
‘‘என்னண்ணே புல்லட்ல இப்படிச் சத்தம் வருது; ஆயில் மிக்ஸ் ஆகலைனு நினைக்கிறேன். இந்த வண்டில செயின் ஸ்ப்ராக்கெட் போகப் போகுது!’’ என்று ஒரு புல்லட்டின் இன்ஜின் சத்தத்தை வைத்தே, அதன் ‘குத்தாங்குறையை’ச் சொல்லும் அளவுக்கு, புல்லட் சர்வீஸில் செம கில்லி ரவி. ஸாரி… புல்லட் ரவி.
‘‘என்னண்ணே புல்லட்ல இப்படிச் சத்தம் வருது; ஆயில் மிக்ஸ் ஆகலைனு நினைக்கிறேன். இந்த வண்டில செயின் ஸ்ப்ராக்கெட் போகப் போகுது!’’ என்று ஒரு புல்லட்டின் இன்ஜின் சத்தத்தை வைத்தே, அதன் ‘குத்தாங்குறையை’ச் சொல்லும் அளவுக்கு, புல்லட் சர்வீஸில் செம கில்லி ரவி. ஸாரி… புல்லட் ரவி. (அப்படித்தான் சொல்லணுமாம்!) நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் புல்லட் ரவி என்றால் பிரசித்தம். நாமக்கல் நகரில், திருச்சி மெயின் சாலையில் இருக்கிறது, அவரது மெக்கானிக் ஷாப். அங்கே விதவிதமான புல்லட்கள், இவரின் ‘ட்ரீட்மென்ட்டு’க்காக ஆரோகணித்தபடி காத்து நிற்கின்றன. ஸ்பானரும் கையுமாக இருந்த ‘புல்லட் ரவி’யிடம் பேசினோம்.
“எனக்கு இப்போ 62 வயசு. கடந்த 54 வருஷமா இந்த மெக்கானிக் தொழில்ல இருக்கேன். ஆனா, புல்லட்டைத் தவிர, வேறெந்த வண்டியையும் நான் சர்வீஸ் பண்ணியதில்லை!” என்று கூறி, புல்லட்டின் உறுமல் சத்தம்போல், சத்தமாகச் சிரித்த ‘புல்லட் ரவி’, மேலும் தொடர்ந்தார்.
“சொந்த ஊர் திருச்சி மாவட்டத்துல உள்ள மேலபுதூர். மூணாவதுக்கு மேல படிப்பு ஏறலை. ஆனா, அப்போ எங்க தெருவுல ஒருத்தர் புல்லட் வாங்கினார். ராஜகுதிரை போல், டுபுடுபுனு பெருஞ்சத்தத்தோடு அதுல அவர் போய் வர்ற அழகு, என் மனசுக்குள்ள வந்து உட்கார்ந்துட்டு! அப்பவே, முடிவு பண்ணிட்டேன், ‘இனி, நம்ம பயணம் புல்லட்டோடுதான்’னு. ஆனா, என்ன பண்றதுன்னு தெரியலை. அப்பதான், உறவினர் ஒருத்தர், திருச்சியில இருந்த ராஜா மோட்டார்ஸ் புல்லட் ஷோரூமில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார்.
முதல்முறை, ஆசையா அங்க இருந்த புல்லட்டைtஹ் தொட்டுத் தடவிப்பார்த்தப்ப, ராஜபோதையா இருந்துச்சு. முதல்ல, வண்டி டெலிவரி பிரிவுல வேலை கொடுத்தாங்க. தீபாவளி, பொங்கல்னு எந்த நல்ல நாளைக்கும் வீட்டுக்குp போகாம, புல்லட்டுகளே கதினு கிடந்தேன். என்னோட ஆர்வத்தைப் பார்த்த முதலாளி, ஒரே வருஷத்துல மெக்கானிக் செக்ஷனுக்கு அனுப்பினார். அங்க போர் மேனாக இருந்த அந்தோணியாரைக் குருவா, சுவீகரிச்சுக்கிட்டேன். அவர் கைபிடிச்சு, புல்லட் பற்றிய எல்லா நுணுக்கத்தையும் தெரிஞ்சுகிட்டேன். 6 வருஷம் அங்கேயே வேலை பார்த்தேன்.
