ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பழைய வென்ட்டோ... பராமரிப்பில் பர்ஸ் பழுக்குமா?

vento
பிரீமியம் ஸ்டோரி
News
vento

நல்ல மைலேஜ் கொண்ட கிண்ணென்ற ஒரு குடும்பத்து கார் வேண்டும் என்றால், அழகான வென்ட்டோ டீசல் உங்களுக்கு அழகான சாய்ஸ்!

கட்டுமானத்துக்குப் பெயர் பெற்ற ஃபோக்ஸ்வாகன் கார்களைக் கவனித்தால்… இன்னொரு விஷயம் புரியும். டிசைனில் பெரிதாக மெனக்கெட்டிருக்க மாட்டார்கள்; ஆனால் காரை முதல் பார்வையிலேயே நமக்கு ரொம்பப் பிடித்துவிடும். போலோ முதல் டிகுவான் வரை எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட ஓர் அழகான கார்தான் வென்ட்டோ. போலோவைக் கொஞ்சம் நீட்டியமைத்து, போதுமான டிக்கி இடவசதியுடன் நச்சென ஒரு ஃபேமிலி காராக வலம் வரும் வென்ட்டோவை, இந்த மாதம் பழைய கார் மார்க்கெட் பகுதியில் பார்க்கலாம்.

வரலாறு

ஹோண்டா சிட்டி, வெர்னா போன்ற கார்கள் அப்போது மார்க்கெட்டில் பெரும் புரட்சி செய்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்குப் போட்டியாகத்தான் 2010–ல் முதன் முதலில் வென்ட்டோ எனும் மிட் சைஸ் செடானை அறிமுகப்படுத்தியது ஃபோக்ஸ்வாகன். பார்த்தவுடனேயே சொல்லி விடுவார்கள் போலோவின் அண்ணன் என்று. இதன் கட்டுமானமும் உறுதியும் வேற லெவல்.

நினைத்தபடியே ஃபோக்ஸ்வாகனுக்கு ஓரளவு டீசன்ட்டான மார்க்கெட் ஷேரையும் பெற்றுத் தந்தது வென்ட்டோ. ஏற்கெனவே சொன்னதுபோல், நசநசவென டிசைன் வேலைப்பாடுகள் இருக்காது. ஆனால், பார்த்தவுடனேயே பிடித்தது வென்ட்டோவை அனைவருக்கும்.

பழைய வென்ட்டோ... பராமரிப்பில் பர்ஸ் பழுக்குமா?

2015–ல் அற்புதமான ஃபேஸ்லிஃப்ட்டில் வென்ட்டோ வந்தது. புது ஹெட்லைட்ஸ், புது பம்பர்கள், கிரில், அலாய் வீல்கள் என்று தோற்றத்தில் நல்ல மாற்றம் தெரிந்தது. ஆனாலும் ஒரு விஷயத்தை மறுக்க முடியாது. மற்ற கார்களின் டிசைனுடன் ஒப்பிடும்போது, கொஞ்சம் சாந்தமாகத்தான் இருந்தது வென்ட்டோ. சில காஸ்மெட்டிக் வேலைப்பாடுகளைத் தாண்டி, மெக்கானிக்கலாகவும் சில அப்டேட்டுகளைக் கொண்டு வந்தது ஃபோக்ஸ்வாகன். 2015 ஃபேஸ்லிஃப்ட்டுக்குப் பிறகுதான் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வந்தது வென்ட்டோ.

டீசல்/பெட்ரோல்… எது ஓகே?

இதிலிருக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 110bhp பவரைக் கொண்டிருந்தது. இந்த டீசலில் இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருந்தன. வழக்கம்போல், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ்.

ஆரம்பத்தில் வென்ட்டோ வாங்க நினைப்பவர்களுக்கு, மோட்டார் விகடனே பெட்ரோலைவிட டீசலைத்தான் வாசகர்களுக்குப் பரிந்துரைத்தது. காரணம், இந்த டீசல் இன்ஜினின் ரிஃபைன்மென்ட்டும், முக்கியமாக மைலேஜும். இது, லேசாக அதிர்ந்தாலும், இதன் உறுதியான பெர்ஃபாமன்ஸ் ஃபன் டு டிரைவைக் கூட்டியது. மிட் ரேஞ்சுக்குப் பெயர் பெற்றது இந்த டீசல் இன்ஜின். ஜிவ்வென இருக்கும் ஓட்டும்போது. ஆனால், அதுவே ஹை ரெவ்களில் இதன் அதிர்வுகள் கேபினுக்குள் கடத்தப்படும். இது புது காருக்கே இப்படி எனும்போது, நீங்கள் பழைய கார் மார்க்கெட்டில் கொஞ்சம் சோதனை போடுவது நல்லது.

