அவர்.
``நியோ போல்டை எங்களது நியோ ஃப்ளை வீல்சேரில் இணைத்து ஓட்டிச் செல்லலாம். 7 கி.மீ, 15 கி.மீ , 25 கி.மீ என்கிற மூன்று நிலைகளில் வேகம் இருக்கும். மாற்றுத்திறனாளிகள் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டக்கூடாது என்பதால் அதிகபட்சமாக மணிக்கு 25 கி.மீ வேகத்தை நிர்ணயித்திருக்கிறோம். பேட்டரியில் இயங்குவதால் பெட்ரோல் செலவு இல்லை. ஒருமுறை சார்ஜ் செய்தால் 25 கி.மீ வரையிலும் பயணம் செய்யலாம். வாகனப்பதிவோ, உரிமமோ தேவையில்லை. ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஓட்டும்படி வலியுறுத்துகிறோம்.

மாற்றுத்திறனாளிகளுக்காக அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு இவற்றை உருவாக்கியிருக்கும் எங்கள் நிறுவனம் முற்றிலும் வணிக நோக்கத்தோடு செயல்படுவதில்லை. மாற்றுத்திறனாளிகளின் உடல் நிலையைப் பரிசோதித்த பின்னர் அவர்களுக்கு எங்களது தயாரிப்பு ஒத்துவருமா என்று பார்த்துதான் விற்பனை செய்கிறோம். சரியான நபருக்கு எங்களது உற்பத்தி சென்று சேர வேண்டும் என்பதே நோக்கம். நியோ போல்ட் மற்றும் நியோ ஃப்ளை வீல்சேர் இரண்டும் சேர்த்து இரண்டும் சேர்த்து 99, 900 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். நியோ ஃப்ளை வீல்சேரின் விலை ரூ. 49,000, சலுகையில் அதனை 42,500 ரூபாய்க்கு விற்கிறோம்" என்கிறார் விஜயாலயன்.