ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

நிஸான் சக்குரா... 'எலெக்ட்ரிக் A' செக்மென்ட்டில் இந்தியாவுக்கு வருமா?

நிஸான் சக்குரா
பிரீமியம் ஸ்டோரி
News
நிஸான் சக்குரா

நகர நெருக்கடிக்குள் அன்றாடம் இருவர் பயணிக்கச் சரியானதாக இருக்கும் கேய் கார்கள் தற்போது எலெக்ட்ரிக் ஆக மாறிக்கொண்டிருக்கின்றன. அதில் லேட்டஸ்ட் வரவான நிஸான் சக்குரா (Nissan Sakura) வைப் பற்றி இந்த மாதம் பார்ப்போம்.

நம்மூருக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்படும் கார்களைப்போல, ஜப்பான் நாட்டில் மட்டும் விற்பனையாகும் கார்களை JDM கார்கள் என அழைப்பார்கள். Japan Domestic Market -ன் சுருக்கம் தான் JDM. நிஸான் ஜிடி-ஆர், சுபாரு WRX, டொயோட்டா சுப்ரா, ஹோண்டா NSX, மஸ்தா RX-7 ஆகிய JDM கார்கள் தங்கள் நாட்டில் விற்பனை ஆகவில்லை என உலகமெங்கும் வருத்தப்படும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த வகை ஸ்போர்ட்டி கார்கள் JDM -ன் ஒரு பக்கம் என்றால், மறுபுறம் ‘KEI’ என்று அழைக்கப்படும் க்யூட் குட்டி கார்களும் பிரபலமானவை. நகர நெருக்கடிக்குள் அன்றாடம் இருவர் பயணிக்கச் சரியானதாக இருக்கும் கேய் கார்கள் தற்போது எலெக்ட்ரிக் ஆக மாறிக்கொண்டிருக்கின்றன. அதில் லேட்டஸ்ட் வரவான நிஸான் சக்குரா (Nissan Sakura) வைப் பற்றி இந்த மாதம் பார்ப்போம்.

அக்டோபர் 2019-ல் ஜப்பானில் IMk கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி எலக்ட்ரிக் கேய் காரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம் என அறிவித்தது நிஸான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், வேக வேகமாக உருவாக்கி, இந்த வருட மே மாதத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டது.

டிசைன்

ஜப்பானின் செர்ரி பிளாஸம் பூவின்நிறத்தில் அழகாக நிற்கும் இந்த EV-க்கு ‘சக்குரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ​விலை மற்றும் அளவு ஆகிய இரண்டிலும் இது நிஸானின் என்ட்ரி லெவல் EV ஆகச் செயல்படும்.

ஜப்பானிய மிசுஹிகி அலங்கார முடிச்சுகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்ட IMk கான்செப்ட் காரின் பாடியில் இருந்து ஃபங்கி வீல்கள் வரை, தயாரிப்பு மாடலான சகுராவிலும் அட்டெண்டன்ஸ் போடுகின்றன. சகுரா கேய் காராக உருவாக்கப்பட்டதால், சில விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். உதாரணத்துக்கு நம்மூரில் சிறிய காருக்கான வரிச் சலுகையைப் பெற 4 மீட்டருக்குள் இருந்தால் போதும். ஆனால், கேய் கார்கள் 3.4 மீட்டருக்குள் இருக்க வேண்டும். எனவே, சகுராவின் நீளம் 3,395 மிமீ மட்டுமே! மேலும் அகலம் மற்றும் உயரம் ஆகியவை 1,475 மிமீ மற்றும் 1,655 மிமீ!

நிஸான் சக்குரா... 'எலெக்ட்ரிக் A' செக்மென்ட்டில் இந்தியாவுக்கு வருமா?

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சதுர வடிவில் ஒரு சிறிய ஹேட்ச்பேக்காகத் தோற்றமளிக்கிறது சக்குரா.

அப்படி என்றால் உள்ளே இடவசதியில் பற்றாக்குறை ஏற்படும் இல்லையா? இங்கே தான் நிஸான் தனது ஜப்பானிய டிசைனிங் ஆளுமையைக் காட்டியிருக்கிறது. பிரத்யேக எலெக்ட்ரிக் கார் ப்ளாட்ஃபார்மை உருவாக்கி, ஓவர் ஹாங்குகளைக் குறைப்பதன் மூலம், 2,495 மிமீ-ல் வீல்பேஸைத் தாராளமாக்கி உள்ளது. மேலும், ஆக்ஸில்களுக்கு இடையே உள்ள தூரத்தை அதிகரித்து, உட்புற லெக் ரூமையும் அதிகரித்துள்ளது நிஸான். பின்புறக் கதவுகளின் நீளத்தை வைத்தே சக்குரா ஒரு விசாலமான கேய் கார் என்பதை உணரலாம்.

சிறப்பம்சங்கள்

நான்கு பேர் அமர்ந்த பின்னர் லக்கேஜ் வைக்க 107 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது நிஸான். உலக அளவில் சக்குரா லைட் வெயிட்டான EV-களில் ஒன்றாகும். பேஸ் மாடல் 1,070 கிலோகிராம் எடையைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், டாப் எண்ட் மாடல் 10 கிலோ கூடுதல் எடையை மட்டும் சேர்க்கிறது.

டோக்கியோவின் நெருக்கடியான சாலைகளில் பேரலல் பார்க்கிங் செய்வதற்கு ஏற்ப வெறும் 4.8 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டுள்ளது சக்குரா. எனவே நம்மூரில் ஆட்டோ சென்று U - டர்ன் அடிக்கக் கூடிய எந்தச் சந்திலும், சகுராவையும் எடுத்துச் செல்லலாம்.