இதன் பவர் டெலிவரி லீனியராக இருந்தாலும், டர்போ லேக் படுத்தி எடுக்கத்தான் செய்யும். டீசல் இன்ஜின் பார்த்தால்.. ஒரு தடவை மேம்பாலங்களில், மலைச்சாலைகள் போன்றவற்றில் ஒரு சின்ன டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். இதன் மேனுவல் கியர்பாக்ஸ் ஓகேதான். இதன் அராய் மைலேஜ் 22.1 கிமீ. ஆனால், இது நகரத்துக்குள் சுமார் 15–16 கிமீ தருவதாகவும், நெடுஞ்சாலைகளில் 18 கிமீ–க்கு மேல் ரியல் டைம் மைலேஜ் தருவதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு இதை ரெக்கமண்ட் செய்கிறோம்.

ஸ்டீயரிங் ஃபீட்பேக் நன்றாக இருக்கிறதா என்று சோதனை போடுங்கள். க்ளட்ச்சிலும் கவனம்.
ஸ்டீயரிங் ஃபீட்பேக் நன்றாக இருக்கிறதா என்று சோதனை போடுங்கள். க்ளட்ச்சிலும் கவனம்.

இந்த டீசலிலேயே DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைத்தால், அதையும் பார்க்கலாம். இது டவுன்ஷிஃப்ட்டில் க்விக்காக இருக்கும். அதேபோல், இதன் ரெவ்வை அப்படியே உற்சாகமாக வைத்திருக்கும்.ஓவர்டேக்குகளில் மேனுவலைவிட ஆட்டோமேட்டிக் சூப்பர். இதுவும் சத்தம் போடத்தான் செய்தது. ஆட்டோமேட்டிக் என்பதற்காக, இதன் மைலேஜ் கணிசமாகக் குறைந்துவிடவில்லை. 14 கிமீ சிட்டிக்குள்ளும்; 17 கிமீ நெடுஞ்சாலையிலும் கிடைக்கலாம்.

பெட்ரோலில் இரண்டு ஆப்ஷன்கள். 1.6 லிட்டர் NA இன்ஜின், 105bhp பவரையும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸையும் கொண்டிருக்கிறது. இது ஓட்டுவதற்கு ஜாலியாக இருக்கும். டீசல் போல் இதன் மிட்ரேஞ்ச்சைவிட, டாப் எண்டும் அற்புதமாக இருக்கும். பெட்ரோலில் மைலேஜ்தான் பெரிய குறையே! இது மேனுவலாக இருந்தாலும், ஆவரேஜாக 12 –13 கிமீதான் மைலேஜ் தருவதாகச் சொல்கிறார்கள்.

மைலேஜ் விரும்பிகளுக்கு டீசல்தான் சரியான சாய்ஸ். 18 கிமீ தரலாம்.
மைலேஜ் விரும்பிகளுக்கு டீசல்தான் சரியான சாய்ஸ். 18 கிமீ தரலாம்.

இதிலேயே டர்போ மாடலும் உண்டு. இதிலிருக்கும் TSI இன்ஜின், போலோவில் இருப்பது. ஆரம்பித்த இடத்திலிருந்து ஒரே மிதியில் நினைத்த இடத்துக்குப் போக, இந்த டர்போ சூப்பராக இருக்கும். இதன் பவர்பேண்டும், கொப்புளிக்கும் டார்க்கும் ஓட்டுதலை அற்புதமாக்குகிறது. இந்த க்விக் ஷிஃப்ட்டிங் 7 ஸ்பீடு கியர்பாக்ஸ், மைல்டான தராட்டில்களில் அற்புதமாக வேலை செய்யும். இதன் மைலேஜாக 18 கிமீ–யை க்ளெய்ம் செய்தது ஃபோக்ஸ்வாகன். ஆனால், இந்த TSI இன்ஜினின் மைலேஜ் சிலருக்கு 11 கிமீதான் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். அதனால், ஓட்டுதல் விரும்பிகள் மட்டுமே பெட்ரோலுக்குப் போகவும்.