சொந்த ஊரை விட்டுட்டு, 1980–ம் ஆண்டு நாமக்கலுக்கு மூட்டை முடிச்சுகளைக் கட்டிட்டேன். அங்கே 17 பேர்களை வச்சு, மெக்கானிக் கடை வச்சுருந்த சாம்பசிவம், புல்லட் மீதான காதலை என்னோட பேச்சை வச்சே கண்டுபிடிச்சு, உடனே வேலைக்குச் சேர்த்துக்கிட்டார். திருமணமும் நாமக்கல்லதான் நடந்துச்சு. 1996–ல், என் மொதலாளி, கடையை நடத்த முடியலைனு சொன்னார். அதனால், அந்தக் கடையை நான் ஏத்துக்கிட்டேன். அதன்பிறகு, நாமக்கல் மாவட்டம் முழுக்க, புல்லட் சர்வீஸுக்கு ஃபேமஸானேன்.
‘புல்லட்டில் பிரச்னையா, கண்ணை மூடிக்கிட்டு ரவிகிட்ட விடுங்க’னு சொல்ற அளவு என்மீது அவங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுச்சு. நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி, தொட்டியம், செவந்திபட்டினு பல ஊர்கள்ல இருந்து ரெகுலரா புல்லட் வருது. புல்லட்டில் எந்தப் பாகம் பிரச்னை கொடுத்தாலும், அதைத் தரமான பார்ட்ஸா வாங்கி மாட்டுவேன். அதேபோல், பேரிங் போனா, சிலர் அதைச் சுத்தியால பலமா அடிச்சுக் கழட்டுவாங்க. பொருத்தும்போதும் அப்படியே பலமா அடிச்சுப் பொருத்துவாங்க. ஆனா, நான் எந்த இடமும் சேதம் ஆகாத அளவுக்குப் பொறுமையா அதை செய்வேன். இன்ஜின் எவ்வளவு மோசமான கண்டிஷனில் வந்தாலும், அதை நல்ல வண்டியாக மாத்திப்புடுவேன்.
புல்லட்டின் மீதுள்ள காதலால், நானும் அஞ்சாறு புல்லட் வச்சுருந்தேன். இப்போது, 1996–ம் வருஷ மாடல் புல்லட் இருக்குது. இந்த 54 வருஷ அனுபவத்துல, புல்லட்டைத் தவிர வேற எந்த வண்டியையும் நான் சர்வீஸ் பண்ணியதில்லை. என்கிட்ட இருக்கிற மத்த வண்டிகளை, வேறு மெக்கானிக்குகிட்டதான் சர்வீஸுக்கு விடுறேன். இப்போ, என் மகனும் எனக்கு ஒத்தாசைக்கு வந்துட்டான்!” என்று சிரித்தார் புல்லட் ரவி.
புல்லட் ரவியின் புல்லட் பராமரிப்பு டிப்ஸ்!
புல்லட்டைக் கண்டிப்பாக 4,000 to 4,500 கிமீ–க்குள்ள ஆயில் சர்வீஸ் பண்ணிடணும்.
செயின் லூஸ் ஆச்சுன்னா, கடகடனு சத்தம் வரும். உடனே, அதை டைட் வச்சுரணும். இல்லைன்னா, சீக்கிரம் செயின் தேஞ்சு போய், புதுசா மாத்துறாப்புல ஆயிரும். ஒவ்வொரு 28,000 கிலோமீட்டர் ஓடியதும், செயினை புதுசா மாத்திடணும்.
1 லட்சம் கிமீ–க்கு ஒருமுறை கியர்பாக்ஸ், பேரிங்கை சேஞ்ச் பண்ணிடணும். ரஃப் யூஸ் பண்றவங்க, 50,000 கிமீ தாண்டியதும், மாத்திடணும்.
ஃபோர்க் சரியா இல்லைனா பள்ளத்துல இறங்கும்போது டம் டம்முனு அடி வாங்கும். உடனே டைட் வெச்சிருங்க. இல்லேனா ஆயில் சீல் போகும், கோன்செட் போகும். அப்புறம் பெரிய செலவு இருக்கும்!
வண்டி ஒரு மாதிரி நெளிஞ்சு நெளிஞ்சு ஓடினா, டயர் தேய்ஞ்சிடுச்சுனு அர்த்தம். 35,000 கிமீ ஓடியதும், டயரை மாத்திடணும்.