இந்த பூஜ்ஜிய-உமிழ்வு கேய் கார், 63 bhp பவர் மற்றும் 195Nm டார்க்கை வெளிப்படுத்தும் ஒரு 47 kW மின்சார மோட்டாரை இதயமாகக் கொண்டுள்ளது.

X மற்றும் G மூன்று டிரிம்களில் நிஸான் சகுரா விற்பனைக்கு வரவிருக்கிறது. 1.78 மில்லியன் யென் என்னும் ஆரம்ப விலை, இந்திய ரூபாய் மதிப்பில் 10.3 லட்சம் ஆகிறது.

இதன் டாப் ஸ்பீடு 130 கிமீ என்று நிஸான் சொல்கிறது. இது மிகவும் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார் இல்லை. ஆனால் சகுராவில் ‘ஸ்டாண்டர்ட்’ மற்றும் ‘எக்கோ’-வுடன் ‘ஸ்போர்ட்’ மோடும் சேர்த்து மொத்தம் மூன்று மோடுகள் கொடுத்துள்ள நம்பிக்கைக்காகவே நிஸானைப் பாராட்ட வேண்டும்.

நிஸானின் பொறியாளர்கள் இந்தச் சிறிய ஹேட்ச்பேக்கில் 20-கிலோவாட் திறன் மற்றும் 180 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பேக் பொருத்தியுள்ளனர். ஆனால் இந்த 180 கிமீ ரேஞ்சும், WLTC சைக்கிள் முறையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ட்ராஃபிக் நிறைந்த நம்மூர்s சாலைகளில் சராசரியாக 125 கிமீ ரேஞ்சை எதிர்பார்க்கலாம்.

இதனால் சிட்டியில் இருந்து புறநகர்ப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை வரை டிரைவ் சென்று வர மட்டும் சரியானதாக இருக்கும். அதைத் தாண்டி சுற்றுலா போன்ற நீண்ட தூரப் பயணங்களுக்கு, மோட்டாரும் சரி, பேட்டரியும் சரி - சரிப்பட்டு வருமா தெரியவில்லை.

ரீ-ஜென் பிரேக்கிங் இருப்பதால், ஆக்ஸுலரேட்டரில் இருந்து காலை எடுத்தால், காரின் வேகம் தானாகக் குறையும். இதனால், பம்பர் டு பம்பர் ட்ராஃபிக் தவிர மற்ற இடங்களில் வாகனத்தை ஒற்றைக் காலில் இயக்கலாம். மேலும், கேய் செக்மென்ட்டில் அமைதியான கேபினை உருவாக்கியுள்ளதாக நிஸான் சொல்கிறது.

நிஸான் சக்குரா... 'எலெக்ட்ரிக் A' செக்மென்ட்டில் இந்தியாவுக்கு வருமா?

சக்குராவின் அல்டிமேட் தொழில்நுட்பம் என்றால், அதன் ப்ரோ பைலட் பார்க்கிங் சிஸ்டம்தான். இந்த சிஸ்டம் த்ராட்டில் பிரேக், ஷிஃப்ட் மற்றும் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றைத் ​​தானாகப் பயன்படுத்தி, பார்க்கிங் செய்யும் வகையில் நிஸான் உருவாக்கியிருக்கும் முதல் கார்.

வேறு என்ன ஸ்பெஷல் என்று பார்த்தால், கியா EV6 போன்று காரை பவர் பேங்க் போலப் பயன்படுத்தி 12 kW வரை மற்ற மின் சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 12 kW என்பது ஜப்பானில் ஒரு குடும்பத்தின் ஒரு நாளைய சராசரி மின் நுகர்வாம்.

ஏன் இந்தியாவுக்கு வர வேண்டும்?

முதல் கார் வாங்குபவர்கள், புதிதாக வாகனம் ஓட்டப் பழகுபவர்கள், தனியாக காரில் தினம் அலுவலகம் செல்லும் பெண்கள், முதியோர்கள் மற்றும் பெரிய எஸ்யூவி அல்லது சொகுசுக் கார்கள் வைத்திருப்பவர்களுக்கு இரண்டாவதாக ஒரு சிறிய கார் - இவர்கள்தான் ஆல்ட்டோ - க்விட் போன்ற A செக்மென்ட் ஹேட்ச்பேக்குகளின் வாடிக்கையாளர்கள்.

இந்த வகை வாடிக்கையாளர்களின் கார் பயன்பாடு 90 சதவிகிதம் நகரத்தில் மட்டுமே இருக்கும். இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக EV-களும் அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் வளர்ந்து வருகின்றன. எனவே ஆல்ட்டோ, க்விட் போன்றவை எலெக்ட்ரிக் ஆக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதுவரை காத்திருக்காமல், தொலைநோக்குப் பார்வையுடன் தற்போதே சக்குராவை இந்தியாவில் லோக்கலைஸ் செய்யும் பட்சத்தில், ‘எலெக்ட்ரிக் A’ எனும் இந்தப் புதிய செக்மென்ட்டில் மற்ற கார் தயாரிப்பாளர்களை முந்திவிடலாம். யாருக்குத் தெரியும், அது நிஸ்ஸானுக்கு மிகவும் தேவைப்படும் திருப்புமுனையாகக் கூட இருக்கலாம்!S,