இன்டீரியர் மற்றும் இடவசதி

இதன் இன்டீரியரைப் பார்த்தால்.. போலோவைப் பார்க்கத் தேவையில்லை. நீட்டான டேஷ்போர்டு இதனுடையது. ஃபோக்ஸ்வாகனின் தரம்தான் வேற லெவலில் இருக்கும். பழைய மார்க்கெட்டில் வந்த பிறகும்கூட, சில கார்களின் இன்டீரியர் தரம் அப்படியேதான் இருக்கின்றன. இதன் ஃபின் அண்ட் ஃபினிஷும் வேற லெவல். அதனால், தரத்தில் சந்தேகப்படத் தேவையில்லை. இதன் சீட் வசதியும் பக்கா! முன் சீட்கள் நல்ல டிரைவிங் கம்ஃபர்ட் டையும், பின் பக்க சீட்கள் லெக்ரூம், ஹெட்ரூம் என போதுமான இடவசதியையும் அளிக்கின்றன. இதன் பூட் வசதியும் தாராளம்.

பழைய வென்ட்டோ... பராமரிப்பில் பர்ஸ் பழுக்குமா?

என்ன கவனிக்கணும்?

வென்ட்டோவின் ஓட்டுதலில் கொஞ்சம் தொய்வை ஏற்படுத்தக் கூடிய விஷயம் – இதன் சுமாரான உணர்ச்சியற்ற ஸ்டீயரிங் ஃபீட்பேக். கார்னரிங்கில்தான் இதை உணர முடியும். ஆனால், நெடுஞ்சாலைகளில் இந்த ஸ்டீயரிங் எடை அதிகமாகி, நம்பிக்கையை ஏற்படுத்துவது உண்மை. இதை நீங்கள் டிரைவிங்கில் சோதனை செய்து கொள்ளுங்கள்.

பாடியில் ஏதேனும் டேமேஜ் இருக்கிறதா என்று கவனியுங்கள். பம்பர்கள், ஃபெண்டர், பானெட், ஹெட்லைட் அசெம்பிளி போன்றவற்றை நன்றாகக் கவனித்துப் பாருங்கள். இப்படிச் சொல்வதற்குக் காரணம் – இவை எல்லாமே கொஞ்சம் பர்ஸைப் பதம் பார்க்கக் கூடியவை.

டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் பாப்பவர்கள், ரொம்பவும் உஷாராக இருக்க வேண்டிய நேரம். டவுன்ஷிஃப்ட் ஆகும்போது, ஸ்மூத்தாக இயங்குகிறதா என்று கவனியுங்கள். இது கொஞ்சம் கோளாறு ஏற்படுவதாகச் சொல்கிறார்கள் வாடிக்கையாளர்கள். இதுவும் செம காஸ்ட்லி பாஸ்!

இதன் சஸ்பென்ஷன் கொஞ்சம் ஸ்டிஃப்பாக இருக்கும். நெடுஞ்சாலைகளில் நன்றாகவே இருந்தாலும், ஓட்டை ஒடிசலான ரோடுகளில் ஏற்றிப் பாருங்கள். இதன் சஸ்பென்ஷன் புஷ்களில் குறை சொல்கிறார்கள். வென்ட்டோவின் ஏசி வென்ட்கள் கொஞ்சம் சாஃப்ட் ஆனவை. அதிலும் கொஞ்சம் கண் இருக்கட்டும்.

நீங்கள் 2016 மாடல் பார்க்கிறீர்கள் என்றால், ஒரு விஷயத்தில் கவனம். 2016 வென்ட்டோக்களை, அதன் CO (Carbon Monoxide) எமிஷனுக்காக ரீ–கால் செய்திருந்தது ஃபோக்ஸ்வாகன். இது டீசல் மாடலுக்கு மட்டும். இந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள். இல்லையென்றால், சாலையில் கரி அடிக்க வாய்ப்புண்டு.

சர்வீஸ் காஸ்ட்தான் அதிகமா?

ரொம்ப நாட்களுக்கு முன்பு ஒரு வாசகர் இப்படி ஒரு மெயில் அனுப்பியிருந்தார். ‘‘நான் 2 கார்கள் வைத்திருக்கிறேன். ஒரு காருக்கு சர்வீஸ் செலவு 3,500 ரூபாய்தான் ஆகிறது. எனது வென்ட்டோவுக்கு மட்டும் 15,000 ரூபாய் பில் வருகிறது. ஏன்?’’ எனக் கேட்டிருந்தார். உண்மைதான்; ஒரு வென்ட்டோவை சர்வீஸ் விடும் செலவில், மேலும் 3 கார்களை சர்வீஸ் செய்து விடலாம். அந்தளவு இதன் பராமரிப்புச் செலவு அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

மற்றபடி, நல்ல மைலேஜ் கொண்ட கிண்ணென்ற ஒரு குடும்பத்து கார் வேண்டும் என்றால், அழகான வென்ட்டோ டீசல் உங்களுக்கு அழகான சாய்ஸ